
WRITTEN BY S NAGARAJAN
Post No.7806
Date uploaded in London – – 10 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
இராமாயணமும் மஹாபாரதமும் தரும் ஒரே செய்தி : தர்மம் வெல்லும்; அதர்மம் தோற்கும் என்பது தான்.
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்பதை கம்பன் தனது முக்கிய செய்தியாக ராமாயணத்தில் தருகிறான்.

மஹாபாரதத்திலோ முக்கிய உபதேசமான கீதையில் கண்ணன் எப்பொழுதெல்லாம் தர்மம் குறைவு படுகிறதோ, அதர்மம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் என்கிறான்.
இராமனும் கிருஷ்ணனும் அவதார பேதமே அல்லாது ஒரே பரம் பொருள் தான்!
இதை வலியுறுத்தும் வகையில் அருமையான ஒரு பாடலை பிணி வீட்டு படலத்தில் கம்பன் தருகிறான். (பாடல் 81)
அதையும் கீதை ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பாகத் தருகிறான்.
கீதையின் ஸ்லோகம் இது:
பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (அத்தியாயம் 4 ஸ்லோகம் 8)
கம்பன் தரும் பாடல் இது:
அறந்தலை நிறுத்தி வேதமருள்சுரந் தறைந்த நீதித்
திறந் தெரிந்துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (பாடல் 81)
பொருள் : தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – தனது அழகிய திருவடிகளைத் துதிப்பவர்களுடைய பிறப்பைப் போக்கி அருள்பவனாகிய அந்த மஹாவிஷ்ணு
அறம் தலை நிறுத்தி – தருமத்தை எங்கு நிலை பெறச் செய்து
வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி திறம் – வேதங்கள் மக்களிடத்தில் கருணை கூர்ந்து சொல்லிய நீதி வகைகளை
உலகம் – உலகில் வாழ்வோர்
தெரிந்து பூண – அறிந்து அதை மேற்கொண்டு அதன் படி நடக்கும்படி, அவர்களை
செந்நெறி செலுத்தி – செம்மையான வழியிலே நடத்தி
தீயோர் இறந்து உக நூறி – கொடியவர்கள் இறந்தொழியும் படி அழித்து
தக்கோர் இடர் துடைத்து – நல்லவர்களுடைய துன்பங்களைப் போக்கி
ஏக – பின்னர் தன் ஜோதிக்கு எழுந்தருளுமாறு
ஈண்டு – இங்கே, அயோத்தியில்
பிறந்தனன் – வந்து அவதரித்துள்ளான்.
கீதை கூறும் ஸ்லோகத்தை அப்படியே இங்கு காணலாம்
பரித்ராணாய சாதூனாம் – தக்கோர் துயர் துடைத்து
விநாசாய ச துஷ்க்ருதாம் – தீயோர் இறந்து உக நூறி
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய – அறம் தலை நிறுத்து வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி திறம் உலகம் தெரிந்து பூண
ஸம்பவாமி யுகே யுகே (யுகம் தோறும் அவதரிக்கிறேன்) – ஈண்டு பிறந்தனன்.

இராமன் பரம்பொருள் என்னும் பேருண்மையை இதற்கு முந்தைய பாடலாக அமைக்கிறான் கம்பன்.
மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில்லேந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (பாடல் 80)
பொருள் :
மூலமும் நடுவும் ஈறும் இல்லது – ஆரம்பமும் நடுவும் முடிவும் இல்லாததான
ஓர் மும்மைத்தாய காலமும் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ன்னும் மூன்று காலத்தின் எல்லையையும்
கணக்கும் நீத்த காரணன் – இடம், குணம், செயல் ஆகிய எல்லைகளையும் கடந்து நிற்கும் எல்லாப் பொருள்களுக்குமான காரணனான அந்த முழுமுதற் கடவுளே
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து – சூலாயுதம், சங்கு, சக்கரம் கமண்டலம் ஆகியவற்றைத் துறந்து
கை வில் ஏந்தி – கைகளில் வில்லை ஏந்தி
தொல்லை ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு – பழமையாகிய தனக்கு உரியதான ஆலிலை, தாமரை மலர், கைலாய கிரி ஆகியவற்றை விட்டு விட்டு
அயோத்தி வந்தான் – அயோத்தியை இடமாகக் கொண்டு திரு அவதாரம் செய்துள்ளான்
இந்தப் பாடலில் ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் சிவன், பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தி போலன்றி இராமன் முழுமுதற்கடவுளின் மொத்த அம்சம் எனக் கம்பன் குறிப்பிடுவது நம்மை பிரமிக்க வைக்கிறது.
சூலம் – சிவன் கையில் ஏந்துவது
திகிரியும் சங்கும் – விஷ்ணு கையில் ஏந்துவது
கரகம் – ஜலபாத்திரம் அல்லது குண்டிகை பிரமன் ஏந்துவது.
ஆலிலை – திருமால் பிரளய காலத்தில் பள்ளி கொள்ளுமிடம்
திருமாலின் நாபித் தாமரை மலர் – பிரமன் தோன்றி வாழும் இடம்
வெள்ளிப் பொருப்பு – சிவன் உறையும் கைலாயம்
இவற்றை விட்டு அயோத்தி வந்துள்ளான் முழுமுதற் கடவுள் என கம்பன் இப்பாடலில் உணர்த்துகிறான் அநுமன் வாயிலாக.
யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.
பிணி வீட்டு படலத்தில் வரும் பாடல்கள் மிக அருமையானவை. ஓர்ந்து படிப்போம்:
Time and Maths – காலமும் கணக்கும் நீத்த காரணனைப் பணிந்து உண்மை உணர்வோம்; உயர்வோம்!




***