
Post No.7873
Date uploaded in London – – 24 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது : ஸ்வாமிஜி!
ச.நாகராஜன்
ஜோஸபைன் மக்லியாட் (Josephine MacLeod) ஸ்வாமி விவேகானந்தரின் அணுக்க சிஷ்யைகளுள் ஒருவர்.
1902ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்.

ஒரு நாள் ஸ்வாமி விவேகானந்தர் அவரைப் பார்த்துச் சொன்னார்;” எனக்கென்று இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது; ஒரு பென்னி கூடக் கிடையாது. எனக்குக் கொடுத்த அனைத்தையும் நான் கொடுத்து விட்டேன்.”
ஜோஸபைன் ஸ்வாமிஜியைப் பார்த்துச் சொன்னார் ;” ஸ்வாமி! நீங்கள் உயிருடன் இருக்கும் வரை மாதம் ஒன்றுக்கு 50 டாலர் நான் தருகிறேன்”.
ஒரு நிமிடம் யோசித்த ஸ்வாமிஜி கேட்டார்: “அதில் நான் வாழ முடியுமா?”
ஜோஸபைன் “ “ஓ! நிச்சயமாக!! ஆனால் தாராளமாகச் செலவழிக்க முடியாது” அவர் ஸ்வாமிஜிக்கு உடனே 200 டாலர் தந்தார். ஆனால் நான்கு மாதத்திற்கான அந்தத் தொகை முடியும் முன்னரே ஜூலை மாதம் 4ஆம் தேதி ஸ்வாமிஜி சமாதி எய்தினார்.
பேலூர் மடத்தில் ஒரு நாள் சகோதரி நிவேதிதை விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
மடத்தில் இருந்த ஸ்வாமிஜியின் படுக்கை அறையில் ஜன்னலுக்கு அருகில் ஜோஸபைன் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்வாமிஜி ஜோஸபைனைப் பார்த்துச் சொன்னார்: “நான் நாற்பது வயதைப் பார்க்க மாட்டேன்.” (I shall never see forty)
அப்போது அவருக்கு வயது 39.
ஜோஸபைன் கூறினார்:” ஆனால், ஸ்வாமிஜி, புத்தர் தனது பெரும் பணியை 40இல் ஆரம்பித்து 80 முடிய இருந்து தானே செய்தார்.”
ஸ்வாமிஜி பதில் கூறினார் : “எனது செய்தியை நான் கூறி விட்டேன். நான் போக வேண்டும்.”
“ஏன் போக வேண்டும்?”
“பெரிய மரத்தின் நிழல் சிறிய மரங்களை வளர விடாது. அவர்களுக்கு வழி விட நான் போக வேண்டும்.” (The shadow of a big tree will not let the smaller trees grow up, I must go to make room.)
இதன் பின்னர் ஜோஸபைன் இமயமலை சென்றார். பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார்.
ஜூலை 4ஆம் தேதி அவருக்கு ஸ்வாமிஜி நிர்வாண நிலையை அடைந்து விட்டதாக அவருக்குச் செய்தி பறந்தது.
அவர் திக்பிரமை பிடித்து பிரமித்து நின்று விட்டார். அவர் மனதில் ஏற்பட்ட ரணம் ஆறவில்லை.
மேட்டர்லிங்க் எழுதிய ஒரு வரியைப் படித்த பின்னர் தான் அவருக்குச் சற்றுத் தெளிவு ஏற்பட்டது : “ எந்த ஒருவராலும் நீங்கள் பெரிதும் செல்வாக்குக்கு உட்பட்டவராக இருந்தீர்கள் என்றால், அதை உங்கள் வாழ்க்கை மூலம் நிரூபியுங்கள்; அழுது அல்ல.”
உடனே ஜோஸபைன் அழுவதை நிறுத்தி விட்டார். 14 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு அவர் வந்தார்.
முழு இந்தியாவும் ஸ்வாமிஜியின் செய்தியால் நிரம்பி வழிந்தது. 6 மடாலயங்கள், ஆயிரக்கணக்கான மையங்கள், நூற்றுக் கணக்கான சங்கங்கள்!
அங்கெல்லாம் அவரை அழைத்தனர்.
ஏனெனில் ஜோஸபைன் ஸ்வாமிஜியை தன் வாக்கில் உயிருடன் வைத்திருந்தார். அவரைப் பற்றிப் பேசினார்; அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்.

ஸ்வாமிஜியின் செல்வாக்குக்கு உட்பட்ட அவர் இறுதி வரை ஸ்வாமிஜியின் சொல்படி வாழ்ந்து காட்டினார்!
tags — ஜோஸபைன் மக்லியாட், Josephine Mac Leod , ஸ்வாமி விவேகானந்தர்
xxxxxx