ரிஷிகள் தவம் புரியும் தலம் ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்! (Post No.7160)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 31 OCTOBER 2019

Time  in London – 8-45 am

Post No. 7160

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 28-10-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ரிஷிகள் தவம் புரியும் தலம் ரிஷிகேசம்; மோட்சத்தின் வாயில் ஹரித்வார்!

ச.நாகராஜன்

கங்கோத்ரி

பாரத தேசத்தின் தெய்வீக மலை இமாலயம்.

தெய்வ நதி கங்கை.

கங்கையை முதலில் தரிசிக்கும் இடம் கோமுகி!

 கங்கை பிரதேசத்தில் கங்கை எப்படித் தோன்றுகிறாள் என்பதைத் துல்லியமாகக் கண்டவர் யாருமில்லை.

இமயமலையில் 14000 அடி உயரத்தில் ஒரு குகை! இந்த குகையின் தோற்றம் பசுவின் வாய் போல் இருக்கிறது. இது கோமுகி என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து கங்கை வெளிப்படுகிறாள். இந்த இடம் கங்கோத்ரி எனப்படுகிறது.

சுமார் இருபத்திரண்டடி உயரத்திலிருந்து நான்கு அடி அகலம் உள்ள நீர்த்தாரை விழ அதுவே பொங்கிப் பல்கிப் பெருகும் மாபெரும் தெய்வீக நதியாக மிளிர்கிறது.

கங்கை கங்கை என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவனது பாவங்கள் அனைத்தும் நசிந்து அவன் விஷ்ணு லோகம் அடைகிறான் என்ற ஸ்லோகம் கங்கையை நினைத்தாலே பாவம் போகும் என்கிறது.

ஹரித்வார்

கங்கோத்ரியிலிருந்து கிளம்பும் கங்கை உத்தரகாசி வழியே தேவப்ரயாக் என்னுமிடத்தை அடைந்து ஹரித்வாரத்தை அடைகிறாள்.

ஹரித்வார் என்றால் மோட்சத்தின் வாயில் என்று பொருள்.

கங்கோத்ரியிலிருந்து 365 மைல் தூரம் யாத்திரை செய்து பக்தர்கள் ஹரித்வாரை அடைவது பெரிதும் போற்றுதற்குரிய கங்கா யாத்ரா என அழைக்கப்படுகிறது.

புண்ணியசாலிகளே இந்த யாத்திரையை மேற்கொண்டு ஹரித்வாரை அடைகின்றனர்.

இரு மலைத் தொடர்களுக்கு இடையே கங்கை பாய்ந்து வருகிறாள்; பக்தர்களைப் பரவசம் அடையச் செய்கிறாள்.

ரிஷிகேசம்

இங்கிருந்து பதிநான்கு மைல் தூரத்தில் உள்ளது ரிஷிகேசம். ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே கங்கையும் துணைக்கு வருவாள்.

ரிஷிகேசம் என்றால் ரிஷிகள் வசிக்கும் இடம் என்று பொருள்.

இந்த இமயமலைப் பகுதி மட்டும் ஆயிரக்கணக்கான ரிஷிகளால் அன்றும் இன்றும் சூழப்பட்டு தியானத்திற்குரிய தெய்வீக இடமாக அமைகிறது.

பியர்ஸ் ஜெர்விஸ் என்ற மேலைநாட்டு எழுத்தாளர் கங்கைக்கு இடையில் அமைந்துள்ள தீவிற்கு (பூர்வ புண்ணியவசமாக) சென்று பல ரிஷிகளைப் பார்த்ததையும் அவர்களின் வயது நூறிலிருந்து ஆயிரம் வருஷங்கள் வரை இருக்கும் என்றும் தனது நூலான நேகட் தே ப்ரே

நிர்வாணமாகவே அவர்கள் பிரார்த்திக்கிறார்கள் – (Naked They Pray) – என்ற புத்தகத்தில் எழுதி அதிசயிக்கிறார்.

ரிஷிக்கு இலக்கணம் என்ன?

ரிஷி என்றால் யார்?

சுயநலமின்றி பிறருக்காக வாழ்பவரே ரிஷி. சத்தியத்தின் வழி நடந்து சத்தியமே உருவாக ஆகி இருப்பவர் ரிஷி!

ரிஷி என்பவர் சூட்சும திருஷ்டியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையின் நுட்பங்களைக் காண்கிறார்.

 அந்தர் திருஷ்டி மூலம் ஒருவரின் அந்தக்கரணத்தை அறிந்து அவரது நடத்தையை அறிந்து அதற்கான ஆதி காரணத்தை அறிகிறார்.

திவ்ய திருஷ்டி மூலம் ஒருவரின் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிகிறார்.

இப்படிப்பட்ட ரிஷிகளின் இருப்பிடம் தான் ரிஷிகேசம்.

வெளிப்படையாகவும், பெரும்பாலான சமயம் தங்களை  மறைத்துக் கொண்டும் இன்றும் இவர்கள் ரிஷிகேசம் சார்ந்த பகுதியில் தவம் புரிந்து வருகின்றனர்.

இவர்கள் நடமாடிய – நடமாடும் – பூமியைத் தரிசிப்பதே பாவங்களைப் போக்கும்; புண்ணியத்தை அள்ளித் தரும்!

    நடந்த ஒரு விஷயத்தை நிபுணர்கள் தங்களின் அழகிய பொருள் பொதிந்த வார்த்தைகளால் சொல்லும் போது அர்த்தம் வார்த்தையின் வாயிலாக வெளிப்படுகிறது.

ஆனால் ரிஷிகள் எந்த வார்த்தையைச் சொன்னாலும் அர்த்தம் அதற்குத் தக ஏற்பட்டு அப்படியே நடக்கிறது!

(லௌகிகானாம் ஹி சாதூனாம் அர்த்தம் வாகனுவர்த்ததே, ரிஷீனாம் புனராத்யானாம் வாசமர்த்தோனுதாவதி என்கிறது வடமொழி ஸ்லோகம்)

எடுத்துக்காட்டாக திருக்கடையூரில் அபிராமி பட்டர் தியானத்தில் மூழ்கி இருந்த போது அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம் கூற அன்று இரவு முழு நிலா எழுந்த உண்மை வரலாறை இங்கு நினைவு கூரலாம்.

லட்சுமண ஜூலாவும் ராமர் பாலமும்

சலசலத்து ஓடும் கங்கை நதியைக் கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.

அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள்.

இலேசாக அசைந்து ஆடும் இந்தப் பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும் கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர் படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம்.

இந்தப் பகுதியில் தான் லட்சுமணர் தவம் செய்தார்.

லட்சுமணருக்காகத் தனிக் கோவில் அமைந்துள்ள இடம் இது ஒன்று தான்.

இங்கு வந்து இந்த இடத்தில் பூஜை செய்த சூரத்மல்தாஸ் என்ற அரசன் இங்கு ஒரு கயிற்றுப் பாலத்தை அமைத்தான். ஆனால் கும்பமேளா சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இதைப் பயன்படுத்தியதால் அது அறுந்து போயிற்று. ஆகவே பிரிட்டிஷ் அரசை வேண்டிக் கொள்ள 1927ஆம் ஆண்டு கான்க்ரீட் அமைப்புள்ள ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டது.

1986ஆம் ஆண்டு கும்பமேளா நடந்த சமயம் இன்னொரு பாலம் இங்கு அமைக்கப்பட்டது.

இதை ராமர் பாலம் என்கின்றனர்.

இந்த இரு பாலங்களின் மீது நடப்பதை பாவம் தீர்க்கும் புண்ணிய நடையாக பக்தர்கள் கருதுகின்றனர்.

ரிஷிகேசத்தில் உள்ள கோவில்கள்

இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்தத் தலத்தில் தான் ராமரும் லட்சுமணரும் ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.

அத்துடன் பரதரும், சத்ருக்னரும் கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.

ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம் ராமர் பாலத்தின் அருகில் உள்ளது.

லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன் அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.

இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி, மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர், விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.

இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ் மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.

சுற்றிலும் அழகிய சாந்தி தவழும் மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம்! இங்கு இந்த ஆலயத்தை பாபா காளிகம்லிவாலா என்ற மகான் அமைத்தார் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதையைப் பரப்பும் பெரும் நிறுவனமான கீதா பவனும் லட்சுமண் ஜூலாவை அடுத்து அமைந்துள்ளது.

ரிஷிகேசத்தின் உள்ளேயே அமைந்துள்ள இன்னொரு ஆலயம் பத்ரிநாதர் ஆலயம். பத்ரிநாத்திற்குப் போக முடியாதவர்கள் இங்கு வந்து தரிசித்தால் அதே பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரிஷிகேசத்தில் சிவானந்த ஆசிரமம், ஸ்வர்க்காசிரமம், காஞ்சி மஹாபெரியவர் அமைத்த சங்கர மடம் உள்ளிட்ட 72 ஆசிரமங்கள் உள்ளன.

ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம்  என்று  கொண்டாடப்படுகிறது.

ரிஷிகேசம் டில்லியிலிருந்து சுமார் 150 மைல் தூரத்தில் உள்ளது. யாத்ரிகர்களின் பயணத்திற்காக ஏராளமான பஸ்கள் உள்ளன. ரயில் வசதியும் உண்டு. டேராடூனுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ரிஷிகேஷை அடையலாம்.நவம்பர் முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர்.

ஏராளமான தர்மசாலாக்களும், ஆயிரம் அறைகள் கொண்ட இலவச தங்குமிட வசதியும் பக்தர்களுக்கென இங்கு உண்டு; ஏராளமான ஹோட்டல்களும் உள்ளன.

ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று ஹரித்வார்

அயோத்யா, மதுரா, மாயா, காசீ, காஞ்சி, அவந்திகா, புரீ, த்வாராவதீ ஆகிய ஏழு தலங்களும் மோக்ஷபுரிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஹரித்வார் என்பது மோட்சம் தரும் இந்த ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்று. பழைய காலத்தில் மாயாபுரி என்று அழைக்கப்பட்ட திவ்ய பூமியே இன்றைய ஹரித்வார்.

இது தான் தக்ஷப்பிரஜாபதி யாகம் செய்த இடம்.மாயையின் வசமாகி அவன் அகம்பாவம் தலைக்கேறி சிவபிரானை அவமதித்தான். இதனால் கோபமுற்ற தாக்ஷாயணி தேவி அங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதனால் கோபமுற்ற சிவபிரான் தட்சனை மாய்த்து தாக்ஷாயணியைக் கையில் தூக்கிக் கொண்டு தாண்டவமாடினார். இப்படி தாக்ஷாயணி உயிர் நீத்த இடமாதலால் தேவிக்கு இங்கு ஒரு கோவில் உண்டு. அது கனகல் கோவில் என்று புகழ் பெற்று விளங்குகிறது.

      தட்சன் செய்த வேள்வியின் பலனாக அவன் நற்கதியே பெற்றதால், அவனுக்கென ஒரு கட்டமும் கோவிலும் இங்கு உள்ளன.

ஹரித்வார் கோவில்கள்

ஹரித்வாரில் இன்னும் பல முக்கியமான கோவில்கள் உள்ளன.

மன்சா தேவி ஆலயத்தில் உள்ள மரத்தை தரிசித்து தங்கள் பிரார்த்தனையைச் சொன்னால் இஷ்டங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவம்.

