மஹரிஷி கபிலர் : கங்கை நதி பூமிக்கு வந்த காரணம்! (Post No8418)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8418

Date uploaded in London – – –29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி கபிலர் : கங்கை நதி பூமிக்கு வந்த காரணம்!

ச.நாகராஜன்

மஹரிஷி கபிலரின் சரித்திரம் சுவையான ஒன்று.

ஸ்ரீமத் பாகவதம், ராமாயணத்தில் பால காண்டம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட புராண இதிஹாஸங்களில் கபிலரின் சரித்திரத்தை விரிவாகக் காணலாம்.

பகீரதன் தவமும் அதனால் பூமிக்கு கங்கை வந்ததும் கபிலரின் சரித்திரத்தில் ஆரம்பிக்கிறது!

ஸ்ரீ ஹரியானவர் கர்த்தப பிரஜாபதிக்கும் தேவபூதிக்கும் மகனாக கபிலர் என்ற பெயருடன் அவதரித்தார்.

அவர் பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.

சூரியபகவானிடத்தில் சக்ரதனு என்ற பெயருடன் பிறந்ததாகவும் பின்னால் கபிலர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது என்ற இன்னொரு விருத்தாந்தமும் உண்டு.

சகர மஹாராஜன் சூரிய வமிசத்து அரசன். அவன் எல்லையற்ற வலிமையால் பூமியை ஒரு குடைக் கீழ் அரசாண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி சுமதி. இன்னொருத்தி கேசினி.

சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அறுபதினாயிரம் சகரர்கள் என அழைக்கப்பட்டனர்.

கேசினிக்குப் பிறந்தவன் பெயர் அஸமஞ்சன். அஸமஞ்சனின் புத்திரன் பெயர் அம்சுமான். அவன் ஒரு அதிரதன்.

சகரன் ஒரு சமயம் அசுவமேத யாகம் ஒன்றைச் செய்தான்.  யாக குதிரையின் பின்னே தன் பேரனான அம்சுமானை அனுப்பினான்.

அந்த யாகத்தை நடத்த விடக் கூடாது என்று இந்திரன் பொறாமையினால் ஒரு நாள் ராக்ஷச உருவை எடுத்து யாக குதிரையைத் திருடிக் கொண்டு போய் விட்டான்.

யாக தீக்ஷையில் இருந்த சகரனை நோக்கி அவனது குரு குதிரை அபகரிக்கப்பட்ட செய்தியைத் தெரிவித்தார். குதிரை வராமல் யாகம் பூர்த்தியாகாது. ஆகவே குதிரையைக் கொணருமாறு அவர் வேண்டினார்.

சகரன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு தனது அறுபதினாயிரம் புத்திரர்களுக்குக் கட்டளையிட்டான். உலகெங்கும் அவர்கள் குதிரையைத் தேட ஆரம்பித்தனர். குதிரை கிடைக்காததால் பூமியை அவர்கள் வெட்ட ஆரம்பித்தனர்.

இதனால் அனைத்து ஜீவன்களும் துன்பம் கொண்டன; மாண்டன.

அறுபதினாயிரம் யோஜனை விஸ்தீரணத்திற்கு பூமி தோண்டப்பட்டது. இதைக் கண்ட தேவர்கள் உள்ளிட்டோர் பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர்.

அவர், பூமிதேவியின் நாதனான விசுவதேவரால் சகரர்களுக்கு நாசம் உண்டாகும் என்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி அவர்களை அனுப்பினார்.

சகரர்கள் பூமியைத் தோண்டி பாதாள லோகத்தை அடைந்தனர். அங்கு கபிலர் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்குச் சமீபத்தில் குதிரை கட்டப்பட்டிருந்தது. அவர் தான் அந்தக் குதிரையைக் கவர்ந்து வந்ததாக நினைத்த சகரர்கள் அறுபதினாயிரவரும் கோபம் கொண்டு கபிலரை ஆயுதம் கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.

“நீ தான் எங்கள் யாகக் குதிரையைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறாய், ஓ. துஷ்டனே, எங்களிடம் இப்போது அகப்பட்டுக் கொண்டாய்” என்று சகரர்கள் கபில முனிவரை நோக்கிச் சொல்ல அவர் வெகுண்டார்.

கண்களைத் திறந்து பார்த்து ஹூம் என்று ஆர்ப்பரித்தார்.

ஒப்பற்ற தவமுடைய மஹாத்மா என்பதால் அவருடைய கோபாக்னி சகரர்கள் அறுபதினாயிரவரையும் எரித்துச் சாம்பலாக்கியது,

வெகு காலம் தன் குமாரர்கள் வராததைக் கண்ட சகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அக்குதிரையைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அம்சுமானும் சகரர்கள் சென்ற வழியே சென்றான். சகரர்கள் பூமியைக் குடைந்து சென்ற வழியைக் கண்ட அவன் அந்த வழியே பாதாள லோகம் சென்றான்; அங்கு கபில முனிவரைக் கண்டான்.

அவரை வணங்கி அம்சுமான் தொழுது துதித்தான்.

கபிலர் அம்சுமானை நோக்கி, “ மகனே! நீ குதிரையைக் கொண்டுபோய் உன் பாட்டனிடம் சேர்ப்பிப்பாயாக! யாகத்தை நிறைவேற்றி வை!  உன் பேரன் மூலம் கங்கா நதியைப் பூலோகத்திற்குக் கொண்டு வரக் கூடியதாகிய வரத்தை உனக்கு அளிக்கிறேன். நீ செல்வாயாக!” என்று அருளுரை கூறினார்.

அம்சுமான் முனிவரை வணங்கிப் பின், “ஓ! ஸ்வாமி! உமது சாபத்தால் எரிந்து சாம்பலாகி விட்ட எனது சிற்றப்பன்மார்கள் சுவர்க்கத்தை அடையும்படியாக ஒரு வரத்தைத் தந்தருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்து பிரார்த்தித்தான்.

அதற்கு கபிலர், “உனது பேரனால் கொண்டு வரப்போகும் கங்கா நதியின் தீர்த்தத்தினால் இறந்து போன உன் சிற்றப்பன்மார்களுடைய எலும்பும் சாம்பலும் நனைக்கப்பட்ட மாத்திரத்திலேயே அவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள்’ என்று கூறியருளினார்.

அத்துடன் மேலும் அவர் கூறினார்: “பக்தி சிரத்தையுடன்  இம் மஹாநதியில் யார் ஒருவர் தீர்த்தமாடுகிறார்களோ அவர்கள் தங்கள் பாபங்களைக் களைந்து கடைத்தேறுவார்கள். அது மட்டுமல்ல, இறந்தவர்களின் சரீரத்தைச் சார்ந்த , எலும்பு, தோல், நரம்பு, கேசம், சாம்பல் முதலியவற்றில் ஏதாவது ஒன்று இப்புண்ணிய தீர்த்தத்தால்  ஸ்பரிசிக்கப்படுமாயின் அந்த உடலுக்குரியவன் உடனே சுவர்க்கம் புகுவான்.”

அம்சுமான் அவரை வணங்கி விடை பெற்று குதிரையுடன் சகர மஹாராஜாவிடம் வந்து சேர்ந்தான். அதன் பின்னர் சகரனின் அஸ்வமேத யாகம் நிறைவேறியது.

அம்சுமானுடைய பேரனான பகீரதன் அரும் தவம் செய்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான்.

பரிசுத்தமான கங்கை நீர் பாதாள லோகத்திற்குச் சென்று சகர மஹாராஜனின் எரிந்து கிடந்த குமாரர்களின் சாம்பல் குவியல் மேல் படவே அவர்கள் அனைவரும் சுவர்க்கம் அடைந்தனர்.

இதன் மூலம் பாவம் போக்கும் ஜீவ நதியான கங்கா நதி பூவுலகில் என்றும் பாயும் பாக்கியம் பூவுலக மக்களுக்கு ஏற்பட்டது!

***

முக்கிய குறிப்பு : கபிலாரண்யம் என்பது தான் கலிபோர்னியா போன்ற அதிசயச் செய்திகளை காஞ்சி பெரியவாள் ஒரு உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய உரை அது.

படித்து மகிழலாம்!

இதைப் பற்றிய திரு சுவாமிநாதனின் கட்டுரை இந்த பிளாக்கில் நவம்பர் 2011இல் வெளியாகி இருக்கிறது.

கட்டுரை தலைப்பு : ‘Is California, USA – Kapila Aranya – Kanchi Sankaracharya”

Search Results‘Is California, USA – Kapila Aranya?’ – Kanchi Sankaracharya …

tamilandvedas.com › 2011/11/21

21 Nov 2011 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. ‘Is California, USA – Kapila Aranya …

tags –மஹரிஷி கபிலர் , கங்கை நதி, காரணம்

—– subham —-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: