
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8196
Date uploaded in London – – –18 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஜோதிடருக்கான தகுதிகள்!
ச.நாகராஜன்
வேதாங்கங்களில் ஒன்றான ஜோதிட சாஸ்திரம் அளக்க முடியாத ஒரு கடல். அதில் மூழ்கி நல் முத்தெடுப்பது என்பது இறைவன் அருளாலும், தவத்தாலும், வல்லார் உபதேசத்தாலும், தகுந்த பயிற்சியாலுமே முடியும்.
பெங்களூர் பி. சூர்யநாராயணராவ் (தோற்றம்: 12-2-1856 மறைவு: மார்ச் 1937) குறிப்பிடத்தகுந்த சிறந்த ஜோதிடர். அவரது பேரன் தான் உலகம் புகழும் பி.வி.ராமன் ஆவார்.
ஏராளமான புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ள சூரியநாராயணராவ் ‘தி அஸ்ட்ராலஜிகல் ப்ரைமர்’ (The Astrological Primer) என்ற ஆங்கில நூலில் சிறப்பான ஒரு முன்னுரையை எழுதியுள்ளார்.
1892ஆம் ஆண்டு இது வெளியிடப்பட்டது.
இதில் ஜோதிடருக்கான தகுதிகள் பற்றி அவர் கூறுவது இது :-

இந்த உலகில் மிக உன்னதமான ஒரு விஞ்ஞானம் இருக்குமானால் அது ஜோதிடமே. வெற்றிகரமாக ஒரு ஜாதகத்தைக் கணித்துக் கூற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இன்றியமையாதவையாக விதிக்கப்பட்டுள்ளன :-
கீழ்த்தரமான நோக்கம் இருக்கக் கூடாது
திருப்தி
கணிதத்தில் மிக உயரிய திறமை
மொழியை ஆளும் திறன்
ஆழ்ந்த நுண்ணறிவு
காலம் மற்றும் சூழ்நிலை பற்றிய அறிவு
ஜோதிட சாஸ்திர நுட்பங்களைப் பற்றிய தெள்ளிய அறிவு
நேர்மை மற்றும் உண்மை
சத்யம்
முறையான உபதேசம்
(If there is any sublime science in this world, it is astrology and the following qualifications have been laid down as indispensable for successful
prediction :-
No mean motives
Contentment
High proficiency in mathematics
Linguistics Command
Great Intelligence
A knowledge of the times and circumstances
A thorough knowledge of the astrological technicalities
Honesty and Sincerity
Truthfulness
Proper Initiation)

இந்தத் தகுதிகள் இல்லாத நிலையில் ஜோதிட கணிப்புகள் பொய்யாகின்றன; கேட்டவருக்கும் திருப்தி இல்லாத நிலை; ஜோதிட சாஸ்திரத்திற்கும் அவப் பெயர் என்ற நிலையை பொய்க் கணிப்புகள் உருவாக்குகின்றன.
ஒரு ஜோதிடர் ஒரு ஜாதகருக்குப் பலன் சொல்ல வேண்டுமெனில் குறைந்த பட்சமாக 3000 கிரகநிலைகளை அலசி ஆராய வேண்டியதாக இருக்கிறது.
இதற்கான பலன்களும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிலைக்கும் ஒரு வினாடி என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு மணி நேரம் கழித்து தான் அவர் பலனைச் சொல்ல ஆரம்பிக்க முடியும்.
ஆனால் நடப்பது என்ன? உங்களுக்கே தெரியும்!
உத்தாயோஷசி தேவதாம் ஹ்ருதி நிஜாம் த்யாத்வா வபுசோதனம்
க்ருத்வா ஸ்நான புரஸ்ஸரம் சலீல நிக்ஷேபாதி கர்மாகிலம் |
க்ருத்வா மந்த ஜபாதிகம்ச விதித்வா பஞ்சாங்க வீக்ஷாம் ததா
கேதானாம் கணானாம்ச தைவவிதாதா ஸ்வஸ்தானந்தராத்மா பவேத் |
ஒரு ஜோதிடரானவர் சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்து குளித்தல், தெய்வங்களைப் பிரார்த்தித்தல், சூரியனுக்கு அர்க்யம் விடல், மந்திரங்களை ஜெபித்தல் முதலான தினசரி கர்மாக்களை முடிக்க வேண்டும்.
பின்னர் பஞ்சாங்கத்தை எடுத்து சாந்தமான மனதுடன் கிரகநிலைகளைக் குறித்து கணித்தல் வேண்டும்.
திதி, வாரம், யோகம், கரணம், நக்ஷத்ரம் ஆகியவற்றை நன்கு கணித்தலே அவரது முதலாவது வேலை.
கணிதேஷு ப்ரவீனோயஹா சப்த சாஸ்த்ரே க்ருத ஸ்ரமஹா
ந்யாயவித் புத்திமான் தேச திக்காலக்ஞோ ஜிதேந்திரியாஹ |
ஒரு ஜோதிடரானவர் கணிதத்தில் தேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சப்த சாஸ்திர நுணுக்கங்களை அறிந்தவராக இருக்க வேண்டும். நியாயவானாக இருத்தல் வேண்டும். புத்திசாலியாக இருக்க வேண்டும். திசை, வெளி, காலம் ஆகியவற்றைத் தன் புலன்களால் வென்றவராக இருத்தல் வேண்டும்.
த்ரிகந்தக்ஞோ தர்சனீயாத் ச்ரௌத ஸ்மார்த்த க்ரியாபராஹா
நிர்தாம்பிகா சத்யவாதீ தைவக்ஞோ தைவவித் ஸ்திரஹ |
ஒரு ஜோதிடரானவர் திரிஸ்கந்தங்கள் அதாவது சித்தாந்தம், சம்ஹிதா மற்றும் ஹோரா ஆகிய மூன்றிலும் முழுமையான அறிவைக் கொண்டவராக இருத்தல் வேண்டும். சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கிரியைகள் பற்றிய அறிவைக் கொண்டவராக இருத்தல் வேண்டும். ஒருபோதும் கர்வமுடையவராக இருத்தல் கூடாது. ஸத்தியத்தையே பேசுதல் வேண்டும்.
அத்வேஷி நித்ய சந்தோஷீ கணிதாகம பாரகஹா
முகூர்த்த குண தோஷக்ஞோ வாக்மீ குஷல புத்திமான்
ஒரு ஜோதிடரானவர் பொறாமை கொண்டவராக இருத்தல் கூடாது. எப்போதும் திருப்தி கொண்டவராக இருத்தல் வேண்டும். கணிதத்தில் வல்லவராக இருத்தல் வேண்டும். நல்ல மற்றும் கெடுதலான முகூர்த்தம் பற்றிய அறிவைக் கொண்டிருத்தல் வேண்டும். நன்கு பேசத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். கூரிய அறிவைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
க்ருத்ஷ்னாம் கோபாங்க குசலம் ஹோரா கணிதை நைஷ்டிகம்
யோ ந பூஜயதே ராஜா ச நாச முபகச்சாதி |
ஒரு அரசன் கணிதம், ஜோதிட அறிவு ஆகியவை கொண்ட ஜோதிடரை நன்கு மதிக்காவிடில் தனது நாசத்தைத் தானே கொண்டு வருபவனாக அமைவான்.
இது தவிர அனேக ஜோதிட நூல்களில் ஜோதிடருக்கான இலக்கணங்கள், தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
வராஹமிஹிரர் கூறுவது இது:
அனேக ஹோரா சாஸ்த்ரக்ஞ பஞ்சசித்தாந்த கோவித: |
உஹாபோஹோ படு: சித்தாமந்த்ரோ ஜானாதி ஜாதகம் ||
இதன் பொருளைப் பார்ப்போம்:
அனேக ஹோரா சாஸ்த்ரக்ஞ : ஜோதிடத்தின் பல கிளைகளையும் நன்கு கற்றுக் கொண்ட ஒருவர்
பஞ்சசித்தாந்த கோவித: : சூரியன், வசிஷ்டர், பௌலஷர், பராசரர், நாரதர் போன்ற பெரும் மஹரிஷிகளால் விரித்துரைக்கப்பட்ட ஐந்து சித்தாந்தங்களை அறிந்து கொண்ட ஒருவர்
உஹாபோஹோ படு: : கேள்வி கேட்பவரின் மனக்கற்பனைகளை நன்கு அறிந்து கொண்டு தக்க முடிவுகளை வழங்குபவர்
சித்தாமந்த்ரோ ஜானாதி ஜாதகம் – இவை மட்டுமன்றி கணிப்பில் துல்லியமாக விளங்க சித்தா, மந்திரம் ஆகியவற்றில் வல்லுநரான ஒருவர்
மட்டுமே நல்ல ஜோதிடராக விளங்க முடியும்.
இது வராஹமிஹிரரின் துணிபு.
ஆக ஜோதிடருக்கான இலக்கணம் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது. இன்னும் பல ஜோதிட நூல்களையும், அற நூல்களையும் ஆராய்ந்து அவற்றில் எல்லாம் கூறப்பட்ட தகுதிகளையும் சேர்ந்த்துப் பாதால் உண்மையான ஜோதிடருக்கு இவ்வளவு தகுதிகள் வேண்டுமா என்ற பிரமிப்பும் இப்படிப்பட்டவரை இந்தக் காலத்தில் எங்கே கண்டுபிடிப்பது என்ற திகைப்பும் ஏற்படும்.
அது சரி, கலி காலத்தில் ஜோதிடர்கள் எப்படி இருப்பார்கள்? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
நன்றாக மாட்டிக் கொண்டான், நம் ஜோதிடர்களிடம் என்று நினைக்கிறீர்களா? எனக்கு எதற்கு பொல்லாப்பு?!
ஒரு மகா பெரியவர் சொன்னதை அப்படியே சொல்லி விடுகிறேன்.
tags – ஜோதிட சாஸ்திரம், ஜோதிடர் ,தகுதிகள்

***