
WRITTEN BY S NAGARAJAN
Post No.7473
Date uploaded in London – 20 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
சொக்கநாதப் புலவர் பெரும் தமிழ்ப் புலவர். அவருக்கு ஒரு சிந்தனை! பல்வேறு நேரங்களிலும் துணையாகத் தமக்கு இருப்பது யார் என்று. யோசித்தார். விடையைக் கண்டு கொண்டார். புலவர் என்பதால் ஒரு பாடலிலே அதைச் சொல்லி விட்டார்.
அவருக்கு உற்ற துணையாக இருப்பவரே அனைவருக்கும் உற்ற துணையாக எப்போதும் இருப்பார்.
யார் அவர்? பாடலைப் பார்ப்போமா?
துயிலையி லேடர் துன்னையி லேதெவ்வர் குழையிலே
பயிலையி லேயிருட் பாதியி லேபசும் பாலனத்தை
அயிலையி லேவய தாகையி லேநமக் கார்துணைதான்
மயிலையி லேவளர் சிங்கார வேலா மயிலையிலே
பொருள் :
மயில் அயில் வளர் சிங்காரவேலர் மயிலையிலே – மயிலையும் கூர்மை வளர்கின்ற அழகிய வேலையும் கொண்டவரது திருமயிலையிலே
துயிலையிலே – தூங்கும் பொழுது
இடர் துன்னையிலே – துன்பம் மிகும் போது
தெவ்வர் குழையிலே – பகைவரை எதிர்கொள்ளும் போது
பயிலையிலே – சஞ்சரிக்கும் போது
இருள் பாதியிலே – பாதி இரவிலே
பசும் பால் அன்னத்தை அயிலையிலே – பசும்பாற் சோற்றை உண்ணும் போது
வயது ஆகையிலே – ஆயுள் முடியும் போது
நமக்கு ஆர் துணை – நமக்கு யார் துணை ஆவார்?
மயிலைச் சிங்காரவேலரே தான் துணை என்பதை சொக்கநாதப் புலவர் உணர்ந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
நமக்கும் வேல் முருகன் தானே துணை!

அடுத்து அவரது இன்னொரு பாடல்:
போதா சிவகுரு நாதா கலவை புழுகொடுசவ்
வாதாந்த கொங்கைக் குறமாது வள்ளிக்கு வாய்த்திடுமின்
பாதா ருகற்செற்ற வேல்வித் தாலென் பகையையறுக்
காதா மனமிரங் காதா சிவகிரிக் காங்கேயனே
பொருள் :
போதா – ஞானத்தை உடையவனே
சிவகுருநாதா – சிவனுக்கு தேசிகோத்தமனே
கலவை புழுகொடு சவ்வாது ஆர்ந்த – கலவைச் சந்தனமும் புனுகு சவ்வாது பூசப்பட்ட
கொங்கை – மார்பகங்களை உடைய
குறமாது வள்ளிக்கு – குறப்பெண்ணாகிய வள்ளிக்கு
வாய்த்திடும் இன்பா – கிடைத்த சுகானுபவத்திற்குரியவனே
தாருகன் செற்ற வேல் விடுத்தால் – தாருகனைக் கொன்ற வேலாயுதத்தைப் பிரயோகித்தால்
என் பகையை அறுக்காதா – என் பிறவிக்கேதுவாகிய ஐம்புலப் பகையை அறுக்காதா
மனம் இரங்காதா – உனக்கு (என் மேல்) மனம் இரங்காதா
சிவகிரி காங்கேயனே – சிவகிரியில் எழுந்தருளியுள்ள காங்கேயனே!
சொக்கநாதர் காட்டிய வழியில் முருகனைத் துதிப்போம்; ஐம்புலப் பகையை அறுப்போம்!
tags – சொக்கநாதப் புலவர், சிவகிரி, துயிலையிலே
****