மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்! (Post No.7521)

ரிஷிகள் சரித்திரம்

மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்! (Post No.7521)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7521

Date uploaded in London – – 1 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

பகவத்கீதையில் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிக் கூறும் ஸ்லோகம் (பத்தாம அத்தியாயத்தில் 13ஆம் ஸ்லோகம்)  இது:

ஆஹூஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ்ததா |

அஸிதோ தேவலோ வ்யாஸ ஸ்வயம் சைவ ப்ரவீஷிமே ||

12, 13 ஆம் ஸ்லோகங்களின் பொருள் இது:-

“நீயே பரம்பொருள்; நியே பரஞ்ஜோதி; நீயே தூயவன்; நீயே உயர்ந்தவன்: நீயே புருஷன்; நீயே நிலையானவன்; நீயே தேவலோகத்தவனான ஆதி தேவன்; நீயே பிறப்பற்றவன்; நீயே எங்கும் பரவியுள்ளவன்” என்று எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஸிதரும், தேவலரும், வியாஸரும் சொல்கிறார்கள். நீயும் கூட அவ்விதமே எனக்குச் சொல்கிறாய்”.

இதில் வரும் மஹரிஷி அஸிதரின் புதல்வர் தேவலர் பெரும் ரிஷி.

தேவலர் என்ற பெயரில் மூன்று ரிஷிகள் உள்ளனர். அஸிதரின் புதல்வரான தேவலரைப் பற்றி இங்கு காண்போம்.

அஸிதருக்கு அஷ்டாவக்ரர் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஏனெனில் இவரது உடல் எட்டுக் கோணல்களைக் கொண்டது.

அஷ்டம் என்றால் எட்டு. வக்ரம் என்றால் கோணல். ஆக அஷ்டாவக்ரர் என்றால் உடலில் எட்டுக் கொணல்களைக் கொண்டவர் என்று பொருள் ஆகும்.

அஷ்டாவக்ரர் என்ற பெயரில் பிரஸித்தமான ரிஷி ஜனகரைக் காத்திருந்து சந்தித்த சரிதம் அனைவரும் அறிந்ததே. இவர் ககோதரர் என்னும் ரிஷியின் புதல்வர்.

அவரை முதலாம் அஷ்டாவக்ரர் என்றும் அஸிதரின் புதல்வரை இரண்டாம் அஷ்டாவக்ரர் என்றும் கொள்ளலாம்.

ஜனகரின் அவைக்குச் சென்ற அஷ்டாவக்ரரின் உடல் கோணல்கள் அவரது 12ஆம் வயதிலேயே நீங்கி விட்டன.

ஆனால் அஸிதரின் புதல்வருக்கோ நீண்ட நாள் அந்த எட்டுக் கோணல்கள் இருந்தன.

இவரது சரிதம் இது:

அஸிதர் நெடுங்காலம் சிவனை நோக்கித் தவமிருந்து அவரது அருளால் ஒரு புதல்வரைப் பெற்றார். அவரது பெயர் தேவலர்.

ஒரு முறை தேவலோக ராணியான ரம்பை தேவலர் மீது மையலுற்றாள். ஆனால் தேவலரோ அவளது ஆசைக்கு இணங்கவில்லை. இதனால் கோபமுற்ற ரம்பை அவர் அஷ்டகோணல் கொண்ட உடலை அடையக்கடவது எனச் சாபமிட்டாள்.

தேவலரின் உடல் எட்டுக் கொணல்களைக் கொண்டதாக ஆனது.

அவரை அனைவரும அஷ்டாவக்ரர் என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.

ஒரு சமயம் கிருஷ்ண பகவான் மலையபர்வதத்திற்குச் சமீபத்தில் உள்ள அழகிய தடாகத்தில் ராதையுடன் ஆனந்தமாய் ஜலக்ரீடை செய்து விட்டு அந்தத் தடாகத்திற்குச் சமீபத்தில் இருந்த ஒரு ஆலமரத்தை அடைந்தார்.

அப்போது பகவானையே சதா சர்வகாலமும் தியானித்துக் கொண்டிருந்த தேவலர் அவரிடம் வந்து சேர்ந்தார்.

அவரது சரீரத்தில் உள்ள எட்டுக் கொணல்களையும் நீண்ட நகங்கள் கொண்ட அவரது குள்ளமான உருவத்தையும் கண்ட ராதை  பரிகாசமாக நகைத்துச் சிரித்தாள். இதைக் கண்ட கிருஷ்ணர், “அவர் மிக்க பிரபாவமுள்ளவர். இப்படி பரிகாசமாக நீ நகைக்கக் கூடாது” என்று ராதையைக் கண்டித்தார்.

தேவலர் கிருஷ்ணரை நமஸ்கரித்து ஈஸ்வரனால் தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களினால் ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார். அவ்வாறு துதித்து பகவானிடத்து தனது மனம் ஒன்றி அவர் பாதங்களில் நமஸ்காரம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே தமது யோக பலத்தால் பிராணனை விட்டார்.

அவரது சரீரத்திலிருந்து கொழுந்து விட்டெரியும் அக்னி போல் எல்லா திக்குகளையும் பிரகாசமடையச் செய்து ஒரு ஜோதி ஏழு பனைமரங்களின் உயரத்துடன் ஆகாயத்தில் கிளம்பி நான்கு பக்கங்களிலும் சுற்றிக் கொண்டு பகவானுடைய பாதங்களில் வந்து  லயமாயிற்று.

பிறகு கிருஷ்ண பகவான் முனிவர் இறந்ததைக் கண்டு அவருக்கு ஸம்ஸ்காரம் செய்யக் கருதியவராய் தமது இரு கைகளாலும் அம்முனிவருடைய சரீரத்தை எடுத்து மார்புடன் தழுவிக் கொண்டு சாமான்ய மனிதன் போல உரக்க அலறினார்.

தேவலர் அறுபதினாயிரம் வருஷங்களாக அன்ன ஆகாரமின்றி தவம் செய்ததால்  அவர் தேகத்திலுள்ள ரத்தம், மாமிசம், எலும்புகள் யாவும் அவருடைய ஜாடராக்னியினால் கொளுத்தப்பட்டு சாம்பலாகி இருந்த்ன. ஆதலால், பகவன் தமது மார்பில் அவரைத் தழுவும் போது அந்தத் தேகத்திலிருந்து பஸ்மம் வெளியேறியது.

பிறகு கிருஷ்ணர் சந்தனக்கட்டைகளால் சிதை அடுக்கி அதில் அவருடைய சரீரத்தை வைத்து அக்னி மூட்டினார். அப்போது தனது பக்தனின் பிரிவையாற்றாமல் ஒரு க்ஷண நேரம் மூர்ச்சையடைந்தார்.

அச்சமயம் ஆகாயத்தில் துந்துபி முழங்கிற்று. தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.

ஆச்சரியம்! ஆச்சரியம்!! ஆச்சரியம்!!!

அங்கு உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்டதும் விசித்திரமான ஆடைகளைத் தரித்துக் கொண்டும் கிருஷ்ணனுக்கு ஒப்பான ரூபமுள்ள அநேக விஷ்ணு தூதர்களால் சூழப்பட்டதுமான ஒரு திவ்ய விமானம் கோலோகத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்பாக வந்து நின்றது.

உடனே விஷ்ணுதூதர்கள் அனைவரும் கீழே இறங்கினர்.

ராதாசமேதரான கிருஷ்ணரையும் சூக்ஷ்ம சரீரத்துடன் இருந்த தேவலர் என்னும் அஷ்டாவக்ரரையும் நமஸ்கரித்து அம்முனிவரை அவர்கள் கோலோகம் கொண்டு சென்றனர்.

இதைப் பார்த்த ராதை ஆச்சரியமுற்று, “ஹே! நாதா!! இம்முனி சிரேஷ்டர் யார்? எல்லா அங்கங்களும் கோணலாகவும், மிகவும் குள்ளமாகவும், மஹா தேஜஸ் உள்ளவராகவும் பார்ப்பவர் மனதிற்கு அருவருப்பு உண்டாக்குபவராகவும் உள்ளவராய் அல்லவா இவர் இருக்கிறார்! இவரது சரீரத்திலிருந்து சாம்பல் வெளியேறியது ஏன்? உமது பாதாரவிந்தத்தில் அக்னி போன்ற தேஜஸானது லயத்தை அடைந்ததின் காரணம் என்ன? இப்பெரும் பாக்கியவான் உடனே கோலோகத்திற்கும் சென்று விட்டார். அவர் இவ்வளவு வைபவம் உள்ளவராய் இருக்கும்போது நீங்கள் ஏன் இவ்விதம் துக்கம் அடைந்து அரற்றுகிறீர்? கண்ணீரும் கம்பலையுமாக நீங்கள் ஏன் அவ்ருக்கு உத்தரகிரியைகளைச் செய்தீர்? இதன் காரணத்தை எனக்குச் சொல்லி அருள்வீராக!” என்றாள்.’

உடனே கிருஷ்ணர் அஸிதர் மற்றும் தேவலரின் ஆச்சரியமான சரிதத்தை விரிவாக ராதைக்குக் கூறினார்.

இந்தச் சரிதம் பிரம்மவைவர்த்த புராணத்தில் உள்ளது.

*

மேலே கண்ட சரிதத்தின் இறுதிப் பகுதி சற்று மாற்றியபடி வேட்டம் மணி அவர்கள் எழுதிய புராணிக் என்சைக்ளோபீடியாவில் (65ஆம் பக்கம் – Puranic Encyclopedia) காணப்படுகிறது.

அஷ்டாவக்ரரின் உடல் கோணல்களைக் கண்டு பரிகசித்த ராதையைக் கண்டித்த கிருஷ்ணர் அவரை ஆரத் தழுவினார். உடனே அவரது உடல் கோணல்கள் நீங்கி அழகிய உடல் கொண்டவராக அவர் மாறினார். அச்சமயம் ஆகாயத்திலிருந்து ஒரு திவ்ய ரதம் வந்து இறங்க அதில் மூவரும் ஏறிச் சென்றனர்.

***

கிருஷ்ண பக்தரான தேவலர் கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி வருவதை அர்ஜுனன் வாயிலாக நாம் கீதையில் அறியும் போது அவரது சரிதம் எவ்வளவு பெருமை மிக்கது என்பதை நன்கு அறிய முடிகிறது!

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: