
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8077
Date uploaded in London – 31 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரு கதை –பழமும் தின்னு கொட்டையும் போட்டது யார்?
பெரிய அனுபவசாலிகளை ‘அவரா , அந்த ஆளு பழமும் தின்னு கொ ட்டையும் போட்டவன் ஆச்சே’ என்று புகழ்வர். எல்லார் பணத்தையும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்ட ஆளையும் இதே சொற்றொடரால் இகழ்வதும் உண்டு .
இந்தத் தொடர் எப்படி வந்தது என்பது ஒரு கதையில் உள்ளது . இதோ அந்தக் கதை –புத்த மதத்தின் விநய பிடகத்தில் சுள்ள வக்கத்தில் உள்ள கதை இது

வெகு காலத்துக்கு முன்பு இமயமலைச் சாரலில் ஒரு ஆலமரம் இருந்தது அதனருகே ஒரு புறா , ஒரு யானை, ஒரு குரங்கு ஆகிய மூன்றும் நண்பர்கள் போல வாழ்ந்தன. ஆயினும் அவைகளிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லை; ஒருவரை ஒருவர் மதிப்பதும் இல்லை.யார் பெரியவர், யார் மூத்தவர் என்ற அஹம்காரம் கூத்தாடியது . ஒரு நாள் இந்தக் கூத்தை வெளிப்படையாகவே பேசி நம்முள் யார் பெரியவர் என்பதைத் தீர்மானிப்போம். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அதன்படி மதிப்போம், மரியாதை செய்வோம் என்று முடிவு செய்தன.
இதன்படி புறாவும் குரங்கும் யானையிடம் ஒரு கேள்வி கேட்டன-
நண்பனே! உனது நினைவு எவ்வளவு பழைய காலம் வரை செல்கிறது?
இதற்கு யானை சொன்னது – நண்பர்களே! நான் சிறுவனாக இருந்த போது இந்த மகத்தான ஆலமரம் அதிகம் வளரவில்லை. அதன் மீதே நான் நடந்து சென்றது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது.. அதன் உயரம் என் கால் களுக்கும் கீழேதான் இருந்தது. அதன் உச்சிக் கொம்பே என் வயிற்றைத் தொடும் அளவே இருந்தது”.
உடனே யானையும் புறாவும் சேர்ந்து இதே கேள்வியைக் குரங்கினிடம் கேட்டன
குரங்கு சொன்னது-
“நண்பர்களே! நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை தரையில் உட்கார்ந்து இருந்தேன் அப்போது தரையில் அமர்ந்தவாறே ஆலமரத்தின் உச்சிக் கொம்பைக் கடித்துத் தின்றது நினைவுக்கு வருகிறது “.
பின்னர் குரங்கும் யானையும் சேர்ந்து புறாவிடத்தில் இக்கேள்வியைக் கேட்டன. புறா சொன்னது-

“நண்பர்களே ! அதோ தெரிகிறதே பொட்டல்காடு. அங்கே முன்னொரு காலத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது . ஒருநாள் அதன் பழம் ஒன்றைத் தின்றுவிட்டு அதன் விதையை எச்சமாகக் கழித்தேன். அந்த விதையிலிருந்து உண்டானதே இந்தப் பெரிய ஆலமரம். ஆகையால் உங்கள் இருவரைக்காட்டிலும் நான்தான் மூத்தவன்” என்று புறா கூறியது இதைக்கேட்ட குரங்கும் யானையும் நீயே மூத்தவன் இனிமேல் உன்னை மதித்து உன் சொற்படி நடப்போம் என்று உறுதி கூறின.
இந்தக் கதையை புத்தர் சொன்னதாகவும் வினய பிடகம் எழுதிவைத்துள்ளது. இதுதான் பழமும் தின்று கொட்டையும் போட்டவனின் கதை.
பொதுவாக புத்த மதத்தில் உள்ள கதைகள் எல்லாம் பழங்கால பாரதத்தில் வழங்கிய கதைகள் ஆகும். அந்தக் கதைகளை புத்த மதத்தினர் எடுத்து புத்தர், போதி சத்துவர் என்ற பெயர்களை நுழைத்துப் பயன்படுத்தினர்.
tags –பழமும் தின்னு கொட்டையும்



–subham–
nparamasivam1951
/ May 31, 2020பெளத்தமும் ஜைனமும் ஆன்மீக திருடர்கள். இந்து மதம் தான் இவர்கள் டார்கெட்.