
WRITTEN BY London Swaminathan
Post No.7657
Date uploaded in London – 6 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சாகும்போதும் சூதாட்டம் ஆடியவர்
ஸ்க்ரோப் டேவிஸ் ( Scrope Davies 1782-1852) என்பவர் சூதாட்ட மன்னன். இங்கிலாந்தில் ஹார்ஸ்லியில் பிறந்த பிரமுகர். இவர் நகைச் சுவை மன்னரும் கூட . பிரபல ஆங்கிலக் கவிஞரான பைரன் (Lord Byron) பிரபுவின் நண்பர் என்பதால் ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்பது போல எல்லோருக்கும் தெரிந்த நபர்.
ஸ்க்ரோப் டேவிஸ் மரணப்படுக்கையில் கிடந்தார்; டாக்டர் வந்தார்;சாவு மணி அடித்தார் . ‘நாளை காலை எட்டு மணிக்குள் உம்முடைய உயிர் பிரியும் ; வேண்டுவதை செய்துகொள்ளுங்கள்’ என்று எச்சரித்தார். டேவிஸும் மிகவும் ஸீரியஸாக அதைக் கேட்டார் . டாக்டருக்கு தக்க மரியாதை செய்து குட் பை (Good Bye) சொன்னார் . அப்பொழுதும் அவருக்கு சூதாட்டமும் மறக்கவில்லை ;நகைச் சுவை உணர்வும் அழியவில்லை . டாக்டரை அவசரமாக ‘சார் உள்ளே வாருங்கள் ; ஒரு முக்கிய விஷயம் .ஐந்து கினி (five Guineas) பணம் பந்தயம் கட்டுகிறேன் . நான் காலை 9 மணி வரை உயிருடன் இருப்பேன் ; பந்தயம் கட்டத் தயாரா ? என்றார் .
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்ற பழமொழி உண்மைதான் !
Xxxx
சாகும்போது விடுகதையா ?
ஒரு மனிதன் மரணப் படுக்கையில் கிடந்தான் . வழக்கம்போல கிறிஸ்தவ பாதிரியார் துதி பாட வந்தார் ; ஐயா, செத்துக் கொண்டு இருக்கிறீர்களே ; எந்த தேவன் உம்மை ரட்சிப்பான் என்று நினைவிருக்கிறதா? என்று கேட்டார்.
செத்துக் கொண்டிருந்த மனிதன் சொன்னான் —
பாதிரியாரே! பாதிரியாரே !!விடுகதை போடுவதற்கு இதுவா தருணம் ?
என்று கேட்டுவிட்டு உயிரைவிட்டார்.
Xxxx

உலகப் புகழ்பெற்ற மந்திரவாதி ஹாரி ஹுடினி (Harry Houdini, died in 1926) ; ஹங்கேரியில் பிறந்தவர் ; அமெரிக்காவில் வளர்ந்தவர் ; இந்தியாவின் கயிறு வித்தை மந்திரவாதிகள் (Indian Rope Trick) போல மாயமாய் மறைவார் . ஸ்டண்ட்(Stunt) வித்தை மன்னன். 1926ல் அவர் இறந்தார் . அவரது சவப்பெட்டியைத் தூக்கும் பாக்கியம் ஹாலிவுட்டின் இரண்டு புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்தது ; அவர்களில் ஒருவர் பெயர் சார்ல்ஸ் டில்லிங்ஹம் (Charles Dillingham) ; இரண்டாமவர் பெயர் பிளாரன்ஸ் செக்பெல்டு (Florence Ziegfeld) . அழகான , கனமான சவப்பெட்டியை இருவரும் தோளில் ஏற்றிக் கொண்டனர்.
அப்போது டில்லிங்ஹம் ஒரு ஜோக் அடித்தார் –
ஏ , சிக்பெல்ட் ! ஒருவேளை அவர் சவப்பெட்டியில் இல்லையோ ! வழக்கம் போல ஸ்டண்ட் அடித்து எஸ்கேப் ஆயிருந்தால் ………….! நல்ல வேளை இதை அவர் காதுக்குள் கிசுகிசுத்தார்; உரக்கச் சொல்லவில்லை !

Xxxx subham xxx