ஆதிசங்கரர் அருளிய நூல்கள் – 7 – கனகதாரா ஸ்தோத்ரம்! (இரண்டாம் பகுதி) (Post No.8408)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8408

Date uploaded in London – – –27 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆதிசங்கரர் அருளிய நூல்கள் – 7 – கனகதாரா ஸ்தோத்ரம்! (இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

பொருளைப் பொன் என்றே சொல்வது வழக்கம். ‘பொன்னும் பொருளும்’ என்றே சேர்த்துச் சொல்கிறோம். ரூபாயே gold standard – படிதானே (பொன்னின் கையிருப்பை வைத்துத்தானே) இருந்திருக்கிறது? ‘த்ரவிணம்’ என்றால் பொதுவாக ‘பொருள்’ என்பதோடு ‘பொன்’ என்றும் அர்த்தம் உண்டு. ஸ்வர்ணம், ஹேமம், ஹிரண்யம், கனகம் என்பவை போல த்ரவிணம் என்றும் தங்கத்துக்கு ஒரு பேர். “த்ரவிண (அம்பு)தாரா” என்று இங்கே ஆசார்யாள் வாக்கில் வந்திருப்பதுதான் ஸ்தோத்ரத்தின் பேரில் “கனகதாரா” என்று இருக்கிறது!

“உன் கடாக்ஷமேகம் அருட்காற்றோடு கூடி வந்து த்ரவிணதாரையைப் பொழியட்டும்!” என்றால் யாருக்கு? ஸ்தோத்ரம் பண்ணும் பால சங்கரருக்கா? அவருக்கு எதற்கு? பெரிய செல்வக் குடும்பத்தில் வந்தவரல்லவா அவர்? அதுவுமன்னியில் ப்ரஹ்மசரியாக குருகுலவாஸம் பண்ணிக் கொண்டிருப்பவர் பணமே வைத்துக்கொள்ளப்படாதே!

அவருக்கில்லை. வேறே யாருக்கு? அதைச் சொல்கிறார்: “அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிசௌ விஷண்ணே“. அப்படியென்றால், ‘மனஸ் சோர்ந்து வாடிப் போயிருக்கிற இந்த ஏழையான பறவைக் குஞ்சுக்கு’ என்று அர்த்தம்.

மநுஷ்யர்களுக்கு என்றே சொல்லவில்லை! பக்ஷிக்கு, அதிலும் வளராமல் குஞ்சாகவுள்ள பக்ஷிக்கு என்கிறார்! ‘விஷண்ணே’ – வாடிச் சோர்ந்துபோன; ‘அஸ்மின்’ -இந்த (கிட்டத்தில் இருக்கும் ப்ராம்மண ஸ்த்ரீயைக் காட்டிச் சொல்வதால் ‘இந்த’ என்கிறார்) ; ‘அகிஞ்சன’ – கொஞ்சங் கூட உடைமை இல்லாத. ‘கிஞ்சன’, ‘கிஞ்சித்’ என்றால் ‘கொஞ்சம்போற’. ‘கிஞ்சன’தான் ‘கொஞ்ச’மாச்சோ என்னவோ? ‘அகிஞ்சன’ என்றால் அந்தக் கொஞ்சங்கூட இல்லாத முழு தரித்ரமாக என்று அர்த்தம். ‘விஹங்கம்’ என்றால் பக்ஷி, ‘விஹங்க சிசு’ என்றால் குஞ்சாக உள்ள பக்ஷி. ‘விஹங்க சிசௌ’: பக்ஷிக் குஞ்சினிடத்தில். “பக்ஷிக் குஞ்சினிடத்தில் உன் கடாக்ஷ மேகத்தால் பொருள் மழையைக் கொட்டுவாயாக.”

ப்ராஹ்மண பத்னியை உத்தேசித்துத்தான் சொல்கிறாரென்பது ஸ்பஷ்டம். ஆனால் ஏன் அப்படிச் சொல்லாமல் பக்ஷிக் குஞ்சு என்றார்?

அந்தச் சின்ன வயஸிலேயே அவருக்கு இருந்த கவி உணர்ச்சியால்தான் அப்படிச் சொன்னார்! ஆசார்யாளின் க்ரந்தங்களைப் பார்க்கப் பார்க்க நமக்கு ஆச்சர்யமாயிருக்கும் – எத்தனை விஷயம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் மஹாபுத்திமானாக அவர் இருந்திருக்கிறாரென்று மட்டுமில்லை; கவி என்ற ரீதியிலேயே எப்படியெல்லாம் வார்த்தைகளைக் கோத்திருக்கிறார், எப்படி அலங்காரங்களை (உபமானம் முதலான அணிகளை)க் கையாண்டிருக்கிறார், வார்த்தை விநோதங்கள் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறார், கவிகள் தங்களுக்குள் ஒரு ‘ட்ரெடிஷ’னாக – மரபாக – பின்பற்றும் கருத்துக்களையெல்லாம் தாமும் எப்படிப் பின்பற்றியிருக்கிறாரென்று ஆச்சர்யமாயிருக்கும். நிர்குண ப்ரஹ்மம் என்று கல்பனா ரஹிதமாக, வெட்ட வெளியாயிருப்பதைப் பிடித்துக் கொண்டிருந்தாலும் நூதன கல்பனைகளைத் தம்முடைய நூல்களில் கொட்டிக் கவி திலகமாக இருந்திருக்கிறார்!

குழந்தையாய் அவர் அநுக்ரஹித்த இந்த முதல் ஸ்தோத்ரத்திலேயே இப்படிப் பல இருப்பதில், poetic tradition ஒன்றின்படியே பக்ஷிக் குஞ்சு என்று “விஹங்க சிசு” என்று, சொல்லியிருக்கிறார்.

நம்முடைய கவி மரபிலே சகோரம், சாதகம் என்று இரண்டு பக்ஷிகளைச் சொல்வார்கள். இப்போது நாம் லோகத்தில் பார்க்க முடியாத இரண்டு விசித்ரமான பக்ஷிகள்! ‘சகோரம்’ என்பது சந்த்ரிகையை (நிலவொளியை) மாத்ரமே ஆஹாரம் பண்ணும் பக்ஷி. வேறே எதுவும் சாப்பிடாது.

‘ஸெளந்தர்ய லஹரி’யில் அம்பாளின் மந்தஹாஸ காந்தியை வர்ணிக்கும்போது2 சகோரத்தைச் சொல்கிறார். ‘மதி வதனம்’ என்பது வழக்கமல்லவா? அம்பாளுடைய மதி வதனத்திலிருந்து சந்த்ரிகையாக அவளுடைய சிரிப்பொளி வீசுகிறது. அந்த சந்த்ரிகையை சகோர பக்ஷி பானம் பண்ணிற்று. சொல்லி முடியாத தித்திப்பாக இருந்தது. இப்படியிருந்தால் திகட்டிவிடுமல்லவா? தித்திப்பில் அதன் அலகு மரத்தே போய்விட்டதாம்! திகட்டாமலிருக்க அப்பப்போ ஒரு வாய் புளிக் கஞ்சி குடிக்கலாமே என்று பார்த்ததாம். ஆகாசத்திலே சந்த்ரனிலிருந்து நிலா அடித்துக் கொண்டிருந்தது. அதை அந்தச் சகோரம் ருசி பார்த்ததாம். அம்பாளுடைய முக சந்திரனிலிருந்து பெருகும் மந்தஸ்மித நிலாவின் தித்திப்பு ஏறிய அதன் அலகுக்கு ஆகாசத்துச் சந்த்ரனின் நிலா (அதற்குத் தேவைப்பட்ட) புளிக்கஞ்சி மாதிரியே இருந்ததாம்! மரத்துப்போன உணர்ச்சியும் போயிற்றாம்! அதற்கப்புறம் தான் சகோர பக்ஷி நிலாவைக் குடிப்பது என்று ஏற்பட்டது என்று விநோதக் கல்பனையாகப் பாடியிருக்கிறார்.

வாஸ்தவத்தில் சந்த்ரிகையில் அம்ருதமே நிறைந்திருக்கிறது. அந்த அம்ருதத்தையும் புளிக் கஞ்சியாக்கிவிடும் அப்பேர்ப்பட்ட மாதுர்யத்தோடு அம்பிகையின் மந்தஹாஸ காந்தி இருக்கிறது என்று அங்கே சொல்லியிருக்கிறார். “கரஞ்ஜிக தியா” – ‘கஞ்சி என்ற எண்ணத்தால்’ (நிலாவைச் சகோரம் குடிக்கலாயிற்று) என்கிறார். மலையாளத்தில்தான் கஞ்சி குடிப்பது ஸகல ஜாதியாருக்கும் வழக்கமாயிருக்கிறது. ‘மலையாளம் கஞ்சி’ என்றே இருக்கிறது.

‘ஸெளந்தர்ய லஹரி’ ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஜகதாசார்யாளாகக் கீர்த்தி பெற்ற பிறகு பண்ணினது. அதில் சகோரத்தைச் சொன்னவர் பால்யத்தில் மஹாலக்ஷ்மியைப் பாடினபோது சாதகத்தைச் சொல்லியிருக்கிறார். ‘விஹங்க சிசு’ என்பது சாதக பக்ஷியின் குஞ்சைத்தான்.

சாதகத்தைப் பற்றி, என்ன விசித்ரமென்றால், அதற்குத் தொண்டையிலே த்வாரம் இருக்கும். இப்படியிருந்தால் எப்படி சாப்பிடுவது? அலகினால் எதைச் சாப்பிட்டாலும் அது தொண்டை ஓட்டை வழியாக வெளியில் வந்து விடுமல்லவா? நாம் கையை வளைத்து வாயில் ஆஹாரம் போட்டுக் கொள்கிறதுபோல அது அலகை வளைத்து ஓட்டைக்குள் ஆஹாரத்தைப் போட்டுக்கொள்ளவும் முடியாது. அதனால், இந்தப் பக்ஷிக்கு ஆஹாரம் என்னவென்றால் ஆகாசத்திலிருந்தே நேரே அந்தக் கண்ட த்வாரத்துக்குள்ளேயே விழுந்து வயிற்றுக்குள் போய்விடக் கூடிய மழைத் துளிதான். மழை இல்லாவிட்டால் அது பசியில் வாடவேண்டியதுதான். ‘மழைக்காக ஏங்கும் சாதகம் போல்’ என்று அதனால்தான் சொல்வது.

லக்ஷ்மி த்ரவிண தாரையை வர்ஷிக்கவேண்டும் என்று சொன்னவுடன் பால ஆசார்யாளின் கலியுள்ளத்துக்கு, ‘மழை தாரையைத் தவிர வேறே ஆஹாரமே இல்லாத சாதக பக்ஷி இருக்கிறதே! அதைத்தான் இவளுடைய த்ரவிண வர்ஷத்திற்காக ஏங்கி வாடிக்கொண்டிருக்கிற இந்த ப்ராஹ்மண குடும்பத்திற்கு ரூபமாகச் சொல்ல வேண்டும்’ என்று தோன்றி, அப்படியே பாடிவிட்டார். வாயால் சாப்பிடுவது கர்மாவை அநுபவிக்கிறமாதிரி, கர்மா ப்ரதிகூலமாயிருப்பதால், வாயால் முழுங்கினது தொண்டை ஓட்டையால் ஒழுகி விடுகிற மாதிரி, இவர்களுக்கு ஸம்பத்து சேராமல் நழுவிப் போய்விடும். கர்மாவைப் பார்க்காமல் அம்பாள் க்ருபை பண்ணும்போது, நேரே தொண்டை ஓட்டைக்குள்ளேயே ஆஹாரத்தைப் போட்டு உள்ளே விடுவதுபோல, ஸம்பத்து நழுவாமல் சேர்ந்துவிடும்.

