
WRITTEN BY S NAGARAJAN
Post No.7553
Date uploaded in London – – 9 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
விபூதியின் மஹிமை! – 2
ச.நாகராஜன்

தேவி பாகவதம் விபூதி எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், அவற்றின் வகைகள், பெயர்கள், பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறுகிறது.
சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்: –
(உத்தூளனம் என்றால் நெற்றி முழுவதும் விபூதியைப் பூசுவது என்று பொருள்; திரிபுண்டரதாரணம் என்றால் நெற்றியில் மூன்று கோடுகளை கிடைமட்டமாக விபூதியினால் தரிப்பது என்று பொருள். இதை மனதில் கொண்டு கட்டுரைகளை மேலே படிக்கலாம்.) tamilandvedas.com, swamiindology.blogspot.com
பஸ்மம் இல்லாத நெற்றியைச் சுடு,
சிவாலயம் இல்லாத கிராமத்தைச் சுடு,
சிவார்ச்சனம் இல்லாத ஜன்மத்தைச் சுடு,
சிவாஸ்ரயம் இல்லாத வித்தையைச் சுடு, என்று இவ்வாறு வேதம் கூறுகிறது.
பிரம்மா சிருஷ்டியினாலும் திரிபுண்டரதாரணத்தைக் காண்பித்திருக்கிறார்!
எப்படியெனில், அவர் நெற்றியைக் குறுக்காயும், ஊர்த்துவமாயும் படைத்திருக்கிறார், இல்லையா?!
விருத்தமாகச் சிருஷ்டிக்கவில்லை அல்லவா!
மானிடருக்கேயல்லாமல் சகல பிராணிகளுக்கும் நெற்றியில் திரியக் ரேகைகள் காணப்படுகிறதில்லையா!
அப்படிக் காணப்பட்டும் கூட மூட மனிதர்கள் திரிபுண்டரதாரணம் செய்கிறதில்லை!
எவன் ஒருவன் பஸ்மம் மற்றும் ருத்திராக்ஷம் தரிக்கின்றானோ, அவனது ரோகம், வியாதி, துர்பிக்ஷம், திருடு முதலியவை நாசகரமாகும். அவன் பிரம்மத்தை அடைகிறான்.
திருமூர்த்திகளாலும், இரண்யகர்ப்பனாலும் வருணன் முதலியவர்களாலும் உமை, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவராலும் ஏனைய தேவதா ஸ்திரீகளாலும் யட்ச, ராட்ஸச, கந்தர்வ, சித்த ,வித்தியாதர்களாலும், முனிவர்களாலும் பஸ்மோத்தூளனமும் திரிபுண்டரமும் தரிக்கப்பட்டிருக்கின்றன.
முக்தி என்கிற ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாகும்.
ஐஸ்வர்யமாகிய விபூதி சாதனத்தை ஒருவன் கபடத்தினாலாவது அணிவான் என்றாலும் கூட அவன் அடையும் கதியை நூறு யாகம் செய்தவன் கூட அடைய முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு அரசன் தனது அடையாளம் தரிக்கப்பட்ட ஒருவனை எப்படித் தன்னவனாக எண்ணுகிறானோ அதே போல மஹாதேவனும் தனது அடையாளமாகிய பஸ்ம திரிபுண்டரங்களை அணிபவனைத் தன்னவனாகவே எண்ணுகிறான்.

சுருதிகளும் ஸ்மிருதிகளும் எல்லாப் புராணங்களும் விபூதி மகிமையையே கூறுகின்றன.
பஸ்ம ஸ்நானத்தை விட வேறு சுத்தமான ஸ்நானம் பிறிதில்லை.
ஜல ஸ்நானத்தை பிரகிருதி என்றும் பந்தம் என்றும் சொல்கின்றனர். பிரகிருதியாகிய பந்தத்தைத் தொலைப்பதற்கே இந்த பஸ்ம ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்நானத்தால் ஜுரம், பிரம்ம ராட்ஸச பிசாசம், பூத சேஷ்டைகள், குஷ்டம், குன்மம், பகந்தரம் முதலிய அறுபத்திநான்கு வாத ரோகங்களும், சிலேஷ்ம ரோகங்களும், வியாக்ரம் முதலிய துஷ்ட பயங்கர மிருகங்களும், திருடு போன்ற பயங்களும் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல நசித்துப் போகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
விதியுக்தமாகிய வன்னி வீரியத்தினால் உண்டாகிய பஸ்மத்தைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இது நிச்சயம்.
இது போல் கழுத்தில் தரிப்பதால் கண்டத்தில் உண்டாகும் பாபமும், மார்பில் தரிப்பதால் மனதால் செய்த பாவமும்,
நாபியில் தரிப்பதால் ஆண்குறியினால் செய்த பாவமும்,
பிருஷ்ட பாகத்தில் தரிப்பதால் அதனால் செய்த பாவமும்,
பக்கங்களில் தரிப்பதால் பர ஸ்திரீகளைத் தழுவிய பாவமும் நசித்துப் போகும்.
பஸ்மத்தைத் தரித்தே காயத்திரியை ஜபிக்க வேண்டும்.
ஒருமுறை துர்வாச முனிவர் பிதுர் லோகம் சென்றார்.அவரை அனைவரும் மரியாதையுடன் எதிர்கொண்டழைத்தனர்.
அப்போது அங்கிருந்த கும்பீபாகம் என்னும் நரகத்திலிருந்து ஐயோ ஐயோ, கொளுத்தப்பட்டோம், அறுக்கப்பட்டோம், பிளக்கப்பட்டோம் என்று பலரும் அலறும் குரல்கள் கேட்கப்பட்டன. tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதனால் துர்வாசர் துக்கமுற்று இது யாருடைய குரல்கள் எனக் கேட்க பாவிகளின் குரல்கள் இவை, கும்பீபாகம் என்ற நரகத்திலிருந்து எழும் குரல்களே இவை என பதில் வந்தது.
துர்வாசர் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.
அந்தக் கணமே கும்பீபாகத்தில் இருந்த அனைவருக்கும் சொர்க்கத்திலிருக்கும் சுகத்திற்கும் மேலான சுகம் கிடைத்தது.
இதனால் ஆச்சரியம் அடைந்த யமதூதர்கள் விஷயத்தை எமனிடம் சொல்ல எமன் ஆச்சரியப்பட்டு விரைந்தோடி வந்தான். காரணம் புரியவில்லை அவனுக்கு. இந்திரனும் பிற தேவர்களும் வந்தனர்; பின்னர் விஷ்ணுவும் அங்கு வந்தார். அவர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை!
காரணம் புரியாததால் மஹாதேவரை அனைவரும் அணுகினர்.
விஷயத்தைக் கேட்ட சிவபிரான் புன்னகை பூத்தார்.
“வேறொன்றுமில்லை, துர்வாசர் கும்பீபாக நரகத்தைக் குனிந்து பார்த்தார் இல்லையா, அவரது நெற்றியிலிருந்து சில விபூதி துளிகள் அந்த நரகத்தில் விழுந்தன. ஆகவே அந்த நரகம் சொர்க்கம் போல ஆயிற்று. இனி அதை பிதுர் தீர்த்தம் என அழையுங்கள்’ என அருளுரை புகன்றார்.

அனைவரும் விபூதி தாரண மகிமையையும் துர்வாசரின் விபூதி துளிகளின் மகிமையையும் அறிந்தனர்.
இப்படி தேவி பாகவதம் விரிவாக விபூதி மகிமையை எடுத்துரைக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
அடுத்து சைவ சமயக் குரவர் மந்திரமாவது நீறு என்று கூறி ஆற்றிய அற்புதத்தையும் அவர் கூறும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து, திருநீற்று மகிமைத் தொடரை முடிப்போம்.
***
அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்