பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் (Post No.7034)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 29 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 14-01

Post No. 7034

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

மாலைமலர் 28-9-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் – ஒரு அறிமுகம்!

ச.நாகராஜன்

பூமித் தாய் எல்லையற்ற கருணை உள்ளம் படைத்தவள்!

தன் மக்கள் நீடித்து ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் பூரணமான நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து அவள் அருளியுள்ளாள்.

ஆகவே தான் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்தவாறே அவளுக்கு நன்றி கூறி விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்; பாத ஸ்பர்ஸம் க்ஷமஸ்வ மே – விஷ்ணுவின் பத்னியே, உன்னைக் காலால் தொட்டு இன்று முழுவதும் நடக்க இருக்கிறேன். இதற்காக என்னை மன்னித்தருள் என்று கூறி வேலையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது நமது அற நூல்கள். நன்றி மறப்பது நன்றல்ல, அல்லவா!

   தானியங்கள், நீர், காற்று, இருக்க இடம், வெப்பம், வானிலிருந்து விளையும் நன்மைகள் என அனைத்தையும் தன் மண்டலத்தில் தந்த அவள் கருணைக்கு எல்லையே இல்லை.

இத்துடன் மூலிகைகள், மினரல்கள் எனப்படும் தாதுப் பொருள்கள், தங்கம் உள்ளிட்ட விலை மதிக்கவே முடியாத உலோகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சொல்லப் போனால் முடிவே இருக்காது.

அன்னை பூமிக்கு 53 பெயர்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று வசுந்தரா என்பதாகும்.

வசுந்தரா என்றால் செழிப்பான நிலத்தையும் அளப்பரிய செல்வங்களையும் கொண்டவள் என்று பொருள். ‘உலகம் முழுவதும் எதிலிருந்து ஆரம்பித்து எதில் முடிகிறதோ அது வசுந்தரா’ என்று இன்னொரு பொருளும் உண்டு. புத்த மத நூல்களும் பாலி மொழியில் உள்ள கிரந்தங்களும் தரும் பொருள்கள் பிரமிக்க வைப்பவை; ரகசியமானவை!

இப்படிப்பட்ட அரிய பூமியில் அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகள்.

இவற்றிற்கு அவரவர் அறிவுக்குத் தக அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.

மனம் கனிந்த அன்னை சரியான வழியைக் காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக – அற நூல்களாக வடிவம் எடுத்தன.

அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப் பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப் பகுதி நவரத்தினங்களைப் பற்றியது.

மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது இது.

இதன் முக்கியத்துவம் என்ன?

மூன்று முக்கிய சாஸ்திரங்களுள் முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.

அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம் – மற்ற கலைகள் எல்லாம் வேடிக்கைக்காக உள்ளனவே தான்.

ஆபத்துக் காலங்களிலும் அனைத்து சமயங்களிலும் உதவுவது : மணி மந்த்ர ஔஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர்.

மணி என்பதில் ஜ்யோதிஷம், வைத்யம், வாஸ்து, எண் கணிதம் , வைத்தியம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் இணைகின்றன.

மினரல் எனப்படும் தாதுபொருள்களை கணக்கிலடங்காத அளவில் பூமித் தாய் தந்திருக்கிறாள்.

அவற்றில் 300 அரிய தாதுக்களை அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.

இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என மணிகளில் நிபுணர்களாக உள்ளோர் குறிப்பிடுகின்றனர். இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் – எகிப்திய, அஸிரிய, ரோமானிய, கிரேக்க, யூத, ஹிந்து, பௌத்த, அராபிய நாகரிகம் உள்ளிட்ட அனைத்துமே – உச்சி  மேல் வைத்துக் கொண்டாடுகின்றன.

ஒன்பது மணிகளை நவ ரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.

நவரத்தினங்களாவன :

1) மாணிக்கம்  – Ruby

2) முத்து – Pearl

3) பவளம் – Coral

4) மரகதம் – Emerald

5) புஷ்பராகம் – Topaz

6) வைரம் – Diamond

7) நீலக்கல் – Blue Sapphire

8) கோமேதகம் – Zircon

9) வைடூரியம் – Cat’s Eye

ஹிந்து நாகரிகத்தில் கருட புராணம், சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும் விரிவாக விளக்குகின்றன.

இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில் இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப் பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.

ரஸ ஜல நிதி என்ற நூல் ஒவ்வொரு விஷயத்தையும் ‘பிட்டுப் பிட்டு’ வைக்கிறது; வியப்பின் உச்சிக்கே போய்விடச் செய்கிறது.

ஆயுள் நீட்டிக்க ரத்தினக் கற்களை அணிக என்று ஆணையிடுகிறார் சரகர்.

தேர்ந்த மருத்துவரான இவர் நூறு வயது வாழ்வதற்கான வழிகளைத் தெள்ளத் தெளிவாக தனது சரக சம்ஹிதை நூலில் விளக்குகிறார். சந்தோஷமாக வாழ்க்கை எது என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அதே நூலில் (அத்தியாயம் 19 சுலோகம் 7) வெளியில் கிளம்பும் போது –

ரத்தினக் கற்களைத் தொடாமல் (அணியாமல்) செல்லக் கூடாது.

பெரியோர்களின் பாதங்களைத் தொடாமல் செல்லக் கூடாது.

நெய், நல்ல மங்களகரமான பொருள்கள், மலர்கள் இவற்றைத் தொடாமல் செல்லக் கூடாது.

வணக்கத்திற்குரிய பெரியோர்கள், பூசிக்கப்படும் பொருள்கள் ஆகியவை வலப்புறம் இருக்கும்படியும், சிறியவர்கள் இடப்புறம் இருக்கும்படியாகவும் உள்ள நிலையில் கிளம்ப வேண்டும். (அதாவது பூஜை செய்த பின் பெரியோர்களை வலமாகச் சுற்றிக் கிளம்ப வேண்டும்.)

இதை அடுத்து, அடுத்த சுலோகத்தில் ரத்தினக் கற்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

ரத்னக் கற்களை கைகளில் அணியாமலோ, குளிக்காமலோ சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தும் அவர் மூலிகைகளை உடலிலே தரிக்குமாறும் அறிவுறுத்துகிறார்.

ரத்னக் கற்களை Precious Stones – அரிய, மதிப்புடைய கற்கள் என்று கூறுகிறோம்.

அரிய கற்கள் என்றால் எதை வைத்து அப்படிச் சொல்ல முடிகிறது.

இதற்கான மேலை நாட்டு வரையறுப்பு –Beauty, Durability, Rarity  – அழகு, நீடித்திருக்கும் தன்மை, அரிதாகவே கிடைப்பது – ஆக இந்த மூன்று பண்புகளும் இருந்தால் அந்தக் கல்லை அரிய கல் என்று கூறலாம் என மேலை நாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது நூல்களோ இன்னும் ஒரு பண்பைச் சேர்க்கிறது.

Usablility – பயன்மை; அது வாழ்க்கைக்கு உதவுகிறதா என்று பார் என்கிறது!

மூன்று பண்புகளின் விளக்கம் என்ன?

அழகு (Beauty) : அழகு அவரவரது கண் பார்வையைப் பொறுத்தது. இன்று இருக்கும் டிசைன் நாளை இருப்பதில்லை. வரம்பற்ற கற்பனைக்கு இடமாக்கித் தன்னை வெவ்வேறு விதத்தில் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ளும் கல்லே அழகுக் கல்!

நீடித்திருக்கும் தன்மை (Durability) : நிறைய விலையைக் கொடுத்து வாங்கி பெருமையுடன் அதை அணியும் போது அது நீடித்திருக்கிறதா அல்லது உடனே மங்கி தன் தன்மையை இழந்து அழிகிறதா என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லும் கல்லே நீடித்திருக்கும் கல்.

அரிதாகவே கிடைப்பது (Rarity) : தனது பெருமையை நிலை நாட்டிக் கொள்ள விரும்பும் ஒருவர் இது கிடைக்கவே கிடைக்காத ஒன்று என்று சொல்லும் போது அவர் அடையும் கர்வமும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காதது.

இந்த மூன்றும் இருந்தாலும் இது நமக்கு உகந்ததா என்பதையும் பார் என்று சொல்கிறது நமது அற நூல்கள்.

உலகில் உள்ள 750 கோடிப் பேர்களில் ஒருவர் போல ஒருவர் இல்லை. கை ரேகை தனி; கண்ணின் கரு விழித் திரை (Iris) தனி. மரபணு தனி. அவர்களது ஆசையும் விருப்பமும் தேவையும் தனித் தனி தான்! உடல் வியாதிகளும், உள்ள மகிழ்ச்சிகளும் தனித் தனி தான்!

இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை அலசுவோம்:

மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும்.

முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்த்தேவதைகளை விலகச் செய்யும்.

புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும்.

வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.

நீலக்கல்,  ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இருவகைப் படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.

கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது.

இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது.

கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

சூரியன் – மாணிக்கம்

சந்திரன் – முத்து

செவ்வாய் – பவளம்

புதன் – மரகதம்

குரு   – புஷ்பராகம்

சுக்ரன் –  வைரம்

சனி – நீலக்கல்

ராகு – கோமேதகம்

கேது – வைடூரியம்

ஆக நவ மணிகளும் கிரஹ தோஷங்களைப் போக்க வல்லவை.

ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு தனிக் கலை.

‘அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட கல்லை அணிந்தேன்; ஆனால் நல்லது நடக்கவில்லை; மாறாக நிலைமை மோசமானது’ என்று ஒருவர் சொன்னால் அது பொய்யாக இருக்காது.

அவர் அணிந்திருந்த கல் உண்மையான, தோஷமற்ற கல்லா என்பதை ஆராய வேண்டும்.

ஆம், கற்களில் உள்ள தோஷங்கள் பல.

