
Post No. 8289
Date uploaded in London – – –5 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹெல்த்கேர் மே 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புத்தக அறிமுகம்
ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 1
(Healthy Mind, Healthy Body)
வேதாந்த கேசரி பத்திரிகை வெளியீடு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை – 4
ச.நாகராஜன்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் பிரபலமான ஆங்கில ஆன்மீகப் பத்திரிகை வேதாந்த கேசரியில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் தொகுதி இது. 231 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்த நிபுணர்களாலும் ஸ்வாமிஜிக்களாலும் எழுதப்பட்டுள்ளதால் ஆரோக்கியமான உடல் மற்றும் ஆரோக்கியமான மனம் பெறுவதற்கான அறிவுரைகளைப் பெற முடிகிறது.

ஹோலிஸ்டிக் ஹெல்த்
Holistic Health என்ற கட்டுரை ஸ்வாமி கௌதமானந்தா அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
அன்னை சாரதா தேவி ஜயராம்வாடியில் உள்ள சிம்ஹவாஹினி கோவிலில் உள்ள களிமண் மூலம் பல வியாதிகளைக் குணப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஏன் பாம்பு கடித்த விஷம் கூட பூமியின் மண்ணால் போக்கப்பட்டிருக்கும் பல கேஸ்களை நாம் காண்கிறோம். யோகா தெராபி என்பது ஆஸ்த்மா, அதிக இரத்த அழுத்தம், வயிற்றுப் புண், போன்ற வியாதிகளை மூலிகைகள் மூலமும் பிராணாயாமம் போன்ற யோக முறைகளின் மூலமும் தீர்க்கப்படும் ஒரு சிகிச்சை முறையாகும்.
மியூசிக் தெராபி என்பது இசையின் மூலம் சிகிச்சை பெறும் ஒரு முறையாகும்.
பெங்களூரில் உள்ள NIMHANS-ஐச் சேர்ந்த டாக்டர் பி.என். மஞ்சுளா (Dr B.N.Manjula) மற்றும் பல மூளை இயல் நிபுணர்கள் இசையானது பல மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
ஸ்வாமி விவேகானந்தா ஆன்மீக அருளுரைகள், வியாதிகளைக் குணப்படுத்தும் என நம்பினார். “நன்கு உறுதியாக மறுக்கமுடியும் எனில் விஷமுள்ள பாம்பின் விஷம் கூட உங்களை ஒன்றும் செய்ய முடியாது” என அவர் கூறினார்.
பாபுராம், யோகேன் என்ற பக்தர்கள் வியாதியால் அவஸ்தைப் பட்ட போது ஸ்வாமிஜி, ” ‘நான் ஆத்மா; வியாதியால் நான் எப்படி பாதிக்கப்பட முடியும்’ என்று தொடர்ந்து ஒரு மணி நேரம் தியானித்தால் வியாதி மறைந்தே போகும் என்று பாபுராம் மற்றும் யோகேனிடம் கூறுங்கள்” என்றார்.
ஆகவே வியாதி என்பதைப் போக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் கையாள முடிவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையின் அடிப்படை மதிப்புகள் பற்றிய அறிவும் சேரும் போது சிகிச்சை பூரண சிகிச்சையாக மிளிரும்.

ஹெல்த் அண்ட் ஸ்பிரிட்சுவல் லைஃப்
Health and Spritual Life என்ற கட்டுரை ஸ்வாமி பஜனானந்தா அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
அன்னம் என்பது பிரம்மம்.
தைத்திரீய உபநிஷத் நான்கு விரதங்களை அனைத்து மக்களுக்கும் உபதேசிக்கிறது.
- உணவை வீணாக்காதே (உணவைத் தவறான முறையில் சமைப்பது அல்லது அதை வீணாக்குவது)
- உணவை மறுக்காதே
- உணவின்றி வீட்டிற்கு வரும் அதிதியைத் திருப்பி அனுப்பாதே
- உணவு அதிகமாக சமைக்கப்பட வேண்டும். (அதாவது உணவு உற்பத்தி கூட வேண்டும்)
உணவிற்கு அடுத்தபடி உறக்கமும் உடல் பயிற்சியும் தேவை.
மனச்சோர்வுக்கும் இதர வியாதிகளுக்கும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடல் பயிற்சிகள் தீர்வாக அமைகின்றன.
இத்துடன் பயோரிதம் எனப்படும் உடல் லயத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
பயோ ரிதம், ல்யூனார் ரிதம், ஆன்யுவல் ரிதம் (Bio Rhythm, Lunar Rhythm, Annual Rhythm) என லயம் மூவகைப் படுகிறது.
சில மனிதர்கள் 24 மணி அல்லது 25 மணி அல்லது 36 மணி அல்லது 48 மணி நேர சுழற்சியைக் (Cycle) கொண்டிருக்கின்றனர். இது பயோரிதம் ஆகும்.
சிலர் சந்திரனின் அடிப்படையில் 28 நாள் சுழற்சிக்கு உட்படுகின்றனர். சிலரோ சூரிய சுழற்சிக்குத் தக ஒவ்வொரு பருவகாலத்திற்குத் தக்கபடி மாற்றங்களை அடைகின்றனர். ஆகவே நீங்கள் எந்த அடிப்படையில் இயங்குகிறீர்கள் என்பது முக்கியமானது.
இவற்றுடன் மனத் தடைகளைப் போக்க இறை பிரார்த்தனை இன்றியமையாதது.
ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ட்ரஸ்டிங் இன்னர் விஸ்டம்
அடுத்து Trusting Inner Wisdom என்ற கட்டுரையை அந்தோணி ஏ.அல்லினா (Anthony A. Allina) எழுதியுள்ளார்.
ஆத்ம ஈடுபாட்டுடன் இல்லாத வேலை அர்த்தமற்றது என்று கூறும் அல்லினா 1978இல் தனது புதிய க்ளினிக்கைத் தொடங்கிய போது ஆடோஜெனிக் ட்ரெயினிங் (Autogenic Training) என்ற புதிய தியான முறையைக் கற்றார். பல வியாதியஸ்தர்களுக்கு அவர் இந்த தியான முறையைக் கற்பித்த போது அதிசயிக்கத் தக்க விதத்தில் அவர்கள் மன அமைதியை அடைந்தனர்.
மருந்து என்பது மேலை நாட்டு மருந்தை மட்டும் கொடுப்பதல்ல; உடலின் உள்ளிருக்கும் மனதிற்கும் அமைதியைத் தருவதே என்பதை உணர்ந்தேன் என்கிறார் அல்லினா.
இப்படி உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட 16 கட்டுரைகள் உள்ளன.
அவற்றை அடுத்துப் பார்ப்போம்.
tags– ஆரோக்கியமான, மனம், உடல்
தொடரும்