
WRITTEN BY R. NANJAPPA
Post No.7929
Date uploaded in London – – – 6 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 28 – முகேஷின் இரண்டு முத்துக்கள்!
R. Nanjappa
முகேஷின் இரண்டு முத்துக்கள்!

பொதுவாக பெரிய ஹிட் பாடல்கள் பெரிய ஸ்டார் நடிகர் மீது படமாக்கப் பட்டதாகவே இருக்கும். இப்படி அமையாத இடத்தில் பல சிறந்த பாட்டுக்களும் உரிய மதிப்பைப் பெறுவதில்லை. இசைஞர்களும் பெரிய நட்சத்திர நடிகர் இல்லாத படத்திற்கு எவ்வளவுதான் நன்றாக இசையமைத்தாலும் உரிய கவுரவம் பெறுவதில்லை. இசைஞர்களுக்குப் பின்னால் பெரிய தயாரிப்பாளர் இருக்கவேண்டும். இல்லையெனில் அவர்களும் முதல் வரிசையில் வைத்து எண்ணப்படமாட்டார்கள். இவ்வளவு தடைகளையும் மீறி சில பாடல்கள் அழியா வரம் பெற்று நிற்கின்றன இவை ICONIC. அந்தஸ்தைப் பெறுகின்றன. அப்படிப்பட்ட இரு பாடல்களை இன்று பார்க்கலாம். இரண்டும் முகேஷ் பாடியவை. நல்ல ராகங்களில் அமைந்தவை.
iconic
adjective relating to or characteristic of a famous person or thing that represents something of importance: AMERICAN DICTIONARY.
சாரங்கா தேரீ யாத் மே

सारंगा तेरी याद में नैन हुए बेचैन
मधुर तुम्हारे मिलन बिना
दिन कटते नहीं रैन, हो
सारंगा तेरी याद में..
ஸாரங்கா தேரீ யாத் மே நைன் ஹுவே பேசைன்
மதுர் தும்ஹாரே மிலன் பினா.
தின் கட் தே நி ரைன், ஹோ
சாரங்கா தேரீ யாத் மே
ஸாரங்கா, உன் நினைவில் கண்கள் நிம்மதியிழந்து விட்டன
உன்னுடைய இனிய உருவம் அருகில் இல்லாமல்
பகலோ இரவோ கழிவது கடினமாகிவிட்டது
वो अम्बुवा का झूलना, वो पीपल की छाँव
घूँघट में जब चाँद था, मेहंदी लगी थी पांव
आज उजड़ के रह गया, वो सपनों का गाँव
सारंगा तेरी याद में…
வோ அம்புவாகா ஜூல்னா, ஓ பீபல் கீ சாவ்(ன்)
கூங்கட் மே ஜப் சாந்த் தா, மேஹந்தீ லகீ தீ பாவ்(ன்)
ஆஜ் உஜட் கே ரஹ் கயா, ஓ ஸப்னோ(ன்) கா காவ்(ன்)
ஸாரங்கா தேரீ யாத் மே..
அந்த மாமரத்தில் ஊஞ்சலாடியது,
அந்த அரச மரத்தின் நிழல்,
சேலையின் பகுதி மறைத்திருந்த அந்த நிலவு போன்ற முகம்,
மருதாணி பூசியிருந்த பாதங்கள்–
இவையெல்லாம் இன்று மறைந்துவிட்டன–
அந்த கிராமம் கனவாகிவிட்டது!
ஸாரங்கா, உன் நினைவில்……
संग तुम्हारे दो घड़ी, बीत गये जो पल
जल भरके मेरे नैन में, आज हुए ओझल
सुख लेके दुःख दे गयीं, दो अखियाँ चंचल
सारंगा तेरी याद में…
ஸங்க் தும்ஹாரே தோ கடீ, பீத் கயே ஜோ பல்
ஜல் பர் கே மேரே நைன் மே, ஆஜ் ஹுயீ ஓஜல்,
சுக் லேகே துக் தே கயீ, தோ அகியா(ன்) சலத்
ஸாரங்கா தேரீ யாத் மே….
உன்னுடன் கழித்த இரண்டு வினாடிகள்– அவை சென்றுவிட்டன
கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது– பார்வை மறைக்கிறது!
உன்னுடைய குறுகுறுத்த இரு கண்கள்– சுகத்தை எடுத்துக்கொண்டு
துக்கத்தைத் தந்து சென்றன
ஸாரங்கா உன் நினைவில்…..
Song: Saranga teri yaad mein Film: Saranga 1961 Lyrics: Bharat Vyas
Music: Sardar Malik Singer: Mukesh Raga: Yaman Kalyan

இன்று சாரங்கா படம் யாருக்கும் தெரியாது! ஸர்தார் மாலிக்கும் யாருக்கும் தெரியாது-அனு மாலிக்கின் தந்தை என்றால் தெரியுமோ என்னவோ! இந்தப் பாட்டு ஹிந்தி திரை இசையில் ஈடுபாடுள்ள அனைவருக்கும் தெரியும்!
இந்தப் பாட்டு சுதேஷ் குமார் என்ற சாதாரண நடிகரின் மேல் படமாக்கப்பட்டது! படமும் B grade தான். ஆனால் பாட்டு பிரபலமாகி இன்றளவும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகிறது.
இசையமைத்த ஸர்தார் மாலிக் உஸ்தான் அலாவுதீன் கானிடம் முறையாக சங்கீதம் கற்றவர். உதய் சங்கரிடம் நடனப் பயிற்சி பெற்றவர் {அப்போது இவருடன் அங்கு படித்தவர் குரு தத்!]. இந்தப் பாட்டு அவரைக் கவர்ந்தது முகேஷை பாட வைப்பது என்று தீர்மானித்தார். பாடலை முகேஷிடம் காட்ட, அவருக்கும் பிடித்துவிட்டது..
ஆனால் துறையில் முகேஷ் ஸ்வரத்தில் நின்று பாடமாட்டார். பேசுர் (பேசுர் – பே – சுர் – சுரம் இல்லாமல் இருத்தல் அதாவது சுரத்தை விட்டு நழுவுதல் ) என்று பேச்சு இருந்தது! அவரை ரிஹர்சல் வாங்குவதே கடினம் என்பார்கள்.
யமன் கல்யாண் ராகத்தில் இப்பாடலை அமைத்த ஸர்தார் மாலிக் நேரடியாகவே முகேஷிடம் சொல்லிவிட்டார்: “இதோ பார், உன்னைப்பற்றி இப்படிப் பேச்சு இருக்கிறது. நீ இந்தப் பாடலைப் பாட வேண்டுமானால் அதிகம் ரிஹர்சலுக்கு வரவேண்டும்! ” முகேஷும் வரிந்து கட்டிக்கொண்டு தயாரானார். அந்த வெயில் காலத்தில் ஜுஹுவில் இருந்த ஸர்தார் மாலிக் வீட்டிற்கு தினமும் செல்வார். இருவரும் அறையில் ஃபேனை அணைத்து விட்டு அமர்ந்து விடுவார்கள். ரிஹர்ஸல் முடிந்து எழுந்து வரும்போது இருவரும் வியர்வையில் தெப்பமாக நனைந்திருப்பார்கள்.. [இந்தத் தகவல் ஸர்தார் மகன் அனு மாலிக்கே சொன்னது-அப்போது சிறுவன், வீட்டில் கவனித்தது.] முகேஷுக்கு ஒவ்வொரு ஸ்வரமும் அத்துபடியாகி விட்டது. பாடல் பதிவாகி, ரிலீசானவுடன் பெரிய ஹிட் ஆயிற்று!
இதில் இன்னொரு விசேஷம்- இந்தப் பாடலின் சில வரிகளை முஹம்மது ரஃபியும் படத்தில் பாடியிருக்கிறார். பின்னணி எதுவும் இல்லாமல் இனிய குரல் மட்டும் ஒலிக்கும்!
யமன் கல்யாண் ராகத்தில் அமைந்த இந்தப் பாட்டு அந்த ராகத்தில் அமைந்த பாடல்களிலேயே முதல் இடத்தைப் பெற்றுவிட்டது! 60 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மக்கள் மறக்காத பாடல்! அதன் பின் எத்தனை கடின உழைப்பு!
ஆனால் மக்கள் ஸர்தார் மாலிக்கை மறந்துவிட்டார்கள்! 1965க்குப் பிறகு இவருக்கு வேலையில்லை! தன்மானம் மிக்க இவர் யாரையும் தேடிப் போகவில்லை. மனமுடைந்த அவர் தன்னிடமிருந்த எல்லா ரெகார்டுகளையும் கடலில் வீசி எறிந்துவிட்டார்!
பாடல் எழுதிய கவி பரத் வ்யாஸ் அதிக உருது கலப்பில்லாமல் ஹிந்தியிலேயே எழுதுவார். இந்தப் பாடலில் கிராமியச் சொற்களையே பயன்படுத்தி இருக்கிறார்.
இந்தப் பாடல் ஸர்தார் மாலிக், பரத் வ்யாஸ். முகேஷ் ஆகிய மூவருக்கும் ஒரு மைல்கல்! முகேஷ் பாடிய டாப் 10 பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்!
நான்கு நிமிஷம் வரும் இந்தப் பாடலுக்குப்பின் எத்தனை கடின உழைப்பு இருக்கிறது! அதுதான் அப் பொற்காலப் பாடல்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன! இப்பெரியவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதுதானே!
“The heights by great men reached and kept were not attained by sudden flight, but they while their companions slept, were toiling upward in the night.”
-Henry Wadsworth Longfellow
இன்னொரு பாடல்

ஆ லௌட் கே ஆஜா மேரே மீத்
आ लौट के आजा मेरे मीत
तुझे मेरे गीत बुलाते हैं
मेरा सूना पड़ा रे संगीत
तुझे मेरे गीत बुलाते हैं
ஆ, லௌட் கே ஆஜா மேரே மீத்,
துஜே மேரே கீத் புலாதே ஹை
மேரா ஸூனா படாரே ஸங்கீத்
துஜே மேரே கீத் புலாதே ஹை
அன்பே! திரும்பி வா!
உன்னை என் கீதம் அழைக்கிறது
(நீ இல்லாமல்) என் சங்கீதம் ஒன்றுமில்லாமல் இருக்கிறது
உன்னை என் கீதம் அழைக்கிறது!
बरसे गगन मेरे, बरसे नयन
देखो तरसे है मन, अब तो आजा
शीतल पवन ये लगाये अगन
हो सजन अब तो मुखड़ा दिखा जा
तूने भली रे निभायी प्रीत
तुझे मेरे गीत..
பர்ஸே.ககன் மேரே பர்ஸே நயன்
தேகோ தர்ஸே ஹை மன் அப் தோ ஆஜா
ஸீதல் பவன் யே லகாயே அகன்
ஹோ ஸஜன் அப் தோ முக்டா திகா ஜா
தூனே பலி ரே நிபாயீ ப்ரீத்
துஜே மேரே கீத் புலாதீ ஹை
வானிலிருந்து மழை கொட்டுகிறது, என் கண்களும் நீரைப் பொழிகின்றன
மனம் தடுமாறுகிறது, பார்! இப்பொழுதாவது வந்துவிடு
வீசும் குளிர்ந்த காற்று என்னை எரிக்கிறது
அன்பே! இப்பொழுதாவது உன் முகத்தைக் காட்டு
இது தானா நீ உன் வாக்கைக் காப்பாற்றும் லட்சணம்!
உன்னை என் கீதம் அழைக்கிறது!
इक पल है हँसना, इक पल है रोना
कैसा है जीवन का खेला
इक पल है मिलना, इक पल बिछुड़ना
दुनिया है दो दिन का मेला
ये घडी न जाए बीत
तुझे मेरे गीत…
இக் பல் ஹை ஹ(ன்)ஸ்னா இக் பல் ஹை ரோனா
கைஸா ஹை ஜீவன் கா கேலா
இக் பல் ஹை மில்னா, இக் பல் பிசட்னா
துனியா ஹை தோ தின் கா மேலா
யே கடீ ந ஜாயே பீத்
துஜே மேரே கீத் புலா தே ஹை
ஒரு கணம் சிரிப்பு, ஒரு கணம் அழுகை–
எப்படி இருக்கிறது பார் வாழ்க்கை என்னும் விளையாட்டு
ஒரு கணம் உறவு, ஒரு கணம் பிரிவு–
இந்த உலகம் (கூடிப் பிரியும்) இரண்டு நாள் சந்தைக்கடை போன்றது
இந்தப் பொழுது வீணே கழியவேண்டாம்
உன்னை என் கீதம் அழைக்கிறது
Song: Aa laut ke aaja mere meet Film: Rani Roopmati 1957
Lyrics: Bharat Vyas
Music: S.N. Tripathi Raag: Madhmad Sarang
இத்தகைய பாட்டுக்கள் மனதை நிரப்பி, வாயை அடைத்து விடுகின்றன-ஏதும் பேசத் தோன்றுவதில்லை!
பரத் வ்யாஸின் அரிய கவிதைக்கேற்ற உயர்ந்த இசை! முகேஷின் குரலில் இப்பாடலின் பாவம் இயல்பாகவே – நன்றாக வெளிப்படுகிறது. அத்துடன் மதுமத் ஸாரங்க் ராகத்தின் பாவமும் இசைந்து ஒலிக்கிறது. இது மாலை வேளையில் பாடவேண்டிய ராகம். எத்தனை அருமையான மெட்டு!
பரத் வ்யாஸ் வழக்கம்போல் எளிய ஹிந்தியில் கவிதை படைத்துவிட்டார். கடைசி பத்தியில் தத்துவத்திற்குத் .தாவுகிறார். வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர்ந்தால் தான் காலத்தின் அருமை புரியும். இதை நம் கவிகள் பலவிதங்களில் சொல்கிறார்கள்.
எஸ்.என். திரிபாதி இசையுலகில் ஒரு ஜாம்பவான். பல படங்களில் தரமான இசை வழங்கியிருக்கிறார்.
முகேஷ் தன் சாஸ்திரீய இசைத் திறமையை இப்பாடல் வாயிலாக நிலை நாட்டியிருக்கிறார். காலத்தால் அழியாத பாடல். முகேஷின் தலையாய 10 பாடல்களில் நிச்சயம் இதுவும் இடம்பெறும்.
இந்தப் பாடல் லதா மங்கேஷ்கர் குரலிலும் படத்தில் வருகிறது, ஆனால் எடுபடவில்லை!
மதுமதி 1958 படத்தில் வரும் “சட் கயோ பாபி பிச்சுவா” என்ற பாடலும் [இசை: சலீல் சௌதுரி; பாடியது: லதா-மன்னா டே] இந்த ராகத்தில் அமைந்தது, வேறு மெட்டு!
பாடல்கள் ராகத்தில் அமைவது பெரிதல்ல- அவை நல்ல கவிதையாகவும் இருந்து, ஜனரஞ்சகமாகவும் அமைவது அவ்வளவு எளிதல்ல. இவ்விரண்டு பாடல்களும் முகேஷுக்குக் கிடைத்த நன்முத்துக்கள்!
tags — ஹிந்தி படப் பாடல்கள் – 28 , முகேஷ்
***