

WRITTEN BY S Nagarajan
swami_48@yahoo.com
Date: 9 DECEMBER 2019
Time in London – 8-20 am
Post No. 7318
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்

நாமக்கல் மலையிடையில் கீழ்ப்புறம் பாறையைக் குடைந்து அரங்கநாதனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தூண்களை உடைய மேடை ஒன்று, அதன் அடிப்பாகம் மூன்றடுக்குகள், இரண்டு தூண்களை உடைய கூடம், குகையின் மேல் பாகம் வளைவாக வந்து நீண்டிருக்கும் ஒரு தாழ்வாரம். தூண்களுக்குச் சரியாகச் சுவர் எழுப்பி மூன்று கதவுகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கதவின் வழியாகத் தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். மற்ற இரண்டு வாயில்களும் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுபவை.
உயரமான மேடையில் கார்க்கோடகன் என்னும் பாம்பைப் பாயலாகக் கொண்டு அரங்கநாத சுவாமி சயனகோலம் பூண்டிருக்கிறார். அக்குகையின் மேற்குப் புறச் சுவரின் அருகில் தும்புரு, நாரதர், பதஞ்சலி, பிரமன், நான்கு கந்தர்வர்கள் ஆகியோருடைய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியின் பாதத்தின் அருகில் மேடையின் வடக்குச் சுவரில் மது, கைடபர், சந்திரன் ஆகியோரது சிலகள் உள்ளன. சூரியனின் உருவம் சுவாமியின் சிரசுக்குச் சமீபத்தில் தெற்குச் சுவரில் இருக்கிறது. படுக்கையின் கீழ் பஞ்சாயுதங்கள் இருக்கின்றன.
மேடைக்கும் வெளியில் உள்ள இரண்டு தூண்களுக்கும் இடையே சாம்பவந்தன், மகாபலி மற்றும் சில கந்தர்வகள் இருக்க வாமனாவதாரத்தோடு திருவிக்கிரமாவதாரமும் உள்ளன. இதற்கு எதிர்த்த வடக்குச் சுவரில் சிவனும், இடது புறம் விஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணனது சிலை இருக்கிறது. ஏழு முக்கிய நதிகளும், அவற்றின் அருகே பால நரசிம்மனது உருவமும் இருக்கிறது.
அதே நாமக்கல் மலையின் மேல்புறம் பாறையைக் குடைந்து நரசிம்ம சுவாமி கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிற்ப வேலைகளுடனான மூன்று அறைகளும் முன்னால் இரண்டு தூண்களும் ஒரு தாழ்வாரமும் இருக்கின்றன. உயர்த்தப்பட்டதும், இரண்டு இரட்டைத் தூண்களும் உடையதுமான நடுவறை மேடையின் மேல் அமைந்துள்ளது. நரசிம்ம சுவாமியின் உருவம் உட்கார்ந்த நிலையில் இருக்கிறது. சுவாமியின் பீடத்திற்குச் சரியான மட்டத்திற்கு வலது புறத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக சந்திரன் – சூரியன் -ஜனகர் ஆகியோரும், இடது புறத்தில் சனந்தனன்-சந்திரன் – பிரம்மா ஆகியோரும் இருக்கிறார்கள். இதில் சூரியனும் சந்திரனும் சாமரம் போடுகின்றனர். ஜனகனும் சனந்தனனும் உயரத்தில் நடக்கும் காரியங்களைத் தெரிவிக்கின்றனர். ருத்திரனும், பிரமனும் இரணியனின் வதத்தின் போது உண்டான கோபத்தைத் தணிக்கின்றனர்.

இரண்டாவது அறையில் இரணியனைத் துடையின் மேல் வைத்து இரு கைகளால் அவன் வயிற்றைக் கீறுவதும், இரண்டு கரங்களால் அவன் கைகால்களைப் பிடித்துக் கொண்டிருப்பதும், மற்றும் இரு கரங்களில் சங்கு சக்கரமும் ,வேறிரண்டு கைகளில் வாளும் வில்லும் கொண்டிருப்பது போலவும் காணப்படுகிறது.
மூன்றாவது அறையில் வராகவதாரம் உள்ளது. வராகத்தின் தலைக்கு மேலே நான்கு வேதங்களாகிய நான்கு தலைகள் உள்ளன. அடியில் ஒரு புறம் ஆதிசேஷனும், மறுபுறம் பூமி தேவியும் கலியுகத்தின் முடிவில் வரப்போகும் பாதங்களைக் காணக் காத்திருக்கின்றனர்.
வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு சுவர்களிலும் இரண்டு மாடங்கள் உள்ளன. தெற்கே இருப்பது வாமனாவதாரம். நடுவில் இருப்பது திருவிக்கிரமன்.
கீழே குடை பிடித்துக் கொண்டிருப்பது வாமனாவதாரம். மேலே தூக்கியுள்ள பாதத்தைப் பிரம்மா பூஜை செய்வது போலவும் அதற்குப் பக்கத்தில் திருவிக்கிரமனது வெற்றிக்காக் ஜாம்பவந்தன் பேரிகை அடிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
கீழே மஹாபலி தானம் கொடுப்பதற்குச் செம்பில் தண்ணீரோடு நிற்கிறான்.
திருவிக்கிரமனது இடது காலுக்கு அருகில் கருடன் சுக்கிரனது முதுகில் ஏறிக் கொண்டு, மாவலியின் கொடையைத் தடுத்ததற்காகத் துன்புறுத்துகிறான். வடக்குச் சுவரில் மாடத்தில் வைகுண்ட நாராயணனது சிலை உள்ளது. தேவர்கள் தஙகளைத் துன்புறுத்துபவனாகைய இரணியனைக் கொல்லும் உருவத்தைக் கண்டு களிக்க, சுவாமி அபய ஹஸ்தம் கொடுப்பது போல இருக்கிறது.

இவ்விரண்டு கோவில்களும் மலையைக் குடைந்தே தூண், கொடுங்கை, மேடை, விக்கிரஹம் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.
நரசிம்ம சுவாமிக்கும், அரங்கநாத சுவாமிக்கும் முறையே தமிழ்ப் பழம் பெயர் சிங்கப் பெருமாள் மற்றும் பள்ளி கொண்ட பெருமாள் எனச் சாஸனம் கூறுகிறது. இது வட கொங்கு நாடு, ஏழூர் நாடைச் சேர்ந்ததாகும்.
இவையெல்லாம் 1906ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சாஸன பரிசோதனை அறிக்கை பக்கம் 74,75,76-இல் தரப்பட்டுள்ளன.
இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் பாடல் எண் 42இல் கூறுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற நாமக்கல் மலை அதியேந்திர விஷ்ணுக்ரஹ கோவிலைப் பற்றியும் அதைக் குடைந்து உருவாக்கிய அதியன் பற்றியும் கொங்கு மண்டல சதகம் 80ஆம் பாடல் போற்றிப் புகழ்கிறது.

பாடல் இதோ:
புதிதாய் மலையைக் குடைந்துநற் சிற்பப் புலவரைக் கொண்
டிதிகாச மான கதையைச் செதுக்குவித் திம்பர்மகிழ்ந்
ததியேந்த்ர விஷ்ணுக் கிரகமென் றேத்த வமைந்தவனாம்
மதியூகி யான வதிகனும் வாழ்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :-
சிற்ப சாஸ்திரத்தில் வல்லுநர்களைக் கொண்டு மலையைக் குடைந்து பழங்கால இதிஹாசக் கதைகளான பிரதிமைகளைச் செதுக்கி அதியேந்திர விஷ்ணுக்கிரஹ என்று ஆலயத்துக்குப் பெயர் கொடுத்து அதியன் வாழ்வதும் கொங்கு மண்டலமே ஆகும்.
***
TAGS- அதியன், நரசிம்ம சுவாமி கோவில், நாமக்கல்