
Written by S Nagarajan
Uploaded in London on – 5 JANUARY 2020
Post No.7420
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
ச.நாகராஜன்
வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.
9) ஸ்ரீ வேகாசேது ஸ்தோத்ரம்
10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள ஸ்தோத்ரம் இது. வேகா என்ற நதியின் மீது சேது (அணை) கட்டியவர் பற்றிய புகழ் மாலை இது.
நான்கு முகமுடைய பிரம்மா ஒரு யாகம் செய்ய விரும்பினார். அவர் மீது கோபம் கொண்ட பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த யாகத்திற்கு இடையூறு செய்ய விரும்பினாள். பாய்ந்தோடும் வேகா என்ற நதியாக அவள் மாறினாள். யாக பூமியில் பாய்ந்தோட விழைந்தாள். பிரம்மா விஷ்ணுவை நோக்கித் துதிக்க, விஷ்ணு ஒரு சேதுவாக (அணையாக) வேகா நதியின் இடையே தோன்றி பிரம்மாவின் யாகத்தைக் காப்பாற்றினார். சின்ன காஞ்சிபுரத்திற்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் உள்ள இந்த இடம் திருவெஃகா என ஆழ்வார்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த ஸ்தலத்தின் ஸ்தல புராணம் தரும் விவரங்கள் இவை.
யதோக்தகாரி என்பது இங்குள்ள பெருமாள் பெயர், தமிழில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பெயர். பிரம்மாவின் வரலாறைச் சுட்டிக் காட்டுகிறது இது.
திருமழிசை ஆழ்வாரின் வாழ்வில் நடந்த ஒரு புகழ் பெற்ற சம்பவம் நடந்த இடமும் இது தான்.
பல்லவ மன்னன் திருமழிசை ஆழ்வாரின் சிஷ்யரான கனி கண்ணன் என்பவர் பெருமாளைத் துதித்துப் பாடுவதைக் கேட்டான். அவரது இனிய குரலால் கவரப்பட்ட அவன் தன்னைப் புகழ்ந்து பாடும்படி ஆணையிட்டான். அவரோ மறுத்து விட்டார்.கோபமடைந்த மன்னன் உடனே அவரை நகரை விட்டு நீங்குமாறு உத்தரவிட்டான். இதைக் கேட்ட ஆழ்வார் தானும் கனிகண்ணனுடன் நகரை விட்டுப் புறப்பட நிச்சயித்தார்.
தான் வணங்கும் பெருமாளும் அங்கிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.
பெருமாளிடம் சென்றார்; ஒரு விண்ணப்பம் செய்தார் இப்படி:
கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்
பெருமாள் ஆழ்வாருடனும் அவர் சீடருடனும் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.
நகரே இருளில் மூழ்கியது.
திடுக்கிட்ட மன்னவன் தன் தவறை உணர்ந்தான். ஆழ்வாரிடம் சென்று இறைஞ்சி மூவரும் மீண்டும் திரும்ப வேண்டும் என வேண்டினான்.
ஆழ்வாரும் மனம் கனிந்தார்.
பெருமாளை நோக்கித் துதித்தார் இப்படி :
கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்
பெருமாள் இந்த வேண்டுகோளுக்கு மனமிரங்கி மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளி பைந்நாகப் பாயின் மீது படுத்து அருள் பாலிக்கலானார்.
அற்புதமான இந்த உண்மை வரலாறு பகவானின் சௌலப்ய குணத்தை – பக்தர்களுக்கு எளியவன் ஆகும் குணத்தைக் – காண்பிக்கிறது.
இந்த வரலாறால் கவரப்பட்ட வேதாந்த தேசிகர் 9ஆம் ஸ்லோகத்தில் பெருமாளை காஞ்சி பாக்யம் எனக் கூறுகிறார்.(காஞ்சி பாக்யம் கமல நிலயா – ஸ்லோகம் 9)
இந்த 9 ஸ்லோகங்களைச் சொன்னவர்களின் வார்த்தைகளின் படி பெருமாள் நடப்பார் என்று வேதாந்த தேசிகர் பத்தாவது ஸ்லோகத்தில் அருள்கிறார்.
10) ஸ்ரீ அஷ்டபுஜாஷ்டகம்
இந்த ஸ்தோத்திரம் 10 ஸ்லோகங்களைக் கொண்டது.
காஞ்சியில் பிரம்மா ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தார். அதைத் தடுக்க அசுரர்கள் முயன்றனர். உடனே ஆதி கேசவப் பெருமாள் எட்டு கரங்களைக் கொண்டு அவர்களை அழித்தார்.
ஆழ்வார்கள் இந்த ஸ்தலத்தை அட்டபுயக்கரம் எனக் குறிப்பிடுகின்றனர். இது 108 வைணவத் தலங்களுள் ஒன்று. காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது.
விஷ்ணு இங்கு தனது வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடபுறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.
மூலவருக்கு இப்படி எட்டு கரங்கள் இருக்க, உற்சவருக்கோ நான்கு கரங்கள் மட்டுமே உண்டு.
இறுதி ஸ்லோகத்தில் தேசிகர் இந்த ஸ்லோகங்களைப் படித்தவர்கள் தன்னை சரணம் அடைந்தவர்களுக்கு தன் கரங்களை இரட்டிப்பாக்கிய விஷ்ணு அருள்வார் என்று கூறியருள்கிறார்.
***
You must be logged in to post a comment.