
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7608
Date uploaded in London – 23 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால் வெள்ளேறே ; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;
மறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;
பெண்ணுறு ஒருதிறன் ஆகின்று ; அவ்வுரு த்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை
பதினெண் கணமும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே
கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;
அதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.
அவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்!
சிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும்.
ஆனால் பிற் காலத்தில் வலிய பொருள் சொல்லப்போய், சிலர் அபத்தமாக மொழி பெயர்த்தும் இருக்கலாம்.புலவர் மஹாதேவன் புறநாநூறு தொகுக்கப்பட்ட நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இதற்குப் பின்னரும் பல சான்றுகள் உள்ளன. திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் ‘தருமி கவிதை சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இதை அப்பரும் தேவாரத்தில் பாடியிருப்பதால் அவருக்கு குறைந்தது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னராவது வாழ்ந்திருக்கவேண்டும் .
அப்பர் பாடலில் தருமி என்ற பிராமணனின் சம்ஸ்கிருதப் பெயரும் வருகிறது. ‘சங்கம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வருகிறது .
சங்கம் என்ற சொல்லை வைத்துத்தான் இன்று வரை தமிழர்கள் பெருமை பேசுகிறோம். இறையனார் களவியல் உரை யின்படி மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து. ஆனால் இந்த சங்கம் என்பது சம்ஸ்கிருதச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே யில்லை .தொல்காப்பிய விதிப்படி “ச” எழுத்தில் தமிழில் சொற்களே துவங்க முடியாது சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் பரிபாடலில் ஒரே இடத்தில் ‘சங்கம்’ வருகிறது.
இதைவைத்து சங்கம் இல்லவே இல்லை அது பிற்காலக் கற்பனை என்று எவரும் சொல்வதில்லை.
ஆக உண்மையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒருவனின் இரு கண்கள் போல விருப்பு வெறுப்பின்றி பயிலப்பட்டன.
இன்னொரு எடுத்துக் காட்டையும் பார்ப்போம். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிராமணர் அல்ல. அவர் சொல்லும் எல்லா பாண்டிய மன்னர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதைப் பார்க்கையில் தமிழ்ப் பெயர்களும் சம்ஸ்கிருதப் பெயர்களும் ஏக காலத்தில் வேறுபாடின்றி வழங்கின என்றே தெரிகின்றது. ஆக எவரோ ஒருவர் வந்து வேண்டுமென்றே அங்கயற்கண்ணி என்ற அழகான தமிழ்ப் பெயரை மீனாட்சி என்று மாற்றியதாக குற்றம் சாட்டுவதில் பசை இல்லை.
மேலும் பிராமணர் அல்லாத அப்பர், காரைக்கால் அம்மையார் கதைகளில் வரும் பெயர்கள் எல்லாம் புனிதவதி, திலகவதி, பரமதத்தன் என்று சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. ஆக 1600 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரும் இரு கண்களைப் போன்ற தமிழ்- சம்ஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டனர் . சங்க இலக்கிய புலவர் பட்டியலில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள உள்ளன . சிலர் மட்டும் காமாக்ஷி என்பதை காமக்க்கண்ணியார் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை தாயங்கண்ணன் என்றும் மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
63 நாயன்மார் கதைகளைப் பார்த்தால் இன்னும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்காத ஒரு மன்னரின் பெயர் மூர்த்தி நாயனார். அவர் களப்பிரர் ஆட்சியை ஒட்டி வாழ்ந்தவர். அதாவது 1600 ஆண்டுகளுக்கு முந்தையவர்.
மேலும் இதற்குப்பின்னர் ஜடா வர்மன் என்ற அழகிய சம்ஸ்கிருதப் பெயர், சடையவர்மன் என்று கல்வெட்டுகளில் தமிழ்மயமாக்கப்படுவதைக் காண்கிறோம்.

முடிவுரை
1.தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் விருப்பு , வெறுப்பின்றி பயன்பட்டன.
2.சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை பாதி மட்டும் மொழிபெயர்த்தோ, முழுதும் மொழி பெயர்க்காமலோ பயன்படுத்தினர்.
3.ஆக அங்கயற்கண்ணியை மீனாட்சியாக மாற்றியதெல்லாம் ‘சூழ்ச்சி’ , ‘சதி’ என்று சொல்வதெல்லாம் பிதற்றலே. மேலும் மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலை, தந்தை மலையத்வஜன் , காஞ்சன மாலை யாதவ குலத்தில் வந்தவள் (சூரசேன மகாராஜன் புதல்வி)– என்று ஆராய்ச்சியை நீட்டிக்கொண்டே போகலாம்.
4.இரு மொழிகளும் இரு கண்களைப் போன்றவையே !
வாழ்க சம்ஸ்க்ருதம் ! வளர்க தமிழ் !!!
Tags — கடவுள் வாழ்த்து, பெருந்தேவனார், புறநாநூறு
—subham–