கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி! (Post No.7144)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 27
OCTOBER 2019
Time in London – 5-08 AM
Post No. 7144
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கொங்குமண்டல சதகம்
கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி!
ச.நாகராஜன்

உண்மையாக நடந்த வரலாறு இது. கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த காலம். சோழமண்டலத்தை குலோத்துங்க சோழன் ஆண்டு வந்தான்.
ஒருமுறை காவேரி நதி பெருக்கெடுத்தோடி வெள்ளம் கரையைக் கடந்தது. இதனால் நதியின் இருக்கரையிலும் இருந்த நிலங்கள் பாழாயின. ஊர்கள் அழியலாயின.
அரசனும் அதிகாரிகளும் குடிமக்களும் ஒன்று கூடினர். என்ன செய்வதென்று யோசித்து, பின்னர் அணை கட்டினார்கள். இருந்தாலும் வெள்ளம் அடங்கவில்லை.
குடிமக்கள் அரசனை நோக்கி, “அரசே! கம்பர் பாடினால் கரை நிற்கும்” என்றனர்.
அனைவரும் மஹாகவியாகிய கம்பரைப் பலமுறையும் வேண்டினர்.
உடனே கம்பர்,



கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரையழிந்து போயினளென் -றின்னீர்
உரை கிடக்க லாமோ வுலகுடைய தாயே!
கரை கடக்க லாகாது காண்
என்ற வெண்பாவைப் பாடினார்.
உடனே நதிப்பெருக்கு அடங்கியது.
பெருமகிழ்வுற்ற மன்னனும், குடிமக்களும் கம்பரை போற்றிப் புகழ்ந்தனர்.
அரசன் கம்பரை நோக்கி,”கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் காப்பாற்றப்பட்டது. இதற்கு யாது கைம்மாறு செய்வேன்” என்று கேட்டான்.
கம்பர் புன்னகையுடன், “அரசே! எப்பொழுதும் அரசனும் குடிகளும் நினைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆதலின் கலியாண வரி என்று ஒரு வரியை ராஜ்யத்துக்கு மக்கள் செலுத்தி வருகிறார்கள். அதை இதற்கு உதவுங்கள். அது போதும்” என்றார்.
உடனே சோழன் ஒரு சாசனம் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
கதுவி வருபொன்னி கரைகடவா வண்ணம்
பதுமமுகக் கம்பனவர் பாட – வதுவைவரி
மாடை யரைக்கழஞ்சு வண்கம்பர்க் கீந்தபரி
சேடர் குலோத்துங்க னெழுத்து.
என்ற பாடல் குலோத்துங்கன் ஓலையில் சாசனம் எழுதிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.
‘கம்பர்க்கு ஈந்த பரிசு ஏடர் குலோத்துங்கன் எழுத்து’ என்பதில் ஏடர் என்றால் ஏடு அல்லது ஓலை. ஆகவே சாசனம் என்றாகிறது.
கம்பர் உடனே, “இது என் வல்லமையால் நிகழ்ந்த ஒன்று அல்ல; தெய்வத் தமிழால் நடந்தது. ஆகவே வதுவை வரி எனப்படும் இந்த கலியாண வரியை அத்தமிழுக்கே உரிமை ஆக்குகின்றேன்” என்றார்.
பின்னர் அரசனையும் குடிமக்களையும் நோக்கி அவர், “அரசே! குடிமக்களே! இந்தத் தமிழ்நாட்டின் குடிகளான புலவர் பெருமக்கள் இந்தக் கொங்கு நாட்டில் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றனர். அரசர்களாலும் குடிகளாலும அவர்கள் ஆதரிக்கப்பட்டு தமிழை நன்கு வளர்த்து வந்தார்கள். இப்போது அவர்களின் செழிப்பு சற்று மலினப்பட்டது போல இருக்கிறது. ஆகவே இந்தக் கொங்கு மண்டலத்தில் கல்யாண காலத்தில் மணமகன் மணமகளை ஆசீர்வதித்து வாழ்த்தும் சமயம் எனக்குக் கொடுத்த கலியாண வரியை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.
அரசனும் குடிமக்களும் கம்பரின் இந்தப் பெருங்குணத்தை வியந்து போற்றி, அப்படியே ஆகுக என்றனர்.
கம்பர் வாழி பாடி அப்புலவர்களிடம் சாசனத்தைக் கொடுத்துத் தலைமுறை தலைமுறையாக, காலங்களில் வாழி கூறி வரிப்பணத்தைப் பெற்றுத் தமிழை வளர்த்து வாருங்கள் என்று கூறினார்.
கொங்கு நாட்டில் சோழர்களின் ஆதிக்கம் இருந்ததை வரலாறு மூலம் நன்கு அறியலாம்.
கரூர் சோழர்களது ஐந்து முடிசூட்டும் தலங்களின் ஒன்றாக இருந்தது.
ஜயங்கொண்ட சோழேச்சுரம்
கரிகாலச் சோழேச்சுரம்
பராக்கிரம சோழேச்சுரம்
விக்கிரம சோழேச்சுரம்
குலோத்துங்க சோழேச்சுரம்
குலோத்துங்க விண்ணகரம்
என இப்படிப் பெயர் பெற்ற பல சிவ, விஷ்ணு ஆலயங்களும் இங்கு உள்ளன.
பல சிலாசாசனங்களும் உள்ளன. பிரபந்தங்களும் உள்ளன.
குலோத்துங்கன் காலத்தில் காவேரி கரை கடந்தது என்றும் கம்பர் பாட அது அடங்கிற்றென்றும் கூறும் பல பிரபந்தங்களும், சாசனங்களும் உள்ளன.
கம்பர் காலத்தில் இருந்தவன் இரண்டாம் குலோத்துங்கன் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.
இந்த அழகிய வரலாற்றைக் கொங்கு மண்டல சதகத்தின் முப்பதாவது பாடல் இப்படி விளக்குகிறது :-
கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச்செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே
பொருள் : ‘கன்னியழிந்தனள்’ என்று தொடங்கும் பாட்டை கம்பர் பாடும் படி செய்த கங்கா குலத்தவர்கள் வசிப்பதும் கொங்கு மண்டலமே!
***


Kambar Samadhi, Nattarasankottai, picture sent by Venkat Kannan
