சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்! (Post No.7825)

SOCRATES

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7825

Date uploaded in London – – 14 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!

ச.நாகராஜன்

ஒரு சமயம் நாரதர், மஹரிஷி சனத்குமாரரை தரிசித்து, தனக்கு உபதேசித்து அருளுமாறு வேண்டினார்.

சனத்குமாரர் நாரதரைப் பார்த்துக் கேட்டார் ; உனக்கு என்ன தெரியும். அதைச் சொல். உனக்குத் தெரியாததை நான் சொல்கிறேன்.

நாரதர் : “ஐயனே! எனக்கு ரிக் வேதம் தெரியும்.

யஜுர் வேதம் தெரியும்.

சாம வேதம் தெரியும்.

அதர்வண வேதம் தெரியும்.

ஐந்தாவது வேதமான இதிஹாஸ, புராணம் தெரியும்.

இலக்கணம், சடங்குகள், கணிதம், ஜோதிடம், புவியியல், தர்க்கம், பொருளாதாரம், இயற்பியல், அதீத உளவியல், விலங்கியல், அரசியல், வானியல், இயந்திரவியல், நுண்கலைகள் ஆகிய அனைத்தும் தெரியும்.

ஆனால் இவை எல்லாம் சாதாரண அறிவு தான். எனக்கு ஆத்மாவைப் பற்றித் தெரியாது. எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ அவனே துக்கத்தைக் கடந்து செல்கிறான் என மகான்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். நான் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். தயவு செய்து அதையும் கடந்து செல்ல எனக்கு உதவுங்கள்.”

DAKSHINAMURTHY AND SANATKUMARAR

சனத்குமாரர் : நாரதா! நீ அறிந்ததெல்லாம் நாம மாத்திரமே. அதையும் தாண்டி இருப்பது வாக்கு. அதையும் தாண்டி இருப்பது மனம். அதையும் தாண்டி இருப்பது பிரக்ஞை. அதையும் தாண்டி இருப்பது தியானம். அதையும் தாண்டி இருப்பது சக்தி. அதையும் தாண்டி இருப்பது புரிந்து கொள்ளல். அதையும் தாண்டி இருப்பது அன்னம். அதையும் தாண்டி இருப்பது நீர். அதையும் தாண்டி இருப்பது ஆகாசம். அதையும் தாண்டி இருப்பது ஒளி. அதையும் தாண்டி இருப்பது ஆத்மா. அதையும் தாண்டி இருப்பது எல்லையற்ற தன்மை. அதைத் தான் நீ அறிய வேண்டும் என்றார்.

பின் எல்லையற்ற ஒன்றை, பிரம்மத்தைப் பற்றி அவர் விளக்கலானார்.

மீக நீண்ட ஒரு சம்வாதம் – அர்த்தமுள்ள உரையாடல் இதையெல்லாம் விளக்கியது.

சாந்தோக்ய உபநிடதம் ஏழாம் பாகத்தில் இதைக் காணலாம்.

உன்னை நீ அறிந்து கொள் என்பது தான் உபதேச சாரம்!

*

யூதிடெமஸ் (Euthydemus) சாக்ரடீஸை (Socrates) சந்தித்தார்.

சாக்ரடீஸ் : சொல், டெல்பிக்கு என்றாவது நீ சென்றிருக்கிறாயா?

யூதிடெமஸ் : நிச்சயமாக! இரண்டு முறை சென்றிருக்கிறேன்.

சாக்ரடீஸ் : அங்கு ஆலயத்தின் ஏதோ ஒரு இடத்தில், “உன்னை நீ அறிவாய் என்று எழுதி இருப்பதைப் பார்த்திருக்கிறாயா?

யூதிடெமஸ் : “ ஆம், பார்த்திருக்கிறேன்.

சாக்ரடீஸ் : அதற்கு ஒரு மதிப்பையும் நீ கொடுக்கவில்லையா அல்லது அதற்கு ஒரு மதிப்பைக் கொடுத்து நீ யார், எங்கு இருக்கிறாய் என்று அறிந்து கொண்டாயா?

யூதிடெமஸ் : உண்மையைச் சொல்வது என்றால் நான் முயற்சியே எடுக்கவில்லை. அது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனக்கு நான் யார் என்பது தெரியவில்லை என்றால் உலகில் எதைத் தான் நான் அறிந்திருக்கப் போகிறேன்.

உன்னை நீ அறிவாய் என்பது தான் சாக்ரடீஸின் முதல் கட்டளை!

*

ரமண மஹரிஷி தன்னை நாடி வந்த அனைவருக்கும் உபதேசித்த அரும் மந்திரம் நான் யார் என்பதை உணர் என்பதே.

‘நானார்? என்ற ஞான விசாரத்தைச் சொல்லும் நூலை அவர் தனது 21ஆம் வயதிலேயே எழுதி அருளினார்.

அதன் ஆரம்பம் இது தான்:

சகல ஜீவர்களும் துக்கம் என்பது இன்றி எப்போதும் சுகமாய் இருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன்னிடத்திலேயே பரம பிரியம் இருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமானதாலும், மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் தன் சுபாவமான அச் சுகத்தை அடையத் தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு நானார்? என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

இப்படி ஆரம்பிக்கும் சிறு நூல் அழகுற பல விளக்கங்களையும் அளிக்கிறது.

ஒரு உதாரணம் :-

“குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை ஆராய்வதால் எப்படிப் பயன் இல்லையோ அப்படியே தன்னை அறிய வேண்டிய ஒருவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்கள் அனைத்தையும் சேர்த்துத் தள்ளி விடாமல் அவை இத்தனை என்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.

நூலின் இறுதியில் பகவான் அருள்கிறார்:

“ தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.

*

மஹரிஷி சனத்குமாரரிரிலிருந்து சாக்ரடீஸ் வரை, பகவான் ரமண மஹரிஷி ஈறாக அனைவரும் சொல்லும் ஒரே வழி நான் யார் என்பதை அறி என்பதே!

***

tags – சனத்குமாரர், சாக்ரடீஸ், ரமணர், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: