
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8120
Date uploaded in London – – – 7 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மாலைமலர் 30-5-2020 தேதியிட்ட இதழில் வெளி வந்துள்ள கட்டுரை!
ச.நாகராஜன்
வடலூர் வள்ளலார் பெருமான்
அற்புத சித்தர்கள் தோன்றி அருள் தரும் அற்புத பூமியாகத் தமிழகம் தொன்று தொட்டு விளங்கி வருவதை நமது அறநூல்களும் இலக்கியங்களும் தெளிவாக விளக்குகின்றன.
தன் நலம் கருதாமல் உலக நலம் ஒன்றையே கருதி வாழும் இவர்கள் பஞ்ச பூதங்களையும் மனித குல மேம்பாட்டிற்காக எப்படியெல்லாம் இயங்க வைக்க முடியுமோ அப்படியெல்லாம் இயங்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
சமீப காலத்தில் வாழ்ந்து வரலாற்றுக் குறிப்புகள் மூலமாகவும் உரிய ஆவணங்கள் மூலமாகவும் நாம் பல சித்தர்களைக் காண முடிகிறது.
உலகையே வியக்க வைத்து இறைவனுடன் வெளியில் கலந்த பெருமையைக் கொண்டவர் வடலூர் வள்ளலார் பெருமான் அவர்கள்.
சாகாப் பெருநிலையை மனித குலத்திற்கு கற்பிக்க வந்த பெருமானின் வாழ்வில் நடந்த அற்புதங்கள் பல.
அற்புதங்களை நடத்துவது என்பது அப்படி அற்புதங்களைக் காண்பிக்க வேண்டும் என்பது எந்தக் காலத்திலும் எந்த ஒரு சித்தரும் மனதால் நினைத்துச் செய்வதில்லை.
ஆனால் இயல்பாகவே இறையருளால் அவை நிகழும் போது மனித குலம் வியக்கிறது; பிரமிக்கிறது; குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, வரும் சந்ததியினருக்குத் தருகிறது.
சென்னை பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றி வந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்களுள் ஒருவர்.
அவர் வள்ளலார் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை உள்ளது உள்ளவாறே எழுதி வைத்துள்ளார்.

அங்கங்கள் தனித்தனியே இருந்த காட்சி!
வள்ளலாரின் தொண்டர்களுள் ஒருவர் வேலூரைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவர். ஒரு நாள் வெளியே சென்ற ஐயா அவர்கள் வரவில்லையே என்று எண்ணிய அவர் வள்ளலாரை வெளியே போய்த் தேட ஆரம்பித்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்க வைத்தது. வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் தனித்தனியாகக் கிடந்தன. அதைக் கண்ட அவர் நடுநடுங்கி, “ஐயோ! இவர் இப்படி ஆகி விட்டாரே” என்று அலறி ஓவென அழலானார்.
ஆனால் திடீரென்று அவர் முன் முழு உருவமாகத் தோன்றிய வள்ளலார் பெருமான், ”நீர், இனிமேல் இது போல வந்து பார்க்காதீர்” என்று அருளுரை புகன்று அகன்றார். வள்ளலார் முன்னே நடக்க அவர் பின்னே தொடர இருவரும் சத்திய தருமச் சாலையை அடைந்தனர்.
இப்படி உடலைப் பிரிப்பது, பின்னர் பூட்டுவது என்பது சித்தர்கள் பலரின் வாழ்விலும் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவமாக அமைந்திருக்கிறது.
பல இடங்களில் காட்சி தரல்
திருவதிகைக்கு வருகை புரிந்த வள்ளலார் பகலில் இறை வழிபாட்டிற்காகச் சென்றார். அவரைக் காணக் கூட்டமோ கூட்டம். ஏராளமான பக்தர்கள் தம்மைக் காண விரும்புவதை உணர்ந்த அவரது அருளுள்ளம் உடனே தனது உருவை ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் தோன்ற வைக்க அன்பர்கள் அந்தக் காட்சியைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தனர்.

சித்தர் கொடுத்த லட்டு!
ஒரு சமயம் வள்ளலார் கூடலூர் சென்றிருந்தார். அங்கு தமது சீடரான அப்பாசாமி செட்டியார் இல்லத்தில் ஒரு அறையில் தனித்திருந்தார். அபோது அங்கு ஒரு பெரியவர் வேகமாக வந்தார். யாருடைய அனுமதியும் பெறாமல் அவர் வள்ளலார் இருந்த அறையினுள் சென்றார். உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை. பக்தர்கள் திகைத்தனர். ஒருவாறாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவர்கள் வள்ளலார் இருந்த அறையின் கதவைத் தட்டி உள்ளே சென்று நடந்ததைக் கூறினர். வள்ளலார் சிரித்தார். நம்மைக் காண வந்த சித்தர் அவர் என்று கூறிய அவர், ‘இந்நேரம் அவர் காசியில் இருப்பார்’ என்று கூறினார். அவர் தனக்குக் கொடுத்த லட்டையும் காண்பித்தார்.
சித்தர்கள் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்கு நினைத்த சமயத்தில் காலமும் இடமும் கடந்து வருவர் என்பதை பக்தர்கள் உணர்ந்து வியந்தனர்.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் வள்ளலார் பெருமானின் வாழ்க்கையில் உள்ளன. இவை இறையருளால் ஏற்பட்டனவே தவிர விளம்பரத்திற்காகவோ அல்லது தன் பெருமையை உலகிற்குக் காட்டவோ அவர் செய்ததில்லை. அனைவருக்கும் இறையருளைத் தன் மூலம் வாரி வழங்கிய வள்ளலார் தமிழகம் கண்ட அற்புதமான மகான்;
பிராட்லி கட்டளை
மதுரையை அடுத்த சமயநல்லூரில் நாயக்க மன்னர்களின் ஆரம்ப காலத்தில் அவதரித்து சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து மதுரையில் சமாதி எய்தியவர் குழந்தையானந்த சுவாமிகள். இவரது சமாதி அரசரடியில் உள்ளது. பக்தர்கள் வழிபாட்டுக்கென இங்கு தினமும் குழுமுவது இன்றும் நடைபெறுகிறது. சமாதியில் ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை பிரபல தேசபக்தர் சுப்ரமணியம் சிவா அவர்களின் நெருங்கிய உறவினரும் காசியில் வாழ்ந்து வந்தவருமான கேதாரநாத் சிவம் அவர்கள் கூறிய சம்பவம் இது.
குழந்தையானந்தர் வடநாட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் அவர் காசி சென்றார். அப்போது காசியில் சப்-கலெக்டராக இருந்தவர் பிராம்லி துரை என்பவர். ஒரு நாள் அவர் ஓரிடத்தில் தன் மனைவியுடன் உல்லாசமாக வீற்றிருந்தார். அப்போது சுவாமிகள் அவதூத கோலத்தில் ஆடையின்றி அவ்வழியே சென்றார். இதைக் கண்ட அவருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே தன் கையிலிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். அது சுவாமிகள் மீது விழாமல் அவர் மனைவி மீது விழுந்தது. மனைவி ஓவென்று அலறினாள். துரைக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.எதிரில் இருப்பவர் ஒரு மாயாஜால மந்திரவாதி என அவர் நினைத்தார். சேவகர்களை அழைத்து அவரை தன் வீட்டிற்கு இழுத்து வர உத்தரவிட்டார்.
வீட்டிற்குச் சென்ற போது அவர் அடித்த அடி அங்கிருந்த அனைவர் மீதும் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் ஆத்திரம் இன்னும் அதிகமானது.
“இந்த ஆள் ஒரு மாயாவி. இவனை இருட்டறையில் அடையுங்கள்” என உத்தரவிட்டார்.
அதன்படியே உடனடியாக குழந்தையானந்தர் ஒரு இருட்டறையில் அடைக்கப்பட்டார். அறையின் கதவைத் தானே மூடிய துரை அதை நன்கு பூட்டி விட்டுச் சாவியைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.
பிறகு தனது கோச்சில் ஏறிச் சென்றார்.
என்ன ஆச்சரியம். அவர் வண்டி செல்ல, அதன் முன்னே குழந்தையானந்தர் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த துரை பிரமித்தார். அவருக்குக் கோபம் போய், இப்போது பயம் வந்து விட்டது. அங்குள்ளவர்களிடம், ‘இவர் யார்’ என விசாரித்தார்.
அனைவரும் அவரது மகிமை பற்றி எடுத்துரைத்தனர். அத்தோடு அவர்கள், “நீங்கள் செய்தது பெரும் குற்றம்; அவரிடமே போய் மன்னிப்புக் கேளுங்கள். இது தவிர இந்தக் குற்றத்திற்குப் பிராயசித்தம் கிடையாது’ என்று கூறினர்.
பிராம்லி துரை நேரடியாக குழந்தையானந்தரிடம் சென்று சுவாமிகளைப் பணிந்து தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார்.
சுவாமிகளின் அருள் உள்ளம் இரங்கியது; அவரை ஆசீர்வதித்தார்.
அன்று முதல் சுவாமிகளின் அணுக்க பக்தனாகி விட்ட பிராம்லி துரை தனது அஞ்ஞானம் நீங்கிய அந்த நாளையே தனது வாழ்வின் புனித நாளாகக் கருதினார். அந்த தினத்தில் ஆராதனை நடத்தக் கட்டளையிட்டார். வருடந்தோறும் அந்த ஆராதனை நடக்க ஆரம்பித்தது. இன்றளவும் காசியில் நடந்து வரும் அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

நகராத ரயில்!
குழந்தையானந்தர் மதுரை ரயில் நிலையத்திற்கு ஒரு முறை சென்றார். சென்னைக்குச் செல்லவிருந்த மெயிலில் ஏறிய குழந்தையானந்தர் ஆங்கிலேய துரை ஒருவருக்கு ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு சீட்டில் அமர்ந்தார்.
தனது இருக்கைக்கு வந்த துரை அதிர்ந்து போனார். சுவாமிகளை உடனடியாகக் கீழே இறங்கச் சொன்னார். ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர் கல்யாணராமையர் என்பவர். சுவாமிகளிடம் டிக்கட் இல்லை என்பதால் அவரை இறங்குமாறு அவரும் வேண்டினார். பின்னர் பெரும் கூட்டம் கூடவே, வலுக்கட்டாயமாக சுவாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார்.
சுவாமிகள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அமர்ந்த வண்ணம் இருக்க கார்டு விசிலை ஊதினார்; டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் நகரவில்லை. எவ்வளவோ முயன்றும் ரயில் நகராததால் அனைவரும் அயர்ந்தனர். பின்னர் அனைவரும் ஸ்டேஷன்மாஸ்டரிடம் சுவாமிகளிடம் சென்று வேண்டுமாறு வற்புறுத்தினர். ஸ்டேஷன்மாஸ்டரும் அவரிடம் சென்று அவர் முதலில் அமர்ந்த சீட்டையே அவருக்குத் தருவதாகக் கூறி துரைக்கு வேறு ஒரு சீட் ஏற்பாடு செய்தார். சுவாமிகள் இருக்கையில் ஏறி அமர்ந்தார். சந்தோஷத்துடன், ‘இனி ரயில் போகும்டா’ என்றார். ரயில் நகர்ந்தது. அன்றிலிருந்து ஸ்டேஷன்மாஸ்டர் அவரது அணுக்க பக்தராக ஆனார்; அவர் பணி ஓய்வு பெற்ற பின் அடுத்தபடி ஸ்டேஷன்மாஸ்டராக வந்த மெரிட் துரையும் சுவாமிகளின் பரமபக்தரானார். சுவாமிகள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் ஓடிச் சென்று அவரைத் தூக்கி வந்து தனது ஆசனத்தில் அமர்த்தி விடுவார் அவர்.
சுவாமிகள் மெரிட் துரையிடம் அலாதி அன்பு செலுத்தி அவரை விசேஷமாக ஆசீர்வதிப்பது வழக்கம். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளால் பலரையும் தனது அன்பு வட்டத்தில் இழுத்து ஆசீர்வதித்து அனுக்ரஹிப்பது குழந்தையானந்தரின் இயல்பு.
சுவாமிகள் 1932ஆம் ஆண்டு சமாதி எய்தினார்.

கிரிவலப் பாதையில் புலி உருவில் வந்த சித்தர்கள்!
பகவான் ரமணர் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து வந்த காலத்தில் அவரை தரிசிக்க ஏராளமான சித்தர்கள் வருகை புரிவதுண்டு.
இப்படி சித்தர்கள் வருவதை பகிரங்கமாக அவர் ஒரு போதும் சொல்வதில்லை. ஆனால் ஒரு சமயம் சாம வேதத்தை ஓதிக் கொண்டே திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தர்கள் சிலர் ஓடோடி வந்து ரமண மஹரிஷியிடம் தாங்கள் சென்ற வழியில் ஐந்து பெரிய புலிகள் சாலையின் நடுவில் அமர்ந்திருந்ததாகவும் 15 நிமிடங்கள் அவை நகராமல் அங்கேயே இருக்கவே அலறி அடித்துக் கொண்டு ஓடி வருவதாகவும் பயத்துடன் தெரிவித்தனர்.
ரமணரோ மெதுவாக, “எதற்காக சாம வேதத்தை நிறுத்தினீர்கள்? அவர்கள் சித்த புருஷர்கள். உங்கள் வேத கானத்தைக் கேட்பதற்காக அல்லவா அவர்கள் அங்கு வந்துள்ளனர், ஓடி வந்து விட்டீர்களே” என்று கூறினார்.
பக்தர்கள் வியப்பும் பிரமிப்பும் அடைந்தனர்.
நினைத்த இடத்தில் நினைத்த உரு எடுத்து வருவது சித்தர்கள் இயல்பு என்பதையும் பகவான் ரமணர் இருக்கும் இடத்தில் தங்களுக்குப் பெரும் பாதுகாப்பும அருளும் உண்டு என்பதையும் அறிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரமணரின் வாழ்வில் நூற்றுக் கணக்கில் அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பது போல அவை அமையவே எல்லையற்ற இறையருள் ரமணரின் அருளாசி மூலமாகத் தம்மைக் காக்கிறது என்பதை ரமண பக்தர்கள் உணர்ந்து அந்த அனுபவங்களை மற்ற அனைவருடனும் பங்கிட்டு ஆனந்தித்தனர். அவர்களது பொக்கிஷமான குறிப்புகளை பல்வேறு நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது
பொதுவாக தமிழகம் சித்தர் பூமி என்பதை சங்க காலம் முதற் கொண்டு நவீன மயமான இந்த அறிவியல் யுகம் வரை நடக்கும் பல சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன.

வித்தக சித்தர் கணம் போற்றுவோம்; அருளாசியை அனைவரும் அடைவோம்!
tags- அற்புத , சித்தர் பூமி , தமிழகம்,
***