
Post No. 8344
Date uploaded in London – – –15 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மாலைமலர் 4-7-2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ ..
அறிவியல் உரசிப் பார்த்து அதிசயிக்கும் யோகா!
ச.நாகராஜன்
எழுத்தாளர் பெற்ற இனிய பயன்!
ஒரு உண்மைச் சம்பவம்!

டேவிட் செய்ட்லர் என்பவர் ப்ளாடரில் (நீர்ப்பையில்) கான்ஸர் வந்ததால் அவஸ்தைப்பட்ட நோயாளி. இரண்டு வாரங்களில் அறுவைச் சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. செய்ட்லர் அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்க எண்ணினார். உடனடியாக தியானம் செய்ய ஆரம்பித்தார்; தியானப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார். குறிப்பாக ஆரோக்கியமான ப்ளாடர் இருப்பதாகத் தொடர்ந்து தியானித்து வந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் எடுக்கப்படும் சோதனையில் அவரது டாக்டர் கான்ஸருக்கான எந்த விதமான அறிகுறியும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். சந்தேகமடைந்த அவர் இன்னும் நான்கு வெவ்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தச் சொல்லி அவருக்கு கான்ஸர் இல்லை என்பதை உறுதிப் படுத்தினார். செய்ட்லர் ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஆவார்.
இது போன்ற ஆயிரக்கணக்கான உண்மைச் சம்பவங்களை நூற்றுக் கணக்கான புத்தகங்களும் ஆயிரக் கணக்கான கட்டுரைகளும் தெரிவிக்கின்றன.

தலாய்லாமா ஊக்குவித்த சோதனைகள்!
உலகின் அதிசயிக்கத் தக்க பெரும் அறிஞராகவும் மகானாகவும் திகழ்பவர் தலாய் லாமா. அறிவியலில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதோடு இந்தியாவில் தாம் வசிக்கும் தர்மஸ்தலாவிற்கு 2000ஆம் ஆண்டு முதலாக விஞ்ஞானிகளை அழைத்து அவர்களை பல்வேறு சோதனைகளை தியானம் சம்பந்தமாக மேற்கொள்ள ஊக்குவிக்கவும் செய்தவர்.
அவரது அறிவுரையின் பேரில் அமெரிக்காவில் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல மூளை இயல் விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்ஸன் தியானம் செய்யும் ஒரு லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எம் ஆர் ஐ எனப்படும் மாக்னெடிக் ரெஸொனன்ஸ் இமேஜிங் என்ற அதி நவீன சாதனத்தை உபயோகித்து சோதனை ஒன்றை மேற்கொண்டார்.
லாமா ஆறு விதமான தியான வகைகளை செய்து காண்பித்தார்.
கணந்தோறும் அவரது மூளை செயல்பாட்டை வீடியோ ஸ்கேன் செய்ய முடிந்தது. அத்துடன் இ.இ,ஜி.கருவியில் ஆறு தியான நிலைகளும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டன.
தயை பற்றிய தியானத்தை லாமா மேற்கொண்டார். அப்போது லாமாவின் மூளையில் இடப்பக்க ஃப்ரண்டல் கைரஸின் செயல்பாட்டைப் பார்க்க முடிந்தது. இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும். மூளையின் வலப்பக்க ஃப்ரண்டல் கைரஸ் பகுதி சோகம், துக்கம், ஏக்கம்,கவலை, மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

லாமா செய்த தயை பற்றிய தியானத்தில் அவரது இடப்பக்க பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற தயையையும் காண்பித்தது. இந்த நிலையை தியானப் பயிற்சி மூலம் பெற முடியும் என்பதை ஆய்வு உறுதிப் படுத்தியது.
அடுத்த சோதனையை பால் எக்மன் என்ற விஞ்ஞானி நடத்தினார். இவர் மனித உணர்ச்சிகளை அறிவியல் பூர்வமாக ஆராய்வதற்கான சோதனைகளைக் கண்டுபிடித்த முதல் விஞ்ஞானி. எக்மனின் ஒரு சோதனை மனித முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ மாறுபாடுகளைக் கண்காணிப்பதாகும். மின்னலென பளீரென்று நொடியில் தோன்றி மறையும் முகபாவ வேறுபாடுகளை யாராலும் சுலபமாகக் கவனிக்க முடியாது. மைக்ரோ – எக்ஸ்பிரஷன் எனப்படும் அதி நுண்ணிய முகபாவ மாறுபாடுகளை லாமா மீது நடத்தினார் எக்மன்.
திடீரென பயங்கரமான ஓசையை லாமா கேட்டால் என்ன நடக்கும் என்பதை எக்மன் சோதனை செய்து பார்த்தார். இந்த சோதனையின் பெயர் ஸ்டார்டில் சோதனை என்பதாகும். இந்த ஓசையைக் கேட்ட எவராலும் திடுக்கிடாமல் இருக்க முடியாது. இதுவரை இந்தச் சோதனைக்குட்பட்டவர்கள் திடுக்கிடும் முகபாவத்தை உடனே காண்பிப்பர். ஆனால் லாமா ஓபன் ஸ்டேட் என்ற தியான நிலையில் இருந்தார், அவரது முகபாவம் துளிக்கூட மாறவில்லை. பிரம்மாண்டமான ஓசையினால் ரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் மட்டுமே சிறிது உயர்ந்தது. எக்மன் அதிசயித்தார். எவ்வளவு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டாலும் சமநிலையில் இருக்க முடியும் என்பதை நிரூபித்தார் லாமா.
அடுத்ததாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு மனிதனின் அங்கங்கள் துண்டிக்கப்படுவதையும் தீ விபத்துக்குள்ளான இன்னொரு மனிதரின் தோல் உரிக்கப்படுவதையும் படமாக அவருக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. இவற்றை எந்தப் பார்வையாளர் பார்த்தாலும் வேதனையையும் அருவறுப்பையும் அடைவர்; அவரது முகம் அந்த உணர்வுகள கண நேரத்தில் வெளிப்படுத்தும்.
ஆனால் லாமாவோ தயை உணர்வைக் காண்பித்து மிகவும் ஓய்வாக இருந்தார்.
இது போன்ற ஏராளமான சோதனைகள் கால்ஸா உள்ளிட்ட பல பிரபல விஞ்ஞானிகள் மேற்கொண்டு யோகாவின் அளப்பரிய பலன்களை விவரித்துள்ளனர்!


இந்தியா உலகிற்கு அளித்த கொடை!
உலகத்திற்கு இந்தியா கொடுத்த கொடைகள் பல; பூஜ்யம் என்ற எண்ணைக் கொடுத்ததிலிருந்து பார்த்தால் முடிவற்ற பட்டியல் ஒன்று நமக்குக் கிடைக்கும். இந்தக் கொடைகளுள் முக்கியமானது யோகா. இன்று 192 நாடுகளுக்கும் மேலாக யோகா அங்கீகரிக்கப்பட்டு முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் பல்லாயிரக் கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர் என்பது எவ்வளவு உன்னதமான ஒரு விஷயம்!
சுவாமி விவேகானந்தர், பரமஹம்ஸ யோகானந்தா, அரவிந்தர் போன்ற மகான்கள் யோகாவின் மகிமையை தெளிவாக எடுத்துரைத்தனர்.
உலகம் யோகாவை அறிவியல் உரைகல் கொண்டும் உரசிப் பார்த்து அதன் அருமை பெருமைகளை அறிந்து இன்று அதை ஏற்றுக் கொண்டு விட்டது.
திருமூலர் சொல்லும் ரகசியம்!
யோகா என்றால் என்ன?
மனதையும் உடலையும் இணைப்பது யோகா!
மனதைக் கட்டுப்படுத்தி, நிலை நிறுத்தி, உடல் ஆற்றலையும் உள்ள ஆற்றலையும் வளர்த்து ‘உறு பொருளைக்’ காண வைப்பதே யோகா.
மிகப் பெரும் ஞானியான திருமூலர் தான் முன்னர் கொண்டிருந்த ஒரு கருத்தை மாற்றிக் கொண்டதாக ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.
உடம்பினை இழுக்கு என்று முதலில் அவர் நினைத்தார். ஆனால் அதை ஓம்பி, வளர்த்து உறுபொருளைக் காண முடிவதை அறிந்து அதை உலக மக்களுக்குத் தான் கண்ட சத்தியமாக இப்படிக் கூறுகிறார்:
“உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே”
அத்துடன் உடம்பை வளர்ப்பதற்கான உபாயத்தையும் அவர் அறிந்தார்; அதையும் அவர் கூறுகிறார் இப்படி :
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
உடம்பை சரியாகப் பராமரித்து வாழ அவர் 134 ஆசனங்களை அடிப்படையாகக்
கூறுகிறார்.
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே (திருமந்திரம் 563)
பொருள் :- மிகப் பழைய ஆசனமாகத் திகழ்வது சுவத்திகம். அத்துடன் பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம் ஆகிய ஏழு ஆசனங்களைக் கூட்டினால் வருவது முக்கியமான ஆசனங்கள் எட்டு. இவற்றுடன், சுவஸ்திகாசனம், கோமுகாசனம், வீராசனம், கூர்மாசனம், குக்குடாசனம், உத்தான கூர்மாசனம், தனுராசனம் உள்ளிட்ட 126 ஆசனங்கள் உள்ளன. (எட்டெட்டு என்றால் ஈரெட்டு 16. அத்துடன் பத்தைக் கூட்டினால் வருவது 26. அத்துடன் நூறைக் கூட்ட வருவது 126)
இப்பாடலில் இதைத் தெரிவிக்கும் திருமூலர் அவற்றைப் பயிலப் பரிந்துரை செய்கிறார்!
உறு பொருள் என்பது பொருள் பொதிந்த வார்த்தை. சங்க இலக்கியம், தேவார, திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட நூல்களில் ‘பொருள்’ என வரும் இடங்களை உற்றுப் பயில்வோர் பிரமிக்க வைக்கும் இரகசியங்களை அறியலாம்.
100 ஆண்டுகள் வாழ்வோமாக!
மனிதன் நூறு ஆண்டுகள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என நமது அறநூல்கள் வலியுறுத்துகின்றன.
ஈசாவாஸ்ய உபநிடதத்தால் கவரப்பட்ட மகாத்மா காந்திஜி அதில் கூறிய 100 ஆண்டுகள் வாழ்க என்ற உபதேச உரையால் ஈர்க்கப்பட்டு பூரண ஆயுள் வாழத் தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். (பின்னர் பல்வேறு காரணங்களை விவரித்து தனது அந்த ஆசையைத் துறந்து விட்டதாகத் தெரிவித்தார்.)
இப்படி மனித குலம் தவறாமல் 100 ஆண்டுகள் வாழ பதஞ்சலி முனிவர், பதஞ்சலி யோக சூத்திரத்தில் 196 யோக சூத்திரங்களை வழிமுறையாக வகுத்துக் கொடுத்தார்.
இந்த யோகம் சரியானது தானா, உண்மையானது தானா என அறிவியல் ஆராயப் புகுந்தது.

ஆழ்நிலை தியானம் தரும் அறிவியல் உண்மைகள்!
1970களில் மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியான முறைகளை சோதனைச்சாலை அடிப்படையில் அறிவியல் நிபுணர்கள் ஆராய்ந்தனர்.
செலவே இல்லாத, மதம்,இனம், ஜாதி, நாடு, ஆண் பெண் என்ற பால் வேறுபாடு, பணக்காரன் ஏழை என்ற அந்தஸ்து வேறுபாடு ஆகிய இவை அனைத்தையும் கடந்து அப்பாற்பட்டதாக விளங்கும் எளிய யோகா பயிற்சிகளால் கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படுவதை புள்ளி விவரத்துடன் ஆய்வு முடிவில் அவர்கள் தந்தனர்.
- யோகா கூறும் எளிய சுவாசப் பயிற்சியில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளி விடுகிறோம். இப்படிச் செய்வதானது ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவை வெகுவாகக் குறைக்கிறது. ஆழ்ந்த ஓய்வு நிலை ஏற்படுகிறது.
- இதயத் துடிப்பில் 5 துடிப்புக்ள் குறைகிறது. ஆகவே இதயம் வேலை செய்யும் பளு குறைகிறது.
- சுவாசிப்பதில் 60% குறைவதால் ஓய்வு ஏற்படுகிறது; ஆயுளும் நீடிக்கிறது.
- முன்கையில் இருக்கும் இரத்த ஓட்டம் தான், தானியங்கி நரம்பு மண்டலம் சீராக இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. சோதனைக்குட்பட்ட ஐவரிடம் 180 முறைகள் சோதனை செய்ததில் யோகா பயிற்சி செய்வோருக்கு இந்த இரத்த ஓட்டம் சீராக இருப்பதை ஆய்வு உறுதி செய்தது.
- ப்ளாஸ்மா கார்டிஸால் அளவு யோகா பயிற்சி செய்வோருக்கு குறைவாகவே இருக்கிறது. இது அதிகமாக இருப்பின் ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டிருப்பர். யோகப் பயிற்சியால் கவலையற்ற நிம்மதியான வாழ்வு உறுதி செய்யப்படுகிறது.
- ஸ்கின் ரெஸிஸ்டன்ஸ் எனப்படும் தோல் தடை மனித உடலுக்கு இன்றியமையாத ஒன்று. நல்ல அருமையான இசை. ஆழ்ந்து ஒரு புத்தகத்தில் ஈடுபட்டுப் படிப்பது ஆகியவை இந்த தோல் தடையை சரியானபடி இருக்க உதவுகிறது. தியானமோ இதை விட அதிகப்படியாக அற்புதமான சக்தியை தோல் தடையில் தருகிறது. கண்ணை மூடியவாறே ஆழ்நிலை தியானத்தைத் தொடர்ந்து 5 வருடம் மெற்கொண்டோருக்கு உடல் ஆற்றல் வெகுவாக மேம்படுகிறது.
- தியானம் மூளை ஆற்றலைக் கூட்டுகிறது. படைப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது. ஆகவே கலைகளில் ஈடுபடுவோருக்கும், புதியன காண விழைவோருக்கும் இது உற்ற துணையாக அமைகிறது.
- யோகா பயிற்சியால் ரத்த அழுத்தம் சீராகிறது.
- சிகரட், மது போன்ற அனைத்துப் போதைப் பழக்கங்களிருந்தும் அதிசயக்கத் தக்க விதத்தில் விடுபட முடிகிறது.
- தூக்கமின்மை என்ற வியாதி போகிறது. ஆழ்ந்த உறக்கம் இயல்பாக அமைகிறது.

- தொடர்ந்து யோகாசனங்கள் செய்வோருக்கு உடல் எடை பருமனாக இருப்பதிலிருந்து குறைவதோடு உடல் பொலிவு கூடுகிற்து.
- விளையாட்டில் ஈடுபடுவோருக்கு உடலாற்றல் திறன் கூடுகிறது.
- தேவைப்படும் நேரங்களில் உடனடியாகச் செயலாற்றும் திறனும் கவன சக்தியும் ஏற்படுகிறது.
- உள்ளுணர்வு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
- யோகாவின் பல்வேறு நிலைகளை, குறித்த முறைப்படி, ஆசான் வாயிலாகக் கற்றுச் செய்வோருக்கு எண்வகை அரிய சித்திகள் உரிய காலத்தில் ஏற்படுகிறது.
இந்தப் பட்டியல் முடிவில்லாத பட்டியல்!
ஒரு நாட்டின் ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்தினர் யோகாவில் ஈடுபட்டால் அந்த நாட்டில் அமைதி உறுதிப்படும், குற்றங்கள் குறையும் என மகேஷ் யோகி ஆய்வு நிறுவனங்கள் உறுதி கூறுகின்றன.
யோகா பயில்வோம்; ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!
சுவாசப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் உள்ளிட்டவை மிக எளிமையான பயிற்சிகள். எந்த இடத்திலும் செய்யக் கூடியவை.
ஆனால் இன்றைய உலகில் சிரிப்பு யோகா, ஓடும் யோகா, நடக்கும் யோகா என்று சுய விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் யோகாவின் பெயரைச் சேர்த்து மக்கள் முன் வைக்கப்படும் பல்வெறு யோகாக்களைப் பற்றி விழிப்புணர்வும் கூட அவசியம்.
நல்ல பாரம்பரியமான யோகாவைக் கற்றுத் தரும் யோகா மாஸ்டரை அணுகி அவரிடம் எளிய பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் 20 முதல் 25 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அறநூல்கள் கூறும் ஆரோக்கியமான நீடித்த ஆயுள் கொண்ட வாழ்க்கையைப் பெறலாம்; மற்றவருக்கும் உதவலாம்!


tags — 100 ஆண்டுகள், ஆரோக்கியமாக, வாழ