மேடையில் அழகி , ‘கிழவி’ ஆக மாறிய விந்தை (Post No.7680)

Written by LONDON SWAMINATHAN

Post No.7680

Date uploaded in London – 11 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னனின் பெயர் பிம்பிசாரன். அவனுடைய மனைவியின் பெயர் மஹாராணி க்ஷேமா . அவள் அழகின் இலக்கணம். தங்கத்தில் வார்த்தெடுத்த பொற்சிலை. உலகம் வியக்கும் அழகி. சதா சர்வ காலமும் தன்  அழகை தானே கண்டு வியப்பாள் . ‘மேக்  அப்’ (Make up) சாதனங்களுடன்தான் நடப்பாள் ; தூங்குவாள் . அத்தகைய குணத்தை எப்படி மாற்றுவது என்று பிம்பிசாரன் தவித்தான்.

புத்தர் பிரானின் வழி நடந்தவன் பிம்பிசாரன். மகத  சாம்ராஜ்யத்தின் தலை நகரான ராஜக்ருஹத்தில் இருந்த ‘வேலு வனம்’ என்ற மிகப்பெரிய தோட்டத்தை புத்த சங்கத்துக்கு தானமாக அளித்தவன் . அந்த மாபெரும் அரசாங்க தோட்டத்தில் புத்தர் வந்து தங்கி அருளுரை ஆற்றிக்கொண்டிருந்தார் .

பிம்பிசாரனுக்கு ஒரு ஆசை .

அன்பே! ஆருயிரே! தேனே, மானே, கற்கண்டே ! நாம் இருவரும் இன்று புத்தர் பிரானைச் சந்தித்து நமஸ்கரித்து வருவோம் என்றான். அவள் மாட்டேன் என்று தலையை அசைத்தாள். அதற்கென்ன, உனக்கு எப்போது சவுகரியமோ அப்போது தோழிகளுடன் சென்று அவர் பாத கமலங்களைப் பூஜித்து வா என்றான் கெஞ்சலாக , கொஞ்சலாக !

மாட்டவே மாட்டேன் ! புத்தனும் வேண்டாம், பித்தனும் வேண்டாம் என்றாள் மஹாராணி க்ஷேமா.

அவள் மனதில் நிழல் ஆடிய விஷயம் பிம்பிசாரனுக்குப் புரிந்தது. ஸதா ஸர்வ காலமும் ‘மேக் அப்’ (Toiletries)  சாதனங்களுடன் உலா வரும் தன்னை புத்தர் உதாசீனப்படுத்திவிடுவாரோ  என்று அவள் அஞ்சுவது அவனுக்குத் தெரிந்தது.

PLAN – B

ஆகையால் பிளான் ஏ – க்குப் பதிலாக பிளான் -பி (Plan B) யை  அமல் படுத்தினான் .

தோழிமார்களைக் கூப்பிட்டு வேலு வனத்தின் புகழ் பாடுங்கள் ;அதன் இயற்கை அழகை விதந்து ஓதுங்கள். அவளை எப்படியாவது வேலு வனம் போகத் தூண்டி விடுங்கள் என்றான். அத்தனை தோழி மார்களும் வேலுவனத்தின் புகழை கோரஸ் (Chorus)  பாடினார்கள் . மன்னனின் பிளான் -பி ( Plan B) பலித்தது.

“அத்தான் ! நான் வேலு வனம் போக ஆவன செய்யுங்கள்” என்றாள் மாமன்னனிடம் .

அதற்கென்ன , கண்ணே!  இதோ 4 வெள்ளைக் குதிரைகள் பூட்டிய  தங்க ரதம் நிற்கிறது. உனக்குத் துணையாக ரத ,கஜ ,துரக, பதாதி நாற்படைகளும் வரும் ; அமைச்சர் பெருமக்களும் உடன் வந்து உபசரிப்பர் என்றார் .

மந்திரிமார்களுக்கு ரஹஸ்ய உத்தரவும் பிறப்பித்தார் . இன்று மாலை சூரியன் அஸ்தமிப்பதற்குள்  இவளை புத்தர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று விடுங்கள் ; பின்னர் அரண்மனைக்கு வாருங்கள் என்று.

தங்க ரதத்தில் தங்கச் சிலை பவனி வந்தாள் ; நாள் முழுதும் வேலு வனக் குயில்களுடன் பாடினாள் ; மயில்களுடன் ஆடினாள் ; கிளி, மான் ஆகியவற்றைக் கொஞ்சி விளையாடினாள்.

மாலை சூரியன் மலை வாயில் விழத் துவங்கினான் ; அவளும் அரண்மனைக்குப் போக ஆயத்தமானாள் ; தோழிமார்கள் ,” தலைவி போகும்போது புத்தர் பிரானை வேடிக்கை பார்த்துக் கொண்டே போவோமே” என்றனர். அவளோ வேண்டாம் ரொம்ப (Very tired)  ‘டயர்டாக’ இருக்கு. டைரக்ட்டாக (direct) வண்டியை அரணமனைக்கு விட்டு என்றாள் .

புத்தர் உருவாக்கிய பேரழகி !

மாமன்னரின் கட்டளையை மனதிற்கொண்ட மந்திரிமார்கள் நேரடியாக தங்க ரத்தத்தை வேலு வனத்துக்கு விட்டு புத்தர் பார்வையில் நிறுத்தினர். அரண்மனை வந்துவிட்டது என்று எண்ணி ரதத்தில் இருந்து இறங்கிய உலக மஹா அழகி ஒரு அரிய காட்சியைக் கண்டாள். புத்தர் பிரானுக்கு ஒரு உலகப் பேரழகி விசிறி வீசிக்  கொண்டிருந்தாள் ; ரம்பா , மேனகா, ஊர்வசி , திலோத்தமா , ரதி ஆகியோரின் ஓவியங்களைக் கண்டிருந்த அவளுக்கு ஒரே (Big confusion) ‘கன்பியூஷன்’ ; ஓவியம் எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக உயிர்பெற்று வந்து விட்டனவோ என்று நினைத்தாள் ; தன்னுடைய  பொன் வண்ண உடலையும் நோட்டமிட்டாள் . புத்தர் பிரான் அருகில் நிற்கும் பேரழகியின் பக்கத்தில் நிற்கக்கூட  தனக்கு அருகதை இல்லை என்பதை உணர்ந்தாள் ; இப்படி எண்ண ஓட்டம் மனதில் ஆற்றுவெள்ளம் (stream of thoughts)  போல பிரவாஹித்த தருணத்தில் மேடையில் மேலும் ஒரு அற்புதம் நடந்தது ; அந்த உலக மஹா அழகி வயதாகி ‘மாமி’ (aunty) போல ஆனாள் ; கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்; அழகி ‘கிழவி’ ஆய் , ‘டமால்’ என்று கீழே விழுந்தாள் ; புத்தரின் உபன்யாசத்தை செவிமடுக்க வந்த கூட்டமோ இதைக் கொஞ்சமும் கவனியாது அவரது உபன்யாச ஆனந்தத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது . புத்தர் பிரான் தம்மபதத்தின் 347ஆவது ஸ்லோகத்தை திருவாய் மலர்ந்தருளி விளக்கிக் கொண்டிருந்தார்

“சிலந்தி வலை பின்னி அதற்குள்ளேயே அகப்பட்டுக்கொண்டு வளைய வருவது போல ஆசைவலை  பின்னி அகப்பட்டுக் கொள்கிறான் மனிதன்; எவன் ஒருவன் அந்த வலையைக் கிழித்துக்கொண்டு வருகிறானோ அவனே ஜனன- மரணச் சூழலிருந்து விடுபட்டு உயர்நிலையை அடைகிறான்” என்று உபதேசித்தார் ; மஹாராணியும் புத்தரின் பாத கமலங்களில் விழுந்து வணங்கிவிட்டு அரண்மனைக்கு விரைந்து ஏகினாள் .

மன்னனும் எதிர்கொண்டழைத்து அன்பே! வேலு வனம் எப்படி இருந்தது ? “என்று வினவினார் ; அவளோ விடையிறுத்தாள் – புத்தரையும் கண்டேன் என்றாள் . “அட, அப்படியா ? நீ அதிர்ஷ்டசாலிதான்” என்றான் .

“உம்மைவிட நான் அதிர்ஷ்ட சாலி

கண்டேன் அவர் திருப்பாதம்!

கண்டறியாதன கண்டேன்!!”.

நீவிர் இதுவரை அறியாததையும் அறிந்தேன்;  எனக்கு இந்த அரண்மனை வாழ்வு வெறுத்துவிட்டது ; நன் புத்த பிக்ஷுணியாக விரும்புகிறேன் என்றாள் ; மன்னரும் நல்ல நாள் பார்த்து அவளைத் தங்கப் பல்லக்கில் வைத்து புத்த சங்கத்துக்கு அனுப்பினான்.

மஹாராணி க்ஷேமா வாழ்ந்த பிஹார் மண் அற்புத சக்தி வாய்ந்தது ; புத்தர் பிரான் உலாவும் முன்னரே ஜனக மாமன்னனையும் ஸீதா தேவியையும் கண்ட  பிரதேசம் அது. மைத்ரேயியும் கார்க்கி வாசக்கனவியும் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச தத்துவ மகாநாட்டில் பங்கேற்று யாக்ஞ வாக்ய ரிஷியைக் கேள்வி கேட்ட நாடு அது. அப்பேற்பட்ட புனிதப் பெண்மணிகளுக்கு நிகராக க்ஷேமாவும் உயர்ந்ததால் வியப்பதற்கு ஒன்றுமிலை ; பிற் காலத்தில் புத்தமத சன்யாசினிகளின் புகழ் பாடிய தேரி கதாவில் க்ஷேமாவின் உபதேசமும் இடம் பெற்றுள்ளது. அவள் ச்ரவஸ்த்தி நகரில் முகாமிட்டிருந்த காலையில் குரு ஒருவரைக் காண தாகம் கொண்டு அலைந்த மன்னன் பிரசேனஜித் அவளிடம் வாதம் செய்து ஞானம் பெற்ற கதைகளும் உள .

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

(தம்மம் என்பது ‘தர்ம’ என்ற சொல்லின் கொச்சை வடிவம். புத்த மதத்தினரின் வேதப் புஸ்தகம் தம்மபதம் எனப்படும் ; இதில் புத்தரின் உபதேசங்கள் உள )

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: