வெற்றிகரமான வாழ்க்கை அமைய ஒரு உத்தி! (Post No.7989)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7989

Date uploaded in London – – – 17 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மாலைமலர் 10-5-2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

வெற்றிகரமான வாழ்க்கை அமைய ஒரு உத்தி!

ச.நாகராஜன்

புத்தரும் பட்டுக் கைக்குட்டையும்

ஒருமுறை புத்தர் வழக்கத்திற்கு மாறாக தன் கையில் மிக அழகிய பட்டுக் கைக்குட்டை ஒன்றை வைத்திருந்தார். இதைப் பார்த்த அவரது நூற்றுக் கணக்கான சிஷ்யர்கள் ஆச்சரியத்தோடு அந்த அழகிய கைக்குட்டையைப் பார்த்து  அவர் ஏன் இதை வைத்திருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

புத்தர் உபதேச அருளுரை நேரம் நெருங்கியது. அவர் அந்தப் பட்டுக் கைக்குட்டையைத் தன் கையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

பின்னர் பேச்சின் இடையே மெதுவாக அனைவரையும் நோக்கி, “நீங்கள் என் கையில் என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அனைவரும் ஒருமித்த குரலில் அழகிய பட்டுக் கைக்குட்டையைப் பார்க்கிறோம் என்றனர்.

பின்னர் புத்தர் அந்த கைக்குட்டையில் ஒரு முடிச்சைப் போட ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக ஐந்து முடிச்சுகளைப் போட்டார்.

பின்னர் அனைவரையும் நோக்கி, “இப்போது என்ன பார்க்கிறீர்கள்?” என்றார்.

பலரும், “அதே கைக்குட்டை தான் என்றாலும் கூட அது இப்போது வேறு மாதிரி இருக்கிறது ஏனெனில் அதில் முடிச்சுகள் இருக்கின்றன”,என்றனர்.

புத்தர் அவர்களை நோக்கிக் கூறினார்: “நீங்களும் என்னப் போல புத்தர் தான். இதைத் தான் நான் உங்களுக்கு உபதேசிக்க வந்துள்ளேன். ஆனால் எப்படி முடிச்சுகள் இருக்கும் போது பட்டுக் கைக்குட்டையை உள்ளபடி உங்களால் பார்க்க முடியவில்லையோ அதைப் போல நீங்களும் புத்தர் தான் என்பதைப் பார்க்க முடியவில்லை. நான் முடிச்சு இல்லாத பட்டுக் கைக்குட்டையாக இருக்கிறேன்.”

பின்னர் அவர் கைக்குட்டைகளின் இரு பக்கங்களையும் பிடித்து நன்றாக இழுக்க ஆரம்பித்து, “இப்போது முடிச்சுகள் அவிழ்ந்து விடுமா” என்று கேட்டார்.

அனைவரும், “அது எப்படி? இன்னும் இறுகும்” என்றனர்.

புத்தர் புன்சிரிப்புடன் கேட்டார் :”அப்படியானால் ஏன் உங்கள் முடிச்சுகளை இன்னும் போட்டு இறுக்குகிறீர்கள்? அவிழ்க்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நல்ல நோக்கமாக இருக்கும் போது அந்த நல்ல நோக்கத்துடன் செய்யும் செயலே அதற்கு எதிராக அல்லவா அமைகிறது?”

பின்னர் புத்தர், “ யாராவது இந்த முடிச்சுகளை அவிழ்க்க ஒரு வழியைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

ஒரு பிட்சு எழுந்தார். “உங்கள் அருகில் வர அனுமதித்தால் நான் முயன்று பார்க்கிறேன்” என்றார் அவர்.

“வாருங்கள்” என்றார் புத்தர்.

அருகே வந்த பிட்சு இது எப்படி போடப்பட்டிருக்கிறது என்பதை உற்றுப் பார்த்தால் அவிழ்ப்பது எப்படி என்பது தெரிந்து விடும் என்றார்.

“ஆஹா! சரியான விடை!! இது தான் நான் இன்று சொல்ல வந்தது. உங்கள் முடிச்சுக்களை எப்படிப் போட்டிருக்கிறீர்கள் என்பதை உங்களில் ஒவ்வொருவரும் தியானித்துச் சிந்தித்தால் அவிழ்ப்பது எப்படி என்பதை நீங்களே உணர்வீர்கள்.”

புத்தர் தன் உரையை முடித்துக் கொண்டார்.

வாழ்வின் ஒரு பெரும் ரகசியத்தை அறிந்து கொண்ட திருப்தியுடன் அவரது சீடர்கள் கலைந்தனர்.

மனம் என்னும் விசித்திரம்!

மனம் என்பது விசித்திரமானது. பெரும் ஆற்றலைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒருவர் குறைந்தபட்சமாக சுமார் 50000 எண்ணங்களை எண்ணுகிறார். அதாவது மணிக்கு சுமார் 2083 எண்ணங்கள். இவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவை; எந்த நல்ல பயனையும் தருவன அல்ல. மனமானது ஒவ்வொரு வினாடியும் 126 தகவல்களை பகுத்து ஆராயும் வல்லமை படைத்தது.

ஆகவே நாம் நம்மை கவனித்து எதை எண்ணுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். மனம் தெளிந்த நிலையை அடைய வேண்டும்.

இதைத் தான் புத்தர் பிரான் மனம்தெளிநிலை என்றார். ஆங்கிலத்தில் இது Mindfulness என்று சொல்லப்படுகிறது. இதற்கான பயிற்சிகளும், செய்முறை திட்டங்களும் மேலை நாடுகளில் பரவலாக இன்று ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் இதைப் பயில்கின்றனர். (இதைக் கற்க அவர்கள் தரும் கட்டணமும் மலைக்க வைக்கும் ஒன்று!)

மனம் தெளிதரு நிலை என்றால் சுயக் கட்டுப்பாட்டுடன் ஒன்றை ஆர்வத்துடன் அணுகுதல்;  இது தான் மைண்ட்ஃபுல்னெஸ் – Mindfulness.

இந்தத் தெளிவான மனத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

“உன்னைக் கவனி” என்றார் புத்தர்.

ஒரு இடத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் நம்மை நாமே உற்றுக் கவனிக்க வேண்டும்.

என்னை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்லிப் பயனில்லை. ஏனெனில் நமது எண்ணங்கள் நாம் அறியாமலேயே நம்மைச் சுற்றி வட்டமிடுகின்றன.

நிகழ்காலத்தில் வாழ்க!

ஒரு சிறிய கதை உண்டு.

பேப்பர் படிப்பதிலேயே பொழுதைப் போக்கும் கணவனிடம் ஒரு முக்கியமான அவசர செய்தியைச் சொல்ல வந்தாள் மனைவி.

அவன் கேட்பதாக இல்லை. பேப்பரிலேயே கவனம்.

“உங்கள் உடம்பில் ஒரு சிலந்தி ஓடுகிறது” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

ஊஹூம்! அவன் அசையவே இல்லை.

பார்த்தாள் மனைவி. ஒரு அலறல் அலறினாள் – “உங்கள் உடம்பில் ஒரு சிலந்தி ஓடுகிறது.ஊ..ஊ”

அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் கணவன். எங்கே எங்கே என்று தன் சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டு பரபரத்தான். சிலந்தியைக் கண்டுபிடித்து தூக்கி எறிய முனைந்தான்.

இதில் முக்கியமான விஷயம் மனைவி முதலில் கூறிய போது அவன் காதுகளில் வார்த்தைகள் விழுந்தன. ஆனால் அவன் காதிருந்தும் ‘கேட்கவில்லை’. அவள் அலறியபோது அவன் கேட்டான், அதில் உள்ள பொருளைப் புரிந்து கொண்டான், உடனே செயல்பட ஆரம்பித்தான்.

இதே போலத்தான் பெரும்பாலானோர் பல விஷயங்கள் தங்களை நெருங்கி வரும் போது அவற்றைக் கவனிப்பதில்லை; செயலில் ஈடுபட முன்வருவதில்லை.

எப்போதும் விழிப்புடனும் கவனத்துடனும் நிகழ்காலத்தில் வாழ்வது தான் வெற்றியைத் தரும்.

நிகழ்காலம் என்பது அதாவது இந்தக் கணம் என்பது ஒன்று முதல் மூன்று விநாடிகள் மட்டுமே நீடிப்பதாகும்.

இதில் கவனம் வைப்பவன் தான் அசாதாரணமான மனிதன். வெற்றியைப் பெறுபவன்.

சாதாரண மனிதனுக்கும் வெற்றி பெறும் அசாதாரமான சாதனையாளருக்கும் இடையே இருக்கும் வார்த்தை “அசாதாரணமான” (மனிதன்) என்பது தான்.

இதை அடைய உதவுவதே மைண்ட்ஃபுல்நெஸ் உத்தி.

மைண்ட்ஃபுல்நெஸ் தரும் பயன்கள்!

மனதை ஒருமுகப்படுத்தி நிகழ்காலத்தில் வாழப் பழகுவதற்கு பயிற்சி தேவை.

ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொண்டு அதன் மீது கவனம் செலுத்தி இந்தப் பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

அல்லது தனது எண்ண ஓட்டங்களை கவனித்து அதன் விளைவுகளைச் சிந்திக்கலாம்.

மெதுவாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் மெதுவாக வெளிவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும்.

இப்படிச் செய்வதால் ஏற்படும் பயன்கள் :

மனத்தளர்ச்சி நீங்கும்.

மன அழுத்தம் போகும்.

பிரச்சினைகளை இனம் காண முடியும்; அதற்கான தீர்வுகள் கிடைக்கும்.

நமது உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கவனசக்தியும் ஒருமுனைப்படுத்துவதும் மெம்படும்.

மூளைத்திறன் கூடும்.

நோய்த் தடுப்பு சக்தி கூடும்.

உயர் இரத்த அழுத்தம் குறைந்து சீராகும்.

இதயத்துடிப்பும் சீராகும்.

மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்ச்சி கூடும்.

மிக்க அமைதியாக ஆனால் வெற்றிகரமான ஒருவராக ஆக முடியும்.

உன்னைக் கவனி!

உலக இயல்பின்படி ஆயிரக்கணக்கான செயல்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே தான் இருக்கும்.

அனாவசியமாக அடுத்தவரைக் கவனித்து நம் நேரத்தை வீணாக்குவதை விட்டு விட்டு நம்மை நாம் கவனித்தால், நமது செயல்பாட்டை வகுத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.

புத்தர் கூறிய கதை ஒன்று உண்டு.

ஒரு கழைக்கூத்தாடி ஒரு பெரிய உயரமான மூங்கில் கம்பை தன் தலையில் தூக்கி வைத்துக் கொள்வான். அதில் ஒரு சிறு பெண் மெதுவாக ஏறி மேலே சென்று நிற்பாள். பின்னர் மூங்கில் கம்பில் மேல் இருக்கும் பெண்ணுடன் அவன் மெதுவாக நடந்து செல்வான். பார்வையாளர்கள் பிரமித்துப் பாராட்டுவர்.

எந்த விதமான விபத்தும் நேர்ந்து விடக்கூடாதே என்று எண்ணிய அந்தக் கழைக்கூத்தாடி சிறு பெண்ணிடம் கூறினான்: “ பெண்ணே! இந்த வித்தையின் போது நீ என்னைக் கவனி. நான் உன்னைக் கவனிக்கிறேன். எந்த விபத்தும் ஏற்படாது”

அதற்கு அந்த புத்திசாலியான சிறு பெண் பதில் கூறினாள் இப்படி: “வேண்டாம், உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். என்னை நான் கவனித்துக் கொள்கிறேன். விபத்தே வராது.”

இந்த கதையின் உண்மைப் பொருள் ஆழமானது. அவரவர் தம் அளவில் தன்னைக் கவனித்துக் கொண்டால் அனைத்தும் சரியாக அமையும்.

உங்களை நீங்கள் கவனித்துக் கொண்டால் – உங்கள் மனதையும் உடலையும் நீங்கள் நன்றாக இருக்குமாறு பார்த்துக்கொண்டால் – உலகத்தில் இருக்கும் மற்றவர்களிடம் அதிக தயையுடனும் அதிக புரிந்துகொள்ளுதலுடனும் பழகுபவராக ஆவீர்கள்.

உலகில் முக்கியமான அதிக தூரம் எவ்வளவு?

நன்றாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கும் மாஸ்டரிடம் அதைத் தெரிந்து கொள்ளப் பலர் சென்றனர்.

அவர் கேட்டார் உலகில் மிக அதிகமான ஆனால் அதே சமயம் மிக முக்கியமான தூரம் எவ்வளவு என்றார்.

ஒருவர் தன் வீடு இருக்கும் ஒரு மைல் தூரத்தைச் சொன்னார். இன்னொருவர் 3500 மைல் தள்ளி இருக்கும் அயல் நாட்டு நகரின் பெயரைச் சொன்னார். மற்ற சிலரோ நியூயார்க், லண்டன் ஆகிய நகர்கள் இருக்கும் தூரங்களைக் கூறினர். ஒருவர் உலகைச் சுற்றி வரும் 25000 மைல் தூரம் தான் அதிகம் என்றார்.

மாஸ்டர் இறுதியில்  கூறினார் :” மிக முக்கியமான, அதிக தூரம் சுமார் 12 அங்குலம் தான்! இதயத்திற்கும் ஒருவனது தலைக்கும் இடையே உள்ள தூரம் தான் அது. ஒருவனுக்கு அபாரமான அறிவு இருக்கலாம். ஆனால் அந்த அறிவு பலருக்கும் பயன்படி அதைப் பயன்படுத்தி இதயபூர்வமாக வாழ வேண்டும். இல்லையேல் அதற்குப் பயன் இல்லை. ஆக, இந்த தூரத்தை இணைத்து உங்கள் வழியை அமைத்துக் கொள்ளுங்கள்!”

உள்ள முதிர்ச்சியுடனும் அன்புடனும் வாழ அந்தந்த கணத்தில் வாழ வைக்கும் மைண்ட்ஃபுல்னெஸ் மிக அவசியம்.

ஒரு சில நிமிடங்கள் அன்றாடம் நம்மை நாமே கவனித்து முன்னேறினால் போதும். வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களாக ஆவோம்.

இதைச் செய்ய பணம் தேவையில்லை. அந்தஸ்து, இனம், மதம், நாடு, வயது, ஆண், பெண் என்ற பால் வேறுபாடு எதுவும் தேவையில்லை.

எங்கும், எப்பொழுதும், யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துப் பின்னர் மெதுவாக வெளியிட்டு நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்போமா?

வாழ்க வளமுடன்!

tags — கைக்குட்டை, புத்தர், வெற்றிகரமான, வாழ்க்கை

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: