
Post No. 8258
Date uploaded in London – 29 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
துருக்கியில் ரிக்வேத கல்யாண காட்சி -புதிய கண்டுபிடிப்பு
துருக்கி நாட்டில் பொகாஸ்கோய் (Bogazkoy) என்னுமிடத்தில் கிமு.1380 கல்வெட்டில் ரிக் வேத தெய்வங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது எல்லோரும் அறிந்த செய்தி. விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்களில் நீண்ட காலமாக உள்ள செய்தி ; இதன் மூலம் சம்ஸ்கிருதம், உலகில் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட மிகப்ப ழைய மொழி என்ற பெருமை பெற்றது . ஏனெனில் அதே தெய்வங்களின் பெயர்களை இந்திரன், அக்கினி, நாஸத்யர் களை (அஸ்வினி தேவர்கள்) இன்றும் நாம் வணங்கி வருகிறோம். நம்முடைய பெயர்களில் மட்டுமின்றி எல்லா கோவில் மந்திரங்களிலும் அஸ்வினி, அஸ்வின், இந்திரன் முதலிய பெயர்கள் உள்ளன . இதைவிட பழைய பாபிலோனிய, சுமேரிய கல்வெட்டுகள் இருந்தும் அவைகள் மியூசிய தெய்வங்கள் தான் . அதுமட்டுமல்ல ரிக்வேதத்தில் அதிகம் துதிகளை உடைய இந்திரன் பெயர் காஷ்மீர் முதல் கண்டி (Kandy in Sri Lanka) வரை உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் இன்றும் இந்திரன் பெயர் உள்ளது. தமிழர்களிடையே இந்திரன் பெயரோ கொள்ளை மலிவு. ராஜேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன் உபேந்திரன் முதலிய பெயர்களை தினமும் கேட்கிறோம்.


ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 85-ஆவது துதி கல்யாண மந்திரம். இதை நாம் எல்லோரும் அடிக்கடி கேட்கிறோம். பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , பிரமணர்களைக் கொண்டு நடத்தப்படும் கல்யாணங்களிலும் , திரைப்படக் கல்யாணக் காட்சிகளிலும் நீங்களும் இதைக் கேட்டிருப்பீர்கள். இதில் இரண்டு அருமையான வரிகள் வருகின்றன.
“உன்னுடைய இதயமும் என்னுடைய இதயமும் ஒன்றாகட்டும்” என்று புதுமணத்தம்பதிகள் மந்திரம் சொல்கின்றனர். இதை இன்று உலகிலுள்ள எல்லா மதத்தினரும் இதயம் (Heart) படம் போட்டு வாழ்த்து அட்டைகளிலும் (Greeting Cards and Greeting Stamps) தபால்தலைகளிலும் பயன்படுத்துகிறோம். 47 மந்திரங்கள் அடங்கிய ரிக்வேத 10-85ம்- (RV 10-85 hymn) துதியில் இது ஒரு மந்திரம்.

கணவன் 11–ஆவது குழந்தை!!
மற்றொரு அற்புதமான வரி “மணப்பெண்ணே உனக்கு பத்துக் குழந்தைகள் பிறக்கவேண்டும். உன்னுடைய கணவனை 11ஆவது குழந்தையாக நடத்து”. இது மிகவும் உளவியல் ரீதியான (Psychological) அறிவிப்பு. கணவனும் மனைவியும் கொஞ்சிக் குலவுவர். ஆனால் குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான அன்பும் கவனிப்பும் குழந்தை இடத்தில் போய்விடும்.அந்தக் குழந்தையை கணவனின் மறு அச்சாக (replica) அந்தப் பெண் பார்ப்பது இதற்கு காரணம். ஆகையால் பத்துக் குழந்தை பெற்றாலும் கணவனையும் கைவிடாமல் குழந்தையைக் கவனிப்பது போல கவனி என்று அற்புதமாக சொல்கின்றனர். இதை எல்லா கல்யாண விட்டு மந்திரங்களிலும் இன்றும் கேட்கலாம்.
திரைப்படக் காதல் பாட்டுகளுக்கு எல்லாம் மூலம் இந்த ரிக் வேத துதிதான். இதிலுள்ள 47 மந்திரங்களில் பல மந்திரங்களுக்கு இன்னும் அர்த்தமே தெரியவில்லை. வெளிநாட்டு மொழி பெயர்ப்பாளன் ஒவ்வொருவனும் ஒருமாதிரி உளறிவைத்துள்ளான் . ரால்ப் கிரிப்பித் (Ralph Griffith) மூன்று இடங்களில் அர்த்தம் புரியவில்லை என்று ஒப்புக்கொள்கிறார். இன்னும் ஓரிடத்தில் ‘ஒருவேளை’ (Probably) இப்படி இருக்கலாம் என்பார். மற்றவர்கள் வழக்கம்போல வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டி கிளறி முடி இருக்கின்றனர் .


47 மந்திரங்களிலும் 25-க்கு மேலான வேதகால தெய்வங்கள் பெயர்கள் உள்ளன. கடைசி மந்திரத்தில் உள்ள தேஸ்த்ரி Destri என்பது ரிக்வேத சரஸ்வதியாக இருக்கலாம் என்பது ஸாயனர் கருத்து. வேறு இடங்களில் இந்த சொல் வரவே இல்லை. இன்னும் ஏராளமான புதிர்கள் உள்ளன. ஆனால் சொல்லவந்த விஷயம் புதிய கண்டுபிடிப்பு.

புதிய கண்டுபிடிப்பு
கல்யாண ஊர்வலம் என்பது இந்துக்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. இந்திய துணைக் கண்டத்திலுள்ள முஸ்லீம்கள் இதை ஓரளவு பின்பற்றுகின்றனர். கிரேக்கர் கல்யாணங்கள் முதலியனவும் ஆடல் பாடல்களுடன் நடக்கும். ஆயினும் மாப்பிள்ளை அழைப்பு (Jan vasam) ஊர்வலம், பின்னர் மணப்பெண்ணை மணமகனுடன் சேர்த்து ஊர்வலம் விடுவது, அதாவது கணவன் வீட்டுக்கு அனுப்புவது எல்லாம் மந்திரத்தில் உள்ள ஒரே மதம் இந்து மதம்தான்.
தங்க ரதத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் ஊர்வலமாகப் போகும்போது “எல்லோரும் வந்து வாழ்த்துங்கள்” என்று ஒரு மந்திரம் அழைக்கிறது.
பிறகு ‘கையும் கையும்’ கலப்பதுதான் கல்யாணம் என்பதையும் ஒரு மந்திரம் சொல்கிறது. இதைக் ‘கைப்பிடித்தல்’ என்று ஆண்டாள் முதல் பலரும் பாடி இருக்கின்றனர் . பிராமண வீ ட்டு திருமணப் பத்திரிகைகளில் இதைப் ‘பாணி கிரஹணம்’ என்று சம்ஸ்கிருதத்தில் எழுதி இருப்பர். இதற்குப்பின்னர் கன்யா தானம் (பெண்ணை தானமாகக் கொடுக்கிறேன்) என்ற வரியும் இருக்கும்.

பெண்ணுக்கு நாலாவது கணவன் மாப்பிள்ளை!!!
மற்றொரு மந்திரம் மணப்பெண்ணை சூர்யா என்ற பெண் பெயரால் அழைக்கும் . மணமகன் சந்திரன் (சோமன்).
ஏற்கனவே சோமன், கந்தர்வன் அக்கினி ஆகியோர் மணந்த மணமகளை இப்பொழுது ‘நாலாவதாக’ இந்த மணமக க்கு தருவதாக ஒரு மந்திரம் சொல்லும். இது தத்துவ பூர்வ விஷயம். இதைச் சொன்னவுடன் எந்த மாப்பிள்ளையும் கோபித்துக் கொண்டு மணமகளை ‘வேண்டாம் போ’ என்று சொன்னதாக வரலாறு இல்லை!!
இந்த கல்யாண ஊர்வலக் காட்சி அப்படியே பொகஸ்கோய் (Yazilikaya near Bogos Kaya) பக்கத்திலுள்ள பாறையில் செதுக்கப்பட்டுள்ளது..
தென் இந்தியாவில் பெரிய கோவில்களில் ஆண்டு தோறும் இறைவன்- இறைவியின் கல்யாண உற்சவம் சிறப்பாக இன்றும் கொண்டாடப்படுகிறது. சுமேரியாவிலும் , மதுரை மீனாட்சி கோவில் போலவே திருமணம் நடந்தது பற்றி முன்னரே எழுதியுள்ளேன் அதே போன்ற காட்சி பொகஸ்கொய அருகில் யாஜிலிகாயாவில் (Yazilikaya) செதுக்கப்பட்டுள்ளது இதில் ஒவ்வொரு கடவுளும் ஒரு வாகனத்தில் வரு வதை முன்னரே வாஹன ஆராய்சசிக் கட்டுரையில் தந்துள்ளேன்.

ஏனைய கடவுள் கல்யாணங்களை விட இதில் சிறப்பு என்னவென்றால் ரிக் வேத கல்யாண மந்திரத்துக்கும் இந்தக் காட்சிக்கும் உள்ள ஒப்பீடு ஆகும்
1.எந்தப் பெண் கல்யாணம் செய்துகொண்டாலும் இந்துக்கள் மந்திரத்தில் அந்தப் பெண்ணை சூர்யா (Miss Suuryaa) என்றுதான் அழைப்பர் . அதே போல துருக்கியிலும் சூர்யா (Suuryaa) என்ற பெண் கல்யாணக் காட்சியைக் காணலாம். இந்துக்களின் கதையின்படி சூர்ய தேவனின் மகள் சூர்யா .
2.இரண்டாவது ஒற்றுமை கல்யாண ஊர்வலம் ஆகும். சூர்யா ஊர்வலமும் மணமகன் ஊர்வலமும் எதிர் எதிர் திசையில் வந்து சந்திக்கிறது . இங்கு மண மகனின் பெயர் தேசுப் (Tesub) என்னும் பருவநிலைக் (weather god) கடவுள் ஆகும். அவர் ரிஷப வாஹனம் அருகில் நிற்க காட்சி தருகிறார். இது மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு வரும் சிவனை நினைவு படுத்தும் . அதுமட்டுமல்ல அவர் பெயரிலும் சோமன் உண்டு. அவரை சோமசுந்தரர் என்றே அழைப்பர்.
3.துருக்கி பாறை சிற்பங்களில் அவர் அருகில் இரண்டு குட்டி தெய்வங்களும் இருக்கின்றன. இவர்களை ரிக் வேத கல்யாண மந்திரம் குறிப்பிடும் அஸ்வினி தேவர்களுக்கு ஒப்பிடலாம்
4.சூர்யா என்பவள் சிம்ம வாஹனத்தில் வருவதாக யாஜிலிகாய பாறைச் சிற்பம் காட்டுகிறது. இது சிவனின் மனைவி காளி, துர்க்கை என்னும் பல பெயர்களில் சிம்ம வாஹினியாக காட்சி தருவதற்கு இணையானது
(காய, கோய் என்ற சொல்லுக்கு பாறை என்று பொருள்).
5.ஐந்தாவது ஒற்றுமை ஒவ்வொருவரும் கை நீட்டி நிற்கின்றனர். கைக்குமேல் அவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது ‘பாணி கிரகணத்தை’ — கைப்பிடித்தலை – குறிக்கிறது
6. சூர்யா என்னும் மணப்பெண் அருகில் 2 பெண்கள் , அவளுடைய மகன், ஒரு குரங்கு ஆகியன உள்ளன. ரிக் வேத கல்யாண மந்திரத்தில் இருபதுக்கும் மேலான பெயர்கள் வருவதால் நாம் எதையும் குறிப்பிடலாம்
7.கடவுளருக்குக் கீழே இருதலைப் பறவை (Double Headed Eagle) சித்தரிக்கப்பட்டுள்ளது ‘ஈருடல் ஓருயிர்’ என்பதைக் காட்டும் பறவை இது. இரண்டு தலைகள் இருக்கும் ஆயினும் உடம்பு ஒட்டி இருக்கும்

கி.மு 1400 முதல் மத்திய கிழக்குச் சிற்பங்களில் தோன்றும் இருதலைப்புள் (Double headed bird) விஜய நகர காசுகள் வரை பொறிக்கப்பட்டு இன்று பல நாட்டுக் கொடிகளிலும் காசு , ரூபாய் நோட்டுகளிலும் அச்சி டப்பட்டுள்ளது உடம்பு ஒரே இதய வடிவில் இருக்கும் அகநானுறு 12, கலித்தொகை 89, புறத் திரட்டு 785 முதலியவற்றில் இருதலைப் புள் பாடப்படுவதை முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்.
8. மேலும் ஆண் தெய்வங்கள் இடது புறமும் பெண் தெய்வங்கள் வலது புறமும் நிற்கின்றன . இன்றும் கூட இந்து கல்யாணங்களில் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் மற்றொரு புறமும் நிற்பர். கோவில்கள், பஜனைகளில் கூட
இப்படிப் பிரிவு (segregation) உண்டு. வெளிநாட்டில் இதைக் காணமுடியாது.
இதே போல வல , இட அமைப்பை முகூர்த்த நேரத்தில் காணலாம்.
இந்த துருக்கிய சிற்பங்கள் அனைத்தும் ஹிட்டைட் (Hittites) கலாசாரத்தின் தாக்கம் என்றும் அவர்கள் சம்ஸ்கிருதம் தொடர்பான (இந்தோ ஐரோப்பியன் மொழிக்குடும்பம்) மொழி பேசினர் என்றும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.
எப்படி ஒரே சிவன் -பார்வதி, ஒரே விஷ்ணு -லெட்சுமி ஒவ்வொரு ஊர்க் கோவிலிலும் வெவ்வேறு பெயர்களுடன், வெவ்வேறு கதைகளுடன் காணப்படுகின்றனரோ அப்படி மத்திய கிழக்கிலும் 3000 தெய்வங்கள் இருக்கின்றன. ஆகையால் பெயர்களை மறந்து விட்டு கதையின் உயிரோட்டத்தை மட்டும் ‘சலித்து எடுக்க’ (filter) வேண்டும் ; அப்படிப் பார்க்கையில் யாஜிலிகாயா சூர்யா கல்யாணமும் பிராமண வீடுகளில் மணப்பெண்ணை சூர்யாவாக பாவித்து ரிக் வேத (10-85) மந்திரம் சொல்வதும் ஒன்றே.
வாழ்க மணமக்கள்!!
Tags- துருக்கி ரிக்வேத 10-85 , கல்யாணம், மந்திரம்.
