

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 21 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 10-59 am
Post No. 6995
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
ச.நாகராஜன்
ராஜஸ்தானத்தின் வரலாறு, வீரம் மிக்க சுவையான வரலாறுகளுள் ஒன்று.
உயிரைத் துச்சமாக மதித்து முகலாயர்களுடனும் பிரிட்டிஷாருடனும் போரிட்ட ரஜபுத்திரர்களின் வீர வரலாறு இன்றைய கால கட்டத்தில் சரியானபடி தொகுக்கப்படவில்லை என்பது வருத்தமூட்டும் ஒரு விஷயம்.
மேவாரை ஆண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரும் வீரர் ராணா சங்ராம் சிங் -|| (24-3-1690 – 11-1-1734)
அமர் சிங்கைத் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏறிய சங்ராம் 1710 முதல் 1734 முடிய மேவாரை ஆண்டார். மேவார் தான் இழந்த பல பகுதிகளை இவர் ஆட்சிக் காலத்தில் தான் மீட்டது.
ராணா சங்ராம் சிறந்த வீரர். மேதை. பட்சபாதமின்றி நீதி வழங்கியவர். ஒழுக்கம் விதிகள் என்பதில் மிகவும் கண்டிப்பானவர்.
இவரது வாழ்க்கையில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் உண்டு.
கொடாரியோவைச் சேர்ந்த அவரது சிறந்த தளகர்த்தர்களுள் ஒருவரான சோஹன் என்பவர் ஒருமுறை ராணாவை அணுகினார்.
அரசவைக்கு வரும் போது அணிந்து வரும் உடையில் சில மடிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்று அவர் ராணாவிடம் விண்ணப்பித்தார்.
இதை மறுக்க முடியாத ராணா அதற்கு அங்கீகாரம் அளித்தார்.
மன்னரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை எண்ணி மனம் மிக மகிழ்ந்த சோஹன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினார்.
அவர் சென்ற பிறகு ராணா தன் அமைச்சரிடம் சோஹனின் கட்டுப்பாட்டில் இருந்த இரு கிராமங்களின் சேமிப்பைத் தனிக் கணக்காக வைக்கச் சொன்னார்.
இதை அறிந்த சோஹன் திகைத்தார். நேரடியாக ராணாவை அணுகினார். ‘எதற்காக தனது இரு கிராமங்களின் சேமிப்பைத் தனியாக வைக்க வேண்டும், நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா’ என்று அவர் நேரடியாகவே கேட்டார்.
“ஒரு தவறும் நீங்கள் இழைக்கவில்லை” என்று உடனே ராணா பதிலிறுத்தார்.
“ஆனால்” என்று தொடர்ந்த அவர், “அந்த இரு கிராமங்களின் வரும்படி அதிக மடிப்பை ஆடைகளுக்கு வைக்கும் செலவிற்குச் சரியாக ஈடு கட்டும். எனக்கு வரும் வரும்படியில் ஒவ்வொரு சிறு காசும் முறைப்படி செலவழிக்கப்படுவதால் அதில் மிச்சம் இல்லை. ஆகவே தான் தங்களின் விருப்பப்படி செய்யப்படும் கூடுதல் மடிப்புகளுக்கு உங்கள் பணத்தைப் பயன்படுத்தும் படி ஆணையிட்டேன்” என்றார்.

உடனே சோஹன் தனது வேண்டுகோளைத் திரும்பப் பெற்றார். பழையபடி இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராணாவும் அதற்கு இணங்கினார்.
யார் மனதும் புண்படாதபடி சாதுர்யமாக நடப்பவர் ராணா என்பதை இது உறுதிப்படுத்தியது.
ஒரு முறை ஒரு முக்கிய காரணத்திற்காகவோ அல்லது நினைவு தவறியோ தனது விதி ஒன்றை அவர் மீறி கிராமம் ஒன்றைத் தனது ஆளுகையிலிருந்து விடுவித்து விட்டார்.
அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உரித்தான நிதி அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.
சமையல் அறை, உடைகள், அந்தப்புரம் என பகுதி பகுதியாக செலவினம் முறையாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
வழக்கப்படி உணவருந்த வந்த மன்னருக்கு அனைத்து உணவு வகைகளும் வைக்கப்பட்டது. ஆனால் சுவையான சர்க்கரை கலந்த தயிரை மட்டும் காணோம்.
உடனடியாக சமையலறை மேற்பார்வையாளரை அழைத்தார் ராணா.
“என்ன ஆயிற்று, சர்க்கரைக்கு?” என்று கேட்டார்.
“மன்னரே, சர்க்கரைக்கான கிராமத்தை நீங்கள் விடுவித்து விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். சர்க்கரை இல்லை” என்றார் அவர்.
ராணா எதுவும் பேசவில்லை. அந்த சர்க்கரை வகை உணவு இல்லாமலேயே தன் உணவை முடித்துக் கொண்டார்.
தனது ஆணையைத் தானே மதிக்காமல் இருக்க முடியுமா, என்ன!
இப்படி இன்னும் பல சுவையான சம்பவங்கள் இவரைப் பற்றி வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
***
ஆதாரம் : Tod’s Annal of Mewar – The Annals of Rajasthan
James Tod (1782-1835) was a Political Agent to the Western Rajpoot states.
இவர் தொகுத்த தொகுப்பு நூல் C.H.Payne என்பவரால் சு ருக்கப்பட்டு 2008இல் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிட்ட நிறுவனம் Beyond Books, Jodhpur.
நன்றி : C.H.Payne & Beyond Books, Jodhpur

