
WRITTEN by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 1 NOVEMBER 2019
Time in London – 5-11 AM
Post No. 7163
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
தத்தி தத்தி நடந்து வந்த பூஞ்ஜாடி – யோகி நிகழ்த்திய அற்புதம்!
ச.நாகராஜன்

பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்கள் இவை.
பிரான்ஸின் ஈஸ்ட் இந்தியாவில் (French East India) சந்திரநாகூரில் தலைமை நீதிபதியாக இருந்தவர் லூயிஸ் ஜாகொல்லியட். (Mons. Louis Jacolliot – Chief Justice of Chandranagoare).
அவர் ‘Occult Science in India and among the Ancients’ என்ற புத்தகத்தில் தன்னிடம் வந்து அதிசய சம்பவங்களை நிகழ்த்திக் காட்டிய இரு யோகிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஒருவரின் பெயர் செல்வநாதன். இன்னொருவர் பெயர் கோவிந்தசாமி.
பாண்டிச்சேரி வந்த செல்வநாதன் ஒரு தராசில் ஒரு பக்கம் 176 பவுண்ட் எடை வைக்கப்பட்ட போது எதிர்பக்கம் ஒரு மயில் இறகை மட்டும் வைத்தார். அவர் மயிலிறகை வைத்த பக்கம் தராசு தாழ்ந்து போனது.
தனது கையை அவர் அசைக்கவே ஒரு பூங்கொத்து உருவானது. பின்னர் இன்னும் கையை அசைக்கவே ஒரு நிழல் விதவிதமான பூக்களின் படத்தை வானில் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தது.
கோவிந்தசாமி என்ற யோகி ஜாகொல்லியட்டை வந்து பார்த்தார். அவர் ஒரு பூஞ்ஜாடியில் தண்ணீரை விட்டு சிறிது தூரத்தில் வைத்தார்.
அது சிறிது அசைந்து ஆடியது. பின்னர் மெதுவாக அவரை நோக்கித் தத்தித் தத்தி அசைந்தவாறே நடந்து அவரிடம் வந்தது.
பிறகு அவர் அந்த ஜாடியிலிருந்து வெவ்வேறு ஓசையை எழுப்பிக் காட்டினார். ஒரு இரும்புத் தடியினால் அதைத் தட்டினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த ஓசை.
பிறகு மேலிருந்து புயல் காற்று வீசும் ஓசை எழும்பியது.
பிறகு மத்தளத்தை வாசித்தால் எழும்பும் ஓசை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தது.
இசைக் கருவி ஒன்று கொண்டுவரப்பட்டு அது இசைக்கப்படவே முதலில் ஜாடியிலிருந்து தட்டுகின்ற ஓசை எழுந்தது.
பின்னர் ரபின் டெஸ் போயிஸ் (Rabin Des Bois) -இன் இசைக்குத் தக அதுவும் தாளம் போட ஆரம்பித்தது.
பின்னர் ஒரு புயல்காற்று போன்ற ஒன்றை அவர் உருவாக்க ஜாடியிலிருந்து எழும்ப ஆரம்பித்த நீர் சுமார் இரண்டடி உயரம் பீறிட்டு அடித்தது.
இந்த நிகழ்வுகள் நிகழ்ந்த அந்தச் சமயம் தோட்டக்காரன் தோட்டத்தின் மூலையில் இருந்த ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தான்.
அங்கு தான் கோவிந்தசாமி தனது நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
அவர் தனது கையை அசைத்தவுடன் கிணற்றிலிருந்த கயிறு அப்படியே அசையாமல் நின்று விட்டது.
தோட்டக்காரனோ பேச முடியாமல் ஊமையாகி விட்டான்.
தனது கையை அவர் கீழே இறக்கியவுடன் தண்ணீர் இறைக்கப்படும் வகையில் கயிறு அசைய ஆரம்பித்தது. தோட்டக்காரனும் பேச ஆரம்பித்தான்.
இதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இந்த சம்பவங்களை டாக்டர் பால் ஜாய்ர் (Dr Paul Joire) தனது புத்தகமான ’Psychical and Supernormal Phenomenon’ என்ற புத்தகத்தில் (பக்கம் 79-84) விவரித்துள்ளார்.
யோகிகள் தங்கள் ஆற்றலைக் காண்பித்து மேலை நாட்டாரை வியக்க வைத்த இது போன்ற ஏராளமான சம்பவங்கள் உண்டு.
இவற்றை அப்படியே பலரும் பதிவு செய்ததால் நம்மால் இவற்றை அறிய முடிகிறது!
***
