
Post No. 8135
Date uploaded in London – 9 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்போடியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவிலை அறியாதோர் எவருமிலர். நானும் எவ்வளவோ புஸ்தகங்களைப் படித்துவிட்டேன். நமது ‘பிளாக்’கில் கட்டுரைகளும் உள . ஆயினும் பழைய பேப்பர் கட்டிங் (News Paper Cuttings) குகளைத் தூக்கிப் போடுகையில் 2006-ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி Organiser Weekly இதழில் வைதேகி நாதன் எழுதிய கட்டுரையில் உள்ள சில அதிசய விஷயங்களைப் பற்றி மாட்டும் குறிப்பிடுகிறேன் .
அமெரிக்காவில் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் சமயத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் வசுதா நாராயணன் (Dr Vasudha Narayanan) காஞ்சீபுரம் கோவில்களையும் கம்போடியா கோவில்களையும் ஒப்பிட்டு எழுதிய நூலின் மதிப்புரை போனறது அக்கட்டுரை.
இதோ அதிசயச் செய்திகள்:–


1.கலிங்க தேசம் (ஒரிஸ்ஸா), தமிழ் நாடு ஆகிய இரண்டும் கம்போடியாவுக்கு பல சிற்பிகளை அனுப்பியது போலும். காஞ்சியிலுள்ள மூன்று வைஷ்ணவக் கோவில்கள் கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு முன்மாதிரியாகத் நிகழ்ந்துள்ளன. விஷ்ணு ‘தலை மாற்றி சயனிக்கும்’ கோலம் இரண்டு இடங்களிலும் உள்ளன. அதாவது பெரும்பாலும் படுத்து இருக்கும் கோ லத்திலுள்ள (சயன) விஷ்ணுவின் தலை இடது புறத்திலும் பாதங்கள் வலது புறத்திலும் இருக்கும். ஆனால் காஞ்சியிலும் கம்போடியாவிலும் வலது புறத்தில் தலை வைத்துப் படுக்கும் படியாக அமைந்துள்ளது. இந்தியாவில் மேற்கு நோக்கி இருக்கும் கோவில்கள் மிகவும் குறைவு. இதிலும் இரண்டுக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதாவது மேற்கு நோக்கி அமைந்துள்ள அங்கோர்வாட் கோவில், காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் போல அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இது போலவே அங்கோர் வாட் கோவில் அமைக்கப்பட்டுள்ளது .இது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. காஞ்சிக் கோவில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
2.வைகுண்டப் பெருமாள் கோவில், திரு வெஃகா கோவில், அஷ்டபுஜகரம் கோவில் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது கம்போடியா கோவில்கள். அஷ்ட புஜம் அதாவது எட்டு கைகளுடனுள்ள பெருமாள் இரண்டு இடங்களிலும் உள .

பெரிய அதிசயம்
தமிழ் நாட்டிலுள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாளன்று சூரிய ஒளி கோவிலுக்குள் நுழைவதையும், கர்ப்பக் கிரஹத்திலுள்ள சிலை மீது சூரிய ஒளி பட்டு சூர்ய தேவனே வழிபடுவதையும் பார்க்கிறோம். அங்கோர்வாட்டிலும் சூர்யன், வசந்த காலத்தில் அடியெடுத்து வைக்கும் நாளன்று அங்கோர்வாட்டின் நடுப்பகுதியில் சூரியன் உதயமாவதைக் காணலாம். கோவில் மேற்கு நோக்கி இருப்பதால் நடு கோபுரத்தில் பின்பக்கம் சூரியன் உதயமாகும். இதைவிட அதிசயம் பீஷ்மர் சிலை மீது சூர்ய ஒளி விழும் நாளாகும். மஹாபாரத யுத்தத்தில் அம்புகளால் வீழ்த்தப்பட்ட பீஷ்ம பிதாமஹர், அம்புப் படுக்கையில் சயனித்து, ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பின்னர், தான் நிர்ணயித்த உத்தராயண புண்ய காலத்தில் உயிர் துறக்கிறார் . அந்த குறிப்பிட்ட உத்தராயண புண்ய காலத்தில் சூரிய ஒளி பீஷ்மரின் சிற்பம் மீது விழும்!!!
3. மூன்றாவது அதிசயம் கங்கை நதி சிவன் தலையில் இருந்து விழுந்து, விஷ்ணுவின் பாதங்களைக் கழுவி சமவெளியில் பாய்வதாக புராணங்கள் செப்பும். அதே போல சியம் ரீப் (Seam Reap) ஆற்றில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போரினால் சீரழிந்த கம்போடியாவில் பாதுகாப்பற்றுக் கிடந்த சிலையின் உடல் பக்கத்தை மட்டும் அறுத்து எடுத்து மேலை நாட்டு மியூசியங்களுக்கு விற்று விட்டனர் சிலைத் திருடர்கள்.

ஹரிஹரன் (சிவன்+ விஷ்ணு) முதலிய உருவங்கள் இந்தியாவிலும் காம்போடியாவிலும் உண்டு.
4.ஹைதாராபாத் சாலார் ஜங் மியூசியத்தில் விஷ்ணுவை சுமக்கும் கருடன் சிலை மிகவும் அழகானது (Salarjung Museum in Hyderabad). இது போன்ற உருவங்கள் கம்போடியாவில் உள்ளன. மிக அழகான ஹரிஹரன் சிலை, தலை இல்லாமல் நாம்பென் மியூசியத்தில் நிற்கிறது; அதன் அருகில் ஒரு சின்ன போர்டு வைத்துள்ளனர். “இந்தச் சிலையின் தலை பாரிஸ் நகரிலுள்ள கெய்மே (Musee Guimet) மியூசியத்தில் இருக்கிறது” என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
5. கடல் கடைந்து அமிர்தம் எடுத்த காட்சி கம்போடியர்களுக்கு மிகவும் பிடித்த காட்சி . பல ஹோட்டல்களிலும் பொது இடங்களிலும் காணலாம். அங்கோர் வட்டில் இந்தக் காட்சி பிரம்மாண்டமான அளவில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது (49 மீட்டர்).
கம்போடியாவில் நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. போரினாலும் காலத்தின் கோலத்தாலும்
அழிந்தது போக எஞ்சியத்தைக் காணும்போதே நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது!!


tags — கம்போடியா – காஞ்சீபுரம், தொடர்பு, அங்கோர்வாட்
–subham–