
Post No. 8365
Date uploaded in London – – –19 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கொங்கு மண்டல சதகம் பாடல் 50
இது நாகமலை என்றால் நாகம் ஏன் படம் எடுத்து ஆடவில்லை? – பிரதிவாதி பயங்கரனின் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன?!
ச.நாகராஜன்
திருச்செங்கோட்டில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது.
பாண்டிய நாட்டில் திருக்குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்ற பெயர் கொண்ட பிரபலமான புலவன் ஒருவன் இருந்தான். ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள சிறந்த புலவர்கள் மற்றும் தேர்ந்த வித்துவான்களை வாதுக்கு அழைத்து அவர்களைத் தோற்கடித்து அவர்களது பொருளையும் அவர்களிடமிருக்கும் நூல்களையும் கவர்ந்து வருவது அவன் பழக்கம்.
தேச சஞ்சாரம் செய்து வருகையில் ஒரு சமயம் அவன் திருச்செங்கோடு வந்தான்.
திருச்செங்கோடு எல்லையை நெருங்கிய அவன் பாம்பு வடிவமாகத் தோன்றிய நாகாசலத்தை நோக்கிப் பல்லக்கில் இருந்தபடியே ஒரு பாடலைப் பாடத் துவங்கினான்.
“சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென
வமரிற் படம்விரித் தாடாத தென்னை?
திருச்செங்கோட்டில் உள்ள மலையை சர்ப்ப சயிலம் எனக் கூறுவார்களேயானால், அது ஏன் படம் எடுத்து ஆடவில்லை என்பது கேள்வி.
இதை முதல் இரண்டு அடிகளில் கேட்ட பிரதிவாதி பயங்கரன் அடுத்த இரண்டு அடிகளை முடிக்க முடியாமல் திணறினான்.
பிரதிவாதி பயங்கரன் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தியை முன்னமேயே கேட்ட திருச்செங்கோட்டின் பிரபல புலவரான குணசீல்ன் அந்தச் செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டார்.
வம்புக்கு வரும் பிரதிவாதி பயங்கரனை வாதில் வெல்ல முடியாதே என்பது அவரது கவலை.
முதல் இரண்டு அடிகளை ஓலையில் எழுதிய பிரதிவாதி அதை ஊருக்குள் அனுப்பி பதில் சொல்ல எந்தப் புலவராலாவது முடியுமா என்று வாதுக்கழைத்தான்.
ஓலையைக் கண்ட குணசீலர் பயந்து போனார். ‘செங்கோட்டு வேலவனே, நீயே கதி’ என்று கூறி நித்திரை கொண்டார்.
தூக்கத்தில் அவர் கனவில் வந்த வேலவன், “பயப்படாதே! பிரதிவாதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி அருளினான்.
நேராக பிரதிவாதியின் முன் மாடு மேய்ப்பவனாகத் தோன்றிய வேலவன்,
“சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென
வமரிற் படம்விரித் தாடாத தென்னை?” என்ற பிரதிவாதியின் கேள்வியைச் சொல்லி, அதுவா?,
“நமரின் குறவள்ளி பங்க னெழுகரை நாட்டுயர்ந்த
குமரன் திருமரு கன்மயில் வாகனங் கொத்துமென்றே”
என்று கூறினான்.
பொருள் : குறவள்ளி பங்கனான திருமருகன் குமரனின் வாகனமான மயில் பாம்பு படமெடுத்தால் கொத்தும் என்று பயந்து அந்தப் பாம்பு படம் எடுக்கவில்லை.
பளீரென்ற பதிலைக் கேட்ட பிரதிவாதி ஒரு கணம் அசந்து நின்றான்.
பல்லக்கிலிருந்து இறங்கிய அவன் மாடு மேய்ப்பவனைப் பார்த்து, “ அப்பனே! நீ யார்? உன் நாக்கில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுகிறாளே” என்று கேட்டான்.
“புலவரே! நான் இந்தத் திருச்செங்கோட்டில் உள்ள குணசீலர் என்னும் வித்துவானின் கடை மாணாக்கன். கண்ட சுத்தி பாடுவதில் தாமதமுடையவன்” என்று பதிலிறுத்தான் மாடு மேய்க்கும் வேலவன்.
“இப்படி ஒரு புலமைத் திறனுடன் இருக்கும் நீ மாடு மேய்க்கலாமா?” என்ற கேள்வியை விடுத்தான் பிரதிவாதி.


“ஓ! புலவரே! எல்ல உலகத்தும் உள்ள உயிர் வகைகளில் பசுவைப் போல பயன் தரும் ஜன்மம் ஒன்று கூட இல்லை. எல்லா தேவர்களும், எல்லா புண்ணிய நதிகளும் பசுவில் பொருந்தி உள்ளன. அதன் மலமும் ஜலமும் கூட பரிசுத்தமாக்க வல்லதன்றோ? இதை நீர் அறியீரோ” என்றான் வேலவன்.
இதைக் கேட்ட பிரதிவாதி நடுங்கிப் போனான்.
குணசீலரின் கடை மாணாக்கனே ஆகமம் அறிந்து இந்தப் போடு போட்டால் குணசீலர் என்னவெல்லாம் சொல்வாரோ என்று எண்ணிய பிரதிவாதி பல்லக்கைத் திருப்பிக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தான்.
இந்தச் சம்பவத்தைத் திருச்செங்கோட்டு மான்மியம் விரிவாகக் கூறுகிறது.
இந்தப் பெருமையை கொங்கு மண்டல சதகம் தனது 50 வது பாடலில் இப்படிக் கூறுகிறது:
“பெருமை மிகு “மா வச்சிலம் பரமெனிற் பெட்புறுமவ்
வரவு படம்விரித் தாடாததென்” னென்ற கத்துனுமோர்
கருவி வெருக்கொள வாமேய்ப் பவனா கனிந்துதிரு
மருகன் மயில்கொத்து மென்றெனச் சொல் கொங்கு மண்டலமே”
பாடலின் பொருள் :- “ இது நாகமலை என்றால் நாகம் படத்தை விரித்து ஏன ஆடவில்லை? அதன் காரணம் என்ன?” என்று அகங்காரம் கொண்ட புலவன் கேட்க, அவன் திடுக்கிடும்படி செங்கோட்டு வேலவர் மாடு மேய்ப்பவனாக வந்து “இலக்குமியின் மருமகனாகிய முருகக் கடவுளின் வாகனமாகிய மயில் மலையின் மேல் இருப்பதால் அது கொத்தி விடும் என்று பயந்து ஆடாமல் இருக்கிறது” என்ற விடையளித்த பெருமை கொண்டதும் கொங்கு மண்டலமே!”
வாதுக்கு வந்தவனின் வம்புக் கேள்விக்கு அருமையான முருகனின் பதிலைக் கொண்ட பெருமையைக் கொண்ட கொங்கு மண்டலத்தைப் போற்றிப் புகழ்வோம்!
tags- நாகமலை, பிரதிவாதி பயங்கரன், கேள்வி,
***