பக்ஷி என்று மட்டும் சொல்லாமல் சிசுவான பக்ஷி என்று, குஞ்சு என்று சொன்னார். குழந்தைக்குத்தான் பசி தாங்கவே தாங்காது. பசித்தால் அது ‘வீல்’, ‘வீல்’ என்று கத்துகிற மாதிரி நாம் கத்துகிறோமோ? அதோடு, ஒரு சின்னக் குழந்தை கஷ்டப்படுகிறது என்றால் எந்தக் கல் மனஸும் இறங்கும். லக்ஷ்மியோ ‘தாயார்’ என்றே சொல்லப்படுபவள். அதனால் குழந்தை, விஹங்க சிசு என்று சொல்லிவிட்டால் அவள் நிச்சயம் மனஸுருகி அருளுவாளென்று அப்படிச் சொன்னார்.

குழந்தையாயிருந்த ஆசார்யாள் அந்த ப்ராஹ்மண ஸ்த்ரீயைக் குழந்தையாகப் பார்த்து அவள் behalf-ல் வேண்டினார். அவளுக்கு, அவளுடைய பதிக்கு (பதி, பத்னி என்று பேதமே இல்லாமல் பாப-புண்யங்கள் இரண்டு பேருக்கும் சேர்ந்துதான்) கர்மா கெட்டதாயிருப்பதால் அநுக்ரஹிப்பதற்கில்லையென்று லக்ஷ்மி சொன்னாளள்ளவா? அதனால் அவள் சார்பில் வாதாடினார் : ‘துஷ்கர்ம – கர்மம் சிராயதூரம் அபநீய நயநாம்புவாஹ: த்ரவிணாம்புதாராம் தத்யாத்’. “துஷ்க(ka)ர்ம-(gha)ர்மம்” – கெட்ட கர்மாவான கோடை காலம். கர்மம் என்றால் நல்ல வேனிற்காலம். “அப்படி இவர்களுடைய துஷ்கர்மம்தான் தரித்ரமாக வறுத்தெடுக்கிறது என்கிறாய்! அதனால் ஒன்றும் நிவர்த்தி கிடையாதா? கெட்ட கர்மாவின் ‘நேச்சர்’ கொளுத்தி எடுப்பது என்றால் உன்னுடைய கடாக்ஷத்தின் ‘நேச்சர்’ குளுகுளு என்று மழைமேகம் போல இருப்பதாயிற்றே! அது எங்கேயோ, இது எங்கேயோ இருக்கிறதென்பாயானால் அதை இங்கே அடித்துக் கொண்டு வரத்தான் தயை என்ற காற்று இருக்கிறதே! அந்த க்ருபா வேகத்தைவிட ஒன்று உண்டா? லோகம் தபிக்கும் போது கொட்டும் கோடை மழை மாதிரி, இந்தச் சாதகக் குஞ்சு தவிக்கிற இப்போது அருளைக் கொட்டு. சாதகக் குஞ்சு ஆஹாரத்துக்கு மட்டுமே தவிப்பது. இந்த தம்பதியோ பொருளில்லாமால் ஆஹாரம், வஸ்த்ரம், வீடு எல்லாவற்றுக்குமே தவிக்கிறார்கள். வீடு என்று பொக்கையும் போறையுமாக இடிந்து விழுகிற மாதிரி ஏதோ இருப்பது தான். இந்தக் குழந்தையை வறுத்தெடுக்கும் வெயிலான ஜன்மாந்தர பாபத்தை உன் குளிர்ந்த கடாக்ஷமானது, “அபநீய” – நிவர்த்தி பண்ணி, “சிராய” – எத்தனையோ காலமாகச் சுமந்து வந்த பாபத்தை எங்கே போச்சு என்று தெரியாமல் நிரந்தரமாக, “தூரம் அபநீய” – ரொம்ப தூரத்துக்கு விரட்டி, ‘த்ரவிணாம்புதாராம் தத்யாத்’ – த்ரவ்ய மழையைக் கொடுக்கட்டும்” என்றார்.

தாரித்ரிய நிவ்ருத்தி என்று லோக வாழ்க்கைக்கான ஸமாசாரத்தை வேண்டுகிறாற்போல வேண்டும்போதே கர்ம நிவ்ருத்தி, பாப நிவ்ருத்தி என்பதான ஆத்ம ஸம்பந்தமான வேண்டுதலையும் கலந்து கொடுத்துவிட்டார்!

பணம், படிப்பு, எல்லாம் அதற்குத்தான் (ஆத்ம விஷயமாகக் கொண்டு விடுவதற்குத்தான்). காமம் உள்பட எல்லாமே அதற்குத்தான் ஸ்ருஷ்டியில் வைத்திருக்கிறது. ஸ்ருஷ்டியில் யாரும் சிரஞ்ஜீவியாக இருக்கமுடியாது — பகவானே ரொம்ப அபூர்வமாக அப்படி வைத்த ரொம்பக் கொஞ்சம் பேரைத் தவிர, பாக்கிப் பேர் செத்துத்தான் போகணமென்று ஸ்ருஷ்டி நியதி. ஆனால் செத்துப் போகும் போது கர்மா பாக்கி தீர்ந்து nil balance-ஆக இருப்பதில்லையே! அப்படியிருந்தால்தானே ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவுடன் சேரலாம்! ஆனால் அப்படியில்லையே! இந்த மாதிரி இருக்கும்போது அந்த ஆவிக்கு இன்னொரு சான்ஸ், அதுவும் தப்பினால் அப்புறமும் பல சான்ஸ்கள் என்று ஜன்மா ஜன்மாவாகக் கொடுத்துத்தானே அவற்றிலாவது கர்மாவைக் கழித்துக்கொள்ள வாய்ப்புக்கள் தரவேண்டியிருக்கிறது? இப்படி ஒரு ஜீவன் ஜன்மாக்கள் எடுக்கணுமென்றால் அதற்காக ஒரு அப்பா, அம்மாவுக்குக் காமம் இருந்தால்தானே முடியும்? அதாவது, காமம் என்று வைத்திருப்பதும் இன்னொரு ஜீவன் கடைத்தேறச் ‘சான்ஸ்’ கொடுக்கும் நல்ல உத்தேசத்தில்தான் என்று தெரிகிறது. இப்படித்தான் பணத்தால், சாப்பாட்டால், வீட்டால், வைத்தியத்தால் சரீர ரக்ஷணை செய்துகொள்வதும், படிப்பால் அறிவு அபிவ்ருத்தி செய்துகொள்வதுங்கூட ஒவ்வொரு ஸ்டேஜ் வரை ஆத்ம விஷயமாகப் போவதற்கே உதவி செய்யத்தான். என்ன அளவில், எந்த, ஸ்டேஜ் வரையில் என்று தெரியாமல் நாம் ‘மிஸ்-யூஸ்’ பண்ணிக் கொள்வதில்தான் ஒரே அனர்த்தமாகிறது. “அர்த்தம் அனர்த்தம்” என்று ஆசார்யாளே “பஜ கோவிந்த”த்தில் இதைச் சொல்கிறார். அது “மூட மதி”க்கு ‘அட்ரஸ்’ பண்ணியது (“பஜ கோவிந்தம், மூட மதே”!) என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்! புத்திசாலியாயிருந்தால் லௌகிகம் என்று இருக்கிறவைகளைக் கொண்டே, அவற்றைத் தக்க அளவில் தக்க காலம் வரை ‘யூஸ்’ பண்ணிக்கொண்டே, ஆத்மிகத்துக்குப் போய்ச் சேரலாம்.

நம் சாஸ்த்ரங்கள் எல்லாம் அப்படி வழிகாட்டுபவைதான். ஆசார்ய க்ரந்தங்கள் எல்லாமும் அப்படித்தான். பணம் கேட்டு லக்ஷ்மி ஸ்துதி பாடினாலும், வ்யாதி போகணுமென்று ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு “புஜங்கம்” பாடினாலும் ஆத்ம லக்ஷ்யத்தை அவர் மறக்கவே மாட்டார். அதற்காகவேதான் இவற்றைக் கேட்பது. அன்னம் போடும் அன்னபூர்ணேச்வரியிடம் “பிக்ஷாம் தேஹி!” என்று போய் நிற்கிறபோதும் “ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம்” என்றுதான் முடிப்பார்.

‘அகிஞ்சன’ என்று பணத்தில் ஏழ்மையைச் சொல்லும் போதும் ‘கர்ம-கர்மம்’ என்று அதையும் ஆத்ம ஸம்பந்தமான கர்மத்தோடு சேர்த்துக் காட்டி, ஏழ்மை நிவ்ருத்தி மாத்ரமல்ல வேண்டியது, கர்ம நிவ்ருத்தியும்தான் என்று புரியவைத்திருக்கிறார்.

இந்த ஸ்தோத்தரத்தில் ஒரு பாடப்படி 18 ஸ்லோகம், இன்னொன்றின்படி 20-21 ச்லோகம் என்று இருந்தாலும் இந்த ஒரு ஸ்லோகத்தில்தான் செல்வத்துக்கு அதிதேவதையான லக்ஷ்மியிடம் பொருட் செல்வம் வேண்டுவது. அடுத்த ஸ்லோகத்தில்3 வேண்டுமானால், “இஷ்டாம் புஷ்டிம் க்ருஷீஷ்ட மம” என்று தாம் விரும்பிக் கேட்கிற (தமக்காக அல்ல, அந்த ப்ராம்மண தம்பதியை முன்னிட்டுக் கேட்கிற) செழிப்பைத் தரட்டும் என்று சொல்லும்போதும் தனத்துக்கான ப்ரார்த்தனையை hint செய்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம். மற்றபடி ஸ்தோத்ரம் முழுக்கப் பெருமாளும் தாயாரும் எப்படிச் சேர்ந்து சேர்ந்து அநுக்ரஹ மூர்த்திகளாக இருக்கிறார்கள், (அவர் கார்மேகம் போல வ்யாபித்து இருக்கும்போது, மேகத்துக்கு நடுவில் மின்னுகிற மின்னலைப்போல் இவள் எப்படி அவருடைய வக்ஷஸ்தலத்தில் ஸ்வர்ண காந்தியுடன் ப்ரகாசிக்கிறாள்4 – என்பது போன்ற விஷயங்கள்), ஸர்வ சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட லக்ஷ்மி இன்னும் என்னென்ன மூர்த்திகளாக இருக்கிறாள், லக்ஷ்மீ ரூபத்தில் அவளுடைய வர்ணனை என்ன, பெருமை என்ன – என்றிப்படியான ஸமாசாரங்கள்தான் இருக்கின்றனவே தவிர திரவியத்திற்கான ப்ரார்த்தனை இல்லை.

இப்படி அநேக விஷயங்களை, கவிதை அழகுகளை, பக்தி பாவங்களைத் தெரிவித்து ச்லோகங்கள் சொல்லிக்கொணடு போகும்போது ஒரு ச்லோகத்தில்தான், எதற்காக ப்ரார்த்திக்க ஆரம்பித்தாரோ அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘லோக மாதாவிடம் போய் ரொம்ப ஒன்றும் முறையிட வேண்டியதில்லை. துளிப்போறக் காட்டி விட்டாலே போதும்’ என்கிற ரீதியில் பாடியிருக்கிறார். அதிலேயே முறையீட்டை ஸாரமாக வடித்துக் கொடுத்து விட்டார்! ‘ரொம்ப தீனமாக, பக்ஷிக் குஞ்சு மாதிரி ஸ்வயமாக ஒன்றும் பண்ணிக்கொள்ளத் தெரியாமலிருக்கும் இந்த அம்பாளுக்கு அருள் மழையைக் கொட்டு’ என்று சொல்ல வந்ததையும்கூட, ‘அம்மாள்’ என்று சொல்லாமலே வ்யங்கியமாகத் தெரிவித்திருப்பது ரஸமானது.

Bottom of Form

(இதில் இரண்டு விஷயம் தெரிவிக்கணும். குழந்தையாக ஆசார்யாள் பாடிய இந்த முதல் ஸ்தோத்ரத்திலேயே பிற்காலத்தில் அவர் பெரிதாக ‘டெவலப்’ பண்ணிய இரண்டு கொள்கைகளுக்கு வித்து இருக்கிறது. ஒன்று – அவர் கர்மாவை பக்தியில் சேர்த்தது. ‘கர்மா தானே பலன் தரவில்லை. ஈச்வரன்தான் பல தாதா. அவனுக்கே ஸகல கர்ம பலனையும் அர்ப்பணம் பண்ணிவிடு. அப்போதுதான் இந்தச் சின்னப் பலன் போய் சித்த சுத்தி என்ற ஆத்மாத்மார்த்தமான பெரிய பலன் கிடைக்கும்’ என்றது. இது கர்ம மார்க்கக்காரர்களைப் பக்தி மார்க்கத்தில் சேர்ப்பதற்கு சொன்னது. இன்னொன்று – பக்தி மார்க்கக்காரர்களிடம், ‘என்னுது, உன்னது’ என்று தெய்வ பேதம் பார்க்காமல், ஏதோ ஒன்றிடம் தான் உனக்கு இயல்பாக பக்தி சுரக்கிறதென்பதால் அதையே நீ இஷ்டமூர்த்தி என்று பக்தி பண்ணினாலும் மற்றவற்றைத் தாழ்த்தியாக நினைக்காமல், எல்லாம் ஏக பரமாத்மாவின் ரூப பேதங்களே என்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொள்’ என்று சொன்னது. முதலில் இப்படி ஸ்வாமிகளுக்குள் பேதமில்லை, எல்லா ஸ்வாமியும் ஒரே பரமாத்மாதான் என்று ஆரம்பித்தால்தான் அப்புறம் எல்லா ஆஸாமியுங்கூட அதுதான் என்ற ஞானத்துக்குப் போக முடியும். அதாவது, இது பக்தி மார்க்கக்காரர்களை ஞான மார்க்கத்தில் சேர்ப்பதற்காகச் சொன்னது. இந்த இரண்டு அபிப்ராயங்களையும் கனகதாரா ஸ்தோத்ரத்தில் பார்க்கிறோம்.

சாதகக் குஞ்சைச் சொல்லி ஸம்பத்து தாரை வேண்டியதற்கு அடுத்த ஸ்லோகத்தில்

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே

என்று சொல்லுமிடத்தில் இஷ்டிகள் என்பதான யஜ்ஞ கர்மாக்களிலேயே உயர்ந்த அபிப்ராயத்தை வைத்து, அவற்றை ஸ்வர்க்க பலனை விரும்பிச் செய்கிறவர்களும் மஹாலக்ஷ்மியின் கருணாகடாக்ஷத்தால்தான் அந்தப் பலனை ஸுலபமாக அடைகிறார்களென்று சொல்கிறார். அவர்களுக்கு அப்படித் தெரியாமல் தங்கள் கர்மாவே பலன் தருகிறதென்று நினைத்தாலும், லக்ஷ்மி என்று ரூபம் கொடுத்துச் சொல்கிற பகவத் சக்திதான் அதை வாஸ்தவத்தில் பண்ணுவிக்கிறதென்று ஆசார்யாள் சொல்வது இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

ஸகல தெய்வமும் ஏக பரமாத்மாவின் ரூப பேதங்களே என்று அவர் தெரிவிப்பது இதற்கு அடுத்த ஸ்லோகத்தில்:

கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி

சாகம்பரீதி சசி சேகரவல்லபேதி |

ஸ்ருஷ்டிஸ்திதிப்ரலயகேலிஷு ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரிபுவநைககுரோஸ்தருண்யை ||

ஒரே பரமாத்மா த்ரிமூர்த்திகளாகி ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் (ப்ரளயம்) என்று விளையாட்டுப் பண்ணும்போது (“கேலிஷு”) அவர்களுக்குள்ளே பத்னி ரூபத்தில் ஒவ்வொரு சக்தியாக இருப்பது மஹாலக்ஷ்மியே தானென்று சொல்கிறார். அப்படியுள்ள சக்திகளின் பெயர்களை கீர்தேவதை, கருட த்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசிசேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நாலு சக்திகளைச் சொல்லியிருக்கிறது! ஏன்?

ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்கிறபடி முதலில் ப்ரம்ம பத்னி-‘கீர்தேவதை’ என்னும் வாக்தேவியான ஸரஸ்வதி; அடுத்தாற்போல் கருடக் கொடியுடைய மஹாவிஷ்ணுவின் ரூப லாவண்யம் மிக்க பத்னியான ‘கருட த்வஜ ஸுந்தரி’ (ஸ்தோத்ரத்தின் நேர் மூர்த்தியான லக்ஷ்மி); அப்புறம் ருத்ர பத்னிகளாக மட்டும் இரண்டு பேர் ‘சாகம்பரி’ என்றும் ‘சசி சேகர வல்லபா’ என்றும் இருக்கிறது!

சாகம்பரி யாரென்று தேவீ புராணங்களில் இருக்கிறது1. ஒரு பஞ்ச காலத்தில் அம்பாள் தன்னுடைய தேஹத்திலிருந்தே கறிகாய்கள், கீரை வகைகள் எல்லாவற்றையும் முளைக்கப் பண்ணி ஜனங்கள் பறித்துச் சாப்பிடுமாறு க்ருபை பண்ணினாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட பேர்தான் சாகம்பரி, இவளும் சிவனுடைய சக்தியே.

“ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய” என்று சொல்லியுபடி (ப்ரளயமான) ஸம்ஹாரத்துக்கு உதவி பண்ணாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் ஜனங்களுக்கு ஆஹாரத்தைக் கொடுத்து ரக்ஷித்திருக்கிறாள்? த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நாலாவதாக ஒன்றை ஏன் இப்படிச் சொல்லணும்?

பொருத்தமாகத்தான் சொல்லியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். தனலக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி அஷ்ட லக்ஷ்மிகளை சொன்னாலும், ஜனங்கள் ‘லக்ஷ்மி’ என்றால் தனத்தைத்தான் நினைப்பார்களென்று அவருக்குத் தெரியும். ஆனால் ரூபாயைச் சாப்பிட முடியுமா? ஆனபடியால் சாப்பாடு போடுகிற அம்மாவாகத் லக்ஷ்மியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விடக்கூடாது என்று அவருக்கு இருந்தது. அதனால்தான் சாகம்பரியைச் சொன்னார். அப்புறம் ப்ரளயத்திற்கு ஸ்வாமியான ருத்ரனின் சக்தியாக ‘சசி சேகர வல்லபா’ என்றார். அப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக்கொண்டிருப்பவரின் ப்ரிய பத்னி. ஸம்ஹார மூர்த்தியே மஹேச்வரனாக மாயா நாடகம் பண்ணும் போதும், ஸதா சிவனாக மோக்ஷாநுக்ரஹம் பண்ணும்போதும்கூட சசி சேகரராகத்தான் இருக்கிறார். அதனால் ‘சசி சேகர வல்லபா’ என்னும்போது ப்ரளய சக்தி, திரோதான2 சக்தி, அநுக்ரஹ சக்தி எல்லாமும் அவளேதான் என்று வைத்துக்கொள்ளாலாம். இவளேதான் ப்ரம்ம சக்தி, விஷ்ணு சக்தி ஆகியவர்களும் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டதால் பஞ்ச க்ருத்யங்களுக்கும் மூலமான பரப்ரஹ்ம சக்தி ஒன்றுதான் இத்தனை மூர்த்தியுமாகியிருக்கிறது என்ற அத்வைதம் வந்துவிடுகிறது.

லக்ஷ்மிதான் ஸரஸ்வதி, பார்வதி ஆகிய எல்லாரும் என்று இங்கே சொல்லிவிட்ட பிறகு சிவ-விஷ்ணுக்களை மட்டும் வித்யாஸம் மாதிரி விட்டுவிடலாமா? அதனால்தான் முடிக்கிற இடத்தில் ‘த்ரிபுவநைக குரோஸ் தருணி’ என்று சொன்னது. ‘த்ரிபுவநங்களுக்கும் குருவாக இருக்கப்பட்டவர் மஹாவிஷ்ணு. அவருடைய ப்ரிய பத்னியான சக்தி லக்ஷ்மி’ என்று அர்த்தம். தக்ஷிணாமூர்த்தியின் மூலகுரு ஸ்வரூபத்திலிருந்து அவதாரம் பண்ணினவர் மஹா விஷ்ணுவை குருவாகச் சொல்லும்போது சிவ-விஷ்ணு அபேதமும் வந்துவிடுகிறது. குருவின் சக்தி என்று லக்ஷ்மியை சொல்லும்போது அவள் ஏதோ பணம், கிணம் கொடுப்பவள் மட்டுமில்லை, ஞான சக்தியாகவுமிருக்கிறவள் என்று காட்டியதாகிறது.

நம் குரு பரம்பரை நாரயணனிலிருந்துதானே ஆரம்பிக்கிறது? அதனால் ‘த்ரி புவந குரு’ என்றார். அஷ்டோத்தரங்களைப் பார்க்கும்போது சிவாஷ்டோத்தரம் மாதிரி க்ருஷ்ணாஷ்டோத்தரம், ராமாஷ்டோத்தரம் ஆகியவற்றிலும் “ஜகத்குருவே நம:” என்று வருகிறது.

குரு என்று – த்ரிபுவன குரு என்று – இங்கே ஆசார்யாள் சொல்லும்போது ஞானோபதேசம் பண்ணுபவர் என்றில்லாமல் மூவுலகத்திற்கும் பிதாவாக இருப்பவரென்றும் அர்த்தம் செய்யலாம். தாயார், தாயார் என்று லக்ஷ்மியைச் சொல்வதால் மூவுலகத் தகப்பனாரின் பத்னி என்று சொன்னதாகவும் கொள்ளலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் “ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம:” என்று கடைசி நாமாவுக்கு இரண்டு நாமா முன்னால் வருவதன் தாத்பர்யத்தையே இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.

இதற்கு அடுத்த ஸ்லோகம்

ச்ருத்யை நமோ()ஸ்து சுபகர்மபலப்ரஸூத்யை

ரத்யை நமோ()ஸ்து ரமணீகுணார்ணவாயை |

சக்த்யை நமோ()ஸ்து சதபத்ரநிகேதநாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை ||

ச்ருதிதான் ஆசார்யாளுக்கு மூச்சு. அவைதிகம், அரைகுறை வைதிகம் ஆகியவற்றை விரட்டி, சுத்தமான ச்ருதி மார்க்கத்தையே ஸ்தாபனம் செய்ய வந்தவரல்லவா? “ச்ருதி-ஸ்ம்ருதி-புராணாநாம் ஆலயம்” என்றே அல்லவா அவரை ஸ்தோத்ரிப்பது? அப்படிப்பட்ட ச்ருதி வடிவமாக, வேத ஸ்வரூபிணியாகத் தாயாரைச் சொல்லாமல் தாம் பண்ணிய முதல் ஸாஹித்யத்தை முடிப்பாரா? “ச்ருத்யை நமோஸ்து” என்று ஆரம்பிக்கிறார். ஞானாவதாரமானாலும் வைதிக கர்மாநுஷ்டானத்திற்கு அதற்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்பதில் பாடுபட்டவரல்லவா? அதனால் (லக்ஷ்மியை) ச்ருதி ஸ்வரூபமாகச் சொன்னவுடன், அதில் சொல்லியிருக்கும் சுபமான கர்மாநுஷ்டானங்களின் பலனைப் பிறப்பிக்கிறவள் அவள்தான் என்கிறார்: “சுப கர்ம பல ப்ரஸூத்யை”. இங்கேயும் மீமாம்ஸகர்களுக்கு பதில் இருக்கிறது!

