
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8043
Date uploaded in London – – – 26 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!
ச.நாகராஜன்
சிறப்பான ஒரு கவிதைக்குப் பல அங்கங்கள் உண்டு. முக்கியமான ஒன்று சித்திரம் எனப்படும் இமேஜ் (Image).
இந்த அங்கங்கள் தேவைக்குத் தக ஆங்காங்கே பளிச்சிடும் போது கவிதையைக் கொண்டாடுகிறோம். கவிஞனை மனதிலிறுத்திப் புகழ்கிறோம்.
விஸ்வாமித்திரருடன் ராமனும் லட்சுமணனும் மிதிலை நகரின் வீதிகளின் வழியே செல்வதைக் கம்பன் வர்ணிக்கிறான்.
ஆடல் பாடல், மங்கையரின் கீதம், சோலைகளில் அன்ன நடை போடும் மிதிலை நகரின் அழகிகளைக் கண்டு நாணம் கொண்ட தேவ மகளிர் தோற்றுப் பின்னால் நடக்க வேண்டியது தான் என்ற மனநிலை கொள்வது, மது குடித்த மங்கையரின் ‘ஆட்டம்’ என இப்படிப் பலக் காட்சிகள்.
அனைத்தும் பளிச் பளிச் என ஒவ்வொரு சித்திரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
இவைகளை வேகமாகப் பார்த்துக் கொண்டே வந்த ராம லட்சுமணர் ஓரிடத்தில் நிற்கின்றனர். ஏன்?

கம்பன் சீதையை அறிமுகப்படுத்தும் அறிமுகக் கவிதை இது:
பொன்னின் ஜோதி போதினி னாற்றம் பொலிவே போல்
தென்னுன் டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன் துறை கண்டாங் கயனின்றார்
(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் செய்யுள் 23)
பாடலின் பொருளைப் பார்ப்போம்:-
கன்னி மாடத்து உம்பரின் மாடு – கன்னி மாடத்தின் மேலிடத்தில்
களிபேடோடு அன்னம் ஆடு – மகிழ்ச்சியுள்ள பெட்டை அன்னங்களுடன் ஆண் அன்னங்கள் கூடி விளையாடுகின்ற
முன் துறை -இடத்திற்கு முன்புறத்தில்
பொன்னின் ஜோதி – பொன்னின் ஒளியும்
போதின் இன் நாற்றம் – மலரின் நறுமணமும்
தென் உண் தேனின் தீம் சுவை – வண்டுகள் உண்ணும் தேனின் இனிய சுவையும்
செம் சொல் கவி இன்பம் – செம்மையான சொற்களினால் அமைந்த கவிதையின் ரசமும் ஆகிய இவை அனைத்தும்
பொலிவே போல் – ஓருருக் கொண்டு விளங்கி நிற்பது போல சீதா பிராட்டி தோன்ற
கண்டு – அதைப் பார்த்து
ஆங்கு அயல் நின்றார் – மூவரும் அவ்விடத்தின் அருகில் நின்றனர்
தனது காவிய நாயகியை அறிமுகப்படுத்தும் கம்பன் செம் சொல் கவி இன்பம் போல கவிதை இருக்க வேண்டும் என்று சொல்வதை இங்கேயே தானே கையாண்டு காண்பிக்கிறான்.
தங்கத்தின் ஜோதியென மின்னும் தகதகப்பு, மலர்கள் தரும் சுகந்த மணம், வண்டுகள் உண்ணும் தேனின் இனிமையான சுவை, கவிஞர்கள் இயற்றும் கவிதையில் தரப்படும் செம் சொல் கவி இன்பம் இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?
ஒளி, நாற்றம், சுவை, ஓசை இந்த நான்கு புலனின்பத்தையும் உதாரணம் காட்டி விட்டான் கம்பன் – தங்க ஒளி, மலர் வாசம், தேனின் சுவை, இனிய கவிதையின் ஓசை – கண்ணுக்கு ஒளி, நாசிக்கு வாசம், வாய்க்கு சுவை, காதுக்கு ஓசை என நான்கு புலன் இன்பத்தையும் கூறியவர் ஊற்றின்பத்தை மறைமுகமாக அறிய வைக்கிறார்.
கண்டு கேட்டுண்டுயுயிர்த்துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள என ஒண்டொடியிடத்தில் ஐம்புலனும் உள்ளன என வள்ளுவன் கூறுவதைக் கம்பன் இங்கு எடுத்தாளுகிறான்.
கவிதையில் ஒரு சித்திரத்தைப் படைக்கிறான்.

திரைப்படத்தில் இது ஒரு அறிமுக காட்சி தான். அடுத்து வரும் காட்சிகளில் அந்த சித்திரத்தின் தொடர் காட்சிகள் வருகின்றன!
ஆங்கில இலக்கியத்தில் கூட கவிதைக்கான முக்கியமான இலக்கணங்களுள் இமேஜ் (Image) என்பதும் ஒன்று.
இங்கு கம்பன் 29 சொற்களில் தீட்டுவதற்கு அரிய ஒரு ‘இமேஜை’ப் படைக்கிறான்.
ஏரியின் வளைவில் திரும்பியவுடன் தான் பார்த்த டேஃபொடில் மலர்க் கூட்டத்தைப் பார்த்து பிரமித்த வேர்ட்ஸ்வொர்த்,

“When all at once I saw a crowd
A host of Golden Daffodils
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze” — என்று பாடுகிறான்.
மலர் கூட்டத்தின் சித்திரத்தை நம் முன் எழுப்பும் கவிஞன் அது பிற்காலத்தில் அவன் மனம் வாட்டம் அடையும் சமயம் எல்லாம் முன் வந்து அவனது மனத் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமளித்து உயர்த்தி ஆனந்தப்படுத்துகிறது என்கிறான்
For oft when on my couch I lie,
In vacant or in pensive mood
They flash upon that inward eye
Which is the bliss of solitude
And then my heart with pleasure fills
And dances with the daffodils
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ( 1770-1850) Daffodils
கவிதையில்
pensive mood
inward eye
bliss of solitude
my heart with pleasure fills
dances with the daffodils வரும் வார்த்தைகள் –

ஒரு அகக் காட்சியை உருவாக்கும் சக்தி வாய்ந்த – வார்த்தைகள் இவை. அவர் அகக்கண்ணில் பழைய சித்திரம் தோன்றி அவரை மகிழ வைத்து நடனமாட வைக்கிறது.
வேர்ட்ஸ்வொர்த் காண்பிப்பது ஒரு மலர்க் கூட்டத்தை – கண்ணுக்கும் மனதிற்கும் நாசிக்கும் மட்டும் அது இன்பம் தரும்.
ஆனால் கம்பனோ ஐம்புலனுக்கும் இன்பம் தரும் ஒரு அறிமுகக் காட்சியைக் காண்பிக்கிறான்.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரம் பாடல்களில் அவன் செம் சொல் கவி இன்பத்தை அள்ளித் தருகிறான்!
இமேஜுக்கு – கவிதா சித்திரத்திற்கு ஒரு கவிஞன் கம்பனே!

tags – வேர்ட்ஸ்வொர்த்,கம்பன், சீதை