வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க கெய்ஸன் மற்றும் ஜிடிடி வழிமுறை! (Post No.7135)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 25 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-32 AM


Post No. 7135

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பாக்யா 16-10-2019 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினெட்டாம் கட்டுரைஅத்தியாயம் 434

வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க கெய்ஸன் மற்றும் ஜிடிடி வழிமுறை!

ச.நாகராஜன்

வாழ்க்கையில் திறம்பட முன்னேற்றம் அடைய விரும்பாதாரே இல்லை. நிறுவனங்களும் எப்படியேனும் உற்பத்தியை அதிகரித்துச் செலவைக் குறைத்து நிறைய லாபத்தை அடையவே விரும்புகின்றன.

இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் வீழ்ந்து கிடந்த ஜப்பான் எப்படியேனும் எழுந்து நிற்க வேண்டும் என்று எண்ணியது. அதன் விளைவாக ஜப்பானியர்கள் பல உத்திகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்று கெய்ஸன்(Kaizen).

கெய்ஸன் என்றால் தொடர்ந்த முன்னேற்றம் என்று பொருள். ஒரு மாற்றத்தை அதிரடியாக ஒரே நாளில் அடைவது என்பது கடினம். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்திலும் சிறுகச் சிறுக தொடர்ந்து முன்னேற்றம் அடைதல் என்ற உத்தியை ஜப்பானிய நிறுவனங்கள் கையாள நினைத்தன. இந்த தொடர் முன்னேற்றமான கெய்ஸனை மிகவும் வெற்றிகரமாக ஜப்பானின் டொயோடோ நிறுவனம் கையாண்டது. உலகமே பிரமிக்கும் வண்ணம் அதன் உற்பத்தி அதிகரிக்க, தரமோ வானளவு உயர்ந்தது.

இதனால் உலக நிறுவனங்கள் இந்த கெய்ஸன் எனப்படும் தொடர் முன்னேற்றத்தை அமுல் படுத்த ஆரம்பித்தன.

திட்டமிடு – செய்- சரிபார்- செயலில் இறங்கு. இது தான் கெய்ஸன்.

ஒரு சின்ன குப்பைக் கூடையை இடம் மாற்றி வைப்பதால் கூட நேர விரயம் தவிர்க்கப்படுகிறது என்பது ஆச்சரியமான விஷயம் என்றாலும் கூட அது உண்மைதான்.

எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் நாற்காலி போன்ற பர்னிச்சர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திய ஹெர்மன் மில்லர் என்பவர் கெய்ஸனில் ஆர்வம் காட்டி அதை அமுல்படுத்த ஆரம்பித்தார். ஏரான் சேர் (Aeron Chair) என்பது அவரது நிறுவனத்தின் புகழ் பெற்ற தயாரிப்பு. ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலும் சரி, டி.வி. ஷோக்களானாலும் சரி, சேர் என்றால் அது ஏரான் நாற்காலியாகத் தான் இருக்கும். அப்படி ஒரு புகழ்!

2012இல் அவர் கெய்ஸனை ஆரம்பித்தவுடன் 1998ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 500 சதவிகிதம் உற்பத்தி அதிகமானது. தரமோ 1000 சதவிகிதம் உயர்ந்தது. ஒரு நாற்காலி தயாரிக்க 82 விநாடிகள் என்பது வெறும் 17 விநாடிகள் என்றானது.

முழு நாற்காலியும் உற்பத்தி வரிசையிலிருந்து முழுவதுமாக பாக்கிங் முடிய 600 விநாடிகள் என்பதிலிருந்து 340 விநாடிகள் என்றானது.

கெய்ஸனின் வெற்றியால் மனம் மகிழ்ந்தோர் அதைத் தனிப்பட்ட வாழ்வில் உயரவும் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஒரு மனிதன் ஒரேயடியாக ஒரே நாளில் உயர்ந்து விட முடியுமா? முடியாது.

படிப்படியாகத் தொடர் முன்னேற்றம் அடைய கெய்ஸன் விதிகள் பயன்படுத்தப்பட்டு பார்த்ததில் நல்ல விளைவுகள் தெரிந்தன.

கெய்ஸனின் பத்து விதிகள் வருமாறு :

 1. சம்பிரதாயமான தொடர்ந்து கடைப்பிடித்து வந்த உளுத்துப் போன கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள்
 2. எப்படி முடிப்பது என்று பாருங்கள், ஏன் அதை முடிக்க முடியாது என்று காரணம் சொல்லாதீர்கள்
 3. செய்ய முடியாததற்கு காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்காதீர்கள். இப்போதிருக்கும் நடைமுறை பற்றிக் கேள்விகளைக் கேட்டு அலசுங்கள்.
 4. 100 சதவிகிதம் முழுமையாக ஒரு செயல் உடனே முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். 50 சதவிகிதம் அடைய முடியும் என்றாலும் அதை இப்போதே செய்யுங்கள்.
 5. ஒரு தவறு செய்யப்பட்டால் அதை உடனடியாகத் திருத்துங்கள்
 6. கெய்ஸனுக்காகப் பணத்தைச் செலவழிக்காதீர்கள். அறிவைப் பயன்படுத்துங்கள்
 7. கஷ்டம் வரும் போது ஞானமும் வரும்.
 8. ஏன் என்று ஐந்து முறை கேளுங்கள். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்
 9. ஒரு தனிப்பட்டவருடைய அறிவை நம்புவதை விட பத்துப் பேரைக் கலந்தாலோசித்து அனைவரின் அறிவையும் பயன்படுத்துங்கள்
 10. கெய்ஸன் அடிப்படையிலான கருத்துக்கள் எண்ணிலடங்காதவை. அனைத்தையும் தெரிந்து கொள்ள முயலுங்கள்; பயன்படுத்துங்கள். தொடர் முன்னேற்றத்தை அடையுங்கள்.

கெய்ஸன் ஒரு புறமிருக்க, நாளுக்கு நாள் அறிவியல் முன்னேற்றத்தினால் தேவைகளும் அதிகரிக்கின்றன; உத்திகளும் கூட மாறுபடுகின்றன.

ஏராளமான வேலைகள்! பல காரியங்களை அவசரம் என்ற பெயரில் உடனுக்குடன் செய்ய வேண்டி இருக்கிறது. கணினித் துறையிலோ கேட்கவே வேண்டாம். நாளைக்கு ஆரம்பிக்க வேண்டிய வேலைக்கு நேற்றே முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது! திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்க வேண்டி இருக்கிறது; நன்கு திட்டமிட வேண்டி இருக்கிறது.

எந்த ஒரு இடத்திலும் சிறிது குறை என்றால் ஏகப்பட்ட நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுகிறது.

ஆகவே Getting Things Done – சுருக்கமாக GTD எனக் கூறப்படும் புது வழியைத் தருகிறார் டேவிட் ஆலன் என்னும் அமெரிக்கர். இவரது Getting Things Done என்ற புத்தகம் 15 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

உற்பத்தித் திறனைக் கூட்டுவதற்கான பைபிள் என்று இதைப் புகழ்கின்றனர். 2001ஆம் ஆண்டு முதலில் வெளியான இது 2015ஆம் ஆண்டு புதிய வடிவில் வெளியிடப்பட்டு உலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது!

தொழிலகங்களின் உற்பத்திப் பெருக்கத்திற்கும் தனி நபர் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆலன் கூறும் வழிகளை அப்படியே வாழ்க்கை முறையிலும் பயன்படுத்த முடியும். நாம் நினைத்ததை அடைய முடியும்.

அவர் கூறும் பல வழிகளில் முக்கியமான சில இதோ:

 1. ஒரு ‘கலெக் ஷன் பக்கெட்டை’ உருவாக்குங்கள். அதென்ன கலெக் ஷன் பக்கெட்?

பல விஷயங்களைச் செய்ய வேண்டுமென்றால் அதை மனம் அடிக்கடி நினைவூட்டி நம்மை செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து திசை திருப்புகிறது. பால் வாங்க வேண்டும், பால் வாங்க வேண்டும் என்று அடிக்கடி நினைவூட்டுகிறது மனம். ஆனால் வீட்டிற்குப் பால் வாங்காமலேயே போகும் போது வருத்தப்படுகிறோம். ஆகவே ஒரு சின்னப் பேப்பரில் இப்படிப்பட்ட விஷயங்களை எழுதி விடுங்கள். வேலை முடிந்தவுடன் அதைப் பாருங்கள். செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்ய முடியும். இந்தச் சின்னப் பேப்பர் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்ய உதவும்

‘கலெக் ஷன் பக்கெட்!

 • அடுத்த செயல் என்ன என்பதற்கான பட்டியல்.

இப்படி பல துண்டுச் சீட்டுகளை எழுதி வைத்திருக்கிறேன், ஒன்றும் நடக்கக் காணோம் என்று சொல்வோருக்கு ஆலன் கூறும் அடுத்த வழி இது. பல செயல்களைச் செய்து முடிக்கத் துடிப்போருக்கு, அடுத்து உடனடியாகச் செய்ய வேண்டிய செயல் என்ன என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். இதன் மூலம் ஒவ்வொரு காரியமாக முடிந்து கொண்டே இருக்கும் – டென்ஷன் இல்லாமல். தனிநபரின் காரியத் திறன் கூடும்; கூடிக் கொண்டே இருக்கும்.

3) வாராந்திர மதிப்பீடு செய்யுங்கள்

குறித்து வைக்கப்பட்டவை முடிகிறதா, பெண்டிங் என்றால் ஏன் அப்படி ஏற்பட்டது,  அதை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள் என்கிறார் ஆலன்.

இது மட்டுமல்ல, பல செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் (எடுத்துக்காட்டாக திரைப்பட ஷூட்டிங் என்று வைத்துக் கொள்வோம் அல்லது ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் லாப் டாப்பில் உட்கார்ந்து வேலை செய்வதை எடுத்துக் கொள்வோம்) தங்கள் வேலைகளை 25 நிமிட வேலைப் பகுதிகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு 25 நிமிட வேலை 5 நிமிட ஓய்வு என்று செய்து கொண்டிருந்தால் அதிகமாகத் திறனுடன் வேண்டியதைச் சாதிக்க முடியும் என்கிறார் ஆலன்.

பல லட்சம் பேர் உலகில் கெய்ஸன் வழியாலும் ஜிடிடி முறையாலும் இன்றைய அவசர யுகத்தில் பலன் பெற்று வருகின்றனர். நாமும் பலன் அடையலாமே!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்க கணித மேதையும் எலக்ட்ரிகல் எஞ்ஜினியருமான க்ளாட் எல்வுட் ஷனான் (Cladude Elwood Shannon தோற்றம்:3-4-1916 – மறைவு: 24-2-2001) வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

ஃபாதர் ஆஃப் இன்பர்மேஷன் தியரி (Father of Information Theory) என்று கொண்டாடப்படுபவர் அவர்.

 செஸ் விளையாட்டில் எத்தனை சிக்கலான கணித நகர்த்துதல்கள் என்பதைப் பற்றிய பேப்பரை 1950 இல் சமர்ப்பித்த அவர் அதில் பத்தின் 120 மடங்கு அடுக்குகள் உள்ளன என்றார். அதாவது ஒன்றைத் தொடர்ந்து 120 பூஜ்யங்களைப் போட்டால் வரும் பிரம்மாண்டமான எண் அது.

செஸ் விளையாட்டை விளையாடும் மெஷினையும் அவர் தான் உருவாக்கினார். உலகினரை பிரமிக்க வைக்கும் மூளையைக் கொண்ட அவருக்கு மேடையில் பேசுவது என்றால் நடுக்கம் தான். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளிலிருந்தே தான் உருவாக்கிய துறை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டார் அவர். 1973 இல் அவர் பெயரால் நிறுவப்பட்ட ஷனான் லெக்சரில் உரையாற்ற அவரை அழைத்தனர். கடைசி நிமிடத்தில் கூட்டத்தில் உரையாற்ற மறுத்து விட்டார்.

1985இல் பன்னாட்டு இன்பர்மேஷன் தியரி பற்றிய கருத்தரங்கில் திடீரெனத் தோன்றவே அவரைப் பேசுமாறு அனைவரும் வேண்டவே சில நிமிடங்கள் உரையாற்றினார். திடீரென்று தான் போர் அடிக்கிறோமோ என்று நினைத்தவர் தன் பையிலிருந்து மூன்று பந்துகளை எடுத்து தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தார்.

இது அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று!

வந்தவர் ஷனான் என்பதை அறிந்து கொண்ட கூட்டத்தினரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவரிடம் ஆட்டோகிராப் வாங்க பெரும் வரிசை உருவானது. அனைவரையும் திருப்திப்படுத்தினார் அந்த மேதை!

*** 

Leave a comment

2 Comments

 1. Parameswaraiyer Ambikapathy

   /  October 25, 2019

  அருமையான பதிவு
  மிக்க நன்றி ஸ்வாமினாதன்!

  Sent from my iPhone

 2. கெய்ஸன் இன்று தொழில், மேனேஜ்மென்ட் ( மேலாண்மை?) துறைகளில் பரவலாகப் பேசப்படும் கருத்து. சில வருஷங்களுக்கு முன் Quality Circles என்ற கருத்தும்-முறையும் இவ்வாறே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இந்தியாவில் எந்தத்துறையிலும் இவற்றால் மகத்தான அளவுக்கு எந்த மாற்றமும் நிகழவில்லை. ஏன்?
  ஜப்பானியர்கள் பின்பற்றும் எந்த முறையும் அவர்களுடைய வாழ்க்கைமுறையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. வெளிப்பார்வைக்கு அவர்கள் மேலை நாகரிகத்தைப் பின்பற்றுவதாக இருந்தாலும், அடிப்படையில் அவர்கள் தங்கள் தேசீய உணர்வையும் அதன் செயல்பாடுகளையும் இழக்கவில்லை. அவர்கள் மேலை நாட்டு -அமெரிக்க- மோகத்திற்கு அடிமையாகவில்லை. அவர்கள் மேற்கொள்ளும் எச்செயலிலும் ஜப்பனியத் தன்மை மறைந்துவிடுவதில்லை.
  நிர்வாக-மேலாண்மை-தொழில் துறைகளில் மிளிரும் ஜப்பானியத் தன்மைகளில் முதன்மையான சில அம்சங்களாவான:
  – வயதுக்கு-சீனியாரிடிக்கு மதிப்பு. ஒரு சூபர்வைசர் தொழிலாளிகளைவிட வயதிலும் சர்வீஸிலும் மூத்தவராகவே இருப்பார். அதனால் அவர் பதவிக்கேற்ற மதிப்பும் மரியாதையும் இயற்கையாகவே அமைந்துவிடும்!
  – பதவி உயர்வு என்பது சீனியாரிட்டியால் வரும். ஒருவன் அதிக திறமைசாலி /புத்திசாலி எனக் கருதப்படுவதால் மட்டுமே அவனைத் தூக்கிவிட மாட்டார்கள்.
  -ஏறத்தாழ ஒரே வித/ஒரே நிலை கல்வி/தொழில் /அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரே அளவு ஊதியம்தான். அதனால் ஒரு கம்பெனியை விட்டு வேறு எங்கு சென்றாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் வராது! அதனால் கம்பெனி விட்டு கம்பெனி தாவுதல்- Job Hopping- என்பதெல்லாம் அதிகம் கிடையாது.
  – ஒரு இடத்தில் வேலைக்குச் சேர்பவர்கள் அனேகமாக தங்கள் பணிக்காலம் முழுவதும் அங்கேயேதான் இருப்பார்கள். அதனால் தங்கள் கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
  -நிர்வாகத்தினரும் தொழிலாளர்களும் எந்த விஷயத்திலும் கலந்துபேசி முடிவுக்கு வருவார்கள். ஒருவரை ஒருவர் சதாய்க்கும் வேலையெல்லாம் கிடையாது. கம்பெனிக்கு வருமானத்தில் முன்னேற்றம் இருந்தால் தொழிலாளர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். கம்பெனிக்கு சிரமதசை இருந்தால் தொழிலாளர்கள் உணர்ந்து ஒத்துப்போவார்கள்.
  – எந்த வேலையிலும், எந்தத் துறையிலும் அவர்கள் குழுக்களாகச் சேர்ந்தே செயல்படுவார்கள். Team work. வங்கிகளில் கடன் கொடுப்பதாக இருந்தாலும் அதை ஒரு கமிட்டியே செய்யுமே தவிர ஒரு அதிகாரி தனியாகச் செய்யமுடியாது! இதனால் அங்கு வேலை செய்பவர்களுக்கு பிறருடன் ஒத்துப்போகும் மன நிலை வளர்கிறது.
  – அடிப்படை தேசீய உணர்வு அனைவருக்கும் உண்டு. நம் நாடு சிறியது- இயற்கை வளம் குன்றியது- நாம் பிழைக்க ஏற்றுமதி செய்தே ஆகவேண்டும்- அதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படவேண்டும்- இப்படி இருந்தும் நம் பொருள்கள் உலகச் சந்தையில் விலைபோகவேண்டுமானால் அதன் தரம் உயர்வாக இருப்பதுடன் அதன் விலையும் சரியாக இருக்கவேண்டும் இதற்கு ஆதாரம் தொழில் நுட்பத் திறன் என்ற அடிப்படை உண்மையை ஒவ்வொரு ஜப்பானியரும் உணர்ந்திருக்கிறார்கள். [ Every Japanese is aware that his country is small, has to survive by exports, these depend on import of raw materials, that if exports have to be competitive in international markets, the quality and price have to be right, and this can only be achieved by technological innovation and constant innovation/improvement]
  இதுவே அவர்கள் பின்பற்றும் கெய்ஸன், குவாலிடி ஸர்கிள் ஆகிய உத்திகளின் பின்புலம்.
  இத்தகைய ஜப்பானியப் பின்னணி இல்லாமல் கெய்ஸனை வெறும் ஃபார்முலாவாகக் கொண்டு செயல்பட்டால் என்ன பயன் வரும்?

  எந்த விஷயத்திலும் இந்தியா தனக்கென ஒரு பாதையை தன் தேசீய அடிப்படையில் வகுத்துக்கொள்ள வில்லை. நமது அரசியல் சட்டம், பொருளாதாரக் கொள்கைகள், நீதிமன்றங்களின் நடைமுறை, கல்வி முறை ஆகிய அனைத்தும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதியானவையே! அதனால் தான் எங்கும் எதிலும் குழப்பம். இந்த நிலையில் நமக்கு கெய்ஸன் வந்து என்ன சாதிக்கும்?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: