
WRITTEN BY S NAGARAJAN
Post No.7459
Date uploaded in London – 16 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கொங்குமண்டல சதகம்
ச.நாகராஜன்
திருமூலர் திருமந்திரத்தை அருளிய பெரும் சித்தர். இவரிடம் உபதேசம் பெற்றவர் எழுவர்.
அதை திருமந்திரத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டால் அறியலாம்.
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரம னுருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என் வழியாமே – திருமந்திரம்
மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துருக் காலாங்கி, கஞ்ச மலையன் ஆகிய எழுவரும் என் வழியில் வந்தவர்கள் என்பதே பாடலின் பொருள். இந்த எழுவரும் திருமூலரிடம் மந்திரோபதேசம் பெற்றவர்கள்.
பாடலில் வரும் கஞ்சமலை என்பது கொங்கு மண்டலத்தில் பூந்துறை நாட்டின் இணைநாடுகளில் ஒன்றான பருத்திப்பள்ளி நாட்டுக்கும் இராசிபுர நாட்டுக்கு இணைநாடான சேலம் நாட்டுக்கும் பூவாணிய நாட்டுக்கும் சேர்ந்ததாக இருக்கிறது.
இந்த இடத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வழலை (பூநீர்) விளைவதைப் பெறுவதற்காகப் பல திசைகளிலிருந்தும் வாதிகள் வருகிறார்கள். இந்த மலைவாரிகளில் ஒன்றான பொன்னியில் பொன் கனி எடுக்கிறார்கள்.
இப்படிப் பட்ட பெருமை கொண்ட கஞ்சமலை இருப்பதும் கொங்கு மண்டலமே; அதில் வாழும் கஞ்சமலைச் சித்தர் அருளாட்சி செய்வதும் கொங்கு மண்டலமே.
கொங்கு மண்டலத்தின் இந்தச் சிறப்பைக் கொங்கு மண்டல சதகம் தனது 35வது பாடலில் கூறுகிறது:
பஞ்ச முகத்தி லுதித்திடு லாகம பாகமெலாஞ்
செஞ்சொற் றிருமந் திரமுரை மூலர் திருமரபிற்
கஞ்ச மலைச்சித்தர் வாழ்வு மிரதங் கரணிவளர்
மஞ்சு திகழ் கஞ்ச மாமலை யுங்கொங்கு மண்டலமே.
பொருள் : சதாசிவ மூர்த்தியின் திருமுகத்திலிருந்து தோன்றிய ஆகமங்களின் ரசமாகத் திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் பரம்பரையான கஞ்ச மலைச் சித்தர் வாழ்வதும் கொங்கு மண்டலமே.
கொங்கு மண்டலத்தில் ஏராளமான சித்தர்கள் உள்ளனர். அதில் ஒருவர் பெருமை பொருந்திய கஞ்சமலைச் சித்தர்.
சதகத்தின் இப்பாடல் அவரது பெருமையைப் போற்றும் பாடலாகும்.
tags – கஞ்சமலை, சித்தர்

—- subham —