நல்ல குணங்களெல்லாம் ஸமுத்ரம் மாதிரி நிறைந்த இன்பங்களின் உருவமாகத் தாயார் இருப்பதை “ரத்யை நமோஸ்து, ரமணீய குணார்ணவாயை” என்று சொல்கிறார்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நமக்கு ச்ருதி வேண்டும். நாம் செய்யும் கர்மங்கள் ச்ருதி ப்ரயுக்தமாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவை சுப கர்மாவாக இருக்கும். அப்படிப்பட்ட கர்மாவினாலேயே இன்பங்களை உலக இன்பங்களோ, ஆத்மாத்தமான இன்பங்களோ, எதுவானாலும் பெறவேண்டும்.

குணம்-கர்மம் என்று இரண்டு. ஒன்றுக்கொன்று ஸம்பந்தப்பட்டவை. “குண-கர்மங்களாலேயே நான்கு வர்ணங்களை (ஜாதிகளை) ஸ்ருஷ்டித்திருக்கிறேன்” என்று கீதையில் (பகவான்) சொல்கிறார்3. குணப்படியே கர்மா போகும். அதை சாஸ்த்ரத்தில் வகுத்துக் கொடுத்துள்ளபடி செய்து ஈச்வரார்ப்பணம் செய்தால் அந்த சுப கர்ம விசேஷத்தால் எப்படிப்பட்ட குணமானாலும் அது பக்வமாக ஆகும். முதலில் ‘சுப கர்ம பலனைத் தருபவள்’ என்று சொல்லி, அடுத்தாற்போல ‘நல்ல குணங்களுக்கு ஸமுத்ரமாயிருப்பவள்’ என்று ஒன்றோடொன்று பிணைத்துச் சொல்லியிருக்கிறார்.

அப்புறம், சக்திதானே எல்லாவற்றுக்கும் தேவை? அதுவும் அவள்தானென்று சொல்லி நமஸ்காரம் தெரிவிக்கிறார்: “சக்த்யை நமோஸ்து”. ‘சத பத்ர நிகேதனா’ என்றால் கமலாஸனை, தாமரைப் பூவுக்குள் உட்கார்ந்திருப்பவள். ‘சத பத்ரம்’ என்றால் நூறு இதழ் (கொண்ட தாமரை) என்று கணக்காக நினைக்க வேண்டாம். சதம் என்பது எந்தப் பெரிய நம்பரையும் குறிப்பது. ஸஹஸ்ர தள பத்மம் என்றும் சொல்வதுண்டு. நம் சிரஸில் பராசக்தி ஸஹஸ்ர தள பத்மத்தில்தான் பரசிவத்தோடு கலந்தவளாக இருக்கிறாள் என்று குண்டலிநீ யோகத்தில் இருக்கிறது. இங்கே ஆசார்யாளும் பத்மவாஸினியாக லக்ஷ்மியைச் சொல்லும்போது “சக்தி”-“சக்த்யை நமோஸ்து:”- என்றே சொல்கிறார்!

“புஷ்ட்யை நமோஸ்து”. போஷிப்பினால் ஏற்படும் நிறைவே புஷ்டி. பரிபாலன மூர்த்தியின் பத்னியாக, உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் தாயாராகப் போஷித்து வளர்ப்பவள் அவள்தான்.

ரதி (இன்பம்) , சக்தி, புஷ்டி எல்லாவற்றையும் தரும் மந்த்ரங்கள் ச்ருதியில்தான் அடங்கியிருக்கின்றன. அதனால் முதலில் அதைச் சொல்லி அப்புறம் இவற்றைச் சொன்னார். நம்முடைய திறமை (சக்தி) , நிறைவு (புஷ்டி) , ஆனந்த அநுபோகங்கள் (ரதி) ஆகிய எல்லாம் வேத வழியில் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமென்று, (இப்படிச்) சொன்னார்.

‘ஒவ்வொரு ப்ராணிக்குள்ளேயும் ஆனந்த ஸ்வரூபமாக இருப்பது நீதான்! ஒவ்வொரு ப்ராணிக்குள்ளேயும் சக்தி ஸ்வரூபமாக இருக்கிறது நீதான்! நிறைவு என்கிறதாக இருக்கிறதும் நீதான்!’ என்று சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ‘நமோஸ்து, நமோஸ்து’ என்று நமஸ்காரம் தெரிவிக்கிறார்.

முடிவாக மஹாவிஷ்ணுவுக்கே உரிய அஸாதாரண நாமாவான புருஷோத்தமன்4 என்பதைச் சொல்லி அவனுடைய சக்தியாக அவள் இருப்பதை “புருஷோத்தம வல்லபாயை” என்கிறார்.

பிற்காலத்தில் பெரிய ஸித்தாந்தமாக டெவலப் செய்த கருத்துக்களையும் உள்ளே வைத்து குழந்தையாசார்யாள் இப்படி பாடி முடித்தார்.)

பாடி முடித்ததுதான் தாமஸம்! மஹாலக்ஷ்மி அந்தக் குடிசையைச் சுற்றிப் பாழாயிருந்த அத்ருதி முழுக்க ஸ்வர்ணத்தாலான நெல்லிக் கனிகளாகவே ஒரு முஹூர்த்த காலம் வர்ஷித்துவிட்டாள்! பளபளவென்று வர்ஷித்து விட்டாள்!

அவதாரக் குழந்தைக்குப் போட்ட ஒரு அழுகல் நெல்லி பழம் அனந்த கோடி மடங்கு தங்கப் பழங்களாகத் திரும்பின!

முதலில் ப்ராம்மண ஸ்த்ரீ கண்ணீர் தாரையைக் கொட்டினாள். அதைப் பார்த்து ஆசார்யாளின் வாக்கிலிருந்து ஸ்தோத்ர தாரை கொட்டிற்று. அதைக் கேட்டு லக்ஷ்மி கனகதாரையைக் கொட்டி விட்டாள்.

அந்த ஸ்தோத்ரத்துக்குக் கனகதாரா ஸ்தோத்ரம் என்றே பேர் ஏற்பட்டது. ‘(கனகதாரா) ஸ்தவம்’ என்றும் சொல்வார்கள். ஸ்தவம் என்றாலும் ஸ்தோத்ரந்தான்.

ஆசார்யாள் மனஸால் நினைத்தாலே போதும், லக்ஷ்மி அதன்படிப் பண்ணியிருப்பாள். ஆனாலும் அவர் வாக்கினால் இப்படி ஒரு ஸ்துதி வந்து, தான் கேட்டு ஸந்தோஷப்படணும், — தான் ஸந்தோஷப்படுவது மாத்ரமில்லை, ஜனங்களெல்லாம் ஸந்தோஷப் படணும்; அதைப் பாராயணம் பண்ணி அவர்களும் பொருள் கஷ்டம் நீங்கி, கர்மக் கஷ்டமும் நீங்கி ஸுபிக்ஷமாக இருக்கணும் — என்றே திவ்ய லீலையாக நடத்தினாள். “த்ரவிணாம்புதாராம் தத்யாத்” என்று சொன்னவுடனேகூட அவள் கனகதாரையைக் கொட்டிவிடாமல், அப்புறமும் அநேக ச்லோகங்கள் அழகு அழகாக அவர் செய்த பிற்பாடே அநுக்ரஹம் பண்ணினாள்.

நாமும் இந்த ஸ்தோத்ரதைச் சொல்லி தாரித்ரிய நிவ்ருத்தியும், “கர்ம ர்மம்” என்று சொன்ன பாப தாபத்திலிருந்து நிவ்ருத்தியும் பெறுவோம்! ப்ராம்மண தம்பதியை சாக்காகக் காட்டி நம் எல்லாருக்குமென்றே ஆசார்யாள் இந்த ஸ்தோத்ரத்தை அநுக்ரஹம் பண்ணியிருக்கிறார்.

ஐஹிகமாக (இக வாழ்க்கையில்) ஒரு பலனைத் தருகிற ஸ்தோத்ரம் என்றால் அது ‘பாபுல’ராகத்தானிக்கும். அப்படி ஆசார்ய க்ரந்தங்களில் ‘கனகதாரா ஸ்தவம்’ ப்ரஸித்தமாக இருக்கிறது. ஆனாலும் இஹத்தோடு பரத்தையும் அதில் ஆசார்யாள் குழைத்துத்தான் கொடுத்திருக்கிறார். இதே போல, ரோக நிவாரணம் தருகிறதென்பதால் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’மும், ஸகல கார்ய ஸித்திக்குமானது என்பதால் ‘ஸெளந்தர்ய லஹரி’யும் famous-ஆக இருக்கின்றன. அவையெல்லாமும் அதோடுகூட, ஆத்மாவைக் கடைத்தேற்றுவதாகவும் இருப்பவை. ஆச்சர்யமென்னவென்றால், ஒரே வைராக்யமாக உபதேசம் பண்ணும் “பஜ கோவிந்தம்” தான் எல்லாவற்றைக் காட்டிலும் ப்ரஸித்தி பெற்றிருப்பதாகும்! மற்றதெல்லாம் ஆசார்யாள் நமக்காகச் கொஞ்சம் விட்டுக் கொடுத்தும் பண்ணியவை. “பஜ கோவிந்தம்” தான் அவர் மனஸை அப்படியே பூர்ணமாக ப்ரதிபலிப்பது. அந்த மனஸின் மஹிமைதான் அந்த ஸ்தோத்ரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ப்ரஸித்தி!

பவுன் மழையாகக் கொட்டிற்று. ஆசார்யாள் அதில் ஒரு மணிகூடத் தொடாமல் அந்த ப்ராம்மண தம்பதிக்கென்றே அநுக்ரஹித்துவிட்டுப் போய்விட்டார்.

பொன்மழை பெற்ற வீடு காலடிக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருந்திருக்கிறது. அழுகல் பழத்தைப் போட்டுத் தங்கப் பழங்களாகப் பெற்றவர்கள் வாழ்ந்த அந்த இடத்தை இப்போது ‘பழம் தோட்டம்’ என்றே சொல்கிறார்கள். அங்கே ‘ஸ்வர்ணத்துமனை’ என்றே ஒரு குடும்பம் இருக்கிறது. அதைச் சேர்ந்தவர்கள் கனகதாரை பெற்ற தம்பதியின் வம்சத்தில் வந்தவர்களென்று நம்பிக்கை இருக்கிறது.

அடிக்குறிப்பு :-

எட்டாவது (சில பதிப்புகளின்படி ஒன்பதாவது) ச்லோகம்.

2 63-வது ச்லோகம்

3 “இஷ்டா விசிஷ்ட” எனத் தொடங்குவது.

4 காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ (ஆறாவது ச்லோகம்)

                                           ****                                  முற்றும்

tags- கனகதாரா ஸ்தோத்ரம்-2


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: