
Post No. 8021
Date uploaded in London – 22 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலக மஹா வியாகரண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயிக்குத் துணையாக நிற்கும் பகுதிகள் சில. வினைச் சொற்களின் பட்டியலைத் தரும் ‘தாது பாடம்’ , பெயர்ச் சொற்களின் பட்டியலைத் தரும் ‘கண பாடம்’ என்பன அவற்றுள் சில. இவையன்றி பாணினீயத்தைப் பயில முடியாதாகையால், இவையும் அவரே எழுதி இருக்க வேண்டும். அல்லது அதே காலத்தில் அவர்களுடைய மாணவர்கள் தொகுத்திருக்க வேண்டும் என்பது ஆய்ந்தவிந்தடங்கிய சான்றோர் கொள்கை.
2700 ஆண்டுப் பழமை உடைய கண பாடத்தில் — பெயர்ச் சொல் பட்டியலில் — யவனர்களைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அவர்கள் தலை மயிரை முழுக்கச் சிரைத்து மொட்டையாக இருப்பது பற்றியது . இதை முண்டம் என்பர். வழுக்கைத் தலையன் என்றும் சொல்லலாம்.
“யவன முண்டா”
–பாணினி கண பாடம் 178, சூத்திரம் 2-1-72
கிரேக்க நாட்டில் வாழும் கிரேக்கர்களிடையே இவ்வழக்கம் எதுவும் இல்லை. ஆகவே யவனர்கள் என்பது கிரேக்கர் இல்லை; வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த ஒரு ஜாதி என்பது தெளிவாகிறது. சங்கத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் ரோமானியர்களையே யவனர் என்று குறிப்பிடுகின்றன. ஐந்து நூற்றாண்டுக் கால ரோமானிய மன்னர்களின் காசுகள் இந்தியா எங்கும், குறிப்பாக தமிழ் நாடெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகம் போற்றும் காளிதாசனும் அவனது ரகு வம்ச மஹா காவியத்தில் பாரசீகப் பெண்களையும் வீரர்களையுமே யவனர் என்று குறிக்கிறான் . அவர்கள் கிரேக்கர்கள் அல்ல. யவனர் என்று தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வரும் இடங்களை எல்லாம் கிரேக்கர்கள் (Greeks) அல்லது அயோனியன்ஸ் (ionians) என்று ஆங்கிலத்தில் எழுதி மகா குழப்பம் செய்துவிட்டனர் வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள்.

யவனர்கள் யார் ?
வசிஷ்டர் என்ற மஹரிஷி வைத்திருந்த தெய்வீகப் பசுவான காமதேனுவை , அரசனாக இருந்த விசுவாமித்திரர் பலவந்தமாகக் கைப்பற்ற முயன்ற போது வசிஷ்டர் தனது மந்திர சக்தியால் காமதேனுவின் உடலிலிருந்து உருவாக்கிய பல்வேறு ஜாதிகளில், இனங்களில் ஒன்றுதான் யவன ஜாதி என்பதை ராமாயணமும் மஹாபாரதமும் தெளிவாகச் சொல்லுகின்றன.
மஹாபாரதத்தில் 40க்கும் மேலான இடங்களில் யவனர் பற்றி வருவதால் எவரும் இவைகளை இடைச் செருகல் (Interpolations) என்று ஒதுக்க முடியாது.
2000 ஆண்டுப் பழமை உடைய தமிழ் இலக்கியத்தில் ஆறு இடங்களில் வரும் ‘யவனர்’, மற்றும் சில இடங்களில் வரும் ‘மிலேச்சர்’ என்பனவெல்லாம் பெரும்பாலும் ரோமானியர்கள் என்பதை டாக்டர் இரா நாகசாமி எழுதிய ரோமன் கரூர் (Roman Karur by Dr R Nagasamy) புஸ்தகத்தில் காணலாம்.

துர்வாசு மன்னன் வம்சம்
யயாதி என்ற மன்னனின் மகனும் புரு என்பவரின் சகோதரனும் ஆன துர்வாசு என்பவனின் மகன்கள் தான் யவனர்கள் என்று மஹா பாரதமும் (1-80-26) மத்ஸ்ய புராணமும் (34-30) சொல்லுகின்றன. பாட்டனாரின் சாபத்தால் துர்வசுவின் மகன்கள் ‘மிலேச்சர்’ ஆனதாக மஹா பாரதம் மேலும் சொல்லும் (1-79-11). மநு ஸ்மிருதியும் இவர்கள் தாழ்த்தப்பட்ட க்ஷத்ரியர் என்று சொல்கிறது.
குறைந்தது இரண்டு யயாதி மன்னர்களை ஹிந்து மத நூல்கள் காட்டுகின்றன.
இங்கே வரும் துர்வாசு ‘முதல் யயாதி’யின் மகன்; நஹுஷனின் பேரன். அதாவது பஞ்ச பாண்டவர்களுக்கு குறைந்தது 15 தலைமுறைக்கு முந்தையவன். ஒரு தலைமுறைக்கு வெள்ளைக்காரர் போல 20 ஆண்டுக் கணக்கு வைத்தால் மஹாபாரதத்துக்கு 300 ஆண்டுக்கு முன்னாலும் இந்திய ஆடசி ஆண்டு சராசரிப்படி பார்த்தால் 500 ஆண்டு இடைவெளியும் வரும். அதாவது கி.மு. 3600. தற்போதைய குதிரை, இரும்பு ஆராய்ச்சிக்காரர்கள் சொல்லும் கி.மு.1500-தான் மஹாபாரத காலம் என்று கொண்டாலும் துர்வாசு-யவனர் காலம் கி..மு.2000 ஆகும். எப்படிப் பார்த்தாலும் அலெக்ஸ்சாண்டர் கால ‘உண்மை கிரேக்கர்’களும் மஹாபாரத யவனர்களுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது .
சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் இவர்களை கோதுமை உணவு, மது, மாமிசப் பிரியர்கள் என்று பேசுகிறது 6-3-316
சுஸ்ருத சம்ஹிதை யவனர் ‘அட்டை’ (leeches) களை ரத்தம் உறிஞ்ச பயன்படுத்துவதை மட்டும் சொல்லும்.
இவை அனைத்தும் காட்டும் உண்மை என்னவென்றால் அலெக்சாண்டர் படையெடுப்புக்கு முன்னரே, ‘யவனர்’ என்ற சொல் பிரயோகம் இருந்தது; ஆனால் அவை கிரேக்கர்கள் என்று பொருள்படாது என்பதாகும். அலெக்ஸ்சாண்டர் திடீரென்று மரணம் அடைந்தவுடன் சிதறுண்ட அவரது வடமேற்கு இந்திய மாகாணங்களில் உண்மையிலேயே (Indo- Greeks) கிரேக்கர் தொடர்புடையோர் ஆண்டனர்.
சூத்ர பெண்களுக்கும் க்ஷத்ரிய ஆண் களுக்கும் பிறந்தவர்களே யவனர்கள் என்று கௌதம தர்ம சூத்திரம் 4-21 சொல்லும். ஆக எல்லாவற்றையும் கூ ட்டிக் கழித்துப் பார்த்தால் வேத தர்மத்தைப் பின்பற்றாத இந்துக்களே யவனர்கள், அவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாகும். டேரியஸ் (Darius of Persia) என்னும் கி.மு.ஆறாம் நூற்றாண்டு மன்னர் படையிலேயே யவனர்கள் இருந்ததால் அலெக்ஸ்சாண்டருக்கு முன்னரே அவர்கள் இந்தியருடன் வாழ்ந்தது தெரிகிறது.
சமண மத புஸ்தகங்கள் யவனர்களைக் கொடூரமானவர்கள் , தீய எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிக்கின்றன.
மஹாபாரத யுத்தத்தில் யவனர் படைகளும் துரியோதனனுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. 7-95-20. போரில் ஈடுபட்ட மிலேச்சர்கள் அனைவரும் மொட்டைத் தலையர்கள் என்றும் மஹாபாரதம் சொல்கிறது.
பாகவதம் , ஹரி வம்சத்தில் பின்னர் வரும் கிருஷ்ணர் – கால யவனர் மோதல் கதைகளும் யவனரின் பழமையைக் காட்டும்.

புராணங்களும் அவர்கைளை ‘மீசை இல்லாதோர்’ அல்லது ‘மொட்டைத் தலையர்’ என்றே வருணிக்கின்றன.
திரவுபதியை அவமதித்த சிந்து தேச மன்னன் ஜெயத்ரதனின் தலை மயிரை பீமன் ஐந்து குடுமி மட்டும் நீட்டிக் கொண்டிருக்கும்படி சிரைத்ததை (ம.பா.3-256-9) -முன்னரே கொடுத்துள்ளேன்; மஹா வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூலும் வங்காளத்தில் அட்டஹாஸம் செய்த விஜயனையும் அவனது சகோதரனையும் பாதிப்பகுதி தலை மயிரை மட்டும் சிரைத்து கப்பலில் ஏற்றி அனுப்பியதையும் அவர்கள் கடைசியில் இலங்கையில் வந்து இறங்கி சிங்கள ஆடசி அமைத்ததையும் எழுதிவைத்துள்ளது.. ஆக தலை மயிரை மொட்டை அடிப்பது அவர்களை கீழ் மட்டத்தினர் என்று அடையாளம் காட்டவும் இன்ன இனத்தினர் என்று காட்டவும் பயன்படுத்தப்பட்டது.
tags- யவன முண்டா, பாணினி, துர்வாசு
–subham–