அதுவும் இன்றைய அறிவியல் உலகில் செயற்கையாகச் செய்யப்படும் “கற்களை” அதிகப் பணம் கொடுத்து வாங்கி அணிந்து பயன் இல்லாதது மட்டுமன்றி இன்னும் அதிகக் கெடுதல் ஏற்பட்டால் மனம் நோவது இயற்கை தானே!

சாஸ்திரத்தைப் பழிக்காமல் அதைத் தந்த சதிகாரர்களைத் தான் பழிக்க வேண்டும்!

ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக் கலையை அணுக வேண்டும்.

எல்லாத் துறைகளிலும் போலிகள் உள்ளனர் – அறிவியல் துறை உட்பட!!

ஆகவே முதலில் தினமும் சிறிது நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். அட, டி.வி. சீரியலுக்கு ஒதுக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கினால் கூட போதும், வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம்.

இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

கற்க கசடறக் கற்க இந்தக் கலையை; பின் அணிக அதற்குத் தக என்பது தான் நமக்கு உரித்தான சூத்திரம்.

சூஷ்மத்தைப் புரிந்து கொண்டால் வெற்றி தான் பெறுவோம்!

வாழ்க வளமுடன், நல் மணியுடன்!

***

—subham—

Leave a comment

1 Comment

  1. நவரத்தினங்களை அணிவது சகஜம். பொதுவாக ராசி, கிரக நிலை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டே இவற்றை அணிகின்றனர். குறிப்பிட்ட கிரக தோஷங்களுக்கு குறிப்பிட்ட ரத்தினங்கள், அவற்றை குறிப்பிட்ட அளவில் ( ரத்தி, காரட்) குறிப்பிட்ட காலத்திற்கு அணியவேண்டுமென்றெல்லாம் சொல்கிறார்கள்.
    வைரம் பொதுவாக அனைவரும் அணிவது. ஆனால் வைரம் அனைவருக்கும் பொருந்தாது என்பது சில மருத்துவர்கள் கருத்து. எனக்குத் தெரிந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர்- பயோகெமிஸ்ட்ரி மருந்துகளும் தருவார். ஒருமுறை நேரில் பார்த்துவிட்டால் பின்னர் ஃபோட்டோவைப் பார்த்தே டயக்னோஸ் செய்யக்கூடியவர். மிலிடரியில் மேஜராக இருந்தவர். இவரிடம் ஒரு பெரிய பணக்கார அம்மாள் பல கோளாறுகளுடன் வந்தார். அவர் வைர நகைகள் அணிந்திருந்தார். சோதனைகள் முடிந்ததும், ” நீங்கள் அணிந்திருக்கும் வைர நகைகள் உங்களுக்கு ஒவ்வவில்லை, அவற்றைக் கழற்றிவிட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்” எனச் சொல்லிவிட்டார். ஒருவாரம் கழித்து வந்தபோது மீண்டும் டெஸ்ட் செய்து, உங்களுக்கு மருந்து எதுவும் தேவையில்லை, வைர நகைகள் அணியாதீர்கள் என்று சொல்லிவிட்டார். மருந்து தரவில்லை. இன்னொரு பெண் காது கேட்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது என்று வந்தார். அவர் வைரத்தோடு அணிந்திருந்தார். அவரையும் டெஸ்ட் செய்தபோது, “வைரத்தினால் தான் உங்களுக்குப் ப்ரச்சினை, வைரத்தோடு அணியாதீர்கள்” என்று சொன்னார். வைரத்தோடு அணிவதை அவர் நிறுத்தவில்லை. காதும் சரியாகவில்லை. ஹியரிங் சாதனம் போட்டும் சரியாகக் கேட்கவில்லை. இவை இரண்டும் நான் நேரடியாகப் பார்த்தவை.
    பொதுவாக நீலக் கல்லை எளிதாக விற்கமாட்டார்கள். எதற்காக வாங்குகிறீர்கள், எந்த ஜோசியர் சொன்னார், எழுதித்தந்தாரா என்றெல்லாம் கேட்பார்கள். கல்லை ஒரு பொட்டலத்தில் கட்டித்தந்து ‘ இதை ஒருவாரம் பாக்கெட்டில் வைத்திருங்கள், தலையணை அடியில் வைத்திருங்கள், நல்லது நடந்தால் பிறகு நகையில் பதிக்கலாம் ‘ என்று சொல்வார்கள். இது பெங்களூரில் சி.க்ருஷ்ணைய செட்டி கடையில் நான் 35 வருஷங்களுக்குமுன் நேரில் பார்த்தது.
    மாணிக்கம் சூரிய தோஷம் அல்லது சூரிய பலம் குறைவாக இருப்பவர்களுக்காகத் தருவது. இதன் பவர் சரியாக அமையாவிட்டால் அதனால் B.P போன்ற கோளாறுகள் வரும் என்றும் சொல்கிறார்கள்.

    சரியான (அசல்) கல், சரியான பலம், சரியான அறிவுரை- இவை மூன்றும் நடைமுறையில் அவ்வளவு எளிதாக அமைவதில்லை எனத் தோன்றுகிறது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: