மாறப் போகும் உலகம்! (Post No7564)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7564

Date uploaded in London – 12 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கோகுலம்கதிர் மாத பத்திரிகையில் பிப்ரவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மாறப் போகும் உலகம்!

ச.நாகராஜன்

உலகில் மாறாதது மாற்றம் ஒன்று தான்! ஆம், நாளுக்கு நாள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் மாயாஜால சாதனங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி விடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். செல்போன், ஜி.பி.எஸ்., கணிணி, வித விதமான் ஆப்ஸ், வீடியோ கேம் என்று இப்படி நூற்றுக் கணக்கில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பயன்படுத்தும் சாதனங்கள் எத்தனை எத்தனையோ வந்து கொண்டே இருக்கின்றன; வாழ்க்கைப்போக்கை மாற்றிக் கொண்டே இருக்கின்றன!

இதோ இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் சாதனங்களில் சில :

சோலார் கார்கள்!

பெட்ரோல், டீஸல் ஆகிய படிம எரிபொருள்களின் விலை விண் அளவிற்கு உயர்ந்து கொண்டே போவதால் கறிகாய் விலை முதல் அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறிக் கொண்டே போகிறது. ஏன்?

இவை அனைத்தையும் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு அதிகமாகவே சந்தையில் விற்பனை விலையும் அதிகமாகிறது. இதற்கு ஒரு  முடிவு கட்ட ஏற்கனவே உலகின் தலை சிறந்த கார் கட்டுமான நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இதில் உள்ள ஒரு குறை என்னவெனில் இதிலுள்ள பேட்டரிகளை அவ்வப்பொழுது சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இதற்கு ஒரு முடிவு கட்ட லைட் இயர் (LightYear)  என்ற புதிய எலக்ட்ரிக் கார்களை நெதர்லாந்து நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பேட்டரிக்குப் பதிலாக காரின் மேல் சோலார் பேனல்கள் – சூரியத் தகடுகள் – பொருத்தப்பட்டிருக்கும். முதல் தடவையில் சார்ஜ் செய்தால் 450 மைல்கள் இது ஓடும். பின்னர் ஓடும் போது சூரிய ஒளியினால் மணிக்கு ஏழரை மைல் ஓடும் படி சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும். ஆக இனி எதிர்கால சோலார் கார் இது போலத் தான் இருக்கும்.

பறக்கும் கார்கள்!

சாலையில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு அலுவலகத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ, விமான நிலையத்திற்கோ இன்னும் அவசரமான காரியங்களுக்கோ செல்ல முடியாமல் அவஸ்தைப் படும் நிலை இனி மாறி விடும். ஊபர் (Uber) நிறுவனம் பறக்கும் காரைத் தயார் செய்து சென்ற வருடம் லாஸ்வேகாஸ் கண்காட்சியில்  அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவிலும் பின்னர் படிப்படியாக இதர நாடுகளிலும் இந்த பறக்கும் கார்கள் ஓட – இல்லை இல்லை – பறக்க ஆரம்பிக்கும். டிராபிக் ஜாமிற்கு குட் பை!

வீட்டிலேயே விவசாயம் செய்யலாம்!

இன்றைய உலகில் உணவுப் பற்றாக்குறை அதிகமாகி இருப்பதால் பல கோடி மனிதர்கள் உணவின்றித் தவிக்கின்றனர். உலக வெப்பமயமாதலால் இந்தத் தொகை இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஏரோஃபார்ம்ஸ் (Aerofarms) என்ற நிறுவனம் வீட்டிற்குள்ளேயே விவசாயம் செய்யும் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளது. இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவெனில் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவைப்படும் நீரில் 95 சதவிகிதம் குறைவாகவே இந்த வீட்டு விவசாயத்திற்குத் தேவைப்படும் என்பது தான். பயிர்கள் நீர் பாய்ச்சி வளராமல் இந்த வீட்டு விவசாயத்தில் பயிர்கள் மீது இலேசான பனித்துகள்கள் படியும். இந்த உத்தி மூலம் கீரை போன்றவற்றை வளர்த்து அவற்றைப் பெரிய அளவில் பல்வேறு உணவு விடுதிகளுக்கு இந்த நிறுவனம் விமானம் மூலமாகக் கூட சப்ளை செய்து வருகிறது! இது போன்று விவசாயம் செய்யும் நிறுவனம் உலகில் எங்கள் நிறுவனம் ஒன்று தான் என்கிறது ஏரோஃபார்ம்ஸ். நாளைய விவசாயத்திற்கு வழிகாட்டும் இந்த உத்தி மூலம் இனி வீட்டிலேயே விவசாயம் தொடங்கலாம்.

சூட் கேஸ் போய் பேக்-பேக் வருகிறது டும் டும் டும்!

கணினி நிறுவனங்கள் பெருமளவில் வரத் தொடங்கிய நிலையில் முதுகில் சுமந்து செல்லும் பேக்-பேக் (BackPack) அனைவராலும் விரும்பி முதுகில் மாட்டி, கொண்டு செல்லும் பையாக மாறி விட்டது. அவே (Away) என்ற நிறுவனம் புதிய பேக்-பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்ணீர் புகாத நைலானால் ஆன இதன் விலை 195 டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) இதில் மூன்று பெரிய பைகள் பிரதானமாக உள்ளன. அது தவிர பல்வேறு உள் பைகளும் உள்ளன. தண்ணீர் பாட்டில் உட்பட்ட எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அதை வைக்க இதில் இடம் இருக்கும். நான்காவது பை ஒன்றில் 15 அங்குல லேப்-டாப் கணிணியை வைத்துக் கொள்ளலாம். விமான நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இதை எளிதாக எடுத்துச் செல்ல இதன் பின்னால் இருக்கும் சுருள் பை ஒன்றைத் திறந்தால் போதும் அதிலிருந்து இதை உருட்டிச் செல்வதற்கான உருளைகள் வரும். இதை இழுத்துச் செல்ல வேண்டியது தான். இனி உலகெங்கும் சூட் கேஸுக்குப் பதிலாக உருண்டோடும் பேக்-பேக் தான் வலம் வரப் போகிறது.

கணிணியை நீங்களே தயார் செய்யலாம்!

இனி உங்களுக்குத் தேவையான கணிணியை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். கேனோ (Kano) என்ற நிறுவனம் Do It Yourself நீங்களே தயார் செய்யும் சின்னப் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. கணிணியின் பல பாகங்களை அசெம்பிள் செய்து விண்டோஸ் 10ஐ நீங்களே நிறுவிக் கொள்ளலாம் இதில்.

பிரசித்தி பெற்ற கணிணி தயாரிப்பு நிறுவனமான லெனோவோ  தனது பிரபலமான திங்க் பேட் மாடலில் (Lenova ThinkPad X1 Foldable Model) இரண்டாக மடித்துக் கொண்டு சுலபமாகக் கொண்டு செல்லும் மடிக் கணிணியை மடித்து வைத்துக் கொள்ளும் அமைப்பையும் சேர்த்து சந்தையில் உலவ விடுகிறது. சின்ன புத்தகம் போல உள்ள இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம்; இதில் புதிதாகப் பல விசேஷ அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆக ‘பைக்குள் கம்ப்யூட்டர் என்பது நிஜமாகும் காலம் வந்து விட்டது.

புதிய டி.வி.

தொல்லைக் காட்சிகள் தந்தாலும் கூட தொலைக்காட்சி இல்லாத வீடு ஒரு வீடா? இந்த டிவி பெட்டியிலும் எல்ஜி நிறுவனம் புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. 88 இஞ்ச் மாடல் என்று பெயர் பெற்ற இதன் கனம் 1.96 அங்குலம் தான். இருக்கின்ற சினிமாக்களை இதுவே புதிய 8K தொழில்நுட்பத்திற்கு மாயாஜாலமாக உயர்த்தி  சினிமா பார்ப்பதை ஒரு சுகமான அனுபவமாக மாற்றி விடும். சிறிய அறையாக இருக்கும் போது அங்கு மிக அருகிலிருந்து பார்த்தாலும் பிரமாதமான பார்வை கிடைக்கும், கண்ணும் கெடாது என்கிறது இந்த நிறுவனம்.

கொஞ்சம் பெரிய விஷயங்கள்!

இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்; கொஞ்சம் ‘பெரிசாகச் சொல்லுங்கள் என்று கேட்போருக்கு இதோ பெரிய விஷயங்கள்;

விண்கலத்தில் சாமானியரும் ஏறி சந்திரனுக்குச் செல்லலாம்.

உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்தே பார்க்கலாம். அட நம்ம குழந்தை விளையாடுது என்று சந்தோஷப் படலாம்.

ஜெனிடிக் உத்தி மூலமாக நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் செய்யப்போகும் மாயாஜாலங்கள் கோடிக் கோடியாக அமையப் போகிறது. புதிய நகர்களையே இந்த செயற்கை அறிவு தானே உருவாக்கப் போகிறது.

‘குறையொன்றுமில்லை கோவிந்தாஎன்று இந்த நகரிலிருந்து பாடினால் அது முற்றிலும் உண்மையாக இருக்கும்.

இப்படி நூற்றுக் கணக்கில் கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதால் மாறப் போகுது உலகம்! மகிழ இருக்குது மனித குலம்!!

****

tags –  பறக்கும் கார், சோலார் கார்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: