

Written by S Nagarajan
Post No.7453
Date uploaded in London – 14 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
ராஜஸ்தானில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஜோத்பூர். 1459ஆம் ஆண்டு ராஜா ஜோதாவால் உருவாக்கப்பட்டது ஜோத்பூர்.
இங்குள்ள மெஹ்ரன்கார்ஹ் கோட்டை ஜோத்பூரின் 125 மீட்டர் உயரமுள்ள மலை மீது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோட்டையாகும்.
இந்தக் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.
இந்த மெஹ்ரன்கார்ஹ் கோட்டையில் (Mehrangarh Fort) ஒரு சித்திரம் உள்ளது. அது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்பது யாருக்கும் விளங்கவில்லை.
ஜோத்பூரின் தற்போதைய மஹராஜா கஜ் சிங் (Maharaja Gaj Singh) இந்த சித்திர மர்மத்தை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று எண்ணினார்.
ஆகவே சென்னையைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சித் துறை நிபுணரான டாக்டர் ஆர். கண்ணன் அழைக்கப்பட்டார்.
8-7-2004இல் கண்ணன் அங்கு சென்றார். அருங்காட்சியக இயக்குநர் திரு மஹேந்த்ரசிங் நகர் (Mahendra Singh Naggar, Director, Mehrangarh Museum Library) அவரிடம் ஒரு பெரிய சித்திரத்தைக் காண்பித்தார். அது கறுப்பு இந்தியன் இங்கினால் வரையப்பட்டிருந்தது. தேவநாகரி எழுத்துக்கள் அதில் இருந்தன.முற்காலத்தில் இருந்தபடியான கோட்டையின் மேப் -வரைபடம்- அது என முதலில் அனைவரும் கருதினர்.
ஒன்றும் புரியாத நிலையில் கண்ணன் திரும்பினார். மீண்டும் 14-6-2006இல் அங்கு சென்ற கண்ணன் ஒரு வேளை அது வாஸ்து சாஸ்திரத்தின் படி வரையப்பட்ட ஒரு வரைபடமோ என நினைத்தார்.
பின்னர் நன்கு ஆய்வு செய்தபின் அது இந்திய தத்துவத்தின் உச்ச கட்ட தத்துவத்தைக் காட்டும் படம் என்ற முடிவுக்கு வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சித்திரம் என்றும் அவர் கூறினார்.
ஸ்வாமி ஏ.சி.பக்தி வேதாந்த பிரபுபாதானந்தா அவர்கள் எழுதிய பாகவத விரிவுரையின் ஐந்தாம் காண்டத்தைப் படித்த போது அவருக்குப் பொறி தட்டியது. உடனடியாக சித்திர மர்மத்தை அவரால் அவிழ்க்க முடிந்தது.
படத்தில் உள் வட்டத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி மொத்தம் 14 வட்டங்கள் இருந்தன. இந்த உள்வட்டம் ஜம்பு த்வீபத்தைக் குறிக்கிறது. இதில் உள்ள பகுதி தான் பாரத வர்ஷம்.
இந்த வட்டங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் அமைப்பைச் சுட்டிக் காட்டுகின்றன.
சிசுமார சக்ரம் (Sisumara Chakra) என்ற சக்ரம் விஷ்ணுவின் பிரபஞ்ச வடிவைச் சுட்டிக் காட்டும் ஒரு சக்ரம்.
நமது பூமிக்கு மேல் உள்ள பல உலகங்களையும் வான விந்தைகளையும் பால் வீதி எனப்படும் க்ஷீர சாகரத்த்தையும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்களையும் இது சுட்டிக் காட்டுகிரது.
சிசுமார சக்ரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இது போல் ஒரு படம் இதுவரை வேறெங்கும் காணப்படவில்லை.
துர்கா என்பது பெண் சக்தியைக் குறிக்கும். துர்க்கையே அண்ட பிரபஞ்சத்தைக் காத்து வருபவள்.
துர்கா அல்லது துர்கம் என்ற சொல் கோட்டையையும் குறிக்கும் சொல்லாகும்.
இந்த பிரபஞ்சம் ஒரு கோட்டை போல. எல்லா ஆன்மாக்களும் இதில் உள்ளன. விஷ்ணுவின் அருளால் முக்தி அடைந்து விட்டால் இதிலிருந்து ஆன்மாக்கள் வெளியேறலாம்.
இந்தப் படம் தரும் அரிய பெரிய செய்தி இது தான் : உலகில் கண்ணினால் பிரத்தியட்சமாகக் காணப்படும் கோட்டைகள் எல்லாம் மாயையே. கடைசி கடைசியான இறுதி லட்சியம் ஸ்ரீ கிருஷ்ணனே.
இதைத் தான் படம் மூலம் வரைந்து ஜோத்பூர் ராஜாவிற்கு அந்தக் கால ஆன்மீக மகான்கள் உணர்த்தியுள்ளனர். இது உயரிய ஆன்மீக நாகரிகத்தைச் சுட்டிக் காட்டும் அரிய படம்.
இப்படி நிர்ணயித்த கண்ணன் அதை மஹாராஜா கஜ சிங்கிற்குத் தெரிவிக்க அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
இதை அப்படியே அருங்காட்சியக வெளியீடாகப் படங்களுடன் வெளியிட வேண்டும் என அவர் நினைத்தார்.
ஆகவே 2008ஆம் ஆண்டு Unravelling The Mysterious Diagram In the Form of Chakras (Sacred Circles) In Mehrangarh Fort. Jodhpur என்ற புத்தகத்தை டாக்டர் ஆர். கண்ணன் எழுதி வெளியிட்டார்.
114 பக்கங்கள் உள்ள இந்த அரிய புத்தகம் Maharaja Mansingh Pustak Prakash Research Centre, Mehrangar Museum Trust, Fort, Jodhpur, Rajasthan (Ph :0291 – 2541447) மியூஸியம் டிரஸ்டின் வெளியீடாக வந்துள்ளது.
ஏராளமான படங்கள் உள்ள இந்த விளக்கப் புத்தகம் டாக்டர் ஆர். கண்ணனின் அரிய ஆராய்ச்சியின் வெளிப்பாடு.
டாக்டர் கண்ணனுக்கு நமது பாராட்டுக்கள்.
இதை எழுதுகின்ற போது இன்னும் ஒரு சித்திரம் நமக்கு நினைவிற்கு வருகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பெரிய படம் ஒன்று உள்ளது. பிரம்மாண்டமான படம்.
இதை அந்தக் காலத்தில் (சுமார் 60 வருடங்களுக்கு முன்னர்) பூகோளம் ககோளம் காட்டும் படம் என்று சொல்லப்படுவதைக் கேட்டு சிறுவர்களான நாங்கள் விழிப்போம்.
இதை உரிய ஆராய்ச்சி செய்தால் அரிய விஷயங்கள் வெளிப்படலாம்.
டாக்டர் கண்ணன் போன்ற நிபுணர்கள் முன் வந்தால் இன்னும் ஒரு பெரிய ரகசியம் வெளிப்படலாம்.
பாரத வர்ஷத்தின் அரிய செல்வங்களைப் பாதுகாப்போம்; அவற்றின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றுவோம்.
***