
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 7 April 2019
British Summer Time uploaded in London – 6-46 am
Post No. 6234
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 4-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்!
ச.நாகராஜன்
காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.
பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலனாகாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமான ஒன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு தேசமும் தனக்கென ஒரு ஏ க்யு ஐ AQI – எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸை – அதாவது காற்றின் தர அளவீட்டைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் காற்றின் தர அளவீடு ஒன்றிலிருந்து ஐநூறு வரை குறிக்கப்படுகிறது. ஒன்று முதல் ஐம்பது வரை உள்ள அளவீடு நல்ல தரமான காற்றைக் குறிக்கும்.
இது போன்ற அளவீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் காற்றின் தரத்தை நிர்ணயிக்க உதவுகிறது.
இருந்த போதும் சுலபமாக காற்றின் தரத்தை நிர்ணயிக்க பர்டிகுலேட் எனப்படும் துகள்மப் பொருள்கள் அதிகம் உதவுகிறது.
கரியை எரியவிடுவதால் ஏற்படும் புகை, தூசி, பனி, இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீ போன்றவற்றால் ஏற்படும் நுண்ணிய துகள்கள் காற்றில் கலப்பதால் காற்று அசுத்தமடைகிறது.
என்றாலும் கூட மனிதனால் ஏற்படும் காற்று அசுத்தமே பொதுவாக அதிகமாக இருக்கிறது.
ஃபாஸில் ப்யூயல் எனப்படும் படிம எரி பொருள்கள் அளவிற்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வளி மண்டலத்தில் கலக்க வைக்கிறது. இவை அன்றாடம் ஆயிரக்கணக்கில் செல்லும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையிலிருந்து வெளிப்படுகிறது.
ஆகவே ஒவ்வொருவரும் முடிந்த மட்டும் பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருள்களைக் கொண்டுள்ள வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதால் காற்று அசுத்தமடைவதைத் தடுக்க முடியும். காற்றின் தரத்தை உயர்த்த முடியும். நுண்ணிய துகள்மப் பொருள்களையும் தவிர்க்க முடியும்.
இதனால் தேசீய ஆரோக்கியம் பெரிதளவும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. முனைந்து செயலாற்றினால் வெற்றியைப் பெற முடியும்!
***