
ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள் (Post No.7525)
WRITTEN BY London Swaminathan
Post No.7525
Date uploaded in London – – 2 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சம்ஸ்க்ருதத்தில் இருந்து பிராகிருதம் வந்ததா அல்லது பிராக்ருதத்தில் இருந்து சம்ஸ்க்ருதம் வந்ததா என்று வாத ப் பிரதிவாதங்கள் வருவதுண்டு. அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் இருந்தனவா என்று கேட் போரும் உளர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கவிஞர்கள், சம்ஸ்க்ருதம் மூல மொழி என்று கவி பாடிவிட்டுச் சென்றனர் (மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியாவில் உள்ள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்)
ப்ரக்ருதி என்பது இயற்கையில் உளது . அதிலிருந்த வந்தது பிராகிருதம் என்பர் சிலர். இல்லை, இல்லை புரா + க்ருதம் =முன்னரே இருந்தது ப்ராக்ருதம் . பின்னர் செம்மை செய்யப்பட்டது சம்ஸ்க்ருதம் என்பர் வேறு சிலர். பழைய கவிஞர்கள் சம்ஸ்க்ருதம்தான் முதலில் இருந்தது என்று சொல்லிவிட்டனர்.

இன்னும் சில அரை வேக்காடுகள் சம்ஸ்க்ருதம் என்ற பெயரையே பழைய இலக்கண வித்தகர்கள் செப்பவில்லையே என்று அங்கலாய்ப்பர். அத்தகைய அறிவிலிகளிடம் கேளுங்கள் செந்தமிழ் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உள்ளதா? என்று.
இன்னும் சிலர் கேட்பர். அது சரி. பிராகிருதம் என்று சொல்கிறீர்களே. எந்தப் பிராக்ருதத்தை ? என்று கேட்பர் . இன்று அதை ஆராய்வோம்.
எது ஒரிஜினல் பிராகிருதம்? எது உண்மையில் பிராகிருதம் அல்லது அபப்ராம்ஹஸம் என்பதிலும் பிராகிருத அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறது. சுருக்கமாய் சொல்கிறேன்.
முக்கிய ப்ராக்ருதங்கள் ஆறு. அவை திரிந்தால் வருவது அபப்பிராம்சம்; ஆக மொத்தம் ஏழு.
தமிழர்கள் சொல்வார்கள் நாநிலம் ; அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று. ஐயா! பின்னர் பாலை நிலம் பற்றியும் பாடிவிட்டு 4 என்று சொல்கிறீர்களே என்றால், நாலு நிலமும் இயல்பு கெட்டுத் திரிந்து போனால் கிடைப்பது– மிஞ்சுவது — பாலை என்று பகர்வர். அதுபோலத்தான் அபப்ராஹ்ம்ஸம் .
முக்கிய ஆறு பிரிவுகளைக் காண்போம்—
மஹாராஷ்ட்ரி, சௌரசேனி , அர்த்தமாகதி , மாகதி , பாலி,
பைசாசி .
மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில் தோன்றிய மொழி – மராட்டி.
அர்த்த மாகதியில் இருந்து பிறந்தவை – குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, மேற்குப் பகுதியில் பேசும் ஹிந்தி.
பைசாசி வகை பிராக்ருதத்தில் இருந்து பிறந்த மொழிகள் – வங்காளி , ஒரியா , பிஹாரி, அஸ்ஸாமிய மொழிகள். இதிலிருந்தே நேபாளி மற்றும் இமயமலை மொழிகள் பிறந்திருக்கலாம் என்றும் சிலர் உரைப்பர் .
பாலி
த்ரி பிடகம் (மூன்று பெட்டிகள் ) என்ற புத்த மத புனித நூல்களும் ஜாதகக் கதைகளும் இலங்கை வரலாறு விளம்பும் மஹாவம்சம், தீப வம்சம் முதலியனவும் பாலி வகை பிராக்ருதத்தில் உள்ளன.
2300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது; 14ம் நூற்றா ண்டுவரை இலக்கியம் படைத்த மொழி இது.
அர்த்தமாகதி
ஸ்வேதாம்பர பிரிவு , அதாவது வெள்ளாடை உடுத்தும் — சமணர் பிரிவின் ஆகமங்கள் , அர்த்தமாகதி ப்ராக்ருதத்துள் உள . இரண்டாம் நூற்றாண்டு முதல் இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றது. நீதிகளை போதிக்கும் 115 நூல்கள் இருக்கின்றன .
சௌரசேனி
கிருஷ்ண பரமாத்மா உலவிய மதுராபுரியைத் தலை நகராகக் கொண்ட தேசம் சூரசேனம் . அங்கே பிறந்தது இது. சம்ஸ்க்ருத நாடகங்களில் விதூஷகர்களும் பெண்களும் இதில் கதைப்பர் . விதூஷகர் என்னும் நகைச் சுவை நடிகராக பிராமணர் வேடம் போடுவோர் நடிப்பர் .
இங்கே இரண்டு கருத்துக்களைச் சொல்கிறேன். திரைப்படங்களில் என் பிரமணர்களைக் கிண்டல் செய்யும் பாத்திரங்களில் போட்டுவிக்கிறார்கள் என்று சிறு வயதில் நான் வியந்ததுண்டு . இது 2300 ஆண்டுகளாக நாடகத்தில் பின்பற்றப்படும் உத்தி என்பது சம்ஸ்கிருதம் கற்ற பின்னரே என் புத்திக்கு எட்டியது .
இரண்டாவது கருத்து இந்துக்களின் அபார அறிவு பற்றியது. ஒரு கேளிக்கை என்றால் – திரைப்படம் , நாடகம் என்றால் — அதில் காமெடியும் இருக்க வேண்டும் என்பதை சம்ஸ்கிருத நாடகம் உலகிற்கு கற்பித்தது. தமிழில் – பழந் தமிழில்– எழுதப்பட்ட நாடகம் எதுவும் நமக்கு கிடைத்தில.
கேரளத்தில் கோட்டயம் தம்புரான் எழுதிய கதகளி நாடக வசனத்தில் சௌரசேனி பிராக்ருதத்தில் ஊர்வசியின் அழகை வருணித்துள்ளார் என்று எல்.சுதர்மணி எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
நாடகத்தின் பெயர்- நிவாட கவச காலகேய வைபவ. இந்தப் பிரிவில் சத்தகம் என்று அழைக்கப்படும் இலக்கியம் வரும். முக்கிய படைப்புகள் – ராஜசேகர எழுதிய கற்பூர மஞ்சரி, கேரள கவிஞர் ஸ்ரீகண்ட கவி எழுதிய சந்திரலேகா, கண ஷியாம எழுதிய ஆனந்த சுந்தரி, விஸ்வேஸ்வர எழுதிய சிருங்கார மஞ்சரி , நய சந்திர எழுதிய ரம்பா மஞ்சரி .

மஹாராஷ்ட்ரி
இந்த வகை பிராகிருதம் கொஞ்சம் கடினமானது மகாராஷ்ட்ர மாநிலப் பகுதியில் பேசப்பட்டது. இலக்கண கர்த்தாக்கள் பிராகிருதம் என்று சொல்லும்போது அது மஹாராஷ்ட்ரியை மட்டுமே குறித்தது.மிகவும் இனிமையான மொழி என்பதால் சம்ஸ்கிருத நாடகங்களில் பெண்கள் பாடுவது மஹாராஷ்ட்ரி வகை பிராக்ருதத்தில்தான் .
மிகவும் புகழ்பெற்ற ஹாலன் என்ற மன்னன் தொகுத்த காதா சப்த சதி , சமய சுந்தராகினி எழுதிய காதா சஹஸ்ரி, பிரவரசேனா எழுதிய சேது பந்தன என்பன இதிலுள்ள முக்கிய படைப்புகள். வரருசி படைத்த பிராகிருத பிரகாச, வாக்பதிராஜனின் கௌடவாஹோ முதலியனவும் புகழ்பெற்ற நூல்கள் .
பைசாசி
இலக்கண வித்தகர் அனைவரும் குறிப்பிடும் இம்மொழியில் உள்ள படைப்புகள் எதுவும் கிடைத்தில. குணாட்யர் என்பவர் எழுதிய பிருஹத் கதா — பெருங்கதை – இதில் இருந்ததாகவும் சொல்லுவர். போஜன் என்பவர் சிருங்கார ப்ரகாசாவில் கொடுத்த மேற்கோள்கள் மூலம் சில பகுதிகள் கிடைத்தன.
அபப்ராஹ்ம்ச
இலக்கிய நடையில் இல்லாமல் கொச்சை மொழியில் இருந்த எல்லா வகை பிராகிருத எழுத்துக்களும் இதில் அடங்கும். தண்டி என்ற புலவர் மொழிகளை பற்றிப் பேசுகையில் மொழிகளை நான்கு வகையாகப் பிரிப்பார் — சம்ஸ்க்ருதம், பிராகிருதம், அப பிராஹ்ம்சம் , மிஸ்ரம் என்று . இதை தற்கால வடஇந்திய மொழிகளின் ‘மூலம்’ எனலாம். இதிலும் கூட பின்னர் சில படைப்புகள் தோன்றின.

மஹாகவி ஸ்வயம்பூதேவ் , தேவசேன, புஷ்ப தந்த , ஹேமசந்திர, அப்துர் ரஹ்மான் முதலியோர் 17-ம் நூற்றாண்டு வரை இதில் எழுதினர் . இலக்கண வரம் பற்ற மொழி என்பதே இதன் பொருள். காட்டுவாசி ஒருவன் சொல்லும் பதில் விக்ரம ஊர்வசீயம் என்ற காளிதாசன் நாடகத்தில் வருகிறது. அந்தக் கொச்சை மொழி இவ்வகைத்தே. அப்துர் ரஹ்மான் என்பவர் மூல்டான் நகரைச் சேர்ந்தவர். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது.
மாகதி
மகத தேசத்தில் பேசப்பட்ட பிராகிருதம். இப்போதும் பிஹாரில் ஏழு மாவட்டங்களில் மகதி பேசப்படுகிறது . ஜார்கண்ட் மாநிலத்தின் சோடா நாகபுரி பகுதியில் பழங்குடி மக்கள் கலப்பட மாகதி பேசுகின்றனர். எல்லாம் இந்தி போலவே இருக்கும். அத்துடன் ஒரு இயா , வா, ஈய என்பன சேரும். அசோகரின் கல்வெட்டுகள் உள்ள மொழி. மௌர்யர்களின் ராஜாங்க மொழி. புத்தர் பேசிய மொழி என்றும் மொழிவார்கள்.
xxx
நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனி சம்ஸ்க்ருதம், பிராக்ருதம் ஆகிய இரண்டையும் ‘ஆர்ய பாஷை’ என்பார் . ஆர்ய என்பது மாக்ஸ்முல்லர் வகையறா பயன்படுத்திய இனவெறிச் சொல் அல்ல. சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் கற்றோர், பண்புடையோர் மொழி என்பதாகும். பரத முனி இவ்விரு மொழிகளை அரசர் மொழி என்று சொல்லிவிட்டு, விபாஷா என்ற பட்டியலில் திராவிட, ஆந்திர, சண்டாள , சகர , சைபர், ஆபிர மொழிகளைச் சேர்க்கிறார். அபிநவ குப்தா என்பவர் இவைகளை ‘சிதைந்து போன பிராக்ருதங்கள்’ என்று சொல்லிவிட்டு , ‘காட்டுவாசிகளின் மொழி’ என்றும் செப்புவார்.
தொல்காப்பியர் கூட செந்தமிழ் பேசக்கூடிய சிறு பகுதியை வரையறை செய்துவிட்டு ஏனைய பகுதிகளைக் கொடுந்தமிழ் பகுதிகள் என்பார் . பரத முனி , அபிநவ குப்தர் ஆகியோர் கருத்துக்களையும் அப்படியே நோக்க வேண்டும்.
–subham–
