
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8392
Date uploaded in London – – –24 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
உலகப் புகழ் பெற்ற ஒரு போட்டோ!
ச.நாகராஜன்
கொரானா காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இன்னொரு மாநிலத்திற்கு வேலை தேடி வந்தோர் தவிக்கும் பாட்டைப் பார்த்தால் மனம் கசிகிறது.
அன்றாடம் வேலை செய்து பெரும் சம்பளத்தால் வாழும் இவர்களுக்கு வேலை இல்லை எனில் ஏது சம்பளம்? எப்படிச் சாப்பிடுவர்? யாரையும் பார்க்கக் கூடாது, வெளியில் வரக் கூடாது, சொந்த ஊருக்கும் போக முடியாது.
இப்படி ஒரு நிலையைத் தந்த கொரானாவை எப்படித் தான் விவரிப்பது?
இதே போல ஒரு நிலை அமெரிக்காவில் 1932இல் ஏற்பட்டது.
இன்றைய கொரானாவைப் போல அவ்வளவு மோசமில்லை என்றாலும் அதிலும் ஏராளமானோர் படாத பாடு பட்டனர்.
அதில் ஒரு பெண்மணி தான் Migrant Mother!
1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட் சரிந்து வீழ்ந்து அதல பாதாளத்திற்குப் போனது. இது பொருளாதார வீழ்ச்சியை உருவாக்க மக்கள் தவித்தனர். இந்த நிலையை வரலாறு Great Depression என்று பெயரிட்டு அழைக்கிறது.
டொராதா லாங்கே (Doratha Lange) என்ற ஒரு பெண்மணி சிறந்த போட்டோகிராபர். (தோற்றம் 1895- மறைவு 1965) ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, அவர் தனது வண்டியில் ஏறிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றலானார். ஒரு நாள் கலிபோர்னியோவில் நிபோமோ என்ற இடத்தில் ஒரு வேதனை முகத்தில் ததும்ப இருக்கும் ஒரு தாயைக் குழந்தைகளுடன் கண்டார்.
பட்டாணிகளைப் பொறுக்கி எடுக்கும் வேலை அவருடையது. கடுமையான மழையால் பட்டாணிகள் அழிந்து போக அவருக்கு அதை எடுப்பதற்கான வேலையே இல்லாமல் போனது.
லாங்கே வேலையின்றி ஒரு கூடாரத்தில் உட்கார்ந்திருந்த பலரைப் பார்த்தார். அவர்களுள் ஒருவர் ஏழு குழந்தைகளுடன் வருத்தம் தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். இரு குழந்தைகள் அவரை அரவணைத்திருக்க அவர் சோகமாக அவர் அமர்ந்திருந்தார்.
லாங்கே அவரை அணுகி அவரை போட்டோ எடுக்கலாமா எனக் கேட்டார்.
“ஏதோ இருக்கிறொம். உயிர் பிழைத்து விட்டோம். அப்படித்தான் சொல்ல வேண்டும்” என்று வருத்தத்துடன் அவர் சொன்னார். (We just existed. We survived. Let’s put it that way)
அவருக்கு வயது 32. சுற்றியுள்ள வயல்வெளிகளில் உறைந்து கிடக்கும் கறிகாய்களைப் பொறுக்கி எடுத்து அதில் உயிர் வாழ்வதாக அவர் கூறினார். குழந்தைகள் அடித்துக் கொன்று கொண்டு வரும் பறவைகளும் அவர்களுக்கு உணவாகிறது.
ஒரு வண்டியில் அமர்ந்தவாறே ஆங்காங்கு சென்று வேலை தேடும் அவர் கடைசி கடைசியாக தன் வண்டியின் டயர்களை விற்று உணவு வாங்கி வந்ததாகக் குறிப்பிட்டார்.
லாங்கே ஆறு போட்டோக்களை எடுத்தார். அதில் இரு படங்களை சான்பிரான்ஸிஸ்கோ நியூஸ் இதழ் வெளியிட்டது. அதில் ஒன்று உலகப் புகழ் பெற்று விட்டது.
Depression எப்படி அனைவரையும் பாதித்திருக்கிறது என்பதை அமெரிக்க மக்களின் மனதை உருக்கும் விதமாக அந்த 1936ஆம் வருடத்திய போட்டோ விளக்கியது. மைக்ரண்ட் மதர் (Migrant Mother) என்று அந்த போட்டோ தலைப்பிடப்பட்டிருந்தது.முகத்தைக் காட்டாமல் மறைத்து அம்மாவை அணைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை அணைத்தவாறு அந்தத் தாய் வெறிச்சோடி எதையோ பார்த்த வண்ணம் இருக்கிறார்.
அவர் பெயரைச் சொல்ல மாட்டேன் என்று லாங்கே உறுதி கூறியிருந்தார்.
பிற்காலத்தில் அவரது பெயர் ஃப்ளோரென்ஸ் ஓவன்ஸ் தாம்ஸன் (Florence Owens Thompson) என்பது தெரிய வந்தது.
குழந்தைகளின் தந்தை யார்? அவர் எங்கே? அவர் இல்லை. அந்தக் குழந்தைகளுக்கு அம்மா தான் எல்லாம். வயல்வெளிகளுக்குச் செல்லும் போது குழந்தைகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு அவர் செல்வது வழக்கம்.
அமெரிக்க மக்களின் அடிமன உணர்வைத் தூண்டி விட்ட படம் இது என வரலாறு சொல்கிறது. போட்டோவின் விளைவாக 20000 பவுண்ட் மதிப்பிற்கான உணவு வகைகளை அரசு அந்த புலம் பெயர் தொழிலாளிகள் இருந்த இடத்திற்கு அனுப்பியது.
போட்டோ வெளியான போது அந்தத் தாய் வேறொரு இடத்திற்குச் சென்று விட்டார். அவரைப் பற்றிய ஆராய்ச்சியில் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்ட பலரும் இறங்கினர்; ஒரு வழியாக அவரைக் கண்டுபிடித்தனர். அவரது வரலாற்றைக் கேட்டனர். அவரது பெயரும் அப்போது தான் தெரிந்தது.
இந்தப் படத்தால் தனக்கு ஒரு பைசா கூட வரவில்லை என்று அவர் பல வருடங்களுக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்த போது கூறினார்.

அவரது குடும்பத்தின் எண்ணிக்கை பத்தாக அப்போது உயர்ந்திருந்தது.
1983இல் தாம்ப்ஸன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அவரது புதல்விகள் மருத்துவச் செலவிற்காக மக்களை அணுகினர். உடனடியாக 15000 டாலர் நிதி சேர்ந்தது.
படத்தை எடுத்த லாங்கே அமெரிக்காவின் சிறந்த போட்டோகிராபர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார். அவருக்கு விருதும் கிடைத்தது.
மக்கள் மறக்க முடியாத உலகப் புகழ் பெற்ற போட்டோ மைக்ரண்ட் மதர்!
tags -உலகப் புகழ் பெற்ற , போட்டோ
***