
WRITTEN BY S NAGARAJAN
Post No.7644
Date uploaded in London – – 3 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பீஜப்பூரை ஆண்ட சுல்தான் (இரண்டாம்) இப்ராஹீம் சிறந்த சரஸ்வதி பக்தன். சிறந்த கலைஞன். இசையில் தேர்ந்தவன்.
சுல்தான் இப்ராஹீம் அடில்ஷா II என்று வரலாற்றில் குறிப்பிடப்படுபவன். இவனது காலம் 1580-1627.
அவன் ஏன் சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கினான் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முக்கியமான காரணத்தை முதலில் பார்ப்போம்.
சுல்தான் இப்ராஹீம் (II) பீஜப்பூரை ஆண்ட காலத்தில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் மீது சுல்தானுக்கும் மதிப்பும் மரியாதையும் நிரம்ப உண்டு. இதற்கான முக்கியமான காரணம் சுல்தானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை அவர் சந்தோஷ சம்பவமாக மாற்றியது தான்!

சுல்தானுக்கு ஒரு அருமை மகள் உண்டு. அந்த மகளின் மீது சுல்தானுக்கு அளவற்ற பாசம். ஒரு நாள் திடீரென்று அந்த அருமை மகள் இறந்து விட்டாள். சுல்தான் துக்கத்தால் கதறி அழுதான். இதைக் கேள்விப்பட்ட யோகி உடனடியாக அவனிடம் வந்தார். சுல்தானிடம் சரஸ்வதி தேவியின் உருவச்சிலை உடனடியாக அந்த அறைக்குள் கொண்டுவரப்பட்டு இறந்த மகளின் சவத்தையும் அந்த அறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றார். இப்படிச் செய்தால் சுல்தானின் மகள் உயிர் பிழைப்பாள் என்றார் அவர். உடனடியாக சுல்தான் அப்படியே செய்தான்.யோகி சிறந்த இசைக் கலைஞர். அவர் ஒரு ராகத்தைப் பாட ஆரம்பித்தார். அந்த ராகம் பாதி முடியும் முன்னரேயே இறந்த மகளின் உடலில் அசைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ராகம் முடியும் போது முற்றிலுமாக சுல்தானின் மகள் எழுந்து விட்டாள்.
சுல்தானும் அரசவையில் அங்கம் வகித்தோரும் பிரமித்தனர். யோகியின் ஆற்றலுக்கு அவர்கள் தலை வணங்கினர்.
அன்றே சரஸ்வதியின் திருவுருவச் சிலையை அரண்மனையில் பிரதிஷ்டை செய்த சுல்தான் ஹிந்துக்களின் பூஜை முறைப்படி சரஸ்வதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தான்.
இப்ராஹீம் அனைத்து ராகங்களிலும் வல்லவன் என்பதால் அவன் சரஸ்வதியின் முன் பாடுவான்.
அரசவைக் கலைஞர்களும் பாடுவர்.
சுல்தானுக்கு போர், படையெடுப்பு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஒற்றுமையான அமைதியான வாழ்வையே அவன் விரும்பினான். அதை மக்களிடம் உறுதிப்படுத்தினான்.
விஜயபுரி என்ற நகரத்தின் பெயரை வித்யாபுரி என்று அவன் மாற்றினான்.
ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும் என்று கூறிய அவன் அதைத் தன் வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தான்.

அவனது கவிஞரான ஜுஹாரி (Zuhari) இயற்றிய கிதாப்-இ-நௌரஸ் (‘Kitab-i-Naurs) என்ற நூல் பிஸ்ம் அல்லாவைத் (Bism Allah) தொழுது ஆரம்பிக்கவில்லை.
மாறாக, ஹிந்து கவிஞர்கள் நூலின் ஆரம்பத்தில் துதிக்கும் கணபதி துதியைக் கொண்டு ஆரம்பிக்கிறது!
சிவ பிரான், பார்வதி,பைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் நூலெங்கும் காணப்படுகின்றனர்.
என்றாலும் கூட சுல்தானுக்கு இஷ்ட தெய்வம் சரஸ்வதி தான்!
நா வன்மை, கவிதையின் தாய், அறிவுத் தெய்வம், கலைகளின் இருப்பிடம், சாஸ்திர புராண நாடக சஞ்சாரிணீ – ஆகிய சரஸ்வதி தேவியை அவன் ஆராதித்தான்.
இது அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை.
அரசாங்க ஆவணங்களிலும் பிரதிபலித்தது.
பெர்சிய மொழியிலும் மராத்திய மொழியிலும் எழுதப்படும் ஆவணங்கள், அஜ் பூஜா ஸ்ரீம் சரஸ்வதி (Ai puja shrim Saraswathi) என்று ஆரம்பிக்கப்பட்டது.
ஜுபைரி (Zubairi) என்ற வரலாற்று ஆசிரியன், தான் எழுதிய நூலான பசாசின் அல்-சுலாடின் (Basatib al-Sulatin) என்ற நூலில்,” சுல்தான் சிறந்த இசைக் கலைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தான். அவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள். ஆகவே சுல்தான் இப்ராஹிமும் சரஸ்வதி தேவி பால் ஈர்க்கப்பட்டான்” என்று எழுதியுள்ளான்.
இதற்கான இன்னும் பல காரணங்களைத் தங்கள் மனம் போல பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.
இன்னும் ஒரு விஷயம். சுல்தானின் மகளை உயிர்ப்பித்த ருக்மாங்கத பண்டிதர் பற்றிய விஷயம் அது.
சுல்தான் ஹிந்து தெய்வத்திற்கு கொடுத்த மரியாதையையும் பக்தியையும் கண்டு பொறாத அப்துல் ஹாஸன் (Abdul- Hasan) என்பவர், தான் பீஜப்பூருக்கு வந்தவுடன் இதை மாற்ற வேண்டுமென்று நினைத்தார். அவரிடம் ஏதாவது செய்ய வேண்டுமென்று பலரும் சொல்லவே, சுல்தானின் கவனம் யோகியிடமிருந்து தன் மீது திரும்பவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களா என்று அவர் கேட்க அவர்கள் ஆமாம், ஆமாம் என்றனர்.
உடனே அப்துல் ஹாஸன் தன் உருவத்தை ஒரு மண் பாண்டத்தில் வரைந்து அவர்களில் ஒருவனிடம் கொடுத்து, மறுநாள் யோகியைப் பார்க்க சுல்தான் செல்லும் போது அதை அவனிடம் காண்பிக்குமாறு கூறினார். மறுநாள் சுல்தான் வரும் போது அவரிடம் ஹாஸனின் படத்தைக் காண்பிக்கவே அவர் யோகியிடம் செல்லாமல் ஹாஸன் இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.
அங்கு ஹாஸன் சுல்தானை நோக்கி, “உன் மனம் இறைவனிடம் நிலை பெறட்டும் “ என்று பல்வேறு விதமாக உபதேசித்தார்.
யோகியை வரவழைத்த அப்துல் ஹாஸன் அவர் முன்னர் மழை நீரை பாலும் நெய்யுமாக மாற்றிக் காண்பிக்க ருக்மாங்கத பண்டிதர் ருக் அல் டின் (Rukn al-Din) என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமுக்கு மாறினார்.

இப்படி ஒரு கதை உண்மையா என்று வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகப்படுகின்றனர். அப்துல் ஹாஸன் யோகியை விட உயர்ந்தவர் என்ற அபிப்ராயத்தை உருவாக்க இப்படி ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் கருத்து.
சிந்தித்துப் பார்த்தால், இறந்த உயிரை எழுப்பிய யோகி பெரியவரா, மழை நீரை பாலாக மாற்றிக் காண்பித்த ஹாஸன் பெரியவரா என்று கேட்டால் சிறு குழந்தை கூட என்ன பதிலைச் சொல்லும் என்பது புலப்படும்.
தனது இறுதி வரை சரஸ்வதி தேவியின் பக்தனாக சுல்தான் இப்ராஹீம் திகழ்ந்தான் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
*

சரஸ்வதி தேவியை வணங்கிய சுல்தான் இப்ராஹீம் போன்ற ஏராளமான வரலாறுகள் இந்திய சரித்திரத்தில் உண்டு. அதிகாரபூர்வமான நூல்கள் தரும் வரலாறுகள் இவை.
இவற்றை நாம் கேள்விப்படுவதே இல்லை.
காரணம் செகுலரிஸம்.
செகுலரிஸம் என்றால் இன்றைய செகுலரிஸ்டுகளின் உபதேசப்படி, ‘ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் எதையும் உடனடியாகப் பரப்புவது; அதற்குப் பெருமை சேர்க்கும் எதையும் மறைத்து விடுவது; இஸ்லாமிய, கிறிஸ்தவர்களை உண்மைக்கு மாறாகக் கூடப் புகழலாம்; ஆனால் ஒரு போதும் உண்மையான விஷயமாக இருந்தால் கூட இகழக் கூடாது’ என்பது தான்!
இது மாற வேண்டும் இல்லையா, சுல்தான் இரண்டாம் இப்ராஹீம் வாழ்க்கைச் சம்பவம் போல உள்ளவற்றை ஹிந்துக்கள் உணர வேண்டும்; பரப்ப வேண்டும்!
****
ஆதார நூல் : Sufi’s of Bijapur 1300-1700 by Richard Maxwell Eaton, 1978 publication
நன்றி : Richard Maxwell Eaton சுல்தான்படம் – நன்றி – ரிச்சர்ட் மாக்ஸ்வெல் ஈடன்
tags சுல்தான் இப் ராஹிம் , அடில்ஷா,பீஜப்பூர், சரஸ்வதி