
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 28 AUGUST 2019
British Summer Time uploaded in London – 6-49 am
Post No. 6944
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 60 – பகுதி 2
டி.என்.இராமச்சந்திரன் எழுதியுள்ள ‘வழி வழி பாரதி’

ஐந்தாவது அத்தியாயமான ‘அரியதில் அரிய பாரதி’யில் ‘ நாம் அறிந்த பாரதியை விட நாம் அறியாத, அறிய முடியாத பாரதியைப்’ பற்றி ஆராயப் புகுகிறார் நூலாசிரியர் சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரன். ஆய்வின் முடிவில் அரிய பாரதியைக் காண்கிறோம்.
பாரதியார் கையாண்ட சொற்கள் 82 சதவிகிதம் Classical Tamil Diction (செவ்விய தமிழ்ச் சொற்கள்) என்ற அரிய தான் கேட்ட தகவலைத் தரும் நூலாசிரியர் பாரதியாரின் வார்த்தைகளுக்குத் தவறான பொருள் கொள்ளுதலைச் சுட்டிக் காட்டி எப்படி சரியாகப் பொருளைக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
இரு எடுத்துக் காட்டுகள்:
பாரத மாது தானே பணித்தன்று (வேல்ஸ் இளவரசரை வரவேற்று இயற்றிய பாடல்) என்றால் பணித்தது அன்று என்று பொருள் கொண்டு பக்கம் பக்கமாக அடுக்கிச் செல்லும் பாரதி அன்பரைப் பற்றி என்ன சொல்ல?
பணித்தன்று என்றால் பணித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.
காணி நிலம் என்றால் 8 மனை;மனை ஒன்றுக்கு 2400 சதுர அடி என்று பொருள் கொண்டு சிலர் கணக்கிடுவது தவறு; காணி என்றால் உரிமை என்று பொருள். எனக்கென்று சிறிய நிலம் வேண்டும்; அது உரிமை நிலமாக இருத்தல் வேண்டும் என்கிறார் பாரதியார்.
ஆறாவது அத்தியாயம் “ ‘பாரதி நாமம் வாழ்க’.
தவம், முக்தி, யோகி, நல்ல தொழில் போன்ற பல சொற்களுக்கான விளக்கங்களை பாரதி குறைந்த சொற்களில் விளக்கும் பான்மையை வியந்து போற்றி இதில் விளக்கம் தரப்படுகிறது.
ஏழாவது அத்தியாயம் : மகாகவி பாரதியின் சிரிப்பும் சீற்றமும். இதில் பாரதியாரின் ஆன்மீக புத்திரரான திருலோக சீதாராமின் பாரதி பற்றிய பல கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.
எட்டாவது அத்தியாயம் : பாட பேத பூதங்கள்

ஏராளமான பாட பேதங்கள் பாரதியாரின் பாடல்களில் உள்ளன. சில வலிந்து புகுத்தப்பட்டன (விஷம நோக்குடன்); சில அச்சுப் பிழைகளாக வந்துள்ளன.
சாரு மானுடமாயினும் என்பது சாகு மானுடமாயினும் ஆகி இருக்கிறது.
நல்ல ஒளியின் வகைபல கண்டுளன் வெண்ணிலாவே என்பதை நல்ல ஒளியின் வகைபல கண்டிலன் வெண்ணிலாவே என்று மாற்றி விட்டனர்!
இது போல ஒரு நீண்ட பட்டியலைக் காணலாம்.
ஒன்பதாம் அத்தியாயமான மகாகவி பாரதியாரும் ஷெல்லியும் இரு பெருங் கவிஞர்களை ஒப்பிட்டு மகிழ்கிறது; நம்மை மகிழ்விக்கிறது!
பத்தாம் அத்தியாயம் பாரதியாரையும் புஷ்கினையும் ஒப்பிடுகிறது.
பதினொன்றாம் அத்தியாயம் பாரதியாரையும் ரூமியையும் ஒப்பிடுகிறது.
பனிரெண்டாம் அத்தியாயம் பாரதியாரையும் மில்டனையும் ஒப்பிடுகிறது.
பதிமூன்றாம் அத்தியாயம் பாரதியாரையும் ப்ரௌனிங்கையும் ஒப்பிடுகிறது.
பதினான்காம் அத்தியாயம் பாரதியாரையும் ஃபிரான்ஸிஸ் தாம்ஸனையும் ஒப்பிடுகிறது.
சில கருத்துக்களை மட்டும் இங்கு பார்க்கலாம்:
ஷெல்லி : This habitable earth is full of bliss
பாரதியார் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா!
புஷ்கின் : எழுக கவிதை! எழுக அறிவு!
ஏற்றுவோம் இவற்றை இனிய பாடலில்
ஞான ஞாயிறே, ஒளிர்க, ஒளிர்கவே!
உண்மை அறிவின் தேயா ஒளியில்
உன் ஒளி அதனின் ஒரு சிறு கீற்றில்
ஓய்ந்தொழிந்ததே பொய்மை எலாம்
வாழ்க நீ, ஒளியாய், பகலே!
வீழ்க, வீழ்கவே, இருளும், இரவும்!
பாரதியார் : பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட் கணம் போயின யாவும்
எழு பசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
ரூமி : உள்ளதும் நான், அல்லதும் நான்
நீர் அறிகின்ற ஜலாலுதீன் நான்
ஆஹா! கேளீர் நான் சொலு வார்த்தை
நான் தான் அனைத்தின் ஆன்மா காண்
பாரதியார் : வானிலே பறக்கின்ற புள்ளெலாம் நான்…
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய், விளங்கு முதற் சோதி நான்
மில்டன் : அகத்தே ஒளிர்க
பாரதியார் : தீயினை நிறுத்திடுவீர்!
நல்ல தீரமும் தெளிவும் இங்கருள் புரிவீர்!
ப்ரௌனிங் : A tincture
Of force to flush old age with youth
பாரதியார் : I will age into youth
ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் : Till Time, the hidden root of change, updries
பாரதியார் : காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும்
பாரதியை ஆழ்ந்து பயில இந்தப் புத்தகத்தை பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டும். பரந்து பட்ட உலகப் பார்வையில் பாரதி உயர்கிறான்; அதை ஓர்ந்து நாமும் உயர்கிறோம்.
பாரதி இயல் பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம் இது!
***