கங்கா மாதாவிற்கென உள்ள கோவில்,பிரம்ம குண்டத்தைச் சுற்றி இராமர் கோவில்,விநாயகர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்ததாக வரலாறு உண்டு. ஆகவே அவர்களுக்கும் திரௌபதிக்கும் இங்கு கோவில்கள் உண்டு.

இங்குள்ள குளத்தில் பீமன் தன் காலை ஊன்ற உடனே அதிலிருந்து நீர் சுரந்ததாக வரலாறு கூறுகிறது.

ஹரித்வாரிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிகிறது. இது சாத் சரோவர் – ஏழு துவாரங்கள் – என்று சொல்லப்படுகிறது.

கண்வ ஆசிரமம்

 ஹரித்வாரிலிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில்  மாலினி நதிக் கரையில் அமைந்துள்ளது கண்வ ஆசிரமம். கோட்துவா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தில் தான் கண்வ மஹரிஷி வாழ்ந்து வந்தார்.

அவர் வளர்த்த சகுந்தலையால் எழுந்த மஹா காவியம் தான் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம்.

சகுந்தலை வளர்ந்த இடம், சகுந்தலை துஷ்யந்தனைச் சந்தித்த இடம் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு பார்த்து மகிழலாம்; பயபக்தியுடன் வணங்கலாம்.

ஹரித்வார் கும்பமேளா

ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளா உலகில் மிக அதிகமாக பக்தர்கள் கூடும் ஒரே உலகத் திருவிழாவாகும். சூரியன் மேஷ ராசியிலும் குரு பகவான் கும்பராசியிலும் இருக்கும்போது ஹரித்வாரில் கும்பமேளா நடக்கும்.

அமிர்தத்தைப் பெற வேண்டி பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது கலசத்திலிருந்து சில துளிகள் நான்கு இடத்தில் விழுந்தன.

பிரயாகை, ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகியவையே அந்த நான்கு இடங்கள்.

இந்த நான்கு இடங்களில் அமிர்தத் துளிகள் விழுந்த புனித சம்பவத்தை நினைவு கூர்ந்து புண்ணியம் அடைய கும்பமேளாவில் பக்தர்கள் கூடுகின்றனர்;

1903இல் நான்கு லட்சம் பேர் இந்தத் திருவிழாவில் கூடினர். 2010இல் நடந்த கும்பமேளாவில் நான்கு கோடி பேர் கலந்து கொண்டு நீராடி புண்ணியம் அடைந்தனர்.

சாமான்யனில் ஆரம்பித்து காடுகளில் தவம் செய்யும் முனிவர்கள் ரிஷிகள் மகான்கள் முடிய கும்பமேளாவிற்கென அனைவரும் வருகின்றனர். பக்தர்கள் நீராடுவதோடு இப்படிப்பட்ட ரிஷிகளை ஒருசேர தரிசிப்பதால் இரட்டை புண்ணியத்தை அடைகின்றனர்..

இன்னும் இமயமலைக் காடுகளிலும் கங்கை நதிக் கரையோரப் பகுதிகளிலும் ஆங்காங்கே அமைந்துள்ள நகர்களிலும் ஏராளமான அதிசயக் கோவில்கள் உள்ளன; அந்தப் பகுதியில்

 நிஜமாக நடந்த ஆயிரக்கணக்கான பிரமிக்க வைக்கும் வரலாறுகளும் உள்ளன!.

இப்போதும் தொடரும் பல அதிசய சம்பவங்கள் ஊடகங்கள் வழியே உடனுக்குடன் பரவி உலகினரை பிரமிக்க வைக்கின்றன.

ரிஷிகள் தவம் புரியும் ரிஷிகேசமே மோட்சத்திற்கு வழி காண்பிக்கும் ஹரித்வாரை அடையச் செய்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!

***

Gangotri
Himalaya Pictures by Radhika Balakrishnan

–subham–

Leave a comment

Leave a comment