
Written by S NAGARAJAN
Post No.7670
Date uploaded in London – 9 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Big Thanks for your pictures.

மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்ற பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரன்!
ச.நாகராஜன்
மேலைச் சிதம்பரம் என்று புகழ் பெற்றது பேரூர். அங்கு கோமுனி, பட்டி முனி காண மரகதவல்லி சமேதரான பட்டீசுரன் தாண்டவமாடினார். இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பேரூர் உள்ளது கொங்கு மண்டலத்திலேயாம் என்று கூறிப் பெருமைப் படுகிறது கொங்கு மண்டல சதகம்.
பாகான சொல்லிதென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா
நாகா பரணர்பட் டீசுரர் பாதத்தை நம்பியெங்கும்
போகாத கோமுனி பட்டி முனிக்குப் பொதுநடஞ்செய்
வாகான மேலைச் சிதம்பர முங்கொங்கு மண்டலமே
இது கொங்கு மண்டல சதகத்தில் வரும் 17வது பாடல்.

பேரூர் உள்ளது ஆறை நாடு. பேரூர்ப் புராணம் கூறும் செய்யுள் இது:
கோமுக முனியும்பட்டி முனிவனுங் குறுகியேத்த
வேமுறு பூதநாத ரிடனறத் துவன்றிப் போற்ற
காமுறு விசும்பிற் றேவர் கடிமலர் மாரி தூர்ப்பத்
தீமுழங் கங்கைவள்ள றிருநடன நவிற்றலோடும் (பேரூர்ப் புராணம்)
இந்த வரலாற்றைச் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரத்திலும் காணலாம் :
ஏழாம் திருமுறையில் கோயில் பகுதியில் உள்ள பத்துப் பாடல்களில் பத்தாவது பாடலாக அமைவது இது:
பார் ஊரும் அரவு அல்குல் உமைநங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊர் ஊரான் தருமனார்தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே.
கொங்குமண்டல சதகத்தில் அடுத்த பாடலாக மலரும் 18வது பாடல் பட்டீசுரன் பள்ளனான வரலாறைக் கூறுகிறது இப்படி:

கடுவாள் விழியினைப் பாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- சுந்தரர் நம்மைப் பாடி வருவார்; அவருக்குக் கொடுக்கப் பரிசு (பொன்) இல்லையே என்று ஒளிந்தவர் போலப் பட்டிப் பெருமான், பள்ள வடிவு கொண்ட பேரூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.
இதைப் பேரூர்ப் புராணம் இப்படி விவரிக்கிறது:
உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோல மிட்டுரைக்கும்
வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகிமுன் காட்டிப்
பயந்தரு றைவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்
நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா
கொங்கு மண்டல சதகம் தனது நூறு பாடல்களில், பட்டீசுரத் திருவிளையாடலுக்கு மட்டும் மூன்று பாடல்களை ஒதுக்குகிறது. (பாடல்கள் 17,18,19). இந்த மூன்றையும் நமது கொங்கு மண்டல சதகத் தொடரில் விரிவாகப் பார்த்து விட்டோம்.


***