

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 16 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-45 AM
Post No. 7101
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கட்டுரை எண் 7085 வெளியான தேதி 11-10-2019 – ‘கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்”
கட்டுரை எண் : 7088 வெளியான தேதி : 12-10-2019 – கீதை : மனிதகுலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி!-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை
ச.நாகராஜன்
ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் இரண்டாவது கட்டளையைப் பார்ப்போம் :
இரண்டாவது கட்டளை : Thou Shalt Not fail to do Thy Duty
நீ உனது கடமையைச் செய்யத் தவறாதே
இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் பல.
அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்:
மஹாத்மா காந்திஜி கடமையைத் தன் உயிரினும் மேலாக நேசித்தார். பலனை எதிர்பாராமல் நிஷ்காம்யகர்மமாக தேசத் தொண்டை அவர் செய்த போது ஒரு கணத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்பது அவரது எண்ணம்; அவரது சங்கல்பம்.
இதே போல தன்னுடன் இருந்தவர்களும் தங்கள் நேரத்தை வீணாக்காது முழு நேரத்தையும் தேசப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
அவருடைய காரியதரிசியான மஹாதேவ தேசாய் அவருடனேயே இருப்பவர். அண்ணலைக் கண் போலப் பாதுகாத்து வந்தவர்.

ஒரு சமயம் மஹாதேவ தேசாய் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்பது காந்திஜிக்குத் தெரிய வந்தது.
ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் இதற்காக அவர் செலவிடுகிறார் என்பதும் அவருக்குச் சொல்லப்பட்டது.
அவர் மஹாதேவ தேசாயை அழைத்தார்.
காந்திஜி :- “மஹாதேவ், நீங்கள் பிரெஞ்சு மொழி கற்று வருவது உண்மைதானா? –
மஹாதேவ் :- ஆமாம், பாபுஜி
காந்திஜி :- ‘எப்பொழுது படிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்?
மஹாதேவ் :- ஒரு மணி நேரம் பாபுஜி
காந்திஜி: – இன்னும் எத்தனை நாள் படிக்க வேண்டும்
மஹாதேவ் – இன்னும் ஒரு ஆறு மாதம் ..
காந்திஜி : – ஓஹோ! அதாவது 180 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், சரி தானே!
மஹாதேவ் :- என்னால் அது முடியும். சீக்கிரமாகவே கற்றுக் கொள்வேன்.
காந்திஜி :- அதாவது அத்தனை மணி நேரம் தேசப் பணிக்கான நேரத்திலிருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆகிறது. ஒவ்வொரு கணமும் தேசத்திற்காகத் தான் என்று நாம் உறுதி மொழி எடுத்துக் கொண்டோமில்லையா? மற்ற எல்லாம் அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி, அவை நமக்கு ஆடம்பரம் போலத் தான். இப்போது நமது நேரத்தை ஆடம்பரத்தில் வீணாக்க முடியாது.
மஹாதேவ தேசாய் காந்திஜியின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்பு தருபவர். பிரெஞ்சு மொழி கற்பதை அவர் நிறுத்தி விட்டார்.
*
பாரத பிரதம மந்திரியாக ஜவஹர்லால் நேரு இருந்த போது நடந்த சம்பவம் இது :

ஒரு முறை அவர் தனது காரில் ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். ரெயில்வே க்ராஸிங் ஒன்று வந்தது. அது மூடப்பட்டிருந்தது.
காரின் டிரைவர், கேட் கீப்பர் அருகே சென்று, “கேட்டைத் திற. உள்ளே உட்கார்ந்திருப்பது யார் தெரியுமா? பாரதப் பிரதமர். அவராலெல்லாம் காத்திருக்க முடியாது. கதவைத் திற”
கேட் கீப்பர் மரியாதையாக பதிலளித்தார் இப்படி : “ எனது கடமை சிக்னல் வந்தவுடன் கேட்டை மூட வேண்டியது தான். திறக்கும்படி சிக்னல் வந்தவுடன் தான் என்னால் திறக்க முடியும்.”
டிரைவருக்குக் கோபம் வந்து விட்டது. “உன்னை எச்சரிக்கிறேன். உன்னை டிஸ்மிஸ் செய்யச் சொல்லப் போகிறேன், பார். உனது வேலை போகப் பொகிறது.கதவைத் திற.”
ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
பண்டிட் நேரு இதைக் கேட்ட போது கேட் கீப்பரின் கடமை உணர்ச்சியை எண்ணி சந்தோஷப்பட்டார். அந்த கேட்கீப்பரைப் பாராட்டுவித்து அடுத்த பிரமோஷனுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.
*
மிகப் பெரிய இசைக் கலைஞரான ப்ராஹ்ம்ஸ் (Brahms) ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரிக்கு அழைக்கப்பட்டார். அவரது நண்பரன ஜொயாசிம்மும் (Joachim) அவருடன் கூட வரவே அவரது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

புடாபெஸ்ட் நகருக்கு மிகுந்த ஆவலுடன் அவர்கள் சென்று சேர்ந்தனர். ஆனால் என்ன ஏமாற்றம்! ஒரே ஒருவர் தான் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
ஜோயாசிம் வெறுப்புடன் கூறினார்: “சீ, என்ன இது! இந்த இசை நிகழ்ச்சியை கேன்ஸல் செய்து விடுவோம். அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.” என்றார்.
ப்ராஹ்ம்ஸ் ஒப்புக் கொள்ளவில்லை. “இவர் நமது இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காக வந்துள்ளார்.அவரை ஏமாற்றமடையச் செய்து எப்படித் திருப்பி அனுப்புவது. நமது கடமை இசை நிகழ்ச்சியை நடத்துவது தான்!’
அப்படியே முழுநேர இசை நிகழ்ச்சி அந்த ஒருவருக்காகவே நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியை வெகுவாக ரசித்த அந்த ரசிகர், “அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.
அடுத்து, இந்திய சாஸ்திரீய சங்கீத விற்பன்னரான விஷ்ணு திகம்பர் பண்டிட் அவர்களுக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு முறை சிறிய நகர் ஒன்றில் அவரது இசை நிகழ்ச்சி ஏற்பாடானது. அங்கு ஒரே ஒருவர் தான் வந்திருந்தார்.
விஷ்ணு தனது முழு இசைக் குழுவுடன் நிகழ்ச்சி முழுவதையும் நன்கு நடத்தி முடித்தார். 3 மணி நேர நிகழ்ச்சிக்கு அந்த ரஸிகர் கொடுத்தது 4 அணாக்கள் தான். (இந்தக் கால 25 பைசாக்கள்)
*
ஒரு முறை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மூவர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சின்ன போக்குவரத்து விதியை அவர்கள் மீறி விட்டனர்.
கார் நிறுத்தப்பட்டது. போலீஸ் ஆபீசர் காரின் அருகில் வந்தார்.
காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த ரால்ஃப் ரிச்சர்ட்ஸன்(Ralph Richardson), “ஆபீஸர், நான் என்று உங்களுக்குத் தெரிகிறதா?” என்றார்.
“எஸ், சார்! நீங்கள் தான் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்றும் ரால்ஃப் ரிச்சர்ட்ஸன். உங்களை அடிக்கடி டி.வியில் பார்ப்பேன்” என்றார் போலீஸ்காரர்.
“இதோ இருக்கிறாரே, இவர் தான் சர் செட்ரிக் ஹார்ட்விக் (Sir Cedric Harwicke ). பின்னால் இருக்கிறாரே அவர் தான் லாரன்ஸ் ஆலிவர் (Laurence Oliver). நிச்சயமாக நீங்கள் அபராத சீட்டைத் தரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார் ரால்ஃப்.
“சார், நான் எனது கடமையைச் செய்ய வேண்டும். நீங்கள் மன்னர் ஆர்தரின் ரவுண்ட் டேபிளில் அமரும் பிரபுக்கள் என்றாலும் கூட நான் உங்களுக்கு டிக்கட்டைத் (அபராத சீட்டை) தந்தே ஆக வேண்டும் என்றார் அந்த போலீஸ் ஆபீசர்.
இப்படி கடமை உணர்ச்சி கொண்டவர்கள் உலகில் ஆங்காங்கே ஏராளம் பேர் உள்ளனர்.
சாது வாஸ்வானி இப்படி இன்னும் அநேக சம்பவங்களைக் கூறி கடமையைச் செய்வதிலிருந்து ஒரு நாளும் விலகக் கூடாது என்று விளக்கி விட்டு அடுத்த மூன்றாவது கட்டளைக்குச் சென்றார்.
அதை அடுத்துப் பார்ப்போம்.
***