
Post No. 8370
Date uploaded in London – – –20 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
By ச.நாகராஜன்
இடைக்காலத் தமிழ் இலக்கண நூலான நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர் வாழ்ந்தவர் என கருதப்படுகிறது.
இவர் சீயகங்கன் என்ற சிற்றரசனின் ஆதரவில் அவனது தூண்டுதலின் பேரில் நன்னூலை இயற்றினார். இதை நன்னூலில் இவர் எழுதிய கீழ்க்கண்ட சிறப்புப்பாயிரத்தின் இறுதி வரிகள் மூலம் அறிய முடிகிறது.

திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவ ணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே
கொங்கு மண்டலத்தில் குறும்பி நாட்டில் சனகாபுரம் என்ற சீனாபுரத்தில் இவர் பிறந்து வளர்ந்தவர்.
இவரைப் போற்றி கொங்கு மண்டல சதகம் 47ஆம் பாடல் அமைகிறது.
“கங்கக் குரிசி துவக்கநன் னூலைக் கனிந்து புகல்
துங்கப் புலமை பவணந்தி மாமுனி தோன்றிவளர்
கொங்கிற் குறும்பு தனிலாதி நாத குருவிளங்கு
மங்குற் பொழிற்சன காபுர முங்கொங்கு மண்டலமே
(கொங்கு மண்டல சதகம்)
பாடலின் பொருள் : சீயகங்க அரசன் மனம் மகிழுமாறு நன்னூல் என்னும் இலக்கண நூலைப் புகன்ற தமிழ்ப் புலமை மிக்க பவணந்தி முனிவர் பிறந்து வளர்ந்தது குறும்பி நாட்டில் ஆதிநாத தீர்த்தங்கரர் விளங்குதலான சனகாபுரம் (சீனாபுரம்) இருப்பது கொங்குமண்டலமே.

இவரது ஊரைப் பற்றித் தொண்டை மண்டல சதகம் கூறும் பாடல் இது:
தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்தன்
நன்னூ லுரைத்த பவணந்தி மாமுனி நற்பதியுங்
சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன் சேர்பதியும்
மன்னூ புரத்திரு வன்னமின் னேதொண்டை மண்டலமே
இவர் பிறந்த இடமாக சன்மதி வாழ்ந்த தொண்டைமண்டலத்தை இது குறிப்பிடுகிறது. இப்படி இரு ஊர்களை இரு வேறு பாடல்களில் கொங்கு மண்டலமும் தொண்டை மண்டல சதகமும் கூறுவதால் சற்றுக் குழப்பம் ஏற்பட்டாலும் பாடல்களை நுணுகி ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் உண்மை இது:
கொங்கு மண்டல சதகத்தில், “பவணந்தி மாமுனி தோன்றி வளர்…. சனகாபுரம்’ என வருகிறது.
தொண்டை மண்டல சதகத்தில், “சனகையிற் சன்மதி மாமுனி தந்த மைந்தன்” என வருகிறது.
ஆகவே இவர் தோன்றி வளர்ந்தது சீனாபுரம் என்றும் சன்மதி முனிவரது புத்திரர் இவர் என்றும் முடிவு செய்யலாம்.
பவணந்தி முனிவர் ஒரு துறவி ஆவார். இதை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நன்னூல் பாயிரத்தின் கடைசி வரிகளான,
“பன்னருஞ் சிறப்பிற் பவ ணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே” என்ற வரிகளால் அறியலாம்.
ஜைன மதத்தில் துறவிகளுக்கு நந்தி என்ற நாமம் சூட்டப்படுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
சம்பந்தர் திருவாலவாய் தேவாரப் பாடலில்,
“கனக நந்தியும் புட்ப நந்தியும் பவணநந்தியும் குமணமா
கனக நந்தியுங் குனக நந்தியும் திவணநந்தியும்” என்று கூறியருள்கிறார்.
ஆகவே சன்மதி மாமுனிவர் ஞான பிதா என்றும் பவணந்தி முனிவரை ஞான புத்திரர் என்றும் கொள்ளலாம்.
ஆக பவணந்தி பிறந்து வளர்ந்தது கொங்கு மண்டலத்தில் என்றும் அவர் சன்மதி முனிவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டது தொண்டை மண்டலத்தில் என்றும் முடிவு செய்யலாம்.
பவணந்தி தோன்றி வளர்ந்த சீனாபுரம் எனப்படும் சனகை என்பது கோயமுத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுகாவில் பெருந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது.
இந்த இடத்தில் ஆதிநாதர் தீர்த்தங்கரர் கோவில் இருக்கிறது.
ஜைன பிராமணர்கள் இன்றும் இங்கு பூஜை செய்து வருகின்றனர்.
சன்மதி முனிவரைக் குறிக்கும் சனகை என்னும் சனநாதபுரமானது காவேரியின் வடகரையில் இருக்கும் மாவிலங்கையாக வேண்டும்.
இப்போது மைசூரில் திருமுக்கூடல் நரசபுரம் பகுதியைச் சேர்ந்தது இந்தக் கிராமம். இது கங்க ராஜ்யத்தில் அமைந்தது.
இதற்கும் கங்க நாட்டுப் பழைய ராஜதானியாகிய தலைக்காட்டுக்கும் இடையே காவேரி தான் இருக்கிறது.
இதைக் குறித்துக் கீழ்க் கண்ட சாசனக் குறிப்புகளால் அறிய முடிகிறது.

- முடி கொண்ட சோழ மண்டலத்து கங்கை கொண்ட சோழவள நாட்டு இடை நாட்டு ஜனக புரத்து..
- கங்க பாடியான முடி கொண்ட சோழ மண்டலத்துத் தென்கரை இடை நாட்டு மாயிலங்கையான ஜனநாதபுரத்து..
- கங்க பாடி தென் கரை யிடை நாட்டு..
- பெரிய நாட்டு மாயிலங்கையான ஜனநாதபுரத்து..
பெரும் புலவரான பவணந்தி மாமுனியை மதிக்க வேண்டிய விதத்தில் தமிழகம் மதிக்கிறதா, இன்று?
சிந்திக்க வேண்டிய விஷயம் இது!
பவணந்தி,மாமுனிவர்,
***