மூன் ரஷ்! (Post No.6259)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 13 April 2019


British Summer Time uploaded in London – 5-53 am

Post No. 6259

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Oval: 420

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

பாக்யா 29-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு நான்காம்  கட்டுரை – அத்தியாயம் 420

மூன் ரஷ்!

ச.நாகராஜன்

கோல்ட் ரஷ் – தங்க வேட்டை என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். 1848ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை ஒட்டி அங்கு ஏராளமானோர் முகாமிட்டுத் தங்கம் கிடைக்கும் இடம் தேடி அலைந்த கதை பெரிய கதை.

ஆனால் ‘மூன் ரஷ்’ என்பது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறோம். மூன் ரஷ் என்ற வார்த்தையை முதலில் உருவாக்கியவர் விண்வெளி இயல் பொறியாளரான டென்னிஸ் விங்கோ (Moon Rush by Dennis Wingo) என்பவர் தான். தனது ‘மூன் ரஷ்’ என்ற புத்தத்தில் பூமியின் அருகில் இருக்கும் அண்டை கிரகமான சந்திரனில் என்னவெல்லாம் கிடைக்குமோ அதை முதலில் ‘அறுவடை’ செய்யத் துடிப்போர் அங்கு செல்ல, போட்டி இடுவதையே அவர் மூன் ரஷ் என்றார். ஆம், சந்திர வேட்டை தான்!

2019, பிப்ரவரி 21ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பால்கன் 9 (Falcon 9) ராக்கட் ஏப்ரல் மாதத்தில் சந்திரனில் இஸ்ரேலின் ஒரு வாகனத்தை இறக்கும். இதற்கான ஒரு ஒப்பந்தம் இஸ்ரேலிய வணிக கம்பெனி ஒன்றுடன் செய்யப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சந்திரனிலிருந்து முதல் வணிக ரீதியிலான பொருள் பூமிக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏராளமான கம்பெனிகள் சந்திரனுக்கு ராக்கெட்டுகளை அனுப்பத் துடிக்கின்றன. ஜப்பானிய கம்பெனி ஒன்றும் இந்தப் போட்டிக்குள் குதிக்கிறது.

அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் சந்திரனில் தங்கள் தளத்தை உருவாக்கி மனிதர்களைக் குடி அமர்த்த திட்டம் தீட்டி வரும் வேளையில் முதலில் அதை யார் அடைகிறார்களோ அவர்கள் எவ்வளவு ஆதிக்கத்தைச் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யவே துடிப்பார்கள்.

இரண்டு கோடி டாலரிலிருந்து 260 கோடி டாலர் வரை முதலீடு செய்ய பெரிய நிறுவனங்கள் தயாராகி விட்டன. 2021ஆம் ஆண்டில் நாம் பார்க்கும் சந்திரன் வேறு விதமாக (எந்த தேசத்தின் பகுதி எது என்ற விவரணம் ஆரம்பிக்கும்) விவரிக்கப்படுவான்!

அங்கு தண்ணீர் இருக்கிறதா, அது ஐஸ் வடிவில் இருந்தால் பருகுவதற்கு உகந்ததாக இருக்குமா என்பது தான் அனைவரது கேள்வியும்! அப்படி இருப்பின் அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்கப் பயன்படுத்தலாம். ஆக்ஸிஜன் மனிதர்களின் சுவாசத்திற்கு உதவும்.  பூமியிலிருந்து நீரை சந்திரனுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாது போய் விடும்; பெரும் பொருட்செலவு மிச்சமாகும். சந்திரனில் தண்ணீரை எடுப்பதையே மிகப் பெரிய வாய்ப்பாக உலகின் மிகப் பெரிய கம்பெனிகள் கருதுகின்றன.

ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு, மக்னீஷியம், கால்சியம், அலுமினியம், மாங்கனீஸ், டைட்டானியம் உள்ளிட்டவை சந்திரனில் இருப்பதாக இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இன்னொரு மிகப் பெரிய அதிர்ஷ்டப் பொருள் ஹீலியம் 3.இது மட்டும் நிறையக் கிடைத்தால் பூமியின் ஆற்றல் பற்றிய நிலை முற்றிலுமாக மாறி விடும்.படிம எரிபொருள்களுக்கு – பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட அனைத்தின் ஆதிக்கத்திற்கும் ஒரு முடிவு வந்து விடும். 

பல லட்சம் டன்கள் ஹீலியம் சந்திரனில் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உலகின் பொருளாதார நிலை ஹீலியத்தின் அடிப்படையில் மாறி விடும்!

ஆகவே தான் இந்த மூன் ரஷ்!

விலையுயர்ந்த பொருள்கள் என்று பார்த்தால் பிளாட்டினம் குழுவைச் சேர்ந்த பொருள்களையும் சொல்லலாம். அது இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் சந்திரனில் உண்டு. இந்தப் பொருள்களின் இப்போதைய விலை ஒரு கிலோவுக்கு 20000 டாலரிலிருந்து 50000 டாலர் வரை இருக்கிறது. அதாவது ஒரு கிலோ சுமார் ரூ 14 லட்சம் ரூபாயிலிருந்து 35 லட்சம் ரூபாய் வரை என்ற விலையில் விற்கப்படுகிறது. பல டன்களை முதலில் வெட்டி எடுப்போரின் பொருளாதார நிலையை நாம் சுலபமாக ஊகிக்கலாம்.

ஆகவே முதலில் சென்று ரொபாட்டை வைத்து முதலில் ஆராய்வோரே நிறைய ஆதாயத்தைப் பெற முடியும். ஆகவே தான் இந்த சந்திர வேட்டை இப்போது சூடு பிடித்துள்ளது.

எங்கேயோ யாரோ ராக்கெட் அனுப்புகிறார்கள் என்று நாம் சும்மா இருக்க முடியாது. இது நேரடியான விளைவை மனித குலத்தின் மீது ஏற்படுத்தும்.

ஆகவே மூன் ரஷ் பற்றி இனி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அனைவரும் இருக்கிறோம்! 

இது ஒருபுறமிருக்க அளவற்ற – மிக மலிவாகக் கிடைக்கும் – ஆற்றலைத் தேடும் தனது முயற்சியில் வெற்றி பெற்று விட்டதாக சீனா அறிவித்திருக்கிறது. இது சிக்கலான நியூக்ளியர் ஃப்யூஷன் (nuclear fusion) பற்றிய விஷயம்!. இதை அணுச்சேர்க்கை என்று தமிழில் சொல்லலாம்.

சீனாவில் ஹெஃபியில் (Hefei) உள்ள ரீ ஆக்டரில் ஹைட்ரஜனை ஒரு செயற்கை சூரியன் மூலமாக 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸ் என்ற கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெப்பநிலையில் வெப்பமடைய வைத்து பிளாஸ்மாவை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

நியூக்ளியர் ஃப்யூஷன் என்னும் அணுச்சேர்க்கை ஆபத்தில்லாதது; பக்கவிளைவு இல்லாதது.

மாறாக நியூக்ளியர் ஃபிஷன் என்ப்படும் அணுப்பிளவு ஆபத்தானது; ஏராளமான பக்க விளைவை உருவாக்கும்.

அணுச்சேர்க்கைக்கு பூமியில் மிக அதிகமான உஷ்ணநிலை தேவைப்படுகிறது. ஆகவே தான் செயற்கை சூரியன் மூலம் இந்த உயரிய உஷ்ணநிலையை உருவாக்கியதாக சீனா சொல்வதை விஞ்ஞானிகள் வியப்புடன் பார்க்கின்றனர்.

அதாவது அளப்பரிய ஆற்றலை மிகவும் ‘சுத்தமான அணுச்சேர்க்கை’ மூலம் பெறுவதென்றால் அது அசாத்தியமான சாதனை தான்!

சந்திரன் மூலம் பெரும் ஆற்றலைப் பெறப் போகிறோமா, அல்லது அணுச்சேர்க்கை மூலம் பெரும் ஆற்றலை பூமியிலேயே பெறப் போகிறோமா?

இந்த விண்வெளிப் போட்டியில் முதலில் வெற்றி அடைந்து உலகின் தலைமை விண்வெளி இயல் அரசாக மிளிரப் போவது எந்த நாடு? சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷியா?

காலம் விரைவில் அதிசயமான பதிலைச் சொல்லப் போகிறது! காத்திருந்து பிரமிப்படைவோம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜெனி ஷூமேக்கர் என்று பிரபலமாக அறியப்படும் அமெரிக்க புவியியல் விஞ்ஞானி (Gene Shoemaker or Eugene Merie Shoemaker பிறப்பு 28, ஏப்ரல் 1928, மறைவு 18, ஜூலை 1997) ஷீமேக்கர் – லெவி 9 என்ற வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தவர். 1994இல் இது வியாழ கிரகத்துடன் மோதியது. இந்த காட்சியை உலகில் உள்ளோர் வியப்புடன் தொலைக்காட்சியில் பார்த்தனர்!

இள வயதிலிருந்தே விண்வெளி பற்றிய அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வந்தார் ஷூமேக்கர். எப்படியாவது சந்திரனில் காலடி பதிக்க வேண்டுமென்பது அவரது தணியாத ஆசை. அபல்லோ பயணத்தில் சேர்வதற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால் அவருக்கு அட்ரினல் கிளாண்டில் ஏற்படும் ஒரு வித வியாதியான அடிஸன் வியாதி இருப்பதாகத் தெரிய வந்ததால் அவரைப் பயணத்திற்கு சேர்க்க முடியவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்து போனார்.

விண்வெளி வீரர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக ஆனார். உலகெங்கும் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்தார். அமெரிக்காவில் உடா மற்றும் கொலொரோடாவில் யுரேனியம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தார்.

கோரமான ஒரு கார் விபத்தில் 1997இல் அவர் கொல்லப்பட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது தணியாத ஆசையை நிறைவேற்றும் வண்ணம் 1998இல் நாஸா சந்திரனுக்கு அனுப்பிய ப்ராஸ்பெக்டர் கலத்தில் அவரது அஸ்தியை ஒரு உலோகச் சுருளில் வைத்து அதை அனுப்பியது.

சந்திர தூசியுடன் அவரது அஸ்தியும் கலந்தது.

பித்தளை உலோகச் சுருளில் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டில் வரும் கீழ்க்கண்ட பிரபலமான மேற்கோள் பொருத்தமாகப் பொறிக்கப்பட்டது:

“And, when he shall die
Take him and cut him out in little stars
And he will make the face of heaven so fine
That all the world will be in love with night
And pay no worship to the garish sun”

பூமி வாழ் மனிதருள்  வெளிகிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரே மனிதரின் அஸ்தி ஷூ மேக்கருடையது தான்!

***

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: