
Post No. 8057
Date uploaded in London – – – 28 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
காட்டு வாத்துக்கள் பறக்கின்றன, குருவே!
ச.நாகராஜன்
புத்த குருமார்கள் சீடர்களுக்கு ஞான நிலையை எய்த பல்வேறு வழிகளைக் கையாண்டனர். சில அடிகளும் சீடர்களுக்கு விழுவதுண்டு.
ஒவ்வொரு குருவுக்கும் ஒவ்வொரு வழி. மாஸ்டர் மாஜு ஒரு முறை கையாண்ட வழி இது:-
மாஸ்டர் மாஜு டயொய் (Mazu Daoyi) ஒரு நாள் தன் சீடரான பைஜாங் ஹுவாய்ஹையுடன் (Baizang Huaihai – 720-814) நடந்து சென்று கொண்டிருந்தார்.
எப்படியாவது தனது சீடர் உயரிய நிலையை எய்து விட வேண்டும் என்பது அவரது அவா.
அப்போது தலைக்கு மேலே சில பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. மாஜு, பைஜாங் ஹுவாங்ஹையைப் பார்த்து, “ அவை என்ன?” என்று கேட்டார்.
பைஜாங் ஹுவாங்ஹை, “ காட்டு வாத்துக்கள் என்று பதில் கூறினார்.
“அவை எங்கே போகின்றன?” என்று அடுத்த கேள்வி வந்தது.
“அவை பறந்து போய் விட்டன” என்று பதில் சொன்னார் பைஜாங் ஹுவாங்ஹை.
இதைக் கேட்டவுடன் மாஜூ தனது சீடரின் மூக்கை அழுத்தமாகப் பிடித்துத் திருகினார். பைஜாங் ஹுவாங்ஹை வலியால் துடித்தார். ஓவென்று அலறினார்.
இப்போது மாஜு கேட்டார் :” இன்னும் அவை பறந்து போய் விட்டன என்று தான் சொல்கிறாயா?”
இந்தச் சொற்களைக் கேட்டவுடன் அந்த க்ஷணமே அவருக்கு உயரிய ஞானம் ஏற்பட்டு விட்டது! ஒரு பெரிய அரிய அனுபவத்தை அவர் பெற்றார்.
இது எப்படி ஞானம் திடீரென்று வந்தது.
மூக்கை அழுத்தமாகப் பிடித்து வலிக்கும் படி திருகினால் ஞானம் வந்து விடுமா?
முதலில் இருந்த நிலைக்கும் மூக்கைத் திருகிய பின்னர் இருந்த நிலைக்கும் இடையே என்ன நடந்தது?
உண்மையிலேயே காட்டு வாத்துக்கள் பறந்து தான் போயின. ஆகவே தான் பைஜாங் ஹுவாங்ஹை அவை பறந்து போய் விட்டன என்று பதில் சொன்னார்.

ஆனால் அவர் கூறிய பதில் உலகியல் நிலைக்கு ஏற்பச் சொன்ன பதில்.
அவர் உலகியல் இயல்பான, வருவது- போவது என்ற நிலையிலேயே இருந்தார்.
அதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற உணர்வு அவருக்கு இல்லை.
நிலையற்ற இந்த உலகில் வருவதும் போவதுமாக ஆயிரக்கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நல்லது, கெட்டது, வருவது, போவது இவை சகஜம்.
ஆனால் உண்மையான இயல்பான நிலை என்பது இவற்றையும் கடந்த சூனியம்; அமைதி! எழுவது, அழிவது, வருவது, போவது என்று பேசுவதற்கு எதுவுமே இல்லை.
இந்த வாய்ப்பைத் தன் சீடருக்கு ஞான நிலையை அடையச் செய்ய உறுதி பூண்ட குரு நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
அவரது மூக்கைத் திருகியவுடன் இந்த நிலையை அவர் கடந்து விட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
அது தான் நடந்தது.
பின்னர் சீடர் பெரும் ஞானியானார். உலகியலில் நாம் பார்க்கும் அனைத்தையும் தாண்டி இருப்பது தான் சாந்தி என்பதை அவர் உணர்ந்து கொண்டு அனைவருக்கும் உபதேசிக்க ஆரம்பித்தார்.
அல்லல் படும் மனதை அமைதிப் படுத்தி அனைத்து சாதாரண உலகியல் நடப்புகளைத் தாண்டி அப்பால் போனால் வருவது சாந்தி! அதுவே புத்த நிலை!

tags காட்டு வாத்துக்கள்,புத்த குருமார்
****