

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8400
Date uploaded in London – 25 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உடலுக்கு கால்சியம் ஏன் தேவை?
இதுவரை 25 மூலகங்களின் கதைகளைப் பார்த்தோம் . இன்று கால்சியம் என்னும் மூலகம் (ELEMENT) பற்றிக் காண்போம்.
கால்சியம் (Calcium) பற்றிய ஒரு சுவையான கதையை முதலில் சொல்கிறேன்.ஆங்கில மொழியில் ஒருவர் பிரபலமாகிவிட்டால், அவர் பற்றி அதிகமான செய்திகள் அடிபடும். உடனே அவரை He is in the limelight ‘ஹீ இஸ் இன் த தி லைம் லைட்’ என்பர். பெண்ணாக இருந்தால் ஷீ இஸ் இன் த தி லைம் லைட்’ She is in the limelight . இந்த மரபு சொற்றொடருக்கு , கால்சியம்தான் காரணம் . இந்த லைம் லைட்(LIME MIGHT) டைக் கண்டுபிடித்தவர் ஒரு பிரிட்டானியர். அவர் பெயர் தாமஸ் ட்ரம்மண்ட்(Thomas Drummond) . சர்வேயர் பணிபுரிவோர் நீண்ட தூரத்துக்கு ஒளிவீசும் விளக்கு இருந்தால் நல்ல வேலை செய்யலாமே என்று ஆதங்கப்பட்டனர். எரியும் ஹைட்ரஜன் வாயுவை கால்சியம் ஆக்சைட் (லைம் LIME) உள்ள பரப்பின் மீது பாய்ச்சினால் பிரகாசமான ஒளி கிடைக்கும் என்று தாமஸ் கண்டுபிடித்தார். மேலும் அதை லென்ஸ் அல்லது கண்ணாடி மூலம் பிரதி பலித்தால் அது 60 மைல் தொலைவு வரை ஒளிவீசச் செய்யாலாம் என்றும் அறிந்தார். உடனே கப்பலுக்கு திசை காட்டும் கலங்கரை விளக்குகளில் (Light House) இதைப் பயன் படுத்தினர். நாடக மேடைகளில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் மீது ஒளி வீசுவதற்கு தியேட்டர் மானேஜர்களும் இதைப் பயன்படுத்தினர். ஒருவர் முகத்தில் கால்சியம் (லைம்) ஒளி பிராகாசிப்பதை அரசியல் வாழ்விலும் , பிற துறைகளிலும் பிரகாசிப்போருக்கும் ‘சொல் அளவில்’ பயன்டுத்தினர். இவ்வாறாக இந்த ரசாயன விஷயம் ஆங்கில அகராதிக்குள்ளும் நுழைந்தது!
***
கால்சியம் உடலுக்கு மிகவும் தேவையான சத்து ஆகும். நமது உடலில் உள்ள எலும்புகள் இந்த மூலகத்தால் ஆனது உயிரினங்களில் சில வகை பாக்டிரீயா தவிர எல்லாவற்றிலும் கால்சியம் இருக்கிறது; கடலில் வாழும் சங்கு,சோழி முதலிய பூச்சிகள் (MARINE ANIMALS) கால்சியம் கார்பனேட்டால் ஆனவை. நிலத்தில் வாழும் பிராணிகளின் பற்களும் எலும்புகளும் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. சில தாவரங்களில் காணப்படும் கால்சியம் ஆக்ஸலேட் (CALCIUM OXALATE) விஷத் தான்மையுடையது இதனால் பிராணிகள் அதைச் சாப்பிடாது . இவ்வாறு அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
கர்ப்பிணிப் பெண்களை கால்சியம் உள்ள பால், தயிர் முதலியவற்றை சாப்பிட ஊக்குவிப்பர். இது வளரும் குழந்தைகளுக்கு நல்ல பற்களும் உறுதியான எலும்புகளும் உருவாக உதவும். உண்மையில் கால்சியம் எல்லோருக்கும் தேவைதான்; பெண்களுக்கு அதிகம் தேவை . எலும்புகள் பலம் இழந்தால் எளிதில் முறிவுபடும்; உடையும் . இதை ஆஸ்டியோ போரோசிஸ் (OSTEOPOROSIS) என்பர். இந்த நோயைத் தடுக்க உணவில் கால்சியம் இருக்க வேண்டும்
***


கால்சியம் உள்ள பண்டங்கள் எவை ?
பால் , சீஸ் (CHEESE) எனப்படும் பாலாடைக்கட்டி, பாதாம் பருப்பு, முட்டை, ப்ராக்கோலி , வெங்காயம் , கீரை வகைகள் முட்டைக்கோசு முதலியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இதை உடல் பயன்படுத்துவதற்கு வைட்டமின் டி (VITAMIN D) தேவைப்படும். அதை சூரிய ஒளி , வெண்ணெய் , மீன் எண்ணெய் , முட்டை மூலம் பெறலாம்.
ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. வயதானோர், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு 1500 மில்லிகிராம் வரை தேவை 100 கிராம் பால் பொருட்களில் 200 மில்லிகிராம் கால்சியம் இருப்பதால் எளிதில் பெறலாம்.
***
எலும்புகளுக்கும் உயிர் உண்டு !
நம்மில் பலருக்கும் எலும்புகளுக்கு உயிர் உண்டு என்பது தெரியாது. அவை ஏதோ கற்கள் போன்ற சடப் பொருட்கள் என்று நினைப்போம். உண்மையில் அவைகளும் வளர்கின்றன . ஆஸ்டியோ க்ளாஸ்ட்ஸ் , ஆஸ்டியோ பிளாஸ்ட்ஸ் என்ற செல்கள் மூலம் உடைந்து வளருகின்றன. தேவைப்படும் அளவுக்கு உடலில் கால்சியம் இல்லாதபோது எலும்புகள் அதைக் கொடுக்கும். இதனால் எலும்புகள் பலம் இழக்கும் . இதைத் தவிர்க்கவே கால்சிய சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும்
கால்சியம் என்பது சுண்ணாம்பு சத்து ஆகும் [ ஆனால் இது ஒரு உலோகத்திலிருந்து வருகிறது.
எலும்புக்கு மட்டும்தான் கால்சியம் தேவையா ?
உடலிலுள்ள உலோகங்களை எடைவரியாகப் பார்த்தால் கால்சியம் என்னும் உலோகம்தான் முதலிடம் பெறும் . சராசரி மனிதனின் உடலில் 1200 கிராம் கால்சியம் இருக்கிறது. உடலில் தண்ணீர் அதிகம் இருந்தாலும் அது மூலகம் இல்லை .
1200 கிராமில் 1190 கிராம் எலும்பு. மீதி 10 கிராம் மகத்தான பணிகளைச் செய்கிறது–
1.மெம்ப்ரேன் (MEMBRANE) என்னும் ஜவ்வு பகுதியைக் கட்டுப் படுத்துகிறது ;அதுதான் செல்களை இணைக்கும் சிமென்ட்.
2. தசைகள் சுருங்கி விரியவும், நரம்புகள் மூலம் உணர்ச்சிகளை அனுப்பவும் தேவைப்படுகிறது
3.இரத்தத்தில் பி.எச் (PH) அளவை நிலையாக வைத்து இரத்தம் உறைய உதவுகிறது. ஒருவர் காயப்பட்டால் ரத்தம் வெளியேறாமல் தடுக்க இது தேவை.
4. செல்கள் வளர்ச்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது
5. ஹார்மோன்கள் சுரப்பதை ஊக்குவிக்கிறது .
***

கால்சியம் எங்கே கிடைக்கிறது?
பூமியின் மேற்பரப்பில் அதிகம் காணப்படும் உலோகம் கால்சியம்தான் .
முன்காலத்தில் வாழ்ந்து மடிந்த கடல் வாழ் உயிரினங்கள் உலகம் முழுதும் இருக்கின்றன. இவை கால்சியம் கார்பனேட் உப்பால் ஆனவை. உலகில் 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு பவளம் (CORAL REEFS) உள்ளது. இது அத்தனையும் கால்சியம். இது தவிர 50 கோடி டன் கால்சியம் இயற்கைச் சுழற்சி காரணமாக கடலில் இருந்து போய், மழை மூலம் வெளியேறி, மீண்டும் கடலை அடைகிறது. இதை கால்சியம் சுழற்சி (CALCIUM CYCLE) என்பர்.
இயற்கை அதிசயம் (NATURAL WONDERS) என்று கருதப்படும் பல குகைகளில் இது மழை நீர் வழியாகச் சொட்டிச் சொட்டி ஸ்டாலக்சைட், ஸ்டாலக்மைட் (STALAGCITES, STALAGMITES) உருவங்களை உருவாக்குகின்றன.
***

மருத்துவத்தில் கால்சியம் உப்புகள்
பழங்காலம் முதற்கொண்டே மனித இனம் கால்சியம் உப்புக்களைப் பயன்படுத்திவருகிறது.
அஜீரணம் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த கால்சியம் கார்பனேட் கொடுப்பார்கள்.
உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை ஈடுசெய்ய கால்சியம் லாக்டேட் கொடுப்பார்கள்.
சிறுநீர் வெளியேற உதவும் திரவங்கள், சலைன் ட்ரிப் (SALINE DRIP) ஆகியவற்றில் சிறிதளவு கால்சியம் குளோரைட் இருக்கும்.
எலும்பு முறிவின்போது கட்டப்படும் பிளாஸ்டரில் கால்சியம் சல்பேட் இருக்கிறது.
35 முதல் 40 வயதுக்குப் பின்னர் எலும்பு வளர்ச்சி நின்று விடும். அதோடு ஆண்டுதோறும் ஒரு சதவிகித தேய்மானமும் ஏற்படுகிறது . இந்த இழப்பை ஈடு கட்ட ஹார்மோன் ரீப்லேஸ்மென்ட் தெரபி (HRT) , ப்ளுரைட் தெரபி என்று பல சிகிச்சைகள் உள . ஆயினும் கால்சியம் மிக்க உணவும் கால்சியம் மாத்திரையும் நல்ல பலன் தருகின்றன.
மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே மாத்திரைகளை எடுக்கவேண்டும். கால்சியம் மிக்க உணவுகளுக்கு கட்டுப்பாடில்லை . உடலில் வேறு நோவுகள் இருந்தாலோ, வேறு மாத்திரை வகைகளை சாப்பிட்டாலோ டாக்டர்களின் ஆலோசனை மிகவும் இன்றியமையாதது
***

பொருளாதாரப்ப பயன்பாடுகள்
டோலமைட், ஜிப்சம் (DOLOMITE, GYPSUM) ஆகிய இரண்டு கால்சியம் உப்புக்களும் அதிகம் பயன்படுகின்றன.
சிமெண்ட், காரை செய்ய ஜிப்ஸம் பயன்படும்.
பல வகையான உலோகங்களை பிரித்தெடுக்கவும் பயன்படுகிறது .
அன்ஹைட்ரைட் (ANHYDRITE) என்ற உப்பு கந்தக அமிலம் தயாரிக்க உதவுகிறது.
தண்ணீரை சுத்தப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள் .
எலும்பு முறிவின்போது கட்டுப்பாட்டை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (PLASTER OF PARIS) தயாரிக்கவும் தேவைப்படுகிறது.
ஜிப்சத்தின் படிக வகைக்கு ‘அலபாஸ்டர்(ALABASTER)’ என்று பெயர். இதை வைத்து சிற்பங்கள் செய்வார்கள் .
சிமெண்ட் இல்லாமல் கட்டிடங்கள் இல்லை; கட்டிடங்கள் இல்லாமல் உலகம் இல்லை. ஆகவே உடலுக்கும் உலகத்துக்கும் பலம் தருவது கால்சியமே!.

ரசாயனத் தகவல்கள்
குறியீடு சி ஏ Ca
அணு எண் 20
உ ருகு நிலை – 839 டிகிரி C
கொதி நிலை – 1484 டிகிரி C
இது வெள்ளி போன்ற (silvery metal) வர்ணமுடைய உலோகம்.
கார (alkali) வகையில் சேர்த்தி; ஐசடோப்புகள் உண்டு ; ஆயினும் கதிரியக்கம் இல்லை.
tags – கால்சியம் , தேவை, எலும்பு

—Subham–