ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 2 (Post No.7594)

This image has an empty alt attribute; its file name is cb5f7-swami2brama2bstamp.jpg

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7594

Date uploaded in London – – 20 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 2

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில:

ஓ, இருக்கிறாரே, நீங்கள் தான் அது!

அமெரிக்காவிற்குக் கப்பலில் கிளம்பினார் ஸ்வாமி ராமதீர்த்தர்.  ஆனந்த அலையில் அவர் மிதந்தார். பரந்து விரிந்திருந்த பசிபிக் மாகடல் போல அவரது அன்பும் பரந்து விரிந்திருந்தது. கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவை அடைந்த போது ராமதீர்த்தர் மேல் தளத்தில் சந்தோஷத்தால் உருண்டு புரண்டார். இதைப் பார்த்த அமெரிக்கர் ஒருவர் வியந்தார். இந்த மனிதர் ஏன் எல்லோரையும் போல அவசரம் அவசரமாக பரபரப்புடன் இறங்கவில்லை?

இந்த எண்ணம் அவர் மனதில் மேலிட.”சார், உங்கள் பயணப்பெட்டி எங்கே?” என்று கேட்டார்.

“நான் எந்த லக்கேஜையும் கொண்டு செல்வதில்லை. நான் மட்டும் தான்”

‘உங்கள் பணத்தை எங்கே வைப்பீர்கள்?”

“நான் பணத்தை வைத்துக் கொள்வதே இல்லை”

“அப்படியென்றால் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்?”

“எல்லோரிடமும் அன்பு செலுத்தி நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு தாகமென்றால் எப்போதும் ஒருவர் எனக்கு ஒரு கப் தண்ணீர் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எனக்குப் பசி என்றால் எப்போதுமே ஒருவர் ரொட்டி கொடுக்கத் தயாராக இருக்கிறார்.”

“உங்களுக்கு அமெரிக்காவில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா?”

“ஓ, இருக்கிறாரே, ஒருவர் இருக்கிறார், அது நீங்கள் தான்!” என்று அவர் தோளைத் தொட்டவாறே ஸ்வாமி ராமதீர்த்தர் கூறினார்.

அவ்வளவு தான், அந்த அமெரிக்கர் அவரது அத்யந்த பக்தரானார்.

அமெரிக்காவில் அவர் காலடி வைத்த முதல் நாளிலிருந்தே அமெரிக்கர்களும், பத்திரிகைகளும் எல்லையற்ற அன்பை அவர் மீது பொழிய ஆரம்பித்தன.

ராமதீர்த்தரின் உரைகள் புத்தகங்களானது எப்படி?

திருமதி பி.விட்மேன் (Mrs. P. Whitman) என்ற பெண்மணி ஸ்வாமியின் அத்யந்த பக்தை. அவர் ஸ்வாமியின் உரைகளை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஷார்ட்- ஹாண்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும்  Rama Tirtha Publication League நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 400 பக்கங்கள் கொண்ட எட்டுத் தொகுதிகளாக அவை ‘In Woods of God-realisation’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டன.

இவை இன்றும் புதிய பதிப்பில் படிக்கக் கிடைக்கின்றன.

ஒரு நடிகையின் துயரம்

அமெரிக்காவில் ஒரு இளம் அழகி ஸ்வாமி ராமதீர்த்தரைப் பார்க்க வந்தாள். அவள் ஒரு நடிகை. தனியே பார்க்க வேண்டும் என்றாள் அவள். அவளை வரச்சொன்னார் ஸ்வாமிஜி. அவள் உடல் முழுதும் அழகிய முத்துமாலைகளும் வைர நகைகளும் ஜொலித்தன. அவள் தடவிய வாசனை திரவியங்கள் அவள் உடலிலிருந்து வீச வெகு தூரம் வரை மணத்தது. அவள் உடலே ஒரு வாசனைக் கூடமோ என்ற பிரமையை ஏற்படுத்தியது. அவள் இதழோரம் நெளிந்த புன்னகை அவள் மகிழ்ச்சியின் கூடாரமோ என்ற உணர்வை ஏற்படுத்தியது.

உள்ளே நுழைந்ததும் அவர் ஸ்வாமிஜியின் காலடியில் வீழ்ந்தாள்; ஓவென்று அழத் தொடங்கினாள்.

“ஸ்வாமி! எனது துன்பம் கட்டுக்கடங்காதது. எனது முத்துமாலையையும் என் புன்சிரிப்பையும் பார்க்காதீர்கள். வெளியே தோற்றம் அப்படி. உள்ளே நான் ஒரு நோயாளி.

அவள் தனது ஒரே குழந்தையை இழந்திருந்தாள்.

ஸ்வாமிஜி சொன்னார்: “ நான் சந்தோஷத்தை விற்பனை செய்பவன். அதை வாங்க அதற்குரிய விலையை நீ தர வேண்டும்.

அவள் கூறினாள் :உடனே தருகிறேன்.

ஸ்வாமி : “எதானாலும் தருவாயா?

அவள் : “என்ன வேண்டுமானாலும் தருகிறேன்.எவ்வளவு என்று சொல்லுங்கள்

ஸ்வாமி : “சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நாணயம் வேறாக இருக்கிறது. ராமாவின் நாட்டில் அந்த நாட்டுக்குரிய நாணயத்தை நீ தர வேண்டும்.

அவள் : “சரி, ஸ்வாமிஜி! எதானாலும் தருகிறேன்

ஸ்வாமி : “சரி, சின்ன நீக்ரோ பையனை உன் குழந்தையாகத் தத்து எடுத்து அவனை உன் குழந்தையாக வளர்த்து வா. இது தான் நீ தர வேண்டிய விலை.

அவள் : “ஐயோ! அது ரொம்ப கஷ்டமாச்சே

ஸ்வாமி : “அப்படியானால் சந்தோஷம் அடைவதும் கஷ்டம் தான்

அந்த நடிகை ஸ்வாமிஜி சொன்னபடியே ஒரு நீக்ரோ குழந்தையை தத்து எடுத்தாள்.

ஆறுதலையும் பெரும் மன நிம்மதியையும் பெற்றாள்.

இது போல அன்றாடம் பலரும் ஸ்வாமிஜியைப் பார்க்க வந்தனர்.

மன நிம்மதியையும் ஆன்மீக உயர்வையும் அடைந்தனர்.

*

இந்த சம்பவங்கள் ஆதாரபூர்வமானவை. Swami Rama : His Life & Legacy என்ற புத்தகத்தில் In the Land of Dollars (1902-1904) என்ற அத்தியாயத்தில் தரப்பட்டிருப்பவை.

அடுத்து தொடர்ந்து, ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் நடந்த இன்னும் சில சம்பவங்களையும் உபதேச அருளுரைகள் சிலவற்றையும் அவர் இறுதியையும் பார்ப்போம்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: