அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்! (Post No.8242)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8242

Date uploaded in London – – –26 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!

ச.நாகராஜன்

கங்கையிற் புனிதமாய காவேரியின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.

கொங்கு மண்டலத்தில் மேல்கரை அரைய நாட்டில் உள்ள தலம் கறையூர்.  திருப்பாண்டிக் கொடுமுடி என்ற தலப் பெயரைக் கொண்ட இது இந்நாட்களில் கொடுமுடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்சி –ஈரோடு இருப்புப் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது.

அங்குள்ள கோவிலில் எழுந்தருளியிருப்பவர் மகுடேசர்.

இறைவியின் திருநாமம்:  மதுரபாஷிணி,திரிபுரசுந்தரி, பண்மொழிநாயகி, வடிவுடைநாயகி.

மகுடேஸ்வரரைப் பற்றிய வரலாறு சுவையானது.

பூச்சாத்த முடியாத படி மிக உயர்ந்த சிவலிங்கமாக விளங்கினார் மகுடேசர். அவரை அகத்தியர் தன் கைப்பிடியில் அடங்கச் செய்ய பூமியில் தாழ்ந்தார் மகுடேசர்.

அகத்தியர் தன் கமண்டலத்துள் அடக்கிக் கொண்டு வந்த காவேரி ஆறானது கீழே தரையில் படிந்து ஓடுமாறு விநாயகர் காக்கை வடிவம் எடுத்துக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். பெருகி ஓடும் காவேரி மீது முனிவர் கோபப்பட்டார்.

உடனே பெண் வடிவாக அகத்தியர் முன் தோன்றிய காவேரி, “ஐயனே! சிவபிரானின் கட்டளையால் விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்தது தெரிந்தும் கூட என் மீது கோபப்படுதல் தகுமோ என்று கூற முனிவர் சாந்தமடைந்து ஆலயத்தினுள் நுழைந்தார்.

மகுடேசர் ஒரு திருவிளையாடலை நடத்தக் கருதி பாதாளத்தில் அழுந்தினார்.

பிராட்டியார் திருமணச் சேவையைக் காணாது (இறைவன் – இறைவியின் திருமணக் காட்சியைக் காணாமல் அகத்தியர் தெற்கு நோக்கி வந்த கதை நமக்குத் தெரியும்) என்னை அகற்றி விட்டதுமன்றி, இப்போது தரிசிக்கவும் வகையின்றிப் பாதாளத்தில் செல்கின்றாரே என்று எண்ணிய அகத்தியர் ஓடிச் சென்று அவரைக் கையால் பிடித்தார். அந்தக் கைப்பிடிக்குள் அப்படியே சிவபிரான் நின்றருளினார். அப்படியே நாளும் மகுடேசர் அங்கு விளங்குகின்றார்.

இதை கொங்கு மண்டல சதகம் 12ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது :-

நந்து படித்துறை சூழ்கறை யூர்தனி னம்பரைப் பூத்

தந்து படித்தருச் சிக்கவொட் டாத்திருத் தார்முடியும்

முந்து படிக்கு ளடங்கக் குறுமுனி முன்கையினால்

வந்து பிடிக்கு ளடங்கிய துங்கொங்கு மண்டலமே

கொடுமுடிப் புராணம் இந்தத் திருவிளையாடலைக் கூறும் பாடல் இது:-

விரிதிரைப் பொன்னி போக வினையமுற் றினமென் றின்னோன்

பரிவுறப் போது நின்றான் பாதலத் தடைது மென்றே

இருநிலத் திழிதல் காணா முனிவர னேங்கி மாழ்கி

பிரிவுறா வகைசெங் கையாற் பிடித்தனன் பிடிக்குள் நின்றான்

                                    (கொடுமுடிப் புராணம்)

திருப்பாண்டிக்கொடுமுடி தேவார குரவர் மூவரின் பாடல் பெற்ற தலமாகும். கொங்குநாட்டில் மூவர் தேவாரம் பெற்ற தலம் இது ஒன்றேயாகும்.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் நமசிவாயத் திருப்பதிகம் பாடி அருளிய திருத்தலமும் இதுவே தான்!

tags — திருப்பாண்டிக் கொடுமுடி, அகத்தியன்,

***

Leave a comment

Leave a comment