

Written by S. Nagarajan
swami_48@yahoo.com
Date: 11 AUGUST 2019
British Summer Time uploaded in London – 9-05 am
Post No. 6760
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 6-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஆறாம் உரை இங்கு தரப்படுகிறது.
ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்!
ச.நாகராஜன்
சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெருமளவில் வலுத்து வரும் இந்த நாளில் ஒவ்வொருநாளும் சூழலைக் காக்கும் அவசியம் ஏற்பட்டு விட்டதால் அதற்கான வழிமுறைகளைத் தன்னார்வலர்கள் கையாளுகின்றனர்.
திருமண விருந்துகள், அலுவலகங்களில் நடக்கும் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் ப்ளேட்டுகளுக்குப் பதிலாக உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தவும் அவற்றைச் சுத்தம் செய்ய டிஷ் வாஷர் போன்றவற்றைப் பயன்படுத்தவும் தீவிர முனைப்பு ஏற்பட்டுள்ளது.
சோடியம் வேப்பர் (Sodiyum Vapour Street Lights) தெரு விளக்குகளுக்குப் பதிலாக எல் இ டி (LED) பல்புகளைப் பொருத்த ஏராளமான மாநகராட்சிகள், கிராமங்கள் முன் வந்துள்ளன. இவற்றால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. சூழலில் ஏற்படும் மாசும் குறைகிறது.
உடைந்த மொபைல் போன்கள், கணினி பாகங்கள் உள்ளிட்ட ஈ வேஸ்ட் (E Waste) எனப்படும் மின்னணு சாதனங்களின் கழிவைச் சேகரிக்க ஆங்காங்கே தனிச் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கழிவுகளைப் பொதுவான கழிவுகளுடன் சேர்த்துப் போட்டு விடாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போட வேண்டும் என்ற செய்தியும் பரவலாக அனைவருக்கும் தெரியப்படுத்தப் படுகிறது.
வீட்டு மாடிகளில் மாடித் தோட்டங்களை அமைக்கும் ஆர்வம் இப்போது மிகவும் அதிகமாகி வருகிறது. பால்கனிகளில் கூட வீட்டுக்குத் தேவையான கறிகாய்களைப் பயிரிட முடியும் என்பதை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் நிரூபித்து வருகின்றனர். கனவுத் தோட்டம் என்று இதை வர்ணிக்கும் பெண்மணிகள் சமையலுக்குத் தேவையான கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவற்றையும் சில கறிகாய்களையும் பயிரிட்டு மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.
சூரிய சக்தி சாதனங்கள் ஒவ்வொரு பெரிய கட்டிடத்தின் மேல் தளத்திலும் நிறுவப்படுகின்றன. கட்டிடங்களை உருவாக்கும் திட்டத்தின் போதே இதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதால் வழக்கமான மின் சாதனங்களின் பயன்பாடுகள் மெதுவாக நீக்கப்பட்டு வருகின்றன.
இப்படி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் பூமியைக் காக்கும் செயலாக அமைவதால் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் தங்களையும் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்!
****
