ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி(Post No.7611)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7611

Date uploaded in London – – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – க்ட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020

ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி

ச.நாகராஜன்

2. சிவானந்த லஹரி

நூறு சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது சிவானந்த லஹரி.

லஹரி என்றால் அலை அல்லது பிரவாஹம். சிவனைக் குறித்த ஆனந்த அலை பிரவாஹமே சிவானந்த லஹரியாக அமைகிறது. சிவனைக் குறித்த ஸ்தோத்திர நூல் இது. ஒவ்வொரு செய்யுளிலும் சிவனின் அபார பெருமைகள் விளக்கப்படுவதால் பக்திப் பரவசத்துடன் இந்த துதியை துதிக்க முடியும்.

இதைப் பற்றி பெரியவாள் – காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அருளியிருப்பது :

”சிவாநந்த லஹரீ” என்றால் ”சிவனை அல்லது சிவத்தை அநுபவிப்பதன் ஆனந்த வெள்ளம்” என்று அர்த்தம். காம தஹனம், கால ஸம்ஹாரம், திரிபுர ஸம்ஹாரம், தாருகாவனத்தில் பிக்ஷாடனம், பார்வதீ கல்யாணம், கைலாஸ தர்சனம், நடராஜ தாண்டவம், அடி முடி தேட நின்றது, கிராதனாக (வேடனாக) வந்தது முதலான லீலைகளைப் பண்ணின பரமேச்வரனின் அனந்த குணங்களையும், மஹிமைகளையும், அருளையும், சக்தியையும் அநுபவிப்பது, சிவன் என்ற மூர்த்தியை அநுபவிக்கிற ஆனந்த வெள்ளத்தைத் தருகிறது.

அதே சிவனை அமூர்த்தமாக உள்ளுக்குள்ளே அநுபவித்துக் கொள்ளும்போது அவனுக்கு ‘சிவம்’ என்று பெயர். [மாண்டூக்ய] உபநிஷத்தில் சொல்லியிருக்கிறபடி விழிப்பு, கனா, தூக்கம் இவற்றைத் தாண்டி, ஆத்மா ஏகமானதே என்கிற அறிவால் அறியத்தக்கவனாக, பிரபஞ்சங்கள் லயிக்கிற துரீய சாந்த நிலையில் அத்வைதமாக சிவனை அநுபவிக்கிறபோது அவனே “சிவம்” ஆகிறான். இப்படி இருவகைப்பட்ட, சிவனைக் குறித்த லீலானந்தம், சிவத்தைக் குறித்த ஆத்மானந்தம் இரண்டையும் வெள்ளமாகப் பெருக்குவதால் ”சிவாநந்த லஹரி”க்கு அந்தப் பெயர் ரொம்பப் பொருந்துகிறது.”

(முழு உரையையும் ஆசார்யாள் உரைகளில் படித்து அனுபவிக்கலாம்.)

இதிலுள்ள உவமைகள் மிக அற்புதமானவை.

நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதை ஆன்மாவைப் பண்படுத்துவதுடன் ஒப்பிடும் ஸ்லோகம் 40வது ஸ்லோகமாக அமைகிறது.

மாணவனாக இருந்தால் என்ன, கிரஹஸ்தனாக இருந்தால் என்ன, சந்யாசியாக இருந்தால் என்ன, அல்லது வேறு என்னவாக இருந்தாலும் தான் என்ன, ஒருவனது இதய கமலம் உன்னதாக ஆகும்போது, நீ அவனுடைவனாக ஆகிறாய் என்று 11ஆம் ஸ்லோகம் கூறுகிறது.

“மனம் ஒரு குரங்கு. அது மாயையென்னும் காட்டில் ஆசைகள் என்னும் கிளைக்கு கிளை எல்லா திசைகளிலும் தாவிக் குதிக்கிறது. ஓ, பிக்ஷுவே, உனக்கு அதை அர்ப்பணிக்கிறேன். அதை பக்தியால் கட்டி விடு.” – இப்படி 20வது ஸ்லோகம் கூறுகிறது.

சிவானந்த லஹரியில் சிவ பிரானின் ஏராளமான லீலைகளை எடுத்துரைக்கிறார் சங்கரர்.

யமனை காலால் உதைத்தது,மன்மத தகனம் உள்ளிட்ட ஏராளமான சரிதங்கள் ஆங்காங்கே ஸ்லோகங்களில் படித்து பரவசமடைகிறோம்.

பக்தி அமிர்தத்துடன் ஆன்ம உபதேசங்களை இந்த நூலில் அளிப்பதால் பகவான் ரமண மஹரிஷி இதிலுள்ள பத்து ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப் படுத்தித் தந்துள்ளார்.

அந்த ஸ்லோகங்களாவன : 61,76,83,6,65,10,12,9,11, 91

இந்த ஸ்லோகங்களை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள அதில் வரும் முதல் வார்த்தைகளை இணைத்து ஒரு ஸ்லோகத்தையும் அவர் அருளியுள்ளார்:

அம்-பக் ஜன- கடோ-வக்ஷஸ்- நர-குஹா -கபீ- வது: |

ஆத்யா – தச சிவானந்த லஹரி ஸ்லோகா சூசிகா ||

பத்து ஸ்லோகங்களின் ஆரம்பத்தைக் கீழே காணலாம் :

ஸ்லோகம் 61 : அங்கோலம் நிஜ பீஜ ஸந்ததிரயஸ்காந்தோபலம் ஸூசிகா

ஸ்லோகம் 76 : பக்திர் மஹேஸ பத-புஷ்கரமாவஸந்தீ

ஸ்லோகம் 83 : ஜனன-ம்ருதி-யுதானாம் ஸேவயா தேவதானாம்

ஸ்லோகம் 6 : கடோ வா ம்ருத்பிண்டோऽப்யணுரபி ச தூமோऽக்னிரசல:

ஸ்லோகம் 65 : வக்ஷஸ்தாடன ஸங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:

ஸ்லோகம் 10 : நரத்வம் தேவத்வம் நக-வன-ம்ருகத்வம் மஸகதா

ஸ்லோகம் 12 : குஹாயாம் கேஹே வா பஹிரபி வனே வாऽத்ரி-ஸிகரே

ஸ்லோகம் 9 :  கபீரே காஸாரே விஸதி விஜனே கோர-விபினே

ஸ்லோகம் 11 : வடுர்வா கேஹீ வா யதிரபி ஜடீ வா ததிதரோ

ஸ்லோகம் 91 : ஆத்யாऽவித்யா ஹ்ருத்கதா நிர்கதாஸீத்-

98வது ஸ்லோகம் ஒரு அற்புதமான சிலேடை ஸ்லோகமாக அமைகிறது.

சிவானந்த லஹரி என்னும் கவிதையை தனது பெண்ணாக வர்ணிக்கிறார் ஆதி சங்கரர்.

கவிதையில் வரும் அலங்காரங்களே மணப்பெண்ணுக்கான அலங்காரம். (சர்வாலங்கார யுக்தாம்)

சரளபத யுதாம் – வார்த்தைகளே அழகிய நடையாக அமைகிறது.

சாதுவ்ருத்தம் –  அழகிய சந்தங்களால் அமைந்தது – பக்தியுடன் இருப்பது

சுவர்ணாம் – அழகு ததும்பியது

நல்லோரால் போற்றப்படுவது

இனிய நடையை உடையது

இலட்சியம் என்றே சொல்லக்கூடியது (இலட்சிய கவிதை- இலட்சிய பெண்)

கல்யாணி (மங்களமயமானவள்)

இப்படிப்பட்ட கவிதை என்னும் பெண்ணை கௌரிப்ரியா, ஏற்றுக் கொள் என்கிறார்.

ஒரு நல்ல கன்னிகையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா!

கன்னிகை போல இருக்கும் எனது கவிதையை ஏற்றருள்- அவள்

நல்ல அலங்காரங்களுடன் கூடியவள்,

அழகிய நடையை உடையவள்,

நற்குணங்கள் உடையவள்,

கவர்ச்சிகரமான நிறம் கொண்டவள்,

நல்லோரால் கொண்டாடப்படுபவள்,

இனிய விரும்பத்தகும் நடத்தை கொண்டவள்,

மற்றவருக்கு முன் மாதிரியாகத் திகழ்பவள்,

அனைத்து லட்சியங்களையும் கொண்டவள்,

ஜொலிக்கும் ஆபரணங்களை அணிந்தவள்,

நற்பண்புகளுடன் நடப்பவள்,

கையில் தனரேகையைக் கொண்டவள்,

அனைத்து நல்லனவற்றின் களஞ்சியமாகத் திகழ்பவள்

ஒரு நல்ல கவிதையின் குணநலன்கள் :

ஓ, கௌரி ப்ரியா

எனது கவிதை என்னும் பெண்ணை ஏற்றருள் ;

அது அனைத்து அணிகளையும் கொண்டது,

அழகிய அனைவரும் விரும்பும் பதங்களைக் கொண்டது,

இனிய இசையுடனான சந்தத்தைக் கொண்டது,

தேர்ந்தெடுத்த சொற்களால் ஒளிர்வது,

அறிவாளிகளால் புகழப்படுவது,

அனைத்து குணங்களையும் தன்னகத்தே கொண்டது,

பக்தியைப் பரப்பும் லட்சியத்தைக் கொண்டது,

முன்மாதிரியான கவிதையாக அமைவது,

அழகிய சொற்றொடர்களைக் கொண்டது,

மிருதுவாகவும் இனிமையாகவும் ஒலிப்பது,

ஒளிரும் கவர்ச்சியான பொருளைக் கொண்டது,

அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது,

முழுக் கவிதையின் பொருளையும் வார்த்தை வார்த்தையாகப் பொருள் பிரித்து, படித்து மகிழலாம்.

தேவர்கள் அனைவரும் உத்தமோத்தம பலம் என்று புகழும் (பெறுதற்கரிய உத்தம பலன் என்று புகழும்) சிவபிரானே, உன்னை எப்படிப் புகழ்ந்து போற்றுவது? (அது இயலாத காரியம்) என்று முடிக்கிறார் ஆதி சங்கரர் சிவானந்த லஹரியை.

சிவானந்த லஹரியின் ஆங்கில மொழிபெயர்ப்பை திரு T.M.P. Mahadevan , The Hymns of Sankara என்ற நூலில் அளித்துள்ளார்.

சிவ ஸ்தோத்திரமாகவும் அருமையான பக்தி இலக்கியமாகவும், உயரிய ஆன்மீக உபதேசங்களை அருள்வதாகவும், உயரிய கவிதைக்கான இலக்கணமாகவும், வேத, புராண, இதிஹாஸ சம்பவங்களை அடக்கியதாகவும் உள்ள சிவானந்த லஹரி பக்தர்களுக்கு ஒரு வரபிரசாதம் என்பதில் ஐயமில்லை.

ஜய ஜய சங்கர,

ஹர ஹர சங்கர!

***

உதவிக் குறிப்பு :

சிவானந்த லஹரியின் தமிழ் வடிவத்தையும் அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பையும் பல தளங்களில் பார்க்கலாம். யூ டியூபிலோ பல அறிஞர்கள், பக்தர்கள் விரிவுரைகளத் தந்துள்ளனர். அவரவருக்கு ஏற்ற வகையில் இவற்றை அனுபவித்து மகிழலாம். பரமாசார்யாளின் உரைகளும் இணையதளத்தில் இருப்பதால் அதிகாரபூர்வமான அந்த உரையை அடித்தளமாகக் கொண்டு ஆதி சங்கரர் நூல்களின் பயணத்தை அன்பர்கள் மேற்கொள்ளலாம்.  

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: