இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி – (Post No.7943)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7943

Date uploaded in London – – – 9 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வில்லிப்புத்தூரார், கண்ணதாசன்?!

இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி – ஒற்றைமணி மாலை அணி!

ச.நாகராஜன்

வியாஸர் இயற்றிய மகாபாரதத்தைத் தமிழில் தந்தவர் வில்லிப்புத்தூரார்.

அழகிய நடையில் இனிய சந்தத்தில் ஏராளமான அணிகளுடன் உள்ள வில்லி பாரதம் படிப்போரைப் பரவசப்படுத்தும் அற்புத காவியம்.

சுமார் 4337 பாடல்கள் கொண்ட வில்லி பாரதத்தில் ஒற்றைமணி மாலை அணி என்ற அபூர்வ அணி, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அடுத்தடுத்து வரும் இரண்டு பாடல்களில் உள்ளன.

ஒற்றை மணி மாலை அணி என்றால் என்ன?

ஒரு செய்யுளில் முன்னிரண்டு அடிகள், மூன்றாம் அடி, நான்காம் அடி என்ற நான்கு அடிகளிலும் தனித் தனிப் பொருள்களுக்குத் தொடர்ச்சியைக் கூறுவது ஒற்றை மணி மாலை அணி எனப்படும்.

சூது போர்ச் சருக்கத்தில் 53 மற்றும் 54ஆம் பாடல்களில் வில்லிப்புத்தூரார் இந்த அணியைச் சிறப்புறக் கையாள்கிறார்.

பாடல்களைப் பார்ப்போம்.

இந்திரப்ரஸ்த நகரின் வளத்தைக் கூறும் செய்யுள்கள் இவை.

ஊடு எலாம் நறும் பொய்கை நீள் வாவியின் உடம்பு எலாம் மலர் பூவின் தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல்     

                                    (செய்யுள் 53 – சூது போர்ச் சருக்கம்)

அருகு எலாம் மணி மண்டபம் அவிர் ஒளி அரங்கு எலாம் சிலம்பு ஓசை குருகு எலாம் வளர் பழனம் புள் எலாம் கூடல் இன்புற ஊடல் முருகு எலாம் கமழ் துறை எலாம் தரளம் வெண் முத்து எலாம் நிலா வெள்ளம் பருகல் ஆம் புனல் நதி எலாம் நீர் எலாம் பங்கய பசும் கானம்

(செய்யுள் 54 – சூது போர்ச் சருக்கம்)

பாடலின் பொருள் :

ஊடு எலாம் – இந்திரப்ரஸ்த நகரின் உள்ளே உள்ள இடங்களிலெல்லாம்

நறும் பொய்கை – நன்னீரை உடைய குளங்களும்

நீள் வாவியின் உடம்பு எலாம் – பெரிய அந்தக் குளங்களில் இடம் முழுவதிலும்

மலர் – தாமரை, அல்லி, ஆம்பல் ஆகிய மலர்களும்

பூவின் தோடு எலாம் – அந்தப் பூக்களின் இதழ்களிலெல்லாம்

எழு சுரும்பு இனம் – மேலெழுந்து மொய்க்கின்ற வண்டுகளின் கூட்டங்களும்

மதுகர சொல் எலாம் –  அந்த வண்டுகளின் வாயொலிகளில் எல்லாம்

செழும் கீதம் – சிறப்பான இசைப்பாட்டுக்களும் (எழுகின்றன)

பாடு எலாம் – அந்தக் குளங்களின் பக்கங்களில் எல்லாம்

இளம் சோலை – இளம் சோலைகளும்

மென் பொங்கரின் பணை எலாம் – மென்மையான அச்சோலைகளில் உள்ள மரக்கிளைகளில் எல்லாம்

குயில் ஓசை – குயிலினங்களில் குரல்களும்

நாடு எலாம் – அந்த இந்திரப்ரஸ்த நாடு முழுவதிலும்

நெடும் புனல் வயல் – மிகுதியான நீர் பாய்ந்த வயல்களும்

நீண்ட கழனியின் நடுவு எலாம் – அக்கழனிகளின் நடு இடங்களில் எல்லாம்

விளை செந்நெல்  – விளைகின்ற செந்நெல் பயிர்களும் உள்ளன.

குளம், குளங்களில் மலர்கள், மலர்களில் இதழ்கள், இதழ்களில் வண்டுக் கூட்டம், வண்டுக்களின் வாய் ஒலி, அதில் எழும் இசைப்பாட்டு, அருகில் சோலைகள், சோலைகளின் மரங்கள், அதன் கிளைகள், கிளைகளில் குயில்கள், குயில்களின் கீதம், என்றும், இப்படி நகர் முழுவதும் பரவியுள்ள வயல்கள், வயல்களின் நடுப்பகுதி, அங்கு விளைந்திருக்கும் செந்நெல் பயிர்கள் என அழகுற ஒரு மாலை போல தொடுத்திருக்கும் பான்மை தான் ஒற்றைமணி மாலை அணியாகும்.

அடுத்த பாடலின் பொருள் :-

அருகு எலாம் மணி மண்டபம் – அந்த நகரத்தின் ஒன்றுக்கு ஒன்று அருகில் உள்ள இடங்கள் தோறும் அணி மண்டம் அல்லது மணி மண்டபங்கள் உள்ளன.

அவிர் ஒளி அரங்கு எலாம் – விளங்குகின்ற ஒளி உடைய அரங்கம் முழுவதும் (Auditorium Lighting)

சிலம்பு ஓசை– நடனமணிகள் அழகுற ஆடுவதால் எழும் சிலம்பு ஓசையும்

வளர் பழனம் குருகு எலாம் – கழனிகளில் எல்லாம் செழுமையுற வாழ்கின்ற நீர் வாழ் பறவை இனங்களும்

புள் எலாம் – அந்தப் பறவை இன இடங்களில் எல்லாம்

கூடல் இன்புற ஊடல் – ஆண் பெண் பறவைகள் கூடிப் புணர்ச்சி கொள்ள அதற்கிடையில் சிறு சிறு ஊடல்களும் எழ,

முருகு எலாம் கமழ் துறை எலாம் – பலவகை நறு மணம் கமழும் நீர்த்துறைகளில் எல்லாம்

தரளம் – முத்துக்களும்

வெண் முத்து எலாம் – வெண்ணிறமான அந்த முத்துக்களில் எல்லாம்

நிலா வெள்ளம் – சந்திரகாந்தி போன்ற நிலா வெள்ளமும்

நதி எலாம் பருகல் ஆம் புனல் – அந்நகரத்தைச் சார்ந்து ஓடுகின்ற நதிகளில் எல்லாம் குடிக்கக் கூடிய தெள்ளிய நீரும்

நீர் எலாம் பங்கய பசும் கானம் – அந்த நீரிலெல்லாம் பசுமை நிறமான தாமரைக் கொடிகளின் தொகுதியும் நிரம்பி உள்ளன.

அடடா, என்ன அடுக்கு வர்ணனை!

மணி மண்டபங்கள், அதில் ஒளி வெள்ளம், அந்த ஆடரங்கில் ஆடும் நடனமணிகள், அவர்களின் நாட்டிய அசைவில் கால் சிலம்பிலிருந்து எழும் சிலம்போசை, அருகில் கழனிகள், அங்கு பறவையினங்கள், அவற்றிடையே கூடல், ஊடல், நீர்த்துறைகளில் முத்துக்கள், முத்துக்களின் ஒளி, அது சந்திரகாந்தக்கல் போல ஒளி வெள்ளமாகப் பொழிவது, அருகில் ஓடுகின்ற தெள்ளிய நீர், அதுவோ பருகக் கூடிய அளவு சுத்தமான நீர், அந்த நீரில் பசுமையான தாமரைக் கொடிகள்…

இப்படிப்பட்ட நகரில் விதுரன் புகுந்து சென்றான். அரச தெருக்களில் எல்லாம் துந்துபி வாத்தியங்கள் என்ன, வரவேற்பு என்ன … என்று இப்படி அடுக்கிக் கொண்டே செல்கிறார் வில்லிப் புத்தூரார்.

இது தான் கவி மழை.

பாரதக் கவி மழையில் நாம் அணியாய்க் காண்பது பல்வேறு அணிகளை!

அந்த அணிகளில் அபூர்வமான அணி ஒற்றைமணி மாலை அணி!

அதை இரண்டே இரண்டு பாடல்களில் ஒரே இடத்தில் மட்டும் கையாளுகிறார் வில்லிப்புத்தூரார் தக்க முறையில்,

வியக்கிறோம்! வில்லிப்புத்தூராரைப் போற்றுகிறோம்!!

வாழ்க தமிழ்! வெல்க பாரதம்!!

****

அது சரி, இது ஒரு புறம் இருக்கட்டும்,

1961ஆம் ஆண்டு வெளி வந்த படம் தாயில்லா பிள்ளை.

கே.வி.மஹாதேவன் இசை அமைத்த படம்.

கண்ணதாசன் எழுதியுள்ள பாடல் இதோ: (பாடல் நேரம் 3.25 நிமிடம்)

சின்ன சின்ன ஊரணியாம்

தேன் மணக்கும் சோலைகளாம்

ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம்

ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம் (சின்ன)

மாமரத்துக் கிளைதனிலே மாடப்புறா கூடுகளாம்

கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்

மாமரத்துக் கிளைதனிலே மாடப்புறா கூடுகளாம்

கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம் (சின்ன)

சிறகு முளைக்குமுன்னே திசையறிந்து நடக்கு முன்னே

பறவையின் குஞ்சு ஒன்று பறந்ததையா கூடு விட்டு

கூடு விட்டு போன பிள்ளை குடி இருக்கும் இடம் தேடி

கூடு விட்டு போன பிள்ளை குடி இருக்கும் இடம் தேடி

ஓடி வந்த தாய்ப்பறவை ஊமையாகி நின்றதையா

தன் பிள்ளை என்று சொல்ல தாயாலும் முடியவில்லை

தாயென்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை

தன் பிள்ளை என்று சொல்ல தாயாலும் முடியவில்லை

தாயென்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை

உள்ளத்தில் இருக்குதையா உண்மை சொல்ல மயங்குதையா

பொல்லாத  தடையை எண்ணி புலம்புதையா கலங்குதையா

பொல்லாத  தடையை எண்ணி புலம்புதையா கலங்குதையா (சின்ன)

கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடலில் வருகிறதே, அது என்ன அணி?!

***

இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சுவையான சம்பவமும் உண்டு. அதை எனது ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் நூலில் விரிவாக எழுதி இருக்கிறேன். சுருக்கம் இதோ:

ரசிகர் ஒருவர், “மாமரத்துக் கிளைதனில் மாடப்புறா எப்படிக் கூடு கட்டும்; மாடத்திலே கூடு கட்டுவதனால் தானே அதற்கு மாடப்புறா என்று பெயர் என்று ஒரு கேள்வியை எழுப்பி விட்டார்.

கவிஞர் திகைத்தார்.

ஆனால் இன்னொரு ரசிகர் இதற்கு அருமையான விளக்கத்தைத் தந்தார்.

“மாடத்திலே தான் மாடப்புறா கூடு கட்டும் என்பது உண்மை தான்; ஆனால் இந்தக் கதையில் பிள்ளை இருக்கும் கதையமைப்பைப் பாருங்கள்; அதற்காகத் தான், வேறு இடத்தில் இருக்கும் பிள்ளையை ‘ மாமரத்துக் கிளைதனில் மாடப்புறா கூடு என்று கவிஞர் பூடகமாகச் சொல்லி இருக்கிறார் என்றார் அவர்.

கவிஞர் ஒத்துக் கொண்டார். எல்லா ரசிகர்களும் மனம்  மகிழ்ந்தனர்!

tags – அபூர்வ அணி, ஒற்றைமணி,வில்லிப்புத்தூரார், கண்ணதாசன